The side that is not spoken about, generally.

டுமீல் டைம்ஸ் நிருபர் அசட்டு அம்மாஞ்சி மறைந்து நின்று ஒட்டுக் கேட்டவை. 

பிரதமர் மோதி : வாங்க வாங்க கமல்-ஜி. நல்லா இருக்கீங்களா ?

கமல்: வாங்கத்தாங்க வந்தேன். சரியா சொல்லிட்டீங்களே. ஆனா, என்னத்த வாங்கறதுன்னு யோசிக்கறதுக்குள்ள எத்தனையோ வித்தாச்சு, மானம், மரியாதை, வாக்கு, எல்லாமே போயாச்சே. இனிமே என்னத்த வாங்கறதுன்னு நினைக்கறச்சே நீங்க வாங்க வாங்கன்னு சொன்னதும் என்னதுன்னு தெரியாம திணறிட்டேன்னு சொல்லலாம்னு நினைக்கறேன். 

மோதி: பரவாயில்ல விடுங்க. ‘பண்டாரப் பரதேசிகள்’நு சொன்வங்களொட நாங்க கூட்டணி வெக்கல்லியா.  5-6 வருஷம் ஆட்சிக்குப் பிறகு உடனே மதச்சார்பு நினைப்புக்கு வந்து எங்கள விட்டுப் போகல்லியா ? எங்களோட கூட்டணியே இல்லேன்னு சொன்ன எடப்பாடியோட நாங்க கூட்டணி வெச்சுக்கல்லியா ? நீங்க வருத்தப் படாதீங்க. 

கமல்: வருத்தமெல்லாம் இல்லீங்க. ஆனா, நான் சொல்ல வந்தது என்னனா..

மோ: சொல்லவே வேண்டாம், புரியப்போறது என்னவோ இல்ல. எதுக்கு கஷ்டப்படறீங்க ?

க: இல்ல. வந்துட்டு ஒண்ணுமே பேசாம இருக்கறது நல்லா இருக்காதேன்னு நினைக்கறச்சே மனசு கடந்து அலைபாயற நேரத்துலதான் சனாதன தர்மம் பத்தித் தெரியாம வாய விட்டுட்டேன்னு சொல்லலாம்னு வந்தேன்னு நினைக்கறேன். 

மோ: ஆங்.. சனாதன சங்கிலின்னு ஏதோ சொன்னீங்களாமே.. புரியல்லியே..

க: ஹ.. எப்பிடிப் புரியும் ? எனக்கே புரியல்லியே. அதாவதுங்க.. சன் ஆஃப் ஆதன் சங்கிலின்னு சொன்னது சிக்னல் கிடைக்காம சனாதன சங்கிலின்னு கேமராவுல ரெக்கார்டு ஆயிடுச்சுன்னு நினைச்சுக்கறதுக்கு வழி இருக்குன்னு சொல்லலாம்னு தோணுதுன்னு உங்களுக்கே புரியறதுக்கு வாய்ப்பு இருக்கலாம்னு நினைக்கறேன். 

மோ: அது போகட்டும்.. முதல் தீவிரவாதி ஹிந்துன்னு சொன்னதா சொல்றாங்களே.. 

க: அதுவந்துங்க.. சரியாச் சொல்லணும்னா.. முதல்ல தீவிரவாதம் பத்திப் பேசினது ஹிந்து பத்திரிக்கைன்னு சொல்ல வந்தத கேமரா வேற மாதிரி ரிக்கார்டு பண்ணி, முதல் தீவிரவாதி ஹிந்துனு சொல்றமாதிரி ஆயிருக்கலாம்னு நினைக்கறேன்னு சொல்ல வந்தேங்கறது உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். 

மோ: டொனால்டு ட்ரம்ப் கிட்ட பேசற மாதிரியே இருக்கு.. 

க: ஓ.. ரொம்ப பெரிய விஷயங்கள்ளாம் பேசறேனா ?

மோ: அதில்லீங்க.. அவர் என்ன சொல்றாருன்னு அவருக்கே தெரியறதில்ல. அதே மாதிரி இருக்கு. அதைச் சொன்னேன்.

க: இப்பல்லாம் எனக்கே கொஞ்சம் புரியுதுங்க. அவ்வளவு மோசமில்லேன்னு கட்சில சொன்னாங்க..

மோ: கட்சியா ? எந்தக் கட்சிங்க ?

க: ஏன் ? நம்ம திமுக தான். வேறெந்தக் கட்சிக்காரங்க சொல்லுவாங்க ?

மோ: நீங்க ஒண்ணு ஆரம்பிச்சீங்களே.. மக்கள் பாதி மையம்னோ என்னவோ இல்ல?

க: ஓ அதுவா. டார்ச் லைட்ட ஒடச்சதால இருட்டுல கட்சி எங்க இருக்குன்னே தெரியல. அதான் எல்லாரையும் அனுப்பிட்டு நானும் நம்ம கட்சியில சேர்ந்துட்டேன்னு நினைக்கறேன்னு சொல்ல வரலாம்னு நினைகக்றச்சே தான் இந்த நீட் விஷயம் வந்து முன்னே நிக்குதுன்னு சொல்ல வேண்டியதா இருக்கு..

மோ: போகட்டும். நீட் விஷயம் என்னது ? 

க: அதாங்க.. நிட். பரீட்சை. எங்க ஊர்ல எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டு கோச்சிங் கிளாஸ் வைப்போமே அது.. 

மோ: ஓ.. அதுக்கென்ன இப்போ ?

 க: ஏன் ஒண்ணும் இல்லியே.. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு.. சொன்னேன். பிரதமருடன் நீட் பற்றிப் பேசினேன்னு ட்வீட் போடலாமான்னு பார்க்கலாம்னு நினைக்கறதுக்குள்ள அதுக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள் வந்து மனசுல அலை போதுதுன்னு நான் சொன்னா யாரும் கேக்கறதில்லைன்னு நினைச்சு கோவப் படாம இருக்கறதுக்குப் பழகிக்கணும்னு தோணுது..

மோ: யோகா பண்ணுங்க. நான் அதைத்தான் செய்யறேன். ட்ரம்ப், புதின், மம்தா இப்பிடி எத்தனையோ பேச்சு கேட்டு நிதானமா இருக்கணும்னா யோகா தான் ஒரே வழி. எனக்குத் தெரிஞ்சு நம்ம ராஹுல் ஜி கூட யோகா பண்றாருன்னு நினைக்கறேன். கோர்ட் எத்தனை தடவை குட்டினாலும் அசராம உளறிக்கிட்டே இருக்காரே.. அதால.. 

க: ஆங்.. ஒத்துக்கறேன். அதுல சூர்ய நமஸ்கார் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உதயசூரிய வணக்கம்னு நான் சொல்றதுண்டு. தினமும் செய்யறதும் உண்டு. அதாலதான் எம்.பி. பதவியே கிடைச்சதுன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன். 

மோ: ஓ.. அது சரிதான். இப்ப என்ன விஷயமா வந்தீங்க ?

க: என்ன விஷயம்ங்கறது முக்கியம் இல்ல.. ஆனா, ஏதாவது விஷயம் இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்களேன்னு நினைக்கறச்சே எனக்கு எங்கப்பா சிவாஜி ஞாபகம் வருது..

மோ: ஶ்ரீனிவாசன் தானே உங்க அப்பா ?

க: அது அப்பா. இவர் அப்பப்பா. அனேகமா எங்க தமிழ் ஃபிலிம் இண்டஸ்ட்ரீல எல்லாருக்குமே அப்பான்னா அவர்தான். அவரைச் சொன்னேன். 

மோ: போகட்டும். தில்லிக்கி வரும் போது அவசியம் வாங்க. எனக்கு உங்களோட பேசப் பிடிக்கும்.  உங்ககிட்ட பேசிப் பழகிட்டா ட்ரம்ப் கூட பேசறதுக்கு ஒத்திகை பார்க்கற மாதிரி இருக்கும்னு தோணுதுன்னு சொல்றதுக்கு நீங்க அனுமதிப்பீங்கன்னு நான் நினைப்பேன்னு எனக்குத் தெரியும். 

க: அடடே.. வந்துட்டீங்களே. இதே தான். இப்பிடியே பேசுங்க. ட்ரம்ப் வழிக்கு வந்துடுவார்.  உதாரணமா : 50% வரி போடறீங்களே.. அப்ப வரிக்குதிரைக்கு எத்தனை % போடுவீங்க ? அதுகிட்ட ஏற்கெனவே வரிகள் நிறைய இருக்கே.. இந்த மாதிரி பேசிப் பழகிக்குங்க. உதவியா இருக்கும். 

மோ: அதுக்குத் தான் வள்ளுவர் சொல்லியிருக்காரே ‘சொல்லுக சொல்லை..’

க: அதெல்லாம் வேண்டாங்க. இப்ப வாழும் வள்ளுவர் மெட்ராஸ்ல இருக்கார். அவர் சொல்றதக் கேளுங்க. சமீபத்துல புஸ்தகம் எல்லாம் எழுதியிருக்கார். குறிப்பா இன்பத்துப்பால் விஷயமா நிறைய தெரிஞ்சவர்.. மீடூ நாயகன்னு சொல்லலாம்னு நினைக்கறச்சே அவர் சொன்ன ஒரு வரி தொண்டைல அடைச்சு நின்னு.. 

மோ: ஓ அவரா ? தெரியுமே. நாங்க கூட பலதடவை பாராட்டியிருக்கோம். அனேகமா ஞானபீடம் வந்தாலும் ஆச்சர்யம் இல்ல. எங்களுக்கு சித்தாந்தம் முக்கியம் இல்ல. சிந்தனை முக்கியம். அதுலயும், எந்த மாதிரியான சிந்தனை இருந்தாலும் பாராட்டுவோம். எங்களைப் பத்தி திட்டினாலும் பாராட்டிப் பரிசு கொடுப்போம். சாஹித்திய அகாதெமி எதுக்கு இருக்கு பின்னே ?

க: அருமை சார். எங்க நீங்க ஆர்.எஸ்.எஸ். சொல்படி மாறிட்டீங்களொன்னு நினைச்சு அனாவசியமா குழம்பிட்டேன்னு நினைக்கறச்சே எனக்கே கூட சாஹித்திய அகாதெமி விருது கிடைச்சுடுமோன்னு தோணுதுன்னு எண்ணிப் பார்க்கையில..

மோ: சரி. பிறகு பார்க்கலாம். இப்ப ராத்திரி, ட்ரம்ப் தூக்கத்துல என்ன உளறினாருன்னு அஜித் தோவல் மெயில் அனுப்பியிருக்கார்.  உங்க கூட பேசினதால ட்ரம்ப் சொல்றது புரியும்னு நினைக்கறேன். நன்றி.

க: நானும் கமல். நீங்களும் கமல். ஆனா ரெண்டும் ஒண்ணு இல்லன்னு எனக்கு நானே சொல்லிக்கலாம்னு நினைக்கறேன். 

–ஆமருவி

08-08-2025

Leave a comment