டுமீல் டமிஸ் நிருபர் அசட்டு அம்மாஞ்சி மறைந்திருந்து கலந்துகொண்ட இண்டிக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நிகழ்வு:
ஸ்டா: வாங்க வாங்க, கொரோனால்லாம் எப்படி இருக்கு ?
திரு: வாங்கத்தானே வந்திருக்கோம். ஆனா கொரோனவ இல்ல. சமூக நீதிப்படி அத்துமீறாம இருக்கணும்னு கேட்டுக்கறேன்.
சோனியா: கொஞ்சம் இருங்க. பையன் அப்செட் ஆயிட்டு, தாய்லாந்து, அமெரிக்கான்னு போய் உளற ஆரம்பிச்சுடுவான்.
சு.சுவாமி: பேசாம இருந்தா இங்கியே உளறலாம்னு சொல்றீங்களா ?
வை: எங்கள் உரிமையில் கை வைப்பதை எதிர்க்கிறேன்.
ஸ்டா: அண்ணே, கொஞ்சம் பேசாம இருங்க. பேப்பர்ல எழுதிக் கொடுத்தத முதல்ல வாசிக்கணும். ஆக..
கேஜ்: பிரதமரோட காலேஜ் சர்ட்டிஃபிகேட் பத்தி பேசறதா இருந்தா மட்டும் நான் பேசறேன். அதுதான் இப்ப நாட்டுக்குத் தேவை.
பினரயி : கேரளாவுலயும் வங்காளத்துலயும் அமெரிக்க அடிவருடி காங்கிரஸ நாங்க எதிர்க்கறோம். தமிழ் நாடு, கர்நாடகா மத்த எல்லா இடத்துலயும், செக்யூலர் கட்சியான காங்கிரசுக்கு ஒத்துழைக்கறோம். இது தான் மார்க்ஸ் எனக்குச் சொல்லிக் கொடுத்தது.
ஸ்டா : சரியா சொன்னீங்க கம்ரேட். அதானிய எதிர்க்கற அதே சமயத்துல அதானி போர்ட்டுக்கு ஒத்துழைச்ச மாதிரி இல்லியா ?
ராஹுல் : அம்மா.. எனக்கும் பேசணும். ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிஞ்சப்பறம் இந்தக் கூட்டணி பேச்சு பத்தி பேசலாம்.
சோனியா : உஷ்.. ப்ரியங்கா வேற இல்ல. மம்தா என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
மம்தா : நீங்க சொன்னா நான் பேச முடியாது. நானே பேசணும்னு நினைச்சாத்தான் நான் பேசுவேன். ஆனா, காங்கிரஸோட பேச மாட்டேன். இண்டிக்கு நான் தான் தலைவர். இருந்தாலும் வங்காளத்துல இண்டி கிடையாது.
ராஹுல் : ஒண்ணுமே புரியலையே..
வைகோ : இப்ப தெரியுதா மதச்சார்பின்மைன்னா என்னன்னு? இதைத்தான் புலிகள் இத்தனை நாளா சொனனங்க.
சு.சுவாமி : மோதி பதவி விலகணும்னு நான் ஒரு வழக்கு போடலாம்னு இருக்கேன்.
ஸ்டா : நீங்க யாரு? எங்கியோ கேட்ட குரலா இருக்கே, நீங்க எந்த நேஷனல் பார்ட்டி ?

சோனியா : ஐயோ, அவரை கெளப்பாதீங்க.. நேஷனல் அது இதுன்னு ஞாபகப்படுத்தாதீங்க. மொத்தத்துல படுத்தாதீங்க ப்ளீஸ்.
சு.சுவாமி : நான் யாருன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, நான் சொல்றது என்னன்னு தான் யாருக்குமே புரியாது. ஏன்னா எனக்கே அது புரியறதில்ல..
கமல் : அப்ப மக்கள் பாதி மய்யத்துக்கு வந்துடுங்களேன். தனியா இருக்க பயமா இருக்கு. காத்தோட்டமா பேசிக்கிட்டிருக்கலாம்.
பினரயி : மதச்சார்பின்மை முக்கியம். அதுனால முஸ்லீம் லீக்கோட கூட்டணி வைக்கணும். இது என் கருத்து.
ஸ்டா: நான் சொல்லணும்னு நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க சேட்டன். ஆனா பாருங்க இத எழுதிக்கொடுக்கல. அதுனால சொல்லல.
திருமா : எனக்கு பத்து சீட்டு வேணும், வேங்கைவயல் விஷயமா மௌன விரதம் இருந்தேன். அதுக்காவாவது செய்யணும்.
மம்தா : நீங்க யாரு ? ஸ்டாலின் ஜி, இவர் உங்க கட்சியா ?
ஸ்டா : அனேகமா அப்படித்தான். எங்க கட்சியோட தீவிர பேச்சாளர் பிரிவு.
மம்தா : அதான் பேசாம மௌன விரதம் இருந்தார் போல. சரிதான். புரியுது.
ராஹுல் : அம்மா.. சீக்கிரம் வாங்கம்மா. நாளைக்கு அமெரிக்கா போகணும்.
சு.சுவாமி : ராஹுல் இந்தியக் குடிமகனே இல்லைன்னு வழக்கு இருக்கு. நான் தான் போட்டேன். அதுனால அவர் அமெரிக்கா போகறதுல பிரச்னை இல்லை.
ஸ்டா : இப்ப அதுக்கு என்ன பிரச்னை ?
வைகோ: பிரச்னை பிரபாகரன் வீரமரணம் அடைந்ததோட முடியல. இன்னும் எனக்கு அக்கவுண்ட்ஸ் செட்டில் ஆகல. வர வேண்டியது வரல. அதுக்குள்ள இலங்கைப் பிரச்னை எப்படி தீரும் ?
கேஜ் : மீட்டிங் அஜெண்டா என்ன ? நேரம் ஆகுது. எங்க கட்சி கூட்டம் திஹார்ல இருக்கு. நான் போகணும்.
திருமா : இன்னும் சீட் முடிவாகல்லையே.. எனக்கு பத்து.
பினரயி : ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி நாட்டுக்குக் கேடு. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
கமல் : இந்தியாவோட முதல் தீவிரவாதி ஒரு இந்துன்னு சொல்றதுக்கு முன்னாடியே சேட்டன் இப்படிச் சொன்னதால, அது குறித்து நான் என்ன சொன்னாலும் அதுக்கு மறுப்பு வரலாங்கற எதிர்பார்ப்பு இருக்கற நிலையச் சொல்ல வேண்டிய நிலை இருக்கே, இதத்தான் ஃபாசிச பாஜக ஏற்படுத்தியிருக்குன்னு சொல்லலாம்னு நினைக்கறச்சே..
மம்தா : சீக்கிரமா எதாவது சொல்லுங்க. எனக்குக் கோவம் வந்தா என்ன செய்வேன்னு வங்காளத்துல இந்துக்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க.
ஸ்டா : எங்க கட்சில பெரும்பான்மை இந்துக்கள் இருக்காங்க. அதுனாலதான் நாங்க இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்றதில்ல. ஆனா அவங்க எங்களுக்குத்தான் ஓட்டு போடுவாங்க.
ராஹுல் : விமன் எம்பவர்மெண்ட் விஷயத்துல மோதி அரசு பின்னோக்கிச் செல்கிறதுன்னு அறிக்கை விடட்டுமா அம்மா ? காலைலேர்ந்து அறிக்கை விடாம, கை அரிக்குது.
வைகோ : அடடே.. என்னைப்போல் ஒருவன். நானும் எதாவது விட்டுக்கிட்டே இருப்பேன். காலைல கூட ட்ரம்ப் ஆட்சியக் கண்டிச்சு அறிக்கை விட்டேன். காசா பணமா.. எதாவது சொல்லலேன்னா காத்து பிரிய மாட்டேங்குது. காஸ் ட்ரபிள்.
பினரயி : பார்த்தீங்களா.. காஸ்ட்ரோ இன்னிக்கும் நமக்குத் தேவைப்படறார். அதுனால எனக்கு 25 சீட் வேணும்.
திருமா : கள்ளக்குறிச்சி விவகாரம் பத்தி மௌன விரதம் இருந்ததுக்கு மீட்டருக்கு மேல வேண்டாம், அட்லீஸ்ட் ரெண்டு சீட் போட்டு 12னு ஆக்கினீங்கன்னா மதச்சார்பின்மைக்கு உதவியா இருக்கும்.
மம்தா : அது என்ன கள்ளக்குறிச்சி. கொல்கொத்தா மெடிக்கல் ஸ்டூடண்ட் விவகாரத்த விட பெருசா ? என்னோட சட்ட ஒழுங்கு திறமையப் ஆருங்க. அதுனால எனக்கு யாரோடயும் கூட்டணி கிடையாது.
சு.சுவாமி : எனக்கு என்னோடயே கூட்டணி இல்ல. அதுனால கவலையே இல்ல.
சோனியா : இதெல்லாம் நாம டிஸைட் பண்ணினா தப்பாயிடும். அதுனால பொதுக்குழுவுல பேசிட்டு முடிவெடுக்கலாம்.
ராஹுல் : அது என்னம்மா பொதுக்குழு ? எந்த நாட்டுல இருக்கு ? நாம போயிருக்கோமா ?
சோனியா : ஐயோ.. நீ, நான், ப்ரியங்கா, கார்கே எல்லாம் உக்காந்திருப்போம். நான் சொல்றத ஒண்ணு விடாம கார்கே எழுதிப்பாரே.. அதுதான்.
ராஹுல் : ஓ அதுவா. அப்பப்ப ஜெய்ராம் அங்கிள் வந்துட்டுப் போவாறே.. அதானே..
சோனியா : மானத்த வாங்காதே.. அவர் தண்ணி பாட்டில் வெச்சுட்டுப் போவார். நாம சொல்லி, கார்கே எழுதிக் கொடுத்தத பப்ளிக்ல சொல்வார்.
வைகோ : இது உங்கள் உட்கட்சி விவகாரம். இதைப் பொதுவெளியில் பேச வேண்டாம். நானும் என் மகனும் மட்டுமே கட்சி விவகாரங்களை வீட்டில் பேசுவோம். வேறு யாரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில், கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால்..
கமல் : எங்க கட்சி பொதுக்குழுல நான் மட்டும் தான் பேசுவேன். ஏன்னா கட்சி உறுப்பினர் மட்டுமே பேச வேண்டும். நான் மட்டுமே உறுப்பினர்.
சு.சுவாமி : நான் பேசறதெல்லாம் ட்விட்டர்லதான். ஏன்னா எனக்குக் கட்சியே கிடையாது. இதப்பத்தி ஒரு வழக்கு போடலாம்னு இருக்கேன்.
ஸ்டா : எங்கள் கட்சி மட்டுமே ஃபாசிச பாஜகவுக்குத் தடுப்புச் சுவராக உள்ளது. சனாதன ஒழிப்பு, மது ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஹிந்தி ஒழிப்பு, சென்னையில் கொசு ஒழிப்பு, வெள்ள ஒழிப்பு என்று பலதையும் ஒழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
கெஜ் : நான் கூட எதையாவது ஒழிக்கணும்னு நினைச்சேன். கட்சிய ஒழிச்சுட்டேன்.
கமல் : அப்ப நம்ம கட்சியா நீங்க ? எங்க கட்சி ஆரம்ப விழாவுக்கு வந்து ஆசீர்வாதம் பண்ணினீங்களே.. அதோட பலன் இப்ப தெரியுது..
வைகோ : நாங்க பரவாயில்லை. ரெண்டு பேர் இருக்கோம். நானும், பையனும்.
பினரயி : மகன்னு சொன்னதுன் தான் நினைப்புக்கு வருது. மகளோட கம்பெனி அமெரிக்காவுல திறக்கணும். அதுனால நாளைக்கு உடல் நிலை காரணமா அமெரிக்கா போறேன். கம்யூனிசம் வளரணும் இல்லியா ?
திருமா : எங்க வேணா போங்க. சீட் பார்த்துப் போட்டு கொடுத்துட்டுப் போங்க. இல்லேன்னா சமூக நீதியப் பின்னால பார்த்துக்கலாம்னு இப்ப தேச நலம் கருதி பாஜககிட்ட பேச வேண்டி இருக்குமோன்னு நினைக்கலாம்னு தோணுது.
கமல் : அடடே.. என்னை மாதிரியே பேசறீங்களே.. பேசாம எங்க கட்சில இணைஞ்சுடுங்களேன். எனக்கும் பேச்சுத் துணையா இருக்கும்.
வைகோ : மீண்டும் மக்கள் நலக் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்னு நான் பேசுவேன் என்று கிரேக்க அறிஞர் கிறிஸ்டோபர் நோளன் சொன்னதை நினைவு படுத்துகிறேன்.
ஸ்டா : படுத்தாதீங்க வைகோ அண்ணே. நானே சீட்ட மாத்தி எடுத்துட்டு வந்துட்டோமோன்னு கலவரத்துல இருக்கேன்.
திருமா : சீட்ட மாத்திட்டீங்களா ? சிறுத்தைகள் சும்மா இரா, அத்து மீறி அடங்காவேன்னு பாவேந்தரின் வரிகளைச் சொல்ல வேண்டியது தானா தலைவரே.
ஸ்டா : அட இயற்கையே.. எழுதிக் கொடுத்த சீட்ட மாத்தி கொண்டுவந்துட்டேன்னு சொன்னேன்.. ஆக..
சு.சுவாமி : எனக்கு கோர்ட்டுக்கு நேரம் ஆச்சு.. சீக்கிரம் முடிச்சுக்கலாமா ?
ஸ்டா : கோர்ட்டா ? ஏன் ? எதுக்கு ? இந்த கோர்ட்டுகளால மாநில சுயாட்சிக்கே குந்தகம் விளையும்னு அண்ணா அன்றே சொனனார்னு துரை முருகன் சொன்னதா கேள்விப்பட்டேன்.
ராஹுல் : ஸ்டாலின் அங்கிள், அவர் டென்னிஸ் கோர்ட்ட சொல்றார். இல்லியா சுவாமி அங்கிள் ?
சோனியா : பேட்டா.. சுப் ரஹோ. உளறல் அதிகமாகுது.
கெஜ்: ஆமாமா.. இப்பவே அதிகமா உளரக்கூடாது. தேர்தல் நேரத்துக்கு மிச்சம் வெச்சுக்கணும். ‘மௌத் கா சௌதாகர்’, ‘சாய் வாலா’ , ‘சௌகிதார் சோர் ஹை’ இப்பிடி தேர்தல் நேரத்துல மட்டும் தான் உளறணும். அதுதான் மோதிக்குப் பிடிக்கும்.
ஸ்டா : எனக்கு அந்த நேரக் கணக்கெல்லாம் கிடையாது. பஹுத்-அறிவுப்படி, நல்ல நேரம், தேர்தல் நேரம் இதெல்லாம் பார்க்கறதில்ல. நாங்க எப்பவுமே ஒரே மாதிரி தான்.
வைகோ : அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கைப் பிரச்னை பற்றிய அரிச்சுவடிப் பாடம் எடுத்தவன் என்கிற முறையில், நான் சொல்வது என்னவென்றால்..
கமல் : வைகோ அண்ணன் கொஞ்சம் சூடாயிட்டார். வெயில் ஜாஸ்தி, இல்ல ஓவர்.. இல்ல இல்லா அதிகம்னு வெச்சுக்கலாம். அதுதான் தமிழ்.. அதுனால ஏசி போடுங்க.. இல்ல வேண்டாம்.. குளிர் சாதனம் ? இல்ல, சாதனம் தமிழ் இல்லை.. இதப்பத்தி கட்சில யார்கிட்டயாவது கேட்கலாம்னு கட்சில யாருமே இல்ல.. ஐயோ என்ன செய்யறதுன்னு முழிப்பேன்னு நினைச்சீங்கன்னா உங்களோட மத வெறி வெளிப்பட்ட்டுடும்னு நீங்க நினைக்கறதுக்கு வாய்ப்பு உண்டுங்கறது இந்த நேரத்துல நான் சிந்திச்சுப் பார்க்கறதுக்கு வழி இல்லேன்னு தோணறதுக்கு வாய்ப்பு உண்டுன்னு நான் சொல்ல முடிஞ்சாலும் அப்படிச் சொல்ல மாட்டேன்னு நினைக்கறேன் ஏன்னா, சொன்னா நல்லா இருக்காதுன்னு நண்பர் ஜெயமோகன் சொல்லச் சொல்ல எழுதிக்கிட்டவன் நான். ஆனா, இந்த நான் வந்து அந்த நான் இல்ல..
ராஹுல் : அம்மா.. கமல் அங்கிள் என்ன சொல்றாரு ?
சோனியா : உஷ்.. அவரே அப்புறம் சொல்வாரு, அவருக்குப் புரிஞ்ச பிறகு.. சுப் ரஹோ.
ஸ்டா : ஆக.. இண்டிக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இனிதே முடிந்தன. தமிழ் நாடு வெல்லும்.
தினத்தந்தி : ‘தமிழ் நாடு வெல்லும்’ : இண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஸ்டாலின் முழக்கம்.
தினமணி : இண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தில்லி ராஜ கோபாலன் : அமித் ஷா வாக்கிங் போறச்சே என்கிட்ட சொன்னார் : இண்டி கூட்டணி இன்னியோட காலின்னு சொன்னார்ங்கறத உங்க சேனல் நேயர்களுக்குத் தெரிவிச்சுக்கறேன். நமஸ்காரம்.
ஹிந்து : INDI Alliance will save the constitution – Stalin says during Alliance Meeting.
சாணக்யா பாண்டே : புள்ளிவெச்ச கூட்டணி என்ன சொன்னாலும் எனக்குக் குழப்பம் இல்ல. அவங்களுக்குள்ள குழப்பம் இருக்கான்னு பத்திரிக்கையாளர் நீங்கதான் கேக்கணும்.
தினமலர் : இண்டி கூட்டணி முறிவு. பாதியில் எழுந்து சென்ற கமல்.
சன் டிவி. : இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன வெற்றித் திரைப்படம் நாளை உங்கள் சன் டிவியில். காணத் தவறாதீர்கள்.
வீரமணி : இண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளன என்று தெரிந்துகொண்டேன். இதைத்தான் பெரியார் அன்றே சொன்னார்.
–ஆமருவி
25-05-2025
Leave a comment