செந்தில் ஜெகன்னாதன் என்னும் எழுத்தாளரின் ‘அனாகத நாதம்’ சிறுகதையை முன்னரே ஆடியோ செயலி ஒன்றில் கேட்டிருந்தேன். பல முறைகள் கேட்டுள்ளேன் என்பதே உண்மை. மகத்தான மற்றும் கவித்துவமான தருணங்களை வழங்கிய சிறுகதை அது. நாதஸ்வரக் கலைஞனாக முயற்சிக்கும் ஒருவன் அதனை விடுத்து வெளியேறிச் செல்ல முயல்கையில் கலை தானாக நிகழ்ந்து அவனுள் இறங்கும் தருணங்களை, கலை எல்லாருக்கும் நிகழ்வதில்லை, அதற்கான தருணம் ஏற்பட வேண்டும், மனம் உடைந்து வேண்டிக்கொண்டாலே கலை அரசியின் பொற்பாத தூளி பட்டு, அதன் காரணமாக, அதுவரை எட்டாத கலை பின்தொடரும் நிலை ஏற்படும் என்கிற அதி கவித்துவமான, தத்துவக் குறியீடுகள் உள்ள சிறுகதையாகத் தஞ்சைப் பகுதிக்கே உரிய சொல்லாடல்கள் கொண்டு என் மனதுள் பல முறை சிந்தித்துப் பார்க்க வைத்த கலை செ.ஜ.வினுடையது. அந்தக் கதை மூலம் எனக்கு அறிமுகமானார் செ.ஜெ.

யதேச்சையாக ‘மழைக்கண்’ கண்ணில் பட, செ.ஜெ.வுக்காக என்று நூலைத் தேர்ந்தெடுத்தால், உள்ளே ஜெ,மோ. முன்னுரை.
ஒவ்வொரு கதையும் மனித உயிர்ப்பின் புதியதொரு தருணத்தைக் காட்டும் வெளிச்சம். அந்தத் தருணங்கள் நம்மிடையே நிகழ்ந்திருக்கும். ஆனால், சாதாரணக் கண்களுக்கு அவை தட்டுப்படுவதில்லை. உன்னதமான கலைஞன் ஒருவன் மட்டுமே கண்டுகொள்கிறான் அவற்றை. ஆகவே அவன் கலைஞனாகிறான். இந்த முறை ஓர் எழுத்துக் கலைஞனின் படைப்பு: ‘மழைக்கண்’ சிறுகதைத் தொகுப்பு.
நிஜத்திலே ஒவ்வொரு கதையை வாசித்த பின்னும் ஆழ்ந்த பெருமூச்சுடனே நூலை மூடி வைத்தேன். ஆம். இது தான் உண்மை. ஒவ்வொரு நாள் இரவு பணி முடிந்து உறங்கச் செல்லும் முன் வாசிப்பது / எழுதுவது வழக்கம். அந்த வகையில் உறக்கத்தைக் கெடுத்த கதைகள் என்று சொல்லமுடியாத வகையில், ஆனால், நிதர்ஸனத்தைத் தெளிவான எங்கள் தஞ்சை மொழியில் சொல்லிச்சென்றுள்ள ஆசிரியருக்குப் பாராட்டுகள். நன்றிகள். நீங்க அளித்த வாசிப்பு அனுபவத்துக்கு மானசீக விருதுகள்.
ஒவ்வொரு கதையும் நாம் கவனிக்க மறுக்கும் / மறக்கும் ஏதோ ஒரு வாழ்க்கைத் தருணத்தைத் தொட்டுச் செல்கிறது, தஞ்சைத் தமிழ் வழக்காற்றுப் பாணியில். இடையிடையே தென்னாற்காட்டுச் சொல்லாடல்களும் தெரிந்தன என்பது என் பார்வை ( தஞ்சாவூர், நெய்வேலி என்று இரண்டு பாணிகளும் தெரியுமாதலால் ).
‘அன்பின் நிழல்’ ஒரு மகனின் உள்ளார்ந்த அன்பு வெளிப்படும் பண்பட்ட தருணத்தை, ஜால வித்தைகள் எதுவும் இன்றி நேரடியாகக் காட்டும் ஒரு காவியக் கதை. கதையின் போக்கில் உள்ள சொல்லாடல் அக்மார்க் கும்பகோணம், திருநாகேஸ்வரம், மாயவரம். சுஜாதா சொல்வதைப் போல, கதையின் முடிவில் உள்ள திருப்பம் கதையை உயரமான தளத்திற்குக் கொண்டு செல்கிறது.
‘மழைக்கண்’, ‘நெருநல் உளளொருவள்’ – தாய்ப்பாசம் சுட்டும் பெருமுயற்சி. எந்தச் சூழலிலும், எந்த ஏழ்மை நிலையிலும், எந்தக் கையறு நிலையிலும் தாயானவள் திடீரெனப் பேருருக்கொண்டு தேவியாகப் பரிமளிக்கிறாள். அன்னையர் எடுக்கும் விஸ்வரூபம் இவ்விரு கதைகள்.
‘காகளம்’ – இப்படியான கதையைச் சமீபத்தில் வாசித்ததில்லை. மளிகைக்கடைச் சூழல், கர்நாடக இசை, தந்தை ஸ்தானத்தில் முதலாளி, மனிதக் கீழ்மை எண்ணங்கள் என்று விரியும் கதையின் தொடர் சங்கிலியின் மிக முக்கியமான கண்ணி கதையின் முதலிலேயே வந்துவிடுகிறது. அது கதையின் இறுதியில் தன்னை வெளிக்காட்டுகிறது. துவங்கும் இடத்தில் முடிவுறுதல் சிறுகதை நேர்த்தியாக உருவாகி வந்துள்ளதைச் சுட்டுகிறது. மேலும் விவரித்தால் வாசிப்பனுபவம் கெடும் என்பதால் நிறுத்தம் தேவை. கதையில் கும்பகோணம், மாயவரம், குத்தாலம் வரை வந்த செ.ஜ., கொஞ்சம் கோமல் ரோடு வழியாக எங்கள் தேரழுந்தூரிலும் கதைக் களத்தை அமைத்திருக்கலாம் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது.
‘ஆடிஷன்’ – சினிமாத்துறையில் அனுபவம் உள்ள செ.ஜ.வின் ஓட்டத்தில் நிகழ்கிறது. நல்ல கதை. எந்தக் காரணத்தால் காதல் பிரிந்ததோ அதே காரணத்தால் காதலர் சந்திப்பது என்று ஒரு தொடர்புச் சங்கிலி தெரிகிறது. ‘காகளம்’ அளவுக்கு சிறந்த கதை என்று சொல்ல முடியவில்லை.
‘நித்தியமானவன்’ – சினிமா உலகில் உதவி இயக்குநர்களின் வாழ்க்கையைக் காட்டும் விதத்திலும், உதவி இயக்குநர் தனது இயலாமைகளைச் சுட்டி வருந்தும் இடங்களிலும், பின்னர் உதவி இயக்குநரின் வாழ்வில் ஏற்படும் திருப்புமுனையைக் காட்டுவதிலும் மேலோங்கி நிற்கிறது. பிணமாக நடிப்பவர் மூன்று முறை கேமிராவில் சிரிக்க வேண்டும் என்கிற நம்பிக்கை அனேகமாக வெளியுலகில் யாருக்கும் தெரியாத ஒன்று. இவ்வகையிலான நுண் தகவல்களால் நிரம்பிய மனதைத் தொடும் கதை இது. தஞ்சாவூருக்கான longing இந்தக் கதையில் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது.
‘முத்தத்துக்கு’ – முப்பத்தொன்பது வயது வரை திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணின் முதல் முத்த அனுபவம் என்கிற பார்வையில் வாசித்தால் கதை ஒன்றுமே இல்லை என்று தோன்றலாம். ஆனால், அவ்வளவு வயது இன்னும் ஆகாதவரான செ.ஜ. இந்த விஷயத்தை எங்ஙனம் அவதானித்து எழுதியுள்ளார் என்பதில் அவரது திறமை மற்றும் கூர் பார்வை வெளிப்படுகிறது. அவ்வகையான மனிதர் ஒருவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் எழும் என்பதை நினைவோடைகள் மூல காட்டும் உத்தி சிறப்பானது. முதல் முத்தம் கொடுக்கப் போகும் வரை நிகழும் தத்தளிப்புகள், எண்ண ஓட்டங்கள் என்று அதகளமான விவரிப்பு அபாரமாக அமைந்துள்ளது.
‘நேசன்’ – நாய்க்குட்டியைப் பற்றிய சிறுகதை. மனதை நெருடும் விவரணை. கருவுற்றிருக்கும் பெண் தான் பெறவிருக்கும் குழந்தையாகப் பாவித்து நாய்க்குட்டி வளர்க்கிறாள் போலும் என்கிற எண்ணத்தை விதைக்கும் சொல்லாடல்கள். அருமை.
செ.ஜெ. தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சினிமாவில் பணியாற்றுகிறார் என்பதும், தஞ்சையின் மண் வாசனை அவரிட்ம இழுத்துக்கொண்டே இருப்பதும், தான் ஊரில் இல்லாத நிலையைத் தஞ்சை தொடர்பான தன் கதைகளின் மூலம் சொல்லித் தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொள்கிறாரோ என்றும் பல சமயங்களில் தோன்றியது. நான் எழுதுவதும் இவ்வகையிலான எண்ண ஓட்டத்தில் இருந்தே (‘வந்தவர்கள்’, ‘நெய்வேலிக்கதைகள்’, ‘பழைய கணக்கு’) என்பதால் அவரும் அப்படிச் சிந்திக்கிறாரோ என்று நினைக்கிறேன்.
கும்பகோணம்-மாயவரம் பின்புலம் கொண்ட விவசாயச் சார்புள்ள கதைகளைச் சென்னையிலும், சென்னையின் சினிமாத் தொழில் பின்புலம் கொண்ட கதைகளை மாயவரத்தில் இருந்தும் எழுதியிருக்கவேண்டும் என்பது என் கணிப்பு.
வாழ்க்கையின் தருணங்களைக் காட்டுவதற்குக் கூரிய அவதானிப்பு வேண்டும். அத்துடன், அபாரமான மொழி வளமும் அமைந்து, வட்டாரச் சொற்களும் அனுகூலமாக வந்து விழுந்தால், வாசகர்களுக்கு மிகச் சிறந்த விருந்து தான். ‘மழைக்கண்’ தொகுப்பு அவ்வகையிலானது.
‘அவனமேறி’, ‘புள்ளையோள்ளாம்’, ‘ஓகோன்னானாம்’, ‘அடியுரம்’, ‘தாளடி’ – ஒவ்வொரு பயன்பாட்டிலும் தேரழுந்தூர் சென்றுவந்தேன். குலதெய்வம் சொக்காயி அடிக்கடி வருகிறாள். பாத்திரங்கள் வைத்தீஸ்வரன் கோவில் போகின்றன. கர்ப்பம் நிலைக்க / ஏற்பட திருக்கருகாவூர் செல்கின்றன. மயூரநாதர் கோவில் உற்சவம் வருகிறது. நிதர்ஸனமான காட்சிகள். ஒவ்வொரு கதையின் தலைப்பும் வாசக மூளைக்குச் சிந்தனை.
விவசாயப் பின்புலம் கொண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் – குறிப்பாகக் குத்தாலம், மாயவரம், கும்பகோணம் – பிற ஊர்களில், பிற நாடுகளில் இருப்பின், ‘மழைக்கண்’ தொகுப்பை அவசியம் வாசித்துப் பார்க்கலாம். அனேகமாக ஊருக்குத் திரும்பிவிடுவீர்கள்.
‘ மழைக்கண்’. ஆசிரியர்: செந்தில் ஜெகன்னாதன். சொற்றுணை பதிப்பகம். அலைபேசி: +91-97900-30749
–ஆமருவி
02-06-2025
Leave a comment