ஆப்ரேஷன் சிந்தூர் பற்றித் தமிழகத்தில் பிரபலங்களின் கருத்து. நமது விசேஷ நிருபர் அசட்டு அம்மாஞ்சி.
எழுத்தாளர் பயஜாகன் : ‘பொதுவாவே தொல்ஸ்தாய், தஸ்தாவ்ஸ்கி, காஃப்கா பார்வைலேர்ந்தும், நம்ம இந்திய சிந்தனை மரபுப்படி உள்ள சங்கரர், ராமானுஜர் பார்வையிலயும், போர்ங்கறது ஒட்டுமொத்த மானுட எழுச்சிக்கும் எதிரானதுன்னு வெச்சுக்க வேண்டியதாகத்தான் இருக்குன்னு சொன்னாலும், போர்களில் வெளிப்படும் வீரம்ங்கறது வள்ளுவர் சொல்லக்கூடிய செந்தண்மையக் காட்டிலும் ஒரு படி கீழயும், அவரே சொல்லக்கூடிய பேராண்மைங்கற உயர்ந்த அறத்துக்கு சில படிகள் மேலயும் இருக்குன்னு தான் கொடைக்கானல் காவிய முகாம்ல எங்க குழுவுல இருந்த சிலபேர் சொன்னாங்க. ஆனா, இத ஒட்டுமொத்த ஹிந்துத்துவ மறுமலர்ச்சியோட ஒன்றிணைந்து பார்க்கறது ஒரு புறவயமான பார்வையா மாறிடும்ங்கறால நான் இதை பத்தி அகவயமான தியான அனுபவத்தைக் குடுக்கக் கூடிய மாற்றமில்லா மௌனத்துல இருக்கேன்.
எழுத்தாளர் காஞ்சி நாட்டன் : கம்பனோட பத்தாயிரம் பாடல்கள்ல வெளிப்படாத வீரம் இந்தக் குங்குமம் வெச்சுக்கிட்டு கத்தற கூட்டத்தோட ஏவுகணைகள்ல வெளிப்படும்னு நினக்கறது தப்பு. ஏவுகணைங்கறதுக்குத் தமிழ்ப் பெயர் இருக்கான்னு கம்பன் கிட்டதான் பார்க்கணும். சுடு சரம்ங்கற வார்த்தையப் பயன்படுத்தறான். ‘சொல் ஒக்கும் சுடு சரம்’. அதனால், சொற்கள் சூடாயிடும்ங்கறதால நான் எதிர்க்கவோ உடன்படவோ கூடிய சொற்களைச் சொல்வதைத் தவிர்க்கறேன். ஏதோ நான் மட்டுமே இப்படிச் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். இலக்கியத்துல இதுக்கும் இடம் இருக்கு. கர்ணன் கேட்டானே “எடுக்கவோ கோர்க்கவோ என்றான்’ -நினைவுக்கு வருது இல்லியா ? அதே பாரம்பரியத்துல, பாரம்பரியம் என்ன வட மொழி எதுக்கு – பண்பாடு – அதுல வர்றதால நான் சொல்றேன் – எனக்கு சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.
உலக்கை நாயக்கர் : முற்போக்கு எழுத்தாளர்கள் கருத்துக்கு முன்னாடியே என்னோட கருத்து வேணும்னு நீங்க கேட்டதுக்கு என்னோட நன்றியச் சொல்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதைக் கூட நாம் இந்த யதேச்சாதிகார ஒன்றிய அரசின் நடவடிக்கையால் தள்ளிப்போட வேண்டிய நிலைல இருக்கறத நினைக்கும் போது தான் என் அம்மாவோட நெத்தில இருந்த குங்குமம் நினைவுக்கு வந்ததுன்னு நான் சொன்னா, உடனே உங்க ஊடகங்கள் ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ அப்டீன்னு சொன்னியேன்னு கேப்பீங்கங்கற நினைப்புலதான் இதை நாம் சொல்லவேண்டியுள்ளதுங்கறத நீங்க விக்ரம் படம் பாத்த போதே தெரிஞ்சுகிட்டு இருப்பீங்கன்னு நான் நினைப்பேன்னு உங்களுகுத் தெரியும்னு நண்பர் ஜெயமோகன் கிட்ட பேசும் போது இதே கருத்த பி.ஏ.கிருஷ்ணன் சொன்னார்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்ங்கறத ஆப்பரேஷன் சிந்தூருக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம்னு நினைக்கற மனசு இருக்கே அது தான் கடவுள் அப்டீன்னு நான் சொல்றதால கடவுள் இருக்கார்னு சொல்றேன்னு அர்த்தம் இல்லைங்கறதுல இருக்கற அறம்ங்கற குறியீடு புரியணும்னா நீங்க தாஸ் கேப்பிடல் படிக்கணும், முடியல்லேன்னா, மவுண்ட் ரோடுல இருக்கற அறிவு சார்ந்த ஆலயத்துல லோனுக்கு அப்ளிகேஷன் போடணும். புரியுதா ?

சப்பர் ஸ்டார் சஜனி நாத் : சும்மா அதிருதில்ல.. ஹ ஹா. மிசைல் விட்டா அதிராம என்ன செய்யும் ? ஹ ஹா. ஒரு மிசைல் விட்டா நூறு ட்ரோன் விட்ட மாதிரி. ஹ ஹா. வம்பு ட்ரோனைத் தொட்டதுமில்ல வந்த ட்ரோனை விட்டதுமில்ல, இது எப்டி இருக்கு ? வர்ட்ட்டா… ஹஹ் ஹா..
காட்டளி மாக்கள் கட்சித் தலைவர் தரு.பாமதாசு : ஆப்பரேஷன் சிந்தூர்னு பேர் வெச்சாலும், நாங்க நடத்த சித்த்ரா பௌர்ணமி விழாவுல என்ன முடிவு எடுக்கப் போறோம்னு யாருக்குமே தெரியாது. என்னால மட்டுமே முடிவு எடுக்க முடியும். வேற யார் எடுத்தாலும் அது முடிவு இல்ல. நான் தான் என் கட்சிக்கு முடிவு. புரிஞ்சுக்கோங்க.
டியூ பூமர் சாரிதாஸ் : ஒரு ப்ரம்மோஸ் மிசைல் என்ன விலை ? ரெண்டு கோடின்னு வெச்சுக்கோ. நீ 14 மிசைல் விட்ருக்கே. அப்ப பதிலானு இண்டு ரெண்டு கோடி. அத்தோட 24 ஹார்ப் மிசைல். ஒண்ணு அம்பது லட்சம். இருவத்தினாலு இண்டு அம்பது லட்சம். அத்தோட போர் வீரர்களுக்கு டீ, காஃபி செலவு. அது ஒரு பத்து லட்சம், எவ்வளோ ஆச்சு ? எவ்வளவு ஆச்சுங்கறேன். இதுக்குப் பதிலா ஒரே ஒரு அணு ஆயுதத்த பொட்டிருந்தா, இத்தனை செலவு ஆகியிருக்குமா ? இல்ல கேக்கறேன். இதக் கேட்டா கர்நாடக மருமகப் பிள்ளைக்குக் கோவம் வருது. என்ன புரியுதா ? புரியுதாங்கறேன்..
சளம்பு சங்கர் : இதையே நான் நாலு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த முதல்வருக்கு இன்னும் புரியல்ல. அப்பரேஷன் சிந்தூர்னா, எந்த ஆஸ்பத்திரிலன்னு கேக்கறாரு. இந்த அப்பரேஷனே அவருக்கு எதிரானது தான்னு அவருக்கு எப்பத்தான் புரியப்போகுது ? இதப்பத்தியெல்லாம் அதிகாரிகள் சொல்றதில்ல. அல்வா சாப்பிடறீங்களான்னு அவருக்கே அல்வா கொடுக்கறாங்க..
டைரக்டர் தனிரத்னம் : யெஸ். ஆப்பரேஷன். சிந்தூர். சக்ஸஸ். பேக் அப்.
கடப்பாடி கழனிசாமி : அப்பரேஷன் சிந்தூர் நடக்கும் போது முதல்வர் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கார் ? இவர் நம்ம மாநில முதல்வரா ஆன பிறகு தான் காஷ்மீர்ல தீவிரவாதம் அதிகரிக்கும்னு புரட்சித் தலைவி அம்மா பல தடவை சொல்லியிருக்காங்க. இதப்பத்தி சத்த சபைல பேசலாம்னா மைக்க ஆஃப் பண்ணிடறாங்க.
பாலின் : இந்த மாடல் ஆட்சியில் ஆப்பரேஷன் சிந்தூர் நடைபெறுவது நமது மாடலின் வெற்றியே. இதையே மாடலாக எடுத்துச் செய்ய வேண்டும் என்று சம்தா சானர்ஜி, கொக்க்கரிவால் என்னிடம் பேசியுள்ளனர். நமது மாடலைப் பின்பற்றும் இந்திய ராணுவத்துக்குப் பாராட்டுகள். அனைவருக்கும் அனைத்தும் என்கிற ஈரோட்டுப் பாதையைப் பின்பற்றி அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் விடுமுறைத் திருநாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
தனி-மொழி எம்.பி.: அப்பரேஷன் சிந்தூர் என்பதில் உடன்பாடு உண்டா இல்லையா என்பதில் நேர்மாறான, எதிர்மாறான, நேர் எதிரான, எதிர் நேரான கருத்துகளுக்கு இடமில்லை. ஆயிரம் ஆண்களுக்கு எழுநூறு பெண்கள் இருக்கும் நாட்டில் சிந்தூர் வைத்துக் கொள்ளாத பெண்களும் உள்ள நிலையில், சிந்தூரை அழிக்கும் மதுபானக் கடைகளை எங்கள் அரசு எந்த ஜென்மத்திலாவது முதல் கையெழுத்தில் நிறைவேற்றும் என்று வாக்கு கொடுக்கிறேன். மற்றபடி நான் சிந்தூருக்கு எதிர் இல்லை. திருச்செந்தூர் எங்கள் ஊரில் தான் உள்ளது. ஆகவே ஒன்றிய அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் இது மாடலின் ஆட்சி.
எழுத்தாளர் கே.ஏ.கிருஷ்ணன் : 56 இஞ்ச் பெரியதா, 66 இஞ்ச் பெரியதா என்கிற பேச்சு எழுவது இயற்கையே. ஆனாலும், இந்துத்துவ வெறியர்கள், லும்பன்கள், தமிழ் பிராம்மணர்கள், மார்சிஸ்ட் அரையணாக்கள் என்று பலரது வாயையும் அடைக்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்தூர் நடந்தது, முடிந்தது என்று சொல்ல முடியுமா என்று போகப்போகவே தெரியும். ஆனால் ஒன்று. தமிழகக் கவிஞர்களின் கவிதையாலேயே போர் முடிந்தது என்று ஒரு கட்டுரை எழுதமுடியுமா என்று பார்க்க வேண்டும்.
நரத்தமிழன் சைமன் : இப்ப நான் கேக்கிறேன், தம்பி.. எந்த சேனல் நீ ? கேள்வி என்ன மட்டும் தான் கேப்பியா ? உன்னோட வானூர்தியும் சுடுகணையும் என்னோட காசுல ஓடுது தம்பி. ஒப்புக்கறியா இல்லையா ? வானூர்தித் தளத்துல சுடுகணைய விட்டோம்னு சொல்றீல்ல, அதுக்கு விண்வெளித் தட செயற்கைப் படம் இருக்கா ? யார் கிட்ட சொல்ற ? நாங்கல்லா தலைவர் கிருபாகரனோட பிள்ளைகள். எங்க தாத்தா யாருன்னு தெரியுமா ? லெமூரியா கண்டம் தெரியுமா ? சும்மா பேச வந்துட்டீங்க.. தோ பாரு.. மரியாத அவ்வளவுதான். மேல கருத்து வேணும்னா விஜயலட்சுமி கிட்ட கேளு.. என்ன புரியுதா. ? சும்மா கேள்வி கேடுக்கிட்டு..
சைகோ : கிரேக்க அறிஞர் கான்ஸ்டாண்டைன் என்ன சொன்னார் ? ஃபின்லாந்து அறிஞர் ஃபிக்ஸன் என்ன சொன்னார் ? நெப்போலியன் போனாபார்ட்டு சொன்னதைத் தான் செய்ததா இந்த ஒன்றிய அரசு ? சிந்தூர் என்கிற பெயரில் ஒளிந்துள்ள பூனையை விரட்டிய புலிகளின் வழி வந்தவர்கள் நாங்கள். ஆகவே, கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன். கட்சியைப் பிளவு படுத்தும் நோக்கில் யாரும் செயல்பட வேண்டாம் என்று சொல்லிக்கொள்கிறேன்.
மருத்துவர் தன்புக்கனி : சிந்தூர் பத்தி கேட்டீங்கன்னா.. இன்னிக்கி சித்ரா பௌர்ணமி. எல்லாரும் கூட்டத்துக்கு வந்துடுங்க. கட்சிக்கு நானே தலைவர். நன்றி.
ஜந்து ராம் : The tactical operation, codenamed politically as ‘operation sindhoor’, might have achieved the short term target of regional elections in the hindi heartland, while what remains to be seen is whether the long term strategic gains would be attained or not. That only time will tell and hence don’t ask me.
சதயநிதி பாலின் : ஆப்பரேஷன் சிந்தூர். பேர் நல்லா இருக்கு. படம் பட்ஜெட் எவ்வளவு ?
–ஆமருவி
11-05-2025
Leave a comment