கம்பன் மதுவும் மாமிசமும் பற்றி என்ன கூறுகிறான் என்று பார்க்கும் முன், சில அதிர்ச்சிகளை எதிர்கொள்வோம். “அட, இப்படியும் இருந்திருக்குமா?”, என்று எண்ண வைப்பது அந்தச் செய்தி.
மதுவும் மாமிசமும் தமிழர் நாகரிகத்தில் இருந்தன, அன்றாட உணவில் இருந்து வந்துள்ளன என்றால் நம்புவது கொஞ்சம் கடினம் தான். ஆனால், சாமி.சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் இவை தமிழர் உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்துவந்துள்ளன என்று அடித்துக் கூறுகிறார்.
“பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கிய நூலகளில் மதுவும் மாமிசமும் கலந்து மணம் வீசுவதைக் காணலாம். பெரு மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், அனைவரும் தம்மிடம் வந்த விருந்தினர்க்கும்,இரவலர்க்கும் வேண்டியமட்டும் மதுவும், மாமிசமும் அளித்து அயர்வு தீர்த்தனர்; என்று அந்த நூல்களில் காணப்படுகின்றன. பெரும் புலவர்களான ஔவையாரும், கபிலரும் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தனர்”, என்கிறார் சாமி.சிதம்பரனார்.
அதுபோலவே, “அறியப்படாத தமிழகம்” என்னும் நூலில் தொ.பரமசிவன் என்னும் நிகழ்கால ஆராய்ச்சியாளர், தமிழ்க் காவல் தெய்வங்களான சுடலைமாடன், கருப்பசாமி முதலிய தேவதைகளுக்கு மிருக பலி கொடுப்பதை விலாவாரியாகக் குறிப்பிடுகிறார். அவர் கூறும் சில முறை பலிகள் நாகரீக எல்லைக்குள்ளேயே இல்லை. ஆனால் அப்படியும் ஒரு காலம் இருந்துள்ளது தெரிகிறது. ஆனால் இது சங்க காலமா என்று தெரியவில்லை.
ஆனால் சங்க காலம் கழித்துத் தோன்றிய “சங்கம் மருவிய” கால நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிலும், திருக்குறள், சைவ வைணவ சமயக் கால நூல்களிலும் மதுவும் மாமிசமும் இழித்துக் கூறப்படுகிறது. ஆக, சமண, பௌத்த, சைவ, வைணவ மதங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் பதியும்வரை மதுவிற்கும் மாமிசத்திற்கும் தமிழ் மண்ணில் ஒரு ஏற்றம் இருந்துள்ளது தெரிகிறது.
வள்ளுவர் மாமிச உணவை மிகவும் பழிக்கிறார். மதுவையும் அப்படியே, எனவே “புலால் உண்ணாமை”, “கள் உண்ணாமை” என்று அதிகாரங்களே வைத்துள்ளார்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” என்கிறார்.
( கொல்லா விரதத்தைக் கொண்டவனை, மாமிசம் உண்ணாதவனை இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும் )
இந்தக் காலங்கள் கழித்து 300 ஆண்டுகள் பின்பே கம்பன் காலம். அவனது எழுத்துக்களில் திருக்குறள், ஆழ்வார் பாசுரங்களின் பாதிப்பு தெரிகிறது. எனவே மதுவையும் மாமிசத்தையும் பழிக்கிறான் கம்பன்.
இதில் கவனிக்கத்தக்கது வால்மீகி ராமாயணம் மதுவும் மாமிசமும் வெறுக்கப்படாத காலத்தில் எழுத்தப்பட்டது. ஆனால் கம்ப ராமாயணமோ சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வேரூன்றி அழிந்தபின் பக்தி இலக்கியக் காலங்களுக்குப் பின் எழுதப்பட்டது. எனவே தான் கதா பாத்திரங்களை மதுவும் மாமிசமும் உண்ணாதவர்களாகச் சித்தரிக்கிறான் கம்பன்.பின்னர் அதுவே சிறந்த ஒழுக்கம் என்று கருத்தப்படுகிறது.
கம்பன் இராமனைக் கனியும் கிழங்குகளும் உண்பவனாகவே காட்டுகிறான். இதைத் தவறாமல் குறிப்பிடுகிறான்.
இராமனும் சீதையும் கானகம் அடைகிறார்கள். அங்கு அவர்கள் உண்ணும் உணவு காட்டப்படுகிறது :
“காயும் கானில் கிழங்கும்கனிகளும்
தூய தேடிக்கொணர்ந்தனர்; தோன்றல் நீ
ஆயகங்கை அரும்புனல் ஆடினை,
தீயை ஓம்பினை செய்அமுது என்றனர்”
( காட்டில் கிடைக்கும் உண்பதற்கரிய காய்களையும், கிழங்குகளையும், கனிகளையும் நல்லனவாகத் தேடிக் கொண்டுவந்தனர். பெருமையுள்ள இராமனே, நீ சிறந்த உயர்ந்த கங்கையில் நீராடி, தீ வளர்த்து வேள்வியினை முடித்தபின் இவற்றை உண்டு களைப்பு தீருவாயாக, என்று வேண்டிக்கொண்டனர் )
இதில் நாம் காண வேண்டியது, இராமன் உணவு உண்ண வேண்டிய முறை பற்றியும் முனிவர்கள் கூறுவதுபோல் அமைத்துள்ளது. நீராடவேண்டும், தீ வளர்த்து தினப்படி ஆற்றவேண்டிய தெய்வீகச் திருச்சடங்குகள் செய்யவேண்டும், பின்னர் காயையும் கனியையும் உண்ண வேண்டும் ( “அமுது செய்ய வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை வைணவர்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர்).
கம்பன் இன்னொரு இடத்திலும் இராமன் உண்டது என்ன என்று கூறுகிறான்.இலக்குவன் தான் உண்டது என்ன என்று கூறுமாப்போலே அமைந்துள்ள பாடல் இது :
“பச்சிலை கிழங்கு காய் பரமன் துங்கிய
மிச்சிலே நுகர்வது, வேறுதான் ஒன்று நச்சிலேன்”
( இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய்களின் மீதத்தையே நான் உண்பது வழக்கம். இதைத் தவிர வேறு ஒன்றையும் நான் விரும்புவதில்லை ).
யுத்தகாண்டத்தில், கம்பன் இராமனை வர்ணிக்கும்போது,
“கானிடைப் புகுந்து இரும்கனி காயொடு நுகர்ந்த
ஊன்உடைப் பொறை உடம்பினன் .. ” என்று கூறுகிறார்.
( காட்டில் அமைந்துள்ள பழங்களையும், காய்களையும் உண்ட ஊண் அமைந்த பாரமாகிய உடம்பை உடைய இராமன் .. )
மேலே காய் கனிகளை மட்டும் உண்டான் என்று தெரியும்படிக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.
விபீஷணன் நல்லவன் என்று இராமனுக்கு எடுத்துக் கூறும் அனுமன் பின்வருமாறு கூறுகிறான் :
“நிந்தனை நறவமும் நெறியில் ஊண்களும் தந்தன கண்டிலன் ”
(பழிக்கு ஆளாக்கும் மதுவும், நன்னெறிக்கு மாறான புலால் போன்ற உணவு வகைகளையும் இவன் – விபீஷணன்- சேர்த்து வைத்து நான் கண்டதில்லை )
மாமிச உணவு உண்ணாதவர்களை “சைவம்” என்று தற்காலத்தில் அழைக்கிறோம்.கொல்லா விரதம் கொண்டவர்கள் சைவர்கள் என்று அழைக்கப்படவேண்டிய காரணம் என்ன ? கம்பனை விட்டு சற்று விலகி, வேறு சில பழைய பாடல்களை ஆராய்வோம்:
திருமூலர் என்னும் சைவ சமயப் பெரியார்,
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” என்று அன்பாக இருப்பதே சிவம், தெய்வத்தன்மையானது அன்பு என்னும் பொருள் படும்படிக் கூறுகிறார்.
மற்ற மனிதர்களிடத்து அன்பு செய்தலே சிவமா அல்லது எல்லா உயிரிடத்தும் அன்பு செய்வது சிவ நெறியா என்ற குழப்பம் தோன்றலாம்.
அதற்குத் தாயுமானவர் என்ற சைவப் பெரியவர் கூறுவது :
“எவ்வுயிரும் பராபரன்சந் நிதிய தாகும்
இலங்கும்உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் ”
(எல்லா உயிரும் இறைவனின் சன்னிதியே, இங்கு வாழும் உயிரினங்களின் உடலே இறைவன் வாழும் ஆலயம்).
ஆக அன்பு செய்தல் எல்லா உயிரிடத்தும் செய்தல் வேண்டும் என்பது சைவ சமயம்.
தாயுமானவர் மேலும்,
“கொல்லா விரதம் குவலயமெ லாமோங்க
எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே”, என்று பாடுகிறார்.
(உயிர்களைக்கொல்லாமை என்னும் விரதம் இந்த உலகெல்லாம் தழைத்து வளர எல்லாருக்கும் எடுத்துச்சொல்வதே என் ஆசை )
ஆக சைவ சமயம் பின்பற்றுபவர்கள் மாமிசம் உண்பது தவறு என்பது பல வகையிலும் சொல்லாமலே சொல்லப்பட்டுள்ளது காண்கிறோம்.
சிவன் வழிபாட்டு சமயம் சிவ-சமயம் என்றும், காலப்போக்கில் சைவ சமயம் என்று ஆகி இருக்க வேண்டும். அத்துடன் அன்புருவான சிவனை வழிபடுபவர்கள் மாமிச உணவைத் தவிர்த்ததால் சைவர்கள் ஆனார்கள் என்று வழக்கத்தில் வந்திருக்கலாம் என்று காலஞ்சென்ற தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தெரிவிக்கிறார்.
இந்த நேரத்தில், “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் ” என்று மஹாகவி பாரதியார் பாடியுள்ளது நினைவில் கொள்ளத் தக்கது.
கம்பனிடம் திரும்ப வருவோம்.
மது அருந்துவதை இழித்துக் கூறும் கம்பன் பரதன் கூறுவதுபோல் அமைத்துள்ள பாடல் ஒன்று உள்ளது
இராமனைக் கைகேயி காட்டிற்கு அனுப்பும்போது பரதன் அயோத்தியில் இல்லை.அவன் வந்தபிறகு அவனது உள்ளத்தை அறிய இராமனின் தாய் கோசலை ,பரதனிடம் ,”கைகேயி செய்த வஞ்சனை உனக்கு முன்னமே தெரியாதா?” என்ற பொருள் படும்படிக் கேட்டாள். அதைக்கேட்ட பரதன்,”என் அன்னை செய்த வஞ்சகச் செயலை முன்னரே அறிந்து நான் உடந்தையாய் இருந்திருப்பேனானால் நான் பின்வரும் மாபாதகச் செயலைச் செய்தவர் அடையும் பாவத்தை அடைவேன்”, என்று கூறுகிறான்.
“கன்னியை அழிசெயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினன்; பருகினோன் நறை ;
பொன்இகழ் களவினில் பொருந்தினோன், என
இன்னவர் உறுகதி என்னது ஆகவே”
(மணமாகாத கன்னிப்பெண்ணிடம் தவற நினைத்தவன்; குருவின் மனைவியைக் கெட்ட எண்ணத்துடன் பார்த்தவன் ; மது அருந்தியவன்; பொன்னைத் திருடிச் சேர்க்கும் இழிதொழிலில் ஈடுபட்டவன் ; இவர்கள் அடையும் கதியை நான் அடைவேன்).
மது அருந்துவதைப் பெண்ணிடம் தவறாக நடப்பதற்கும், ஆசிரியரின் மனைவியைப் பற்றித் தவறாக எண்ணுவதற்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறான் கம்பன்.
மேலும் மதுவின் தீய விளைவுகளைப் பட்டியல் போடுகிறான் சுக்ரீவனின் வாயிலாக. அது பின்வருமாறு:
“வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபில் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொள்வது அல்லால் நரகினை நல்காது அன்றே”
(மது அருந்துதல் வஞ்சகம், களவு, பொய்- இது மூன்றையும் செய்யத்தூண்டும்; மயக்கத்தை உண்டாக்கும்; முறையற்ற வழியில் அறிவை அலையச் செய்யும்; அடைக்கலம் அடைந்தவரை உதைத்துத் தள்ளச் செய்யும்; நல்ல குணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்; செல்வமும் நீங்கிவிடும்; கள் உண்பவர்களை அக்கள்ளில் உள்ள நஞ்சே கொன்றுவிடும் … )
உலகில் உள்ள அனைத்துப் பாவங்களுக்கும் மூல காரணமாக மதுவைக் கம்பன் மது அருந்தும் பழக்கம் உள்ள சுக்ரீவன் வாயிலாகவே சொல்லவைத்துள்ளான்.
சுக்ரீவன் மேலும் பேசுவான் :
“அய்யநான் அஞ்சினேன் இந் நறவினின் அரியகேடு
கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்”
(ஐயனே, நான் இந்த மதுவினால் வரும் பெரிய கேடுகளுக்கு அஞ்சினேன்; இனி என் கையால் மதுவைத் தீண்ட மாட்டேன்; உள்ளத்தாலும் நினைக்க மாட்டேன்; அதனை மனத்தால் நினைப்பதே தீமையாகும் )
மதுவிலக்கு, மாமிச விலக்கு முதலியன நல்ல ஒழுக்கங்களை அளிக்கும்; நம்மை உயர்த்தும். எனவே இக்கேடுகளை அறவே விலக்கிய ஒரு ஒழுக்க சமுதாயமே உயரும் என்ற கொள்கையில் கம்பன் பளிச்சிடுகிறான்.
இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தற்காலச் சூழ் நிலையைப் பற்றி எண்ணினால் பாரதி சொன்னதுபோல,”நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று கோபம் கொப்பளிக்கப் பாட வேண்டியதுதான்.
தற்போது நாட்டில் அரசே கள் விநியோகம் செய்யும் காலத்தில்,மது பற்றிய கம்பன் பாடல்கள் நமது பாடங்களில் வராதது ஏன் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
அடுத்த பதிவில் என்ன வரும் என்று தெரியாது !
0.000000
0.000000
Like this:
Like Loading...