The side that is not spoken about, generally.

‘ஆரியராவது திராவிடராவது’ என்கிற நூலைத் தற்காலத்தில் யாராவது எழுதியிருந்தால் ‘சங்கி’, ‘ஃபாசிச ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி’, ‘பார்ப்பன அடிமை’ என்று எதையாவது சொல்லிக் கடந்து செல்லலாம், நமது பஹுத்-அறிவு-வியாதிகள். 

ஆனால், இந்தத் தலைப்பில் நூல் எழுதியவர், பழுத்த காந்தியவாதியும், விடுதலைப் போராட்ட வீரரும், பிராம்மணர் அல்லாதவருமான தேர்ந்த தேசியவாதக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். அவரைப் புறந்தள்ளுவது எங்ஙனம் ? எனவேதான் அவரது எழுத்துக்களைப் பொதுஜனப் பார்வைக்குக் கொண்டுவராமலும், நூலகங்களில் அவரது நூல்கள் அதிக அளவில் இடம் பெறாமலும் பார்த்துக்கொண்டுள்ளன நமது ‘தீரா-விட’ மாடல் அரசுகள். 

 ஆரிய-திராவிடப் புரட்டு வாதத்திற்குச் சம்மட்டி அடி அடித்துள்ளார் கவிஞர்.

ஆரியர், திராவிடர் என்று யாரும் இல்லை என்பதை அழுத்தமாகக் கூறும் கவிஞர் இது தொடர்பான பல தரவுகளையும் சுட்டுகிறார். 

‘தமிழின் பிறப்பு’ என்னும் கட்டுரையில், கம்பன், பாரதி, தொல்காப்பியர் என்று விளாசித் தள்ளியுள்ளார் கவிஞர். அவர்களின் தமிழைச் செம்மைப் படுத்தியவர் அகத்தியர். அவர் வழி வந்து, இலக்கணம் செய்தவர் தொல்காப்பியர். இந்த அகத்தியரைக் கம்பனும் போற்றுகிறான் என்று ஆணித்தரமாகத் துவங்கும் கவிஞர், பாரதியைத் துணைக்குச் சேர்த்துக் கொள்கிறார். இறுதியில், பெரும் தமிழறிஞரான கா.சு.பிள்ளையின் ஆய்வையும் சுட்டி, தமிழின் தொன்மை சுமார் 4500 ஆண்டுகள் என்று நிறுவுகிறார். 

தனது பிற கட்டுரைகளில் புறநானூற்றில் உள்ள சமஸ்க்ருதப் பெயர்களைச் சுட்டி, சங்க இலக்கியத்திற்கும் முன்னரே தமிழகத்தில் சமஸ்க்ருதம் வலுப்பெற்று இருந்திருக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.

‘தமிழ்ப் பார்ப்பனர்கள்’ பற்றிய கவிஞரின் கட்டுரை தற்காலத்தில் பலரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவதாக உள்ளது. தமிழ் பிராம்மணர்கள் வேறு எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர்; அவர்கள் நம் தமிழ்ப் பிரதேசத்தில் இருந்தவர்களே என்றும், அவர்களின் தேவை என்னவாக இருந்தது, அவர்களை மன்னர்களும் செல்வந்தர்களும் போற்றிப் பாதுகாத்தது ஏன் என்பது பற்றியும் கவிஞர் சொல்வது தீரா-விட, இடது-சாரீய ‘அறிஞர்’களின் அறிவுக்கு விடப்படும் சவால் என்பேன். 

மொழிவழி மாகாணங்கள் அமைவது பற்றியும், தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்வதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் கவிஞர் அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே கம்பனைப் போன்ற கவிஞர்கள் உருவாக முடியும் என்றும் சொல்கிறார். 

‘ராவணன் தமிழன். ராமன் ஆரியன். இராமாயணம் ஆரிய-திராவிடப் போர்’ என்று புரட்டு பரப்பி வந்த திக கும்பல்களை மிரட்டும் விதமாகக் கவிஞர் சொல்வது – ராவணன் தமிழனே அல்லன். தமிழனாக இல்லாத ராவணன் எப்படித் தமிழர் / திராவிடர் தலைவனாக ஆக முடியும் ?  

தனித்தமிழ் இயக்கம் என்கிற பெயரில் கிறுக்குத் தனம் செய்த சிலரையும் சாடுகிறார் கவிஞர்.

கட்டுரைதோறும் தேசியப் பார்வை தொனிக்கும் வகையில், காந்தீயச் சிந்தனையில் ஊறிய, தமிழ் மீது அக்கறை உள்ள எழுத்து நாமக்கல் கவிஞர் அவர்களுடையது. 

இந்த நூல் வெளிவருவதற்குக் காரணமாக இருந்த திராவிட மாயை சுப்பு, பழங்காசு சீனிவாசன் மற்றும் விஜயபாரதம் பிரசுரம் வாழ்க பல்லாண்டு. 

விஜய பாரதம் பதிப்பகம். விலை. ரூ 50. 

ஆசிரியர் : நாமக்கல் வே.ராமலிங்கம் பிள்ளை

Leave a comment