“டேய் பார்ரா நாமம், இங்கே வந்தும் போட்டுக்கிட்டுத் திரியறானுங்க” – என் அப்பாவை அழைத்துக்கொண்டு சிங்கபூர் ரயிலில் ஏறிய போது இரு இள வட்டங்கள் கேலி பேசியது காதில் விழுந்தது. ஓர் சீனப் பெண் எழுந்துகொண்டு கொடுத்த இடத்தில் அப்பாவை அமரச் செய்துவிட்டு குரல் வந்த பக்கம் திரும்பினேன்.
இந்திய இளைஞர்கள். சிங்கப்பூரர்கள் இல்லை. அவர்கள் உடையும் பேச்சின் சாயலும் அவர்கள் சென்னையிலிருந்து வந்துள்ள மாணவர்கள் என்று அறிவித்தன. சிங்கை தேசியப் பல்கலையில் பயில்பவர்கள் என்று ஊகித்தேன்.
சிங்கபூர்த் தமிழர்கள் கேலி பேசுவதில்லை, தமிழையும் கலாச்சாரத்தையும் மதிக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ள உடல் உழைப்புத் தொழிலாளர்களும் அமைதியாகவே உள்ளனர். தமிழக அதுவும் சென்னை மாணவர்கள் சிலர் தறி கேட்டு அலைவது சிலமுறை கண்டது தான். இருந்தாலும் இந்தமுறை சிங்கையில் நடந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.
நெற்றிக்கு இட்டுக்கொள்வதை “திருமண் காப்பு” என்று அழைப்பர். திருமண் நம்மைப் பல இன்னல்களிலிருந்தும் காக்கும் என்பது ஒரு எண்ணம். அதனுடன் அதை அணியும் போது அதற்கு ஏற்றவாறு நடக்கவேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஏற்படும். அதுவே நம்மை கெட்ட வழிகளில் போகாமல் தடுக்கும் என்றும் கொள்ளலாம்.
நாமம் தரிப்பதை ( திருமண் இட்டுக்கொள்வதை )க் கேலி பேசுவதும், நக்கல் செய்வதும் சாதி சொல்லி “டேய் அய்யர் போறான் பாருடா ” என்று வீதிகளில் அமர்ந்து காலிகள் கொக்கரிப்பதும் எனக்குப் பழக்கம் தான். நெய்வேலியில் இப்படி அடிக்கை நிகழும். வளரும் வயதில் இந்த அனுபவங்கள் ஏராளம்.
பள்ளி செல்லும் போது தினமும் திருமண் இட்டுக்கொண்டு செல்வது வழக்கம். வழியில் பல தரிதலைகள் விசில் அடிக்கும். பழகி விட்டதால் பல சமயம் கோபம் வருவதில்லை. வந்தாலும் ஒரு புண்ணாக்கு பயன் இல்லை என்பது வேறு விஷயம்.
ஒரு முறை அப்பாவுடன் ஆவணி அவிட்டம் முடித்து சைக்கிளில் செல்லும்போது ” டேய் பூணூல் பாருடா”, என்ற கத்தல் கேட்டு அப்பா சைக்கிளை நிறுத்தினார். ஒரு பார்வை தான். கேலி பேசிய இருவரையும் காணவில்லை.
இந்த நிகழ்வால் எனக்கு தைரியம் வந்தது. ஒரு முறை நெய்வேலி ஸ்டோர் ரோடு பிள்ளையார் கோவில் விழாவில் கலந்து கொள்ள சைக்கிளில் சென்றேன். நெய்வேலியின் அப்போதைய பிரதான வாஹனம் சைக்கிள் தான். எதிரில் வந்த ஒருவன் “டேய் ஐரே “, என்று கத்தினான். வயது பதினைந்து இருக்கும் எனக்கு., “டேய் ம..ரே “, என்று பதிலுக்குக் கத்திவிட்டு வேகமாக சைக்கிளை மிதித்தேன். உடம்பு ஒரு முறை அதிர்ந்தது. பக்கத்தில் அப்பா. அவர் அருகில் இருப்பதை உணராமல் கெட்ட வார்த்தை சொல்லிக் கத்திவிட்டேன். அப்பா இருவாரம் என்னுடன் பேசவில்லை.
ஆனால் என் தார்மீகக் கோபம் தணியவில்லை. அன்று முதல் வீட்டை விட்டுக் கிளம்பும் போது நன்றாகத் தெரியும்படி திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்டேன். வேண்டும் என்றே முகத்தை நெற்றி தெரியும்படி காட்டியபடி செல்வதை விரும்பி செய்தேன். பல முறைகள் “ஐரே .. ம..ரே” சவடால்கள் நடந்தன.அதில் ஒரு வெற்றிப் பெருமிதம் தான்.
ஆனால் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது என்னை விட வயதான ஒரு பையன் “எப்படி டா நாமம் போடறே ?” என்று கேட்டபடி உரசிச் சென்றான். விடவில்லை நான். துரத்தினேன். ஒருவழியாக அருகில் சென்று, ” இப்பிடித் தாண்டா “, என்று சைக்கிளால் அவன் சைக்கிளை மோதினேன். அவன் விழுந்தான். “ஏண்டா இடிச்சே?” என்று அழுதவாறு கேட்டான். எனக்குப் பாவமாகப் போய்விட்டது.அது முதல் கேலி பேசினால் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ளத் துவங்கினேன்.
கல்லூரியில் “ராகிங்” என்ற பெயரில் நடந்த அழுச்சாட்டியங்களில் ஒன்று ஒரு சீனியர்,” நீ இனிமேல் நாமம் போடக்கூடாது”, என்றது தான். மனதுக்குள் ஒரு அரசியலமைப்புச்சட்ட மேதை என்ற நினைப்பில், “Do you know the right to freedom of religion? It is one of the fundamental rights enshrined in the constitution“, என்று ஒரு முழு மூச்சில் முடித்தேன். ஓங்கி ஒரு அரை விழுந்தவுடன் சுய நினைவுக்கு வந்தேன். ஆனால் ஒரு எதிர்ப்பு காட்டவே தினமும் ஒற்றை நாமாம் ( ஸ்ரீ சூர்ணம் ) இட்டுக்கொள்ள மறந்ததில்லை.
இதில் விசேஷம் என் அப்பாவிற்கு “ஐயர் போறார் டா “, என்றால் கோபம் வரும். கேலி பேசுவதால் அல்ல. “என்னை ஒரு அய்யர்னு சொல்லிட்டானே”; என்று வருத்தப்படுவார். காரணம் தான் ஒரு தீவிர ஸ்ரீ வைஷ்ணவ ஐயங்கார். தன்னை ஒருவன் ஐயர் என்று சொல்லிவிட்டானே என்று ஒரு தார்மீகக் கோபம்.
இப்போதெல்லாம் இந்தியாவில் யாரும் இதற்குக் கேலி பேசுவதில்லை. யாருக்கும் இதற்கெல்லாம் நேரம் இல்லை. வேலை, பிழைப்பு என்று வந்த பிறகு இதிலெல்லாம் ஒரு நாட்டம் இல்லை யாருக்கும். அல்லது பா.ஜ.க.அரசு அமைந்த பின்னர் ஏற்பட்ட மாறுதலாகவும் இருக்கலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். ராமர் கோவில் இயக்கம் நடந்தபோது அதுவரை நெற்றிக்கு இட்டுக்கொள்ளாத பலரும் ஏதாவது இட்டுக்கொள்ளத் துவங்கியதைப் பார்த்திருக்கிறேன். இதைப்பற்றியெல்லாம் கேலி பேசுவது பெரும்பாலும் வேலை இல்லாத திராவிடர் கழக ஆட்களாகவே இருக்கும்.
இதில் சில வேடிக்கைகள் உண்டு. சில அசடுகள் “, ஐரே ராமம் போற்றுக்கியா?” என்று கேட்டதுண்டு. பாவம். நான் ஐயரும் இல்லை. போட்டுக்கொள்வது ராமம் இல்லை நாமம் என்ற பகுத்தறிவுகூட இல்லாத நிலையில் இருப்பது ஒரு பரிதாபம்.
சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார் நாமம் ஏன் போட்டுக்கொள்கிறேன் என்று.
“என் சார், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ANTI VIRUS வைத்துக்கொள்வதில்லையா? அது போல் தான். யாரும் போடுவதற்கு முன்னால் நாமே போட்டுக்கொள்வது ஒரு பாதுகாப்பு தானே?” என்று சொன்னாலும் நாமம் போடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.
இப்போதேல்லாம் நம் இளைஞர்கள் நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லை. “நீரில்லா நெற்றி பாழ்” என்று என் ஆசிரியர் கூறுவார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் “நீர்” என்பதற்கு “வேறு” பல அர்த்தங்கள் உள்ளன. அரசாங்கமே சில “நீர்” விற்பனைக் கடைகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமண் பற்றிப் பேச வந்தவுடன் தென்கலை வடைகலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் அதைப்பற்றி ஏற்கெனவே வேறொரு பதிவில் சொல்லிவிட்டதால் இப்போது மறுபடியும் வேண்டாம். ஆனால் வடகலையை விட தென்கலைக் காரர்கள் கொஞ்சம் தடிமனாகவே திருமண் இட்டுக்கொள்கிறார்கள் என்பது என எண்ணம். தென்கலை சம்பிரதாயத்தின் மீதான பற்றாகவும் இருக்கலாம். வடகலையை வெறுப்பேற்றவும் இருக்கலாம். தெரியவில்லை.
ஒருமுறை ஜப்பானில் தோக்கியோ நகரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்த போது என் நிறுவனத் தலைவர் ( ஜப்பானியர் ) என்னைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார். “கோரே வா நான் தேசு கா?” ( இது என்ன? ) என்று நெற்றியைத் தொட்டுக்காட்டி க் கேட்டார். “அனோ இந்தோனோ கமிசமா னோ SYMBOL தேசு” ( இது இந்தியக் கடவுளின் சின்னம்” ) என்று எனக்குத் தெரிந்த ஜப்பானிய மொழியில் தடுமாறிச் சொன்னேன்.அது முதல் என் பெயர் “இந்தோனோ காமி சமா” ( இந்தியாவின் கடவுள் ) என்று வைத்துவிட்டார்.
மறுபடியும் சிங்கபூருக்கு வருவோம். ரயிலில் இருந்த தமிழ் இளைஞர்களை முறைத்துப் பார்த்தேனா? அவர்கள் இருவரும் அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டார்கள். இரு நிறுத்தங்கள் கழித்து இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் வேகமாக அடுத்த பெட்டியின் வாசலுக்குச் சென்று பார்த்தேன். அவர்களைக் கீழே இறக்கி டோஸ் விட எண்ணம். என்னைப் பார்த்தவுடன் அவர்கள் கூட்டத்தின் உள்ளே பதுங்கினார்கள். அவர்கள் பயந்து கொண்டது தெரிந்தது.
அவர்களைக் கீழே இறக்கிப் போலீசில் சொன்னால் அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும். இது தமிழ் நாடு அல்ல எது நடந்தாலும் என்ன நடந்தாலும் போலீஸ் எல்லாம் முடிந்தபின் வருவதற்கும் மாமூல் வாங்கிச் செல்வதற்கும். பழைய பள்ளிப்பருவக் கோபங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை நாலு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது.
“பாவம் விட்டுடு டா. நம்மூர்ப்பசங்க மாதிரி தெரியறது. போனாப் போறது. தெரியாம சொல்லிருப்பாண்டா”, என்றார் அப்பா.
Some how, I was attracted to your blog and read carefully.
But, you have to be very careful in putting out facts, your feelings and others in the public domain.
Even just for fun, or getting attraction or for snobbery, you cannot exceed the limits.
LikeLike
Very nice ………..
LikeLike
Thank you. Please continue to be connected.
LikeLike
though u had very bad experiance as vaishnava among other hindus , the way u express your experience in this blog is so nice and very impressive……..
LikeLike
Very true….I (we) have been through such situation since childhood. On the flip side, in my personal experience people outside Tamil Nadu do have lots of respects to “thiruman”….
Very well said in ur blog….
LikeLike
Very true. People outside TN are not under the influence of “paguththarivu”.
LikeLike