1. முன்னுரை
“சீதையைப் பிரிந்த பின் ராமன் மனநிலை சீர்குலைந்தான்” என்ற கூற்று சரியானதா?
கேள்விக்குக் காரணமாகச் சினிமா பாடலாசிரியர் ஒருவர் மேற்கோள் காட்டிய கம்பராமாயணம் பாடல் இதுவே :
“ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை!”
சீதையைப் பிரிந்த காரணத்தால் ராமன் மன நலம் குன்றினான். அதனால் வாலியைக் கொன்றான் என்கிற பொருளில் சினிமாப் பாடல் ஆசிரியர் பேசினார்.
இந்தக் கட்டுரை, சீதையின் பிரிவு ராமனுக்கு வேதனையை ஏற்படுத்தினாலும், அவர் அறம், சிந்தனை, துணிவு, அறிவு ஆகியவற்றில் ஒருபோதும் தளரவில்லை, சம நிலையில் இருந்ததாகவே கம்பன் காட்டுகிறான் என்பதை நிரூபிக்க முற்படுகிறது.
பல படலங்கள், பாடல்கள் இருப்பினும், எடுத்துக்காட்டுவதற்காக வெகு சில தருணங்களை மட்டுமே கணக்கில் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

2. சீதையின் பிரிவு: துயரத்தின்இயல்பு
ஆரணிய காண்டத்தில் சீதை இராவணனால் கடத்தப்படும் நிகழ்வில், ராமன் இயல்பாகவே மனிதனாகவே துயருறுகிறான். கம்பன் சொல்வது:
“காண்மின் ஆயினும் கண்ணீரால் காட்சி மறைந்தான் தாண்மை போகாது தாழ்விலான் தாழ்ந்திராதான்”
இங்கே ராமன் கண்ணீர் சிந்துகிறான்; ஆனால் அவனுடைய வீரமோ, சம நிலையோ கெடவில்லை என்பதை,“தாழ்விலான் தாழ்ந்திராதான்”– ஒரு அரசனின் மனப்பக்குவத்தைக் கம்பர் காட்டுகிறார்.
சாதாரண மனிதனுக்கு உற்ற துயரம், தெய்வம் எனக் கருதப்படும் ராமனையும் உருகச் செய்கிறது. ஆனால், அந்த உருக்கம் ராமன் தர்மத்தின் வழி வந்த தன் கடமையைச் செய்யும் மன உறுதியைக் குலைக்கவில்லை என்றே கம்பன் காட்டுகிறான். இது ராமனின் சிறப்பு.
3. கம்பன் காட்டும் ராமனின் உறுதி
ராமன் ஒருபோதும் வேதனையில் மூழ்கி விலகிவிடவில்லை. அவன் தன் மனக்குழப்பத்தை அடக்கி அரசனுக்கே உரிய வழியில் சிந்திக்கிறான். கம்பன் சொல்வது (ஆரண்ய காண்டம், சீதை பிரிவுப் படலம்)
“அழுதும் உறுதியான், ஆற்றலும் உடையான் குழியும் அழியான், குணநலன் கலையான்”
பாடலின்பொருள்
- அழுதும்உறுதியான் – மனைவியை இழந்த துயரத்தில் ராமன் அழுகிறான்; ஆனால் மன உறுதியை விட்டுவிடவில்லை.
- ஆற்றலும்உடையான் – தன் துயரத்தைக் கட்டுக்குள் வைத்து செயல்படும் ஆற்றலும் அவனுக்கு உண்டு.
- குழியும்அழியான் – துயரமாம் பெரும் குழியில் மூழ்கி அழிந்து போகாமல், அதிலிருந்து எழுந்து நிற்பவன்.
- குணநலன்கலையான் – துன்பம் வந்தபோதும், பிறவாழ்க்கைக் குணங்களும், அறநிலையும், நற்குணமும் சிதையாதவன்.
அழுதான், ஆனால் அதே சமயம் உறுதியானவனாக இருந்தான். இது உணர்ச்சி – அறிவுசமநிலையைக் காட்டுகிறது. மனிதத் தன்மையைப் புறக்கணிக்காமல், அரசனின் அறம் நிலைத்திருப்பதைக் காட்டிப் புகழ்கிறான் கம்பன்.
இந்தப் பாடல் வரி, ராமனின் தனித்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. அவன் மனிதனாகச் சாதாரண உணர்வுகள் கொண்டவனே; ஆனாலும், அரசனாக, தர்மம் காத்தவனாக, துன்பத்தை வென்று எழும் வீரனாக நிற்கிறான்.
இவ்வாறு கம்பன், “சீதையின் பிரிவால் ராமன் மனநிலை சிதைந்தான்” என்ற குற்றச்சாட்டை முறியடித்து, ராமனின் மனநிலை, மற்றும் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்.
இன்னொரு பாடல் :
“அறிவினையுடையான் ஆழ்ந்த மனத்தானான்
பொருவினை புரிந்தான் புலமையோடு
கருமமும் அறிந்தான் கலையுநீங்கான்
பெருமையும் உடையான் பிறங்கொளியோடு”
பாடல்பொருள்
அறிவினையுடையான் — எத்தகைய சூழலிலும் கண்ணோட்டத்தை இழக்காத ஞானம் உடையவன்.
ஆழ்ந்தமனத்தானான் — உணர்ச்சியில் மூழ்கிப்போகவில்லை; ஆழமான மன உறுதியுடன் இருந்தான்.
பொருவினைபுரிந்தான் புலமையோடு — போரிட வேண்டிய சூழலில் போராடினான்; அதையும் அறிவோடு, சூழலை ஆராய்ந்து, நீதியோடு செய்தான்.
கருமமும் அறிந்தான் — எந்தச் செயலை எந்த வேளையில் செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன்.
கலையு நீங்கான் — தனக்குள்ள நல்ல குணங்களை விட்டுவிடாதவன்.
பெருமையும் உடையான் பிறங்கொளியோடு — சோதனைகள் வந்தாலும் கண்ணியமும் பெருமையும் குறையாதவன்.
இங்கு ராமன் தன் வலிமையால் மட்டுமல்லாமல், அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டு செயல்படுகிறான் என்பதைக் கம்பர் காட்டுகிறார். சீதையின் பிரிவு அவனை உலுக்கினாலும், சரியான தூது, சரியான தூதுவர், சரியான பணி எனப் பக்குவமாக முடிவு செய்கிறான்.
4. வாலி வதையில் ராமனின் அறநிலை
சீதையின் பிரிவு காரணமாக மனம் தளர்ந்தவனாக இருப்பின், வாலியை அழிப்பது போன்ற கடினமான ராஜீயத் தீர்ப்பை ராமன் எடுக்க முடியாது.
கம்பன் அவனை இவ்வாறு சித்தரிக்கிறான்:
“அரசனுக்கே உரியதாம் அறத்தின் வழி பிறரின் மனை நொந்தவனைப் பொருந்தல் தான்”
(கிஷ்கிந்தாகாண்டம், வாலிவதப்படலம்)
இங்கு ராமன் வாலியை வெறுப்பால் அல்ல, அறச்சார்ந்த காரணத்தால் கொல்கிறான். “பிறன் மனை விழைந்தவன்” என்பதால் தண்டனை வழங்குகிறான். அரசன் என்ற முறையில் தர்மத்தின் காவலன் என்ற தனது கடமையை ராமன் செய்கிறான்.
இதனால் ராமன், துயரத்தில் சிதறியவன் அல்லன்; அறத்தின் காவலனாக உறுதியானவன் என்றே கம்பன் காட்டுகிறான்.
5. ராமனின் அறிவாற்றல்
கம்பன், ராமன் கணையாழியை அனுப்பியதற்கான காரணத்தைத் துல்லியமாகப் பதிவு செய்கிறான்:
“தமியளி தன் மனம் தளர்ந்துவிடா நினைவினை நிமிர்ந்திட நினைந்து, அவள் கையினில் வைத்த கலை அழியை துயரினை தீர்க்க அனுப்பினான்.”
பொருள்
- தமியளி – தனியாகத் துன்பத்தில் வாழும் சீதை.
- தன் மனம் தளர்ந்து விடா நினைவினை நிமிர்ந்திட – அவளது மனம் தளராமல், ராமனை நினைத்து உறுதியடையச் செய்ய.
- கையினில் வைத்த கலைஅழியை – அவள் திருமணத்திலிருந்து அறிந்திருக்கும் அன்புச் சின்னமான கணையாழியை.
- துயரினை தீர்க்க அனுப்பினான் – அவளது துயரம் நீங்க அனுமன் மூலம் அனுப்பினான்.
அனுமன் வேறு எதனைக் கொண்டு சென்றிருந்தாலும் சீதை நம்பியிருக்க வழியில்லை. திருமணத்தில் தான் பூண்ட கணையாழியைக் கொடுத்து அனுப்பும் நுண்ணறிவு ராமனுக்கு இருந்துள்ளது என்பது இதனால் தெரிகிறது. ராமன் எத்தனை நிதானத்துடன் இருந்திருந்தால் இவ்வாறு சிந்தித்திருக்க இயலும் ?
6. யுத்தகாண்டம்: அறமும் துணிவும் நிலை பெறுதல்
மயங்கிய நிலையில் இருந்த ராவணனின் கதையை முடிக்கும்படி மாதலி சொல்ல, அதனை மறுத்து, அவன் தெளிந்து எழுந்த பின் போர் புரிந்து வென்றான் ராமன்.
‘படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ’
மன நிலை பிறழ்ந்தவனாக இருப்பின் போர் அறம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ராமனோ போர் அறத்தை முற்றுமாகக் கடைப்பிடிக்கிறான். ஆக, யுத்த களத்திலும் ராமனை நிதானம் தவறாத வீரனாகவே கம்பன் காட்டுகிறான்.
யுத்த காண்டம் முழுவதும் ராமன் —
- போரின் நோக்கம் அறம் காப்பது என்று சொல்கிறான்,
- எதிரியின் உயிரைக் கூட மதிக்கிறான்,
- போரில் வென்ற பின் இறந்த எதிரிக்குச் சடங்கு செய்யும்படி வலியுறுத்துகிறான்.
இதனால், ராமன் அறம் மட்டுமே அடிப்படை என்ற உணர்வுடன் செயல்படுகிறான் என்பதைக் கம்பர் வெளிப்படுத்துகிறார். மன நலம் சரியில்லாதவன் என்று சினிமாப் பாடல் எழுத்தாளர் சொல்லும் ராமன் எவ்வாறு இத்துணை அறங்களையும் கைக்கொண்டிருக்க முடியும் ?
7. கம்பன் பார்வையில் ராமனின் மனநிலை
மொத்தத்தில், கம்பன் ராமனை:
- துயரம் அனுபவிக்கும் மனிதனாகவும்,
- அறம் காத்த அரசனாகவும்,
- துணிவு, சம நிலை குன்றாத வீரனாகவும்,
- அறிவு, அரசறிவு கொண்ட தலைவனாகவும்,
- இறுதியில் கருணையுடன் நிறைந்த தெய்வமாகவும் சித்தரிக்கிறான்.
அதனால், “சீதையின் பிரிவால் ராமன் மனநிலை சீர்குலைந்தான்” என்ற கூற்று, கம்பனின் வர்ணனைகளுக்கு முரண்பட்டதாகும்.
8. ‘திகைத்தனை போலும்’ – எப்படிப் பார்ப்பது ?
சூர்ப்பனகை ராம, லட்சுமணர்களைப் பற்றி ராவணனிடத்தில் முறையிடுகிறாள். அப்போது அவள் சொல்வது :
‘உருப்பொடியா மன்மதனை ஒத்துளரேயாயினும் உன்
செருப்படியின் பொடி ஒவ்வா மானுடரைச் சீறுதியோ’
‘நீ போருக்குச் சென்றால் உன் செருப்பில் இருந்து எழும் தூசிக்கு ஒப்பாக மாட்டார்கள் மன்மதனை ஒத்த இந்த இருவரும். ஆயினும், இவர்கள் மானுடர்கள்தானே என்கிற அக்கறை இன்மையால், இவர்களைச் சீறி வந்து எதிர்ப்பது உன் பெருமைக்கு இழிவு என்கிற எண்ணத்தால் நீ கோபம் கொள்ளாமல் இருக்கிறாயா ?’ என்கிற பொருள் தொனிக்கும் வகையில் அமைந்துள்ள பாடல் வரிகள் இவை.
கம்பர் ஶ்ரீரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்றம் செய்த போது இந்தப் பாடல் வாசித்த நிலையில், அவிடத்தில் இருந்த ஶ்ரீவைஷ்ணவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனராம். ‘ராம லட்சுமணர்கள் ராவணின் செருப்பின் தூசிக்குக் கூட சமமானவர்கள் கிடையாது என்கிற பொருள் படும்படிக் கம்பர் எவ்வாறு பாடலாம்?’ என்பது ஆட்சேபணை.
அவ்விடத்தில் எழுந்தருளியிருந்த ஶ்ரீமந் நாதமுனிகள் இப்படிச் சொன்னாராம் :
‘செருப்படியிற் பொடி ஒவ்வா’ என்பது ஆட்சேபனைக்கு உரியது தான். ஆயினும் இது கவியின் கூற்று அல்ல. இதைச் சொல்பவள் சூர்ப்பனகை. அவள் இப்படித்தானே சொல்வாள். அரக்கியின் கூற்று இவ்வாறே இருக்கும். இதில் கவியின் சிலேடை நயம் உள்ளது. ‘செருப்படியின் பொடி’ என்று கொள்ளாமல், ‘செருபடியிற் பொடி’ என்று ஒற்றெழுத்து ‘ப்’ இல்லாமல் வாசித்தால் ‘உன் போர்க்களத்தில் எழும் தூசிக்கு ஒப்பாக மாட்டார்’ என்கிற பொருள் வரும். ஆகையால், இப்படிச் சிலேடையாக அமைத்திருப்பது கவியின் திறமை அன்றோ. ஆகவே அபசாரமாகாது’ என்று சொல்லியுள்ளார் என்று ‘இராமபிரானைக் கற்போம்’ என்கிற நூலில் ஒரு கட்டுரையில் வியாக்கியானம் வருகிறது.
கம்பனின் பாடல்களை இவ்வாறு வாசிக்கவேண்டுமேயொழிய, குதர்க்கமாக, சினிமாப் பாடல் ஆசிரியர் சொல்வதைப் போன்று நினைப்பது அறிவீனம் அன்றி வேறென்ன ?
இதைப்போலவே தான் ‘திகைத்தனை போலும் செய்கை’ என்பதன் பொருளையும் பார்க்க வேண்டும். ஆனால், அதற்குப் பகுத்த்றிவு வேண்டுமே !
–ஆமருவி தேவநாதன் தேரழுந்தூர்
21-08-2025
Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply