முனைவர் ஜெகன்னாத் அவர்கள் எழுதிய ‘கம்பனில் காத்திருப்பு’ நூல் வாசிப்பு அருமையான அனுபவம்.
‘காத்திருப்பு’ எப்பதை ‘காத்தல்’, ‘இருத்தல்’ என்று பிரிக்கிறார் ஆசிரியர். இந்தக் காத்தலும், இருத்தலும் செய்த்கவர்கள் யாவர் ? அவர்கள் எதைக் காத்தனர் ? எதற்காக இருந்தனர் என்பதாக விரிவது இந்த நூல். இதுவரை யாரும் பார்க்காத பார்வையை அளிப்பதாக இருந்தது இந்தக் கட்டுரை.
நூலில் கம்பன் தொடர்பான பல செய்திகள் தாங்கிய கட்டுரைகள் உள்ளன. கம்பன் புகழைப் பாடிய, பரப்பிய பெயர்தெரியாப் பெரியோர் பலரைப் பற்றிச் சொல்கிறார் ஜெகன்னாத். அறிந்திராத பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவியவை அக்கட்டுரைகள்.

‘கம்பராமாயண வை.மு.கோ. உரை’ மற்றும் ‘காரி மாறனும் கம்பரும்’ ஆகிய கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமிக்கும் கம்பனுக்கு இருந்த தொடர்பைத் தெளிவாக விளக்கும் கட்டுரைகள் சிறப்பாக வந்துள்ளன.வ.வே.சு.ஐயர் குறித்த செய்திகளும், வக்கீல் பக்ஷிராஜன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் குறித்த செய்திகள் அரிய வகையில் அடங்குபவை. கம்பன் அடிப்பொடியின் அண்ணாத்துரை குறித்த சீற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
நூல் முழுவதும் ஶ்ரீவைஷ்ணவம் ததும்பி வழிகிறது என்பதை ஆழ்வார்களின் அருளிச்செயல்களை ஆசிரியர் மேற்கோள் காட்டுவதில் இருந்து உணரலாம். எழுத்தாளர் ஜடாயு அளித்துள்ள அறிமுகம் கன கச்சிதம்.
அதிகம் பேசப்படாத கம்பன் அறிஞர்கள் வரிசையில் முனைவர் ஜெகன்னாத்தும் ஒருவர்.
பவித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலைப் பெற்றுக்கொள்ள ஆசிரியரை அழைக்கலாம். தொடர்புக்கு : +91-99522-00287
Leave a comment