இராமாயணத்தில் பல ஒழுக்கங்கள் காட்டப்படுகின்றன. அதுவும் கம்பன் பல அரிய விஷயங்களைக் காட்டுகிறான். அவை அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழ் நாட்டுப் பண்புகளுக்கு ஒத்து அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
முன்னமேயே கூறியது போன்று நாம் இராமன் பற்றிய கதை பேச இங்கு வரவில்லை. இராமனின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அறியாதது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்புகள் மற்றும் நெறிகள். அவற்றை நாம் கம்பன் மூலம் கண்டு வருவோம். துணைக்கு ஆழ்வார்களும், சங்க இலக்கியங்களும், நாயன்மார்களும் , வள்ளுவரும் இன்னும் சிலரும் அவ்வப்போது வருவார்கள்.
இப்போதெல்லாம் ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என்றே பலரும் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். யாராவது ஒழுக்கம் என்று பேசத்துவங்கினால், எதிரில் இருப்பவர் கொட்டாவி விடுவதுபோன்று செய்வார். அந்த அளவுக்கு நாம் இதைக் கொண்டு சென்றுள்ளோம்.
இதைப் படிக்கும்போது கம்பன் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இங்கிலாந்து முதலியவை காட்டுமிராண்டிகளாய் அலைந்துகொண்டிருந்த காலம். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த நிலையில் இந்தியப் பண்பாடு இருந்த உயர்ந்த நிலை பிரமிக்க வைக்கிறது. அப்படி இருந்த நாம் தற்போது உள்ள நிலை நினைத்து எண்ண வேண்டும்.
கம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். உதாரணமாக, இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்.
பின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்?” என்று கேட்கிறான்.
இங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:
“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச
வில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்
எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”
(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).
இதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.
இராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.
குகன் காட்டில் வாழ்பவன். ஓடம் ஓட்டுபவன். மாமிசம் உண்பவன். நகரங்களில் வாழாதவன். படிப்பறிவில்லாதவன். ஆனாலும் அவன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஒழுக்கம் மிக மேலானது. ( மதுவும் மாமிசமும் உண்பது பற்றித் தமிழ் நூல்கள் கூறுவதைப் பின்னர் பார்ப்போம் )
கம்பன் சீதையின் அழகைப் பல இடங்களில் வர்ணனை செய்துள்ளான். அவை அவன் கவி என்ற வகையில் அவனுக்குப் பொருந்தும். ஆனால் குகன் வேறொரு ஆண்மகன். இன்னொருவன் மனைவியைப் பற்றிக் கூறும்போது தமிழ் மக்கள் ஒழுக்கத்தைப் பேணும் விதமாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.
பல ஒழுக்கங்களைப் பற்றிக் கம்பன் கூறியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒழுக்கமாகக் கருத்தப்படும் “பிறன் இல் விழையாமை ” என்னும் சீரிய பண்பு.
“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தமிழகத்தில் இருந்துவரும் பழைய மரபு. சங்க இலக்கியங்கள் முதல் பலவற்றிலும் இந்தச் சீரிய மாண்பு வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாகக் கம்பர் காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இராமன் தன் “ஏக பத்தினி விரதம்” என்கின்ற நெறியை சீதையிடம் கூறியிருக்கிறான். அதை நினைவுபடுத்தும் விதமாக சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறினாள்:
“வந்த எனைக் கைப்பற்றிய வைகல் வாய்
இந்த இப்பிறவிக்கு இருமாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்”
( இராமன் மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்துத் திருமணம் செய்தபோது ஒரு உறுதி அளித்தான். இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணை உள்ளத்தாலும் தொடமாட்டேன் ..)
இங்கு நாம் காண வேண்டியது “இந்த இப்பிறவியில் ..” என்னும் தொடரை. “இந்தப் பிறவியில்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக “இந்த இப் பிறவி ..” என்று இராமன் வாயிலாகக் கம்பன் கூறுவான்.
இதில் இன்னொரு நயம் உள்ளது. “சிந்தையாலும் தொடேன்..” என்பது , உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நெருங்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டுமானால் கற்பின் நெறி இராமன் மூலமாக வலியுறுத்தப்படுவதே அந்த நயம். “கற்பு” என்பது உடல் மட்டுமே தொடர்பான ஒரு அணி அல்ல. உள்ளமும் தொடர்பான ஒரு அணி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு அணி என்று அறிதல் பொருட்டு கம்பர் இவ்வாறு காட்டுகிறார்.
பாரதியும்,
“கற்பு நிலையென்றுசொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நிலையைப் பொதுவாக வைத்துள்ளது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
இராமன் வாழ்ந்த காலத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்துள்ளது. தசரதனே பல தார மணம் புரிந்தவன் தானே ? ஆயினும் அவனது மகன் இராமன் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக “ஒரு தார மணம் உயர்ந்த குணம்” என்று நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளான்.
இராவணன் நல்லவன் தான். ஆனால் பல தார மணம் கொண்டிருந்தான் என்று கம்பர் காட்டுகிறார்.
சூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில்,
“வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்
கிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே” என்கிறாள்.
( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )
இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :
“நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா
வாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும்
தாரம் கொண்டார், என்றிவர் நம்மைத் தருமந்தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா !”
(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )
இவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)
கம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.
கும்பகருணன் ராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :
“ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் !
மாசில் புகழ் காதல் உறுவோம்! வலிமை கூரப்
பேசுவது மானம்! இடைப் பேணுவது காமம்,
கூசுவது மானுடரை! நன்று நம் கொற்றம்!”
(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க !)
மேலே கும்பகருணன் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி !” என்று கூறுகிறான்.
இத்துடன் நிற்காமல், “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்” என்றும்,
“ஆயிரம் மறைப்போருள் உணர்ந்து,அறிவமைந்தாய் !தீவினை நயப்புருதல் செய்தனை ”
என்றும் கூறுவதன் மூலம்,” இவ்வளவு உயர்ந்த வேதப்போருளை எல்லாம் ஓதி உணர்ந்தவனே, என்ன செய்கை செய்திட்டாய், குலத்தின் பெருமையைக் கொன்றுவிட்டாயே”, என்று கும்பருணன் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கம்பன் காட்டுகிறான்.
தன் சொந்த மாமனும், தம்பியுமே பிறன் இல் விழியும் தன்மையை இழித்துப்பேசியுள்ள நிலையில், இராவணனது நல்ல பண்புகளைப் பொருந்தாக் காமம் அழித்தது என்று கம்பன் கூறும் விதம் சாட்டையடி போல மனத்தில் விழுகிறது.
இராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில்,
“அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?”
என்று, ” உனது அருமையான தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து உனது பெருமை அழிந்து நிற்கிறாயே ..” என்று கூறுவதாக அமைத்துள்ளது நோக்கத்த்தக்கது.
சரி, ஒரு தாரமும், பிறன் இல் விழையாமையும் தமிழர் பண்பு என்று எப்படி அறிவது?
நம் தமிழ்த் தெய்வம் வள்ளுவர் “பிறன் இல் விழையாமை” என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறார். அவர் இப்படிக்கூறுகிறார்:
“பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல் ”
(மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை )
அது மட்டுமா ? இராவணன் பெரிய போர் வீரன் தான். “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் அவன் வீரத்தைப் புகழ்கிறார். ஆனால், பிறன் இல் விழைந்ததால் என்ன நேரும் என்று வள்ளுவர் சொன்னாரோ அதுவே அவனுக்கு நடந்துள்ளது.
“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி”
(இவளை அடைதல் அரியது என்று நினைத்து பிறன் மனையில் புகுகின்றவன் எப்போதும் நீங்காக் குடிப் பழியை அடைவான் )
வள்ளுவன் வாக்கு இன்றும் நிற்கிறது. பர தாரம் விழைபவனை இன்றும் கூட “ராவணன் போலே” என்று இழித்து அழைப்பது வழக்கமாகவே உள்ளது.
அதற்கும் மேல் :
“பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்.
(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).
“வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் கூறினாலும், வள்ளுவர் அந்த ஆண்மையை விடப் பெரிய ஆண்மை ஒன்று உள்ளது; அது போரில் காட்டும் ஆண்மை அல்ல ; பிறனது மனைவியை நோக்காத ஆண்மை – பேராண்மை.போர் ஆண்மையை விடச் சிறந்தது பேராண்மை என்று கூறுகிறார். அந்த ஆண்மையை இராவணன் இழந்து நிற்பதாகக் காட்டுகிறார் கம்பர்.
ஒரு மனை அறம் பூண்ட இராமன் தமிழர் பண்பாட்டாளனா அல்லது பல தார மணம் , பல பெண்டிர் விழைதல் என்ற கொள்கையுடைய இராவணன் தமிழ்ப் பண்பாட்டாளனா என்று அறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
அடுத்த பதிவில் “மது, மாமிசம்” முதலியன பற்றிப் பார்க்கலாம்.