கடைசியாக நல்லது நடந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கூடங்குளத்திற்கு ஒரு வழி பிறந்துள்ளது. இனி அடுத்தபடியாக மின் உற்பத்தி துவங்க எல்லாப் பணிகளையும் செய்ய வேண்டியது தான்.
இதில் நாம் கவனிக்க வேண்டியுள்ளது சிலது உண்டு.
மக்கள் போராட்டம் என்றார்கள். உலகம் தழுவிய அணு உலை எதிர்ப்பு என்றார்கள். மீனவர் போராட்டம் என்றார்கள். தமிழகத்தில் வேலை இழந்த அரசியல்வாதிகள் பலர் களத்தில் குதித்துப் பேர் வாங்கினார்கள்.செய்திகளில் இடம் பெற்றார்கள்.
உதயகுமார் என்பவர் உதயம் ஆனார். பெரும் புகழ் பெற்றார். வெளிநாட்டுப் பணமும் குவிந்தது. விசாரணையும் வந்தது. விரைவில் அரசியலிலும் குதிப்பார். நல்ல எதிர்காலம் உள்ளது.
விஷயத்திற்கு வருவோம்.
இந்த விஷயத்தில் தமிழ் எழுத்தாளர்களின் நிலையைப் பார்ப்போம். அது என்னமோ தெரியவில்லை தமிழ் எழுத்தாளர் என்ற உடனேயே அவர்களுக்கு மின் பொறியியல் முதல் அணு இயற்பியல் வரை எல்லாமும் தெரிந்து விடுகிறது. எடுத்த உடனேயே எதிர்ப்பு என்று கிளம்பித் தங்கள் “முற்போக்கு”த் தனத்தைக் காண்பிக்கவேண்டிய ஒரு கட்டாயாத்தில் இருக்கிறார்கள் போலே. பேசுவதும் எழுதுவதும் இதைப்பற்றித்தான்.
ஒரு சிலர் உதயகுமாருடன் கூட்டணி சேர்ந்துகொண்டு பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். இந்தியாவில் அணு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஒன்று உள்ளது. கல்பாக்கம், மும்பை, ராஜஸ்தான், கைகா என்று பல இடங்களிலும் வெற்றிகரமாக அணு உலைகளை இயக்கி வருகிறார்கள். அணு ஆயுதம் கூட செய்து பரிசோதித்துவிட்டார்கள். இந்த அணு விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை இல்லை. உதயகுமாரைத் தூண்டும் பாதிரியார்கள் மேல் உள்ள நம்பிக்கை கூட நமது பொறியாளர்கள் மேல் இல்லை.
விலை போகாத அரசியல்வாதிகளும் பொழுது போகாத சமூக ஆர்வலர்களும் தங்கள் கூட்டம் குறைவதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பாதிரியார்களும் வெளி நாடுகளிலிருந்து பணம் பெரும் அவர் தம் அரசு சாரா சமூக இயக்கங்களும் சேர்ந்து அடித்த கூத்து சொல்லி மாளாது.
நமது எழுத்தாளர்களுக்குக் கேட்கவா வேண்டும். இறங்கினார்கள் களத்தில். பத்திரிகைதோறும் பேட்டிகள். யுரேனியம் முதல் தோரியம் வரை ப்ளுடோனியும் முதல் டைடானியம் வரை ந்யூட்ரோன் முதல் போசித்ரோன் வரை இனி ஒன்று பாக்கி இல்லை. ஹிக்ஸ் பொசன் துகள் தப்பித்தது. ஏனென்றால் அது தற்போதுதான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனையும் நம் தமிழ் எழுத்தாளர்கள் வாயில் விழுந்து புறப்பட்டன. யுரேனியம் தாசன் என்று பெயர் வைத்துக்கொள்ளாத குறை தான். ஒரே அமர்க்களம்.
நான்கு ஐந்து ஆண்டுகள் படித்து அறிந்து, பல ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்ற அணு ஆராய்ச்சியாளர்கள் வாயடைத்து நின்றார்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ்வளவு அறிவா? நாம் இவ்வளவு ஆண்டுகள் கற்றதை இவர்கள் ஒரே மாதத்தில் பேசுகிறார்களே என்று. நல்ல வேளை இவர்கள் நம்முடன் போட்டித்தேர்வு எழுதவில்லை. இருந்தால் நமக்கு இந்த வேலை கிடைத்திருக்காது என்று உள்ளூர பயந்து போனார்கள்.
எத்தனை பேர் வந்து ஆறுதல் சொன்னாலும் ஒத்துக்கொள்ளவில்லை இந்த வாயடி வீணர்கள் – மன்னிக்கவும் – தமிழ் எழுத்தாளர்கள். முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் வந்து சொன்னாலும் கேட்கவில்லை. பொக்ரானில் அணுகுண்டு வெடித்த விஞ்ஞானிகள் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்று ஒரே பிடிவாதம். எங்கள் பகுத்தறிவுக்கு முன்னர் உங்கள் விஞ்ஞான அறிவு எம்மாத்திரம் என்று எழுதித் தள்ளினார்கள்.
ஜப்பானின் அணு உலை நாற்பது ஆண்டு கால பழமை வாய்ந்தது. அதன் குளிர்விக்கும் வசதிகள் குறைவு. ஆனால் கூடங்குளத்தில் மூன்று அடுக்கு குளிர்விக்கும் வசதி உள்ளது என்று பெரியவர்கள், அறிந்தவர்கள் எடுத்துக்கூறினார்கள். கேட்பார்களா தமிழ் எழுத்தாளர்கள் ?
இவர்களுக்கு ஆதரவாக சில விஞ்ஞானிகளும் இருந்தனர் என்பதும் உண்மை. அவர்கள் கருத்துக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு பதில் அளிக்கப்பட்டன என்றாலும் தொடர்ந்து கூச்சல். வழக்கு போட்டார்கள். முடிந்தவரை தாமதப் படுத்தினார்கள்.
இறுதியில் உச்சநீதிமன்றம் கூடங்குளம் சரி என்றது. உடனே அதையும் எதிர்த்தார்கள். காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற ஆணையை கர்நாடகம் கேட்க வேண்டும் ஆனால் கூடங்குளம் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தேவை இல்லை. என்ன பகுத்தறிவோ , அந்த இயற்கைக்கே வெளிச்சம்.
இதில் நான் மிகவும் மதிக்கும் திரு.ஞாநி அவர்களும் இருப்பது மனதிற்கு ஒரு சங்கடமே. இருபது ஆண்டுகளாக இந்த அணு உலை வேண்டாம் என்று கூறிப் போராடிவருகிறார் அவர். அவரது எதிரப்பில் ஒரு அறம் இருந்தது. ஆனால் கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சரி என்றவுடன் நீதிக்குத் தலை வணங்கி விலகியிருக்க வேண்டும் அவர். ஆனால் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளது சரியில்லை. சீனாவில் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அணு உலையைக் கைவிட்டார்களாம். இந்தியாவில் மக்கள் கருத்துக்கு மதிப்பில்லையாம். 1989ல் தியானான்மென் சதுக்கத்தில் மக்கள் குரலுக்கு மதிப்பளித்து அரசாங்கம் பீரங்கி வடிவில் பூக்கொத்துக்களை அனுப்பியதா என்ன?
மக்களாட்சி தான். ஆனால் அதில் ஒரு மாண்பு வேண்டும். எதிர் கருத்தில் நியாயம் இருப்பின் ஒத்துக்கொளல் வேண்டும். நீதி மன்றம் செல்வோம் ஆனால் நீதி எனக்கு சாதகமாக இல்லை என்றால் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பது என்ன நாகரீகம் ?
அணு உலை வேண்டாம் தான். நெய்வேலி அனல் மின் நிலையம் கூட புவி வெப்பத்திற்குக் கேடு தான். நிறுத்திவிடலாமா ? விண்வெளிப் பயணம் ஆபத்தானது தான். நிறுத்திவிடலாமா? மாசில்லாத மாற்று மின் உற்பத்தி தேவையான அளவில் அமையும்வரை அணுவைப் பயன் படுத்துவது பகுத்தறிவு.
மீனவர் மீதும் இந்தியர் மீதும் சுற்றுப்புறம் மீதும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மதிப்புக்குரிய கலாம் அவர்களுக்கு இல்லாத அக்கறை, மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சில பாதிரியார்களுக்குத் தான் உள்ளது என்று சுய அறிவை அடகு வைத்துவிட்டு நம்ப நான் ஈரோட்டுப் பாசறையில் பயின்றவன் அல்லன்.