டுமீல் டைம்ஸ் செய்தியாளர் அசட்டு அம்மாஞ்சி, ஜெய்ராம் கணேஷ், சல்லிகார்ஜுன கார்கே, ராஹுல் சாந்தி, செல்வப் பெரியவர் நடத்திய காங்கிரஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்குகொண்டார். அதன் விபரம் இதோ :
அ.அ: சஷி தரூர் இந்தியாவை பாராட்டிப் பேசியிருக்காரே..
ஜெய்: தரூர் தன் கருத்தைச் சொல்கிறார். கட்சியின் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லை.
அ.அ.: இந்தியா எடுத்த நிலை சரியானது அப்டீன்னு தரூர் சொல்றாரே ?
ஜெய்: எங்கள் கட்சி ஜனநாயகக் கட்சி. தனி நபர் கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால், கட்சியின் கருத்தும் தனி நபர் கருத்தும் ஒண்ணா இருக்க வேண்டியதில்லை.
அ.அ.: அப்ப என்ன சொல்றீங்கன்னா..
ராஹுல்: அதான் சொல்லிட்டாரே. இந்தியாவால ஒரு ட்ரோன் கூட தயாரிக்க முடியாது. இது என்னோட கருத்து. கட்சியோட கருத்தும் அது தான். ஆனா, கட்சிக்கு என்ன கருத்து இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஏன்னா, கான்ஸ்டிட்யூஷன் தான் நமக்கு முக்கியம்.
அ.அ.: உங்க கட்சி பட்டியல்ல தரூர் இல்லையே ?
ரா: அவர் எங்க கட்சிலயே இல்லையே.
அ.அ.: என்ன சார் சொல்றீங்க ? அவர் உங்க கட்சி எம்.பி. இல்லையா ?
செல்வ: கட்சியோட எம்பியா இருந்தா கட்சில இருக்கணுமா என்ன ? என்ன பஹுத்-அறிவு இது ? இப்ப நான் கூட காங்கிரஸ் தலைவரா இருக்கேன்னு சொல்றாங்க. ஆனா, காங்கிரஸ் கட்சி வேலையா செய்யறேன் ? சமூக நீதி பிரகாரம் திமுக சொல்ற வேலைய மட்டும் செய்யல்லியா ? அத மாதிரிதான்.
அ.அ.: கார்கே என்ன சொல்றார் ?

ஜெய் : ராஹுல் சொல்றதைத்தான் அவரும் சொல்றார். நான் கட்சி சொல்றதச் சொல்றேன். ஆனா, என்னோட கருத்து கட்சியோட கருத்தா இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனா, நான் சொல்றது தான் கட்சியோட கருத்தா இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இப்ப புரியுதா ?
அ.அ.: கமல் ஹாசன் உங்க கட்சில சேர்ஹ்துட்டாரா ?
ராஹுல் : யார் சேர்ந்தாலும் எங்க கட்சிக்குன்னு கொள்கை உண்டு. அது என்ன கொள்கைன்னு பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். அது என்ன முடிவெடுத்தாலும் நான் சொல்றது தான் கொள்கை. அதனால பொதுக்குழு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம். இதை மன்மோஹன் சிங் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அ.அ.: பொதுக்குழுல யார் இருக்காங்க ?
ராஹுல் : நா, அம்மா, தங்கச்சி, கார்கே அங்கிள், ஜெய்ராம் அங்கிள் அப்பறம் சிலபேர்.
அ.அ.: அதான் எல்லாரும் இங்க இருக்கீங்களே ?
செல்: சமூக நிதி வேண்டாமா ? எதுக்கும் எங்க தமிழ் நாட்டுத் தலைவர் கிட்ட கேட்டு முடிவெடுத்துடலாம்.
அ.அ.: நீங்கதானே தலைவர் ?
செல்: அதை நான் சொல்லக்கூடாது. தமிழ் நாட்டுக் காங்கிரசுக்கு இப்போதைய தலைவர் யார்னு சொல்ல வேண்டியது எங்க மாநில முதல்வர் தான். இது தானே கூத்தணி தர்மம் ?
ராஹுல் : வேற கேள்வி இருக்கா ? எனக்கு அமெரிக்காவுக்கு ஃபிளைட் பிடிக்கணும்.
அ.அ.: இப்பத்தானே போயிட்டு வந்தீங்க ?
ஜெய்: அது உட்கட்சி விவகாரம். அதப்பத்தி பேச வேண்டாம்.
கார்கே: கட்சி விவகாரங்களை நானே பேசறதில்ல. மோதி என்ன பண்றார்னு பார்க்கறதுக்கே எனக்கு நேரம் போதல்ல. வேற என்ன கேள்வி.
அ.அ.: இந்த ஆப்பரேஷன் சிந்தூர் பத்தி காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் பேசினது பத்தி ..
ஜெய்: அவர் தான் சொல்லிட்டாரே. அப்பறம் நாங்க என்ன சொல்றதுக்கு இருக்கு ?
அ.அ.: அவர் சொன்னத ஒத்துக்கறீங்களா ?
ஜெய்: அவர் சொன்னத அவர்தானே ஒத்துக்கணும் ? நான் எப்படி ஒத்துக்கறது ?
அ.அ.: அப்ப அவர் ஆப்பரேஷன் சிந்தூர் பத்தி சொன்னத நீங்க ஒத்துக்கல, இல்லியா ?
ஜெய்: நான் அப்படிச் சொன்னேனா ? அவர் சொன்னத அவர் ஒப்புக்கணும்னு சொன்னேனே தவிர, அவர் சொனந்த நான் ஒப்புக்கலைன்னு சொலல்ல.
அ.அ.: அப்ப ஒத்துக்கறீங்க, இல்லியா ?
செல்: அதை ஒருதரம் எங்க மாநில முதல்வர்கிட்ட கேட்டுட்டுச் சொல்றேன். அது தானே சமூக நீதி ?
அ.அ.: ஆனா, இது உங்க கட்சிக் கொள்கை இல்லையா ? நீங்கதானே சொல்லணும் ?
செல்: கூடாது, கூடாது, அது மரியாதையா இருக்காது. காங்கிரஸ் என்ன சொல்லணும்னு முதல்வர் சொல்வார். அதை நாங்க சொல்வோம்.
ராஹுல் : அதனாலதான் சொல்றேன், இந்த ஃபாசிஸ பாஜக ஆட்சில எங்க கொள்கைய நாங்களே சொல்றதுக்குக் கூட முடியறதில்ல. பார்த்தீங்களா ?
அ.அ.: புரியலையே..
ராஹுல்: அது தான் பிரச்னை. பாஜக உங்களை அப்படிக் குழப்பிவிட்டிருக்கு. அதனாலதான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்னு சொல்றேன்.
அ.அ.: அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் ?
ஜெய்: சம்பந்தம் இருக்கா இல்லையான்னு பார்க்க வேண்டியது எங்க வேலை இல்லை. சஷி தரூர் என்ன பேசினாலும் அதுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றதுதான் என் வேலை. அது சரியான்னு முதல்வர்கிட்ட கேட்டு சொல்றது செல்வாவோட வேலை. இதுக்கு சம்பந்தமே இல்லாம பேசறது ராஹுல் வேலை. இது எல்லாத்துக்கும் காரணம் மோதின்னு சொல்றது கார்கே வேலை. இப்ப புரியுதா சமூக நீதி, கூத்தணி தர்மம் என்னன்னு ?
அ.அ.: சார், ரொம்ப கொழப்பமா இருக்கு..
ராஹுல்: அதுக்குத்தான் அமெரிக்காவுல சாம் அங்கிள் இருக்கார். எனக்கு எதாவது கொழப்பம்னா அவர்கிட்ட போவேன். அழகா சொல்லிக்கொடுப்பார். இப்ப பாருங்க, இந்தியால ட்ரோன் தயாரிக்க முடியாதுன்னு நான் சொன்னது அவர் சொல்லிக் கொடுத்தது தான். பெரியவங்கள மதிக்கணும். அதுனால தான் எங்கம்மா சீத்தாராம் கேசரிய நாற்காலியொட வெளில போட்டாங்க. கான்ஸிட்யூஷன்ல இருக்கே.. இதெல்லாம் மோதி மறைக்கறார்.
செல்: கவலைப்படாதீங்க. ராஹுல் சொன்னத முதல்வர் கிட்ட சொல்லி, அவர் என்ன சொல்றார்னு சொல்றேன். அப்ப புரியும். நான் தினமும் அப்படித்தான் செய்யறேன்.
அ.அ.: ஐயோ, நான் அதைச் சொல்லலீங்க, அந்த சஷி தரூர் விஷயமா..
ஜெய்: அதுல என்ன விஷயம் இருக்கு ? அவர் சொன்னத அவர் சொன்னார். நான் சொன்னத நான் சொன்னேன். நீங்கதான் ரெண்டையும் போட்டு கொழப்பிக்கறீங்க. பாருங்க ராஹுல் இருக்கார். எதையாவது நினைச்சு குழம்பறாரா ? குழம்பறதே இல்ல. ஏன்னா அவர் நினைக்கறதே இல்ல..
ராஹுல்: காந்திய ரயில்லேர்ந்து தள்ளின சதில மோதிக்குப் பங்கு இருக்குன்னு சமீபத்துல மணி சங்கர் அங்கிள் சொன்னார். அதப்பத்தி பார்லிமெண்டுல பேச முடியுமா மோதியால ?
அ.அ.: இப்ப புரிஞ்சுது சார். எல்லாம் தெளிவா புரிஞ்சுட்டுது. நீங்க அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, மணி சங்கர் அங்க்ளையும் கூட்டிக்கிட்டு கீழ்ப்பாக்கம் ஒருமுறை வந்துட்டுப் போங்க. சரியாயிடும்.
செல்: எதுக்கும் ராஹுல் வர அனுமதி உண்டான்னு முதல்வர் கிட்ட கேட்டுக்கலாம். அதுதானே நம்ம கட்சிக் கொள்கை ?
அ.அ.: இந்த வியாதிக்கு வைத்தியமே கிடையாது சார். தெரியாம வந்துட்டேன். கிளம்பறேன். கீழ்ப்பாக்கம் போயிட்டுப் போகலாம்னு நினைக்கறப்ப, கீழ்ப்பாக்கம் போனாத்தான் குணமாகும்னா பட்டினப்பாக்கம் போனா குணமாகாதுன்னு சொல்ற மாதிரி இருக்குங்கறதால, கீழ்ப்பாக்கத்தப் பட்டினப்பாக்கம்னு பேர் மாத்தி வெச்சு.. அடச்சே.. முத்திடும் போலயே. ஐயோ இனிமே வரவே மாட்டேன். பை பை. .
ராஹுல் : கொஞ்சம் இருங்க. இதுக்கே இப்படீன்னா, இன்னும் எங்க எம்.பி. பாதிசனி சொன்னதப் பத்திப் பேசவே ஆரம்பிக்கல்லியே.. கொஞ்சம் இருந்து கேட்டுட்டுப் போங்க…
அ.அ.: ஹை.. அஸ்கு புஸ்கு.. இந்த மாதிரி ஓளறல்களக் கேட்டுக்கிட்டே இருந்தா என்னையும் உங்க கட்சில சேர்த்துடல்லாம்னு பார்க்கறீங்களா.. அது தான் முடியாது. நாளைக்கு தருமாகழகன் பிரஸ் மீட் இருக்கு. அங்க போகணும், வர்ட்டா..
–ஆமருவி
18-05-2025
Leave a comment