அமீனா வதூத்- இந்த அம்மையார் ஒரு ஹிந்திப்பட நாயகி அல்ல. அதனால் நமக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அது நேற்றைய கதை.
இவர் ஒரு அமெரிக்கர்.இஸ்லாமிய பெண்ணியல் அமைப்பாளர். பேராசிரியர். சென்னைப் பல்கலைக்கழகம் அவரை அழைத்திருந்தது.’இஸ்லாமில் பெண்களின் நிலை’என்பது போன்ற ஒரு தலைப்பு. இது கடைசி நிமிடத்தில் போலீசாரால் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதிப்பது நம்ப முடியவில்லையா? இது தமிழ் நாடு. எதுவும் நடக்கும்.
சில வருடம் முன்பு ஔரங்கசீப் அழித்த கலைப் பொக்கிஷங்கள் என்ற தலைப்பில் தில்லியில் ஒரு கண்காட்சி நடத்தப் பட்டது. ஆவணங்கள் அரசு அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்டன. பல மாநிலங்களில் நடந்தது. ஆனால் சென்னையில் நடந்தபோது ஆற்காட்டு இளவரசர் எதிர்ப்பு தெரிவித்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் சில வன்முறையாளர்களும் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். கண்காட்சி கைவிடப்பட்டது. அல்லது போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் திராவிடர் கழகம் மற்றும் சில “பகுத்தறிவு” இயக்கங்கள் இந்து மத எதிர்ப்பு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி உண்டு. இலங்கை விஷயத்தில் போராட்டம் என்ற பெயரில் இந்திய எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அனுமதி கிடைக்கிறது.
அமீனா வதூத் விஷயத்திற்கு வருவோம். அனுமதி மறுக்கப்பட்டதா ? அது பற்றி ஒரு “முற்போக்கு” எழுத்தாளரும் எழுதவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. சில மாதங்கள் முன்பு “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” என்ற நூல் தடை என்றவுடம் கொதித்தெழுந்த இந்த பண்டிதர்கள், தற்போது மௌனிகளாக இருப்பதன் ரகசியம் ஊர் அறிந்தது.
இத்தனைக்கும் இந்த அம்மையார் ஒரு பேராசிரியர். அதுவும் இஸ்லாமியர். அவர் தனது மதத்தில் உள்ள பெண்கள் நிலை பற்றி ஒரு பல்கலையில் பேச ஜனநாயகம் பற்றியும், பெண் உரிமை பற்றியும் வாய் கிழியும் ஒரு நாட்டில் ஒரு உரிமையாளரும் வாய் திறக்கவில்லை. இந்த நேரத்தில் வாய் திறக்காதே என்பது ஈரோட்டுப் பல்கலையில் பயின்ற அறிவாளிகள் நிலையோ என்னவோ ! பகுத்தறிவின் வீச்சை யாரே அறிவார் !
பகுத்தறிவு போகட்டும். இடது சாரியாளர் மெளனம் காத்தனர். ஏன் ? அமெரிக்க எதிர்ப்பா? அல்லது கார்ல் மார்க்ஸ் ஜன்மதின மௌன விரதமா? அருந்ததி ராய் பேச அனுமதி மறுக்கப்பட்டால் கொதித்தெழும் இடது நிலையாளர் இப்போது மெளனம் காப்பது “லெனின் அஷ்டமி” அன்று மெளன விரதம் காப்பது சாலச் சிறந்தது என்று “ஸ்டாலின் பஞ்சாங்கம்” கூறுகிறதோ என்னவோ !
அது போகட்டும். இதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே பத்திரிகை ஹிந்து நாளிதழ் என்று நினைக்கிறேன். துக்ளக் இந்த வாரத்தில் எழுதுவார்கள் என்று நம்பலாம்.
ஆனால் ஒன்று. “அம்மாவின் அட்டவணை” வெகு அருமை. விஸ்வரூபம் விஷயத்தில் “சாதுர்ய”த்துடன் காய் நகர்த்தி இஸ்லாமிய ஓட்டுகள் தான் பக்கம் நிறுத்தினார். இப்போது அதை மேலும் உறுதிப் படுத்திக்கொண்டுள்ளார்.
ஆனால் இப்படி அடிப்படைவாதத்திற்கு அடி பணிவது நாட்டிற்கு நல்லதல்ல.
இந்நேரத்தில் சிங்கப்பூரின் தந்தை திரு.லீ குவான் யூ அவர்களின் சுய சரிதை நினைவிற்கு வருகிறது. நாடு விடுதலை அடைந்த உடன் சீன மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்று பெரும்பான்மை பலம் கொண்ட சீன அமைப்பினர் திரு. லீயிடம் கேட்டுள்ளனர். சீனரான அவர் மொழி அடிப்படைவாதத்திற்கு அடிபணியாமல் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் – இவை நான்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். ஆங்கிலம் அரசாங்க மொழி. இதில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெளிவுபடக் கூறினார். அதனால் இன ஒற்றுமை காக்கப்பட்டது.
எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு தலைவர் நாட்டு ஒருமைப்பாட்டை, அனைத்து இன, மொழியினரும் சமம் என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயல் பட வேண்டும். அதைச் செய்யத்தவறினால் நாடு கெடும்.
தமிழ் நாடு தாலிபான் நாடாவது வெகு தூரத்தில் இல்லை.