ஜெயமோகனின் “ஓலைசிலுவை”யில் வரும் வரிகள், மத மாற்றம் மற்றும் ஊழியம் தொடர்பான ஒரு பக்கத்தில் வரும்
செய்தி தற்போதைய நிலைக்கும் பொருந்துகிறது. என்ன – ஒரு சிறு வேறுபாட்டுடன்.
“மிகப் பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து
விட்டிருந்தார்கள். … அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா
இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குச் சென்றவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பசித்துப் பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமல் ஆகி விட்ட
மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை”. – “ஓலைச் சிலுவை”, ஜெயமோகன்
மேல் சொன்ன வரிகள் தற்போதும் அப்படியே உள்ளன. சிந்திக்க மறந்த ஒரு சமூகம் தற்போது சோற்றின் பின்
செல்லாமல் சந்தைக் கலாச்சாரம் என்னும் சேற்றில் விழுந்து, தன்னிலை மறந்து, தனது ‘தேவை – தேவை இல்லை’
என்பது அறியாமல் வாங்கிக் குவிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. சமுதாய சிந்தனை என்ற ஒன்று இருப்பதே
அறியாமல் நிழல் நாயகரகளை நிஜ நாயகர்களாய் வரித்து “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வகையில்
வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அல்லது வாழ்க்கையால் நகர்த்தப்படுகிறார்கள்.
பெரும்பான்மை மக்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாததும், அந்த வழக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய கல்வி
முறையும் அரசியல் அமைப்பும் தவறியதாலும் நம் மக்களிடையே ஒரு தீனிப்பண்டார மனோபாவம் ஏற்பட்டுள்ளது என்று
எண்ணத் தோன்றுகிறது. தீனி என்பது உணவை மட்டுமே குறிக்கவில்லை இங்கே.
இந்த குறை கூறலில் தாங்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மார் தட்டிக்கொள்ளும் வைஷ்ணவ அந்தணர்களையும்
குறிப்பிடுகிறேன். சம்பிரதாயங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லை. அதைக் கற்க வேண்டும் என்னும் ஒரு
உந்துதல் இல்லை. வெறுமனே திருமண் ( நாமம் ) அடிப்படையில் சண்டை இடுவது தான் முன்னேறிய வகுப்பின்
லட்சணமா ? ராமானுசர் என்ன சொன்னார் என்றே முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. தெரிந்தது எல்லாம் “ராமானுச
தயா பாத்தரம்” சொல்லக்கூடாது என்பதும் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் ” சொல்ல வேண்டும் என்பதும் தான். “வாழித்
திருநாமம்” உரக்கச் சொல்வதால் மட்டுமே ஒருவன் ராமானுசன் வழியில் வைணவனாகிவிடுவானா ?
இதற்கு 1795-ல் முதல் வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றுவரை தீரவில்லை இந்த சண்டை. என்ன ஒரு நேர விரையம்?
ஜே.மாக்மில்லன் என்ற ஆங்கில நீதிபதி பல ஆண்டுகள் வைஷ்ணவம் கற்று சம்பிரதாயத்தில் அடிப்படையில் ஒரு
வேற்றுமையும் இல்லை என்று மனம் நொந்து 1946-ல் ஒரு தீர்ப்பு வழங்கினார். இப்படித் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு:
Bombay High Court
Thiruvenkata Ramanuja vs Venkatacharlu on 13 May, 1946
Equivalent citations: (1947) 49 BOMLR 405
Author: Macmillan
Bench: Macmillan, D Parcq, Beaumont
JUDGMENT
Macmillan, J.
1. Their Lordships address themselves in this appeal to the consideration of a
controversy which in one form or another has agitated the Hindu religious community
in the Presidency of Madras for upwards of two centuries. The main question between
the parties relates to the right to regulate the conduct of the services in an
important group of temples ..
ரொம்பவும் சிரமப்பட்டு இந்த ஆங்கிலேயர் வழங்கிய தீர்ப்பின் சாரம் இது தான் – தென்கலையார் அதிகம் உள்ள இடத்தில் ( கோவிலில் ) வடகலையார் ராமானுஜ தயாபாத்ரம் சொல்லாக் கூடாது. அவர்கள் வீடுகளில் சொல்லலாம். ஆங்கில நீதி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை ஐயங்கார்களையே சாரும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் தோன்றியது. இராமானுசரே 1017-ம் ஆண்டில் சமண, அத்வைத, பௌத்த
வாதங்களை வென்று வைணவத்துக்கு ஒரு வழி காட்டினார். வகைப் படுத்தினார். “கோவில் ஒழுகு” என்று திருமால் கோவில்களில் ண்டடிபெற வேண்டிய உற்சவங்கள் பற்றி எழுதிவைத்துள்ளார். வைணவம் அதற்கு முன்பும் இருந்துள்ளது. திருமால் வழிபாடு ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் பாலி முதலானா இந்தோனேஷிய மாநிலத்திலும்
அப்போதே இருந்துள்ளது.
இப்படி இருக்க ராமானுசருக்குப் பின் இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகள் கழித்து முறையே தோன்றிய
ஆச்சாரியர்களான வேதாந்த தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் பெயரில் இவ்வளவு வேறுபாடுகளா ? இந்தக்
காலகட்டத்தில் இங்கிலாந்தில் ஒரு நாகரீகமான அரசாங்கங்களே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அரசாட்சியின் நீதிபதி
உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவது வெட்கக்கேடு இல்லையா? பகுத்தறிவைப் பணயம் வைத்துவிட்டீர்களா?
ராமானுசர் காலம் கி.பி. 1017 – 1037.
வேதாந்த தேசிகர் காலம் கி.பி. 1268 – 1369
மணவாள மாமுனி காலம் கி.பி. 1370 -1443
இவர்களில் தேசிகர் வடகலையாரின் தலைவராகவும் மணவாளர் தென்கலையார் தலைவராகவும் கொள்ளப்படுகின்றனர்.
ஆக தேசிகர் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் இல்லை. ராமானுசர் காலத்தில் இப்படி வேறுபாடுகளே இல்லை.
இதற்கெல்லாம் ஐநூறு ஆண்டுகட்கு முன்பே ஆழ்வார்களின் காலம். ஆக அவர்கள் காலத்திலும் இந்த வேறுபாடுகள்
இல்லை. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நாராயணன் தவிர வேறு ஒன்றும் இல்லை. ( ஆழ்வார்களில் பலர்
அந்தணர் அல்லர். )
ஆழ்வார்களாலும் ராமானுசராலும் அங்கீகரிக்கப்படாத இந்த கலைப் பிரிவுகள் அர்த்தம் உள்ளவைதானா ? இவர்கள்
சொல்லாதவற்றைப் பின்பற்றுவதால் இவர்கள் வழியில் இருந்து நீங்கள் விலக வில்லையா ?
இந்தக் காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகள் முன்பு அகோபில மடம் என்னும் வடகலை மடம் உருவானது. இதன் முதல்
ஜீயர் ஆதிவண் சடகோபர், மணவாள மாமுநிகளுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார். ஆக மணவாளர் காலத்திலும் இந்த
வேறுபாடுகள், வெறுப்புகள் இல்லை.
தென்கலை வடைகலை இருவரிடமும் பேசிப்பார்த்தேன். “அறிஞர்கள்” என்ற போர்வையில் வலம் வரும் சிலரிடமும்
வாய் விட்டுப் பார்த்தேன். யாரும் சம்பிரதாயங்கள் அடிப்படையில் தர்க்கம் செய்ய முன்வரவில்லை. ஏன் என்றால்
இவற்றை யாரும் படிப்பதில்லை.
மணவாள மாமுநிகளுக்கு மரியாதை செய்ய வேண்டுமா தேசிகர் விக்ரஹத்தை உற்சவத்தின் பொது எழுந்தருளப் பண்ண
வேண்டுமா என்பது தான் இப்போது இவர்களுக்குள் இருக்கும் தலையாயத் தலைவலி. இருவருமே மிகப் பெரிய
ஆச்சாரியர்கள் என்பது இரு கலையாரும் தங்கள் மமதையில் மறந்துவிட்ட ஒன்று.
வடகலையார் கோவில்களை தென்கலைக் கோவில்களாக மாற்றுவது எப்படி என்பதிலும், ராமானுசர் பின் வந்த குரு
பரம்பரையினரை எப்படி அவமதிக்கலாம் என்பதிலுமே இவர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது.
சரி. சம்பிரதாயம் என்று வந்தாகி விட்டது. அப்படி என்ன தான் வேறுபாடு இவர்களுக்குள்?
பூனைக்கும் குரங்குக்கும் உள்ள வேறுபாடுதான். பூனை தன் குட்டியைத் தானே சுமக்கிறது. அதாவது பூனைக் குட்டி தான்
பாதுகாப்பாக இருக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப்பூனை அதைக் கவ்வி எடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர்
இடத்திற்குச் செல்கிறது. ஜீவாத்மாக்கள் தாங்கள் உய்ய ஒன்றும் அனுஷ்டானங்கள் செய்ய வேண்டியதில்லை. நாராயணன் காப்பாற்றுவான். காப்பாற்றவேண்டியது அவன் கடமை என்கிறது தென்கலை சம்பிரதாயம். மார்ஜார நியாயம்
என்று இது அறியப்படுகிறது ( மார்ஜாரம் – பூனை ).
குரங்கு அப்படி அல்ல. அதன் குட்டி தாய்க் குரங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது பாதுகாப்பாக
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல முடியும். அதாவது அந்தக் குட்டிக் குரங்கு உய்ய அதனிடம் முயற்சி வேண்டும்.
சரணாகதி வேண்டும். அனுஷ்டானங்கள் வேண்டும். எனவே நாராயணன் மோட்சம் தரவேண்டுமென்றால் மனிதன் முயற்சிக்க வேண்டும் என்கிறது வடகலை சம்பிரதாயம். மர்க்கட நியாயம் என்று இதனை அழைப்பர் (மர்க்கடம்-குரங்கு).
இப்படி குரங்குக்கும் பூனைக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள வழிபாட்டு முறைகள் மீது
இத்தனை நூறு ஆண்டுகள் சண்டை இடுவது பகுத்தறிவு தானா ?
இந்தக் கேள்விகளுக்கு இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் தர்க்க ரீதியினாளான பதில் இருக்காது. இவர்கள் பதில் உரத்த குரலில் “வாழித் திருநாமம்” சொல்வதிலும், ஒரு கலையார் தயா பாத்ரம் சொல்லும்போது மற்ற கலையார் வாய் திறவாமல் உள்ளனரா என்று கண்காணிப்பதிலும் மட்டுமே.
மறந்துவிட்டேன். புளியோதரை, அக்கார அடிசில் மற்றும் ததியோன்னம் – இவற்றில் எதில் சுவை அதிகம் என்னும் தத்துவ விவாதத்திலும் இவர்கள் திறமையுடன் பங்கெடுக்கக்கூடும்.
ஆம். வருத்தமளிக்கும் ஒன்று இந்த வடகலை-தென்கலை மோதல். நான் திருச்சியை சேர்ந்தவன் மற்றும் காஞ்சியில் பணிபுரிந்தவன் ஆதலால் இந்த மோதல்களை நேரப்பட உணர்ந்தவன்.
சைவ வைணவ ஒற்றுமை வேண்டும் என கூறப்படும் இக் காலகட்டத்தில், முதலில் வைணவ ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா?
LikeLike
சந்தேகமே
LikeLike