சில விஷயங்கள் நம்மைக் குழப்பி விடும் ஆற்றல் பெற்றவை. நான் பகுத்தறிவைப் பற்றிக் கூறவில்லை.
அடிப்படையே இல்லாத , எந்த அறிவுசால் இயக்கங்களும் ஒப்பாத, எந்த ஒரு வரை முறையிலுமே அடங்காத சில நிகழ்வுகள் நம்மை அப்படியே அசைத்துப் போட்டுவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது? இப்படிக்கூட நடக்க முடியுமா? என்றெல்லாம் நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு சிலவற்றில் இன்றைய நிகழ்வும் ஒன்று.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தமிழக அரசு வாங்குகிறதாம். அதாவது முதலீடு செய்கிறதாம்.
உதாரணமாக உங்களுக்கு நூறு ரூபாய் சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். செலவுகள் போக மீதம் இருபது ரூபாய் இருக்கிறது என்று வைத்தால், அதை நீங்கள் முதலீடு செய்யலாம். ஆனால் உங்கள் செலவே நூற்றி இருபது ரூபாய் என்றால், உங்கள் செலவுகளையே நீங்கள் கடன் வாங்கித்தான் சமாளிக்க முடியும் என்றால், முதலீடு எப்படி செய்வது?
அது போல் தான் உள்ளது தமிழக அரசின் செயலும். மக்கள் நலப் பணிகளை நடத்தவே பணம் போதவில்லை. பட்ஜெட்டில் துண்டு என்று சொல்லி வரி விதிக்கிறது. மின்சாரம் விலை ஏற்றம். பேருந்துக் கட்டணம் ஏற்றம். அதனையும் தாண்டி அரசின் செலவுகளுக்குப் பணம் போதாமல் டாஸ்மார்க் என்று அரசு சார்பில் கள்ளுக்கடை வேறு. இப்படி நடக்கிறது நித்திய ஜீவனம்.
நிலைமை இப்படி இருக்க, நெய்வேலியின் பங்குகளில் ஐந்து சதவீதத்தை வாங்கப்போகிறார்களாம். செலவு ஐநூறு கோடி. அரசில் அனைவருமே மூளையைக் கழற்றி வைத்து விட்டு வேலை செய்வோம் என்று சபதம் செய்துள்ளார்கள் போலே.
பள்ளிக்கூடங்களுக்கு மேற்கூரை வேய வழி இல்லை. காவிரியில் மழை இல்லாத நாட்களில் நீர் வரத்து செய்ய மூளை வேலை செய்யவில்லை. அதற்குப் பணமில்லை. அரசுப் பேருந்துகள் தகரடப்பாக்களாக உள்ளன. இதற்கெல்லாம் செலவு செய்ய நிதி போதவில்லை என்று மத்திய திட்டக் குழுவிடம் சென்று கேட்கவேண்டிய நிலை. ஆனால் நெய்வேலியின் பங்குகளை வாங்க முடியும். அது எப்படி சார்? பகுத்தறிவு புரியவில்லையே?
தமிழக அரசு ஒரு முதலீட்டு நிறுவனமா? ஆங்கிலத்தில் Investment Holding Firm என்று சொல்வார்களே அப்படி ஒரு நிதி முதலீட்டு நிறுவனமா? அல்லது முதலீட்டு வங்கி ( Investment BanK) என்று தன்னை அறிவித்துக்கொள்ளப் போகிறதா?
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு ” என்றார் வள்ளுவர். இங்கு இயற்றவும் இல்லை, ஈட்டவும் இல்லை, காக்கவும் இல்லை நிதியை. ஆனால் முதலீடு செய்யப் பணம் மட்டும் வரும். இது என்ன கண் கட்டு வித்தை?
“மூலவர் பிச்சை எடுத்தாராம், உற்சவர் பல்லக்கில் போனாராம்” என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. அது தான் நினைவிற்கு வருகிறது.