சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாளும் பொழுதும்’ வாசித்தேன். சமூகம், சினிமா, நான் என்று மூன்று பிரிவுகளில் அமைந்துள்ள இந்த நூலில் பல கட்டுரைகள், அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் முதலியன உள்ளன.
“பந்தி” என்ற கட்டுரை நெஞ்சைத் தொட்டது. குமரி மாவட்டத்தில் திருமணம் முதலிய விழாக்களில் விருந்தினர்களை எப்படி பந்தி உபசரிப்பது என்று அருமையாக விவரித்துள்ளார். அம்முறையில் உள்ள வழக்கங்கள், ஒவ்வொரு வழக்கத்தின் பின்புலம், அதன் தேவை என்று அழகாக இருந்தது. ஒவ்வொரு சமூகத்தவரின் பந்தி உபசரிப்புக்களும் அப்படியே. ஆனால் தற்போது எப்படி உள்ளது என்பதையும் சொல்லியுள்ளார். நாம் தினமும் காணும் ஒன்று தான். இருந்தாலும் படிக்கும் போது வலிக்கிறது.
எல்லாக் கட்டுரைகளையும் விட என்னை மிகவும் பாதித்த ஒன்று தற்கால இளைஞர்களைப் பற்றியது. “யூத்து” (Youth) என்பது பெயர். எனது கருத்துக்கு ஒத்துப் போவதாக அமைந்துள்ளதால் கவரப்பட்டேன் என்பது உண்மை என்றாலும், அவரது சில எண்ணங்கள் மிகவும் உண்மை.
யூத் என்ற போர்வையில் பொறுப்பற்ற ஒரு கூட்டம் செயல்படுவதையும், அவர்களுக்கு எப்படிக் கலைகள் பற்றியும் வாசிப்பு பற்றியும் ஒரு அறிமுகமே இல்லாமல் இருப்பது பற்றியும் மிகவும் கவலை கொண்டு எழுதியுள்ளார். இந்த சில கருத்துக்கள் என் ஒரு கட்டுரையில் முன்னமே சொல்லிருந்தேன்.
( http://ammanji.wordpress.com/2013/07/20/futureindia/ )
சுய தம்பட்டம் இருக்கட்டும். ஜெயமோகனுக்கு வருவோம்.
“யானை டாக்டர்” என்று முன்னம் எழுதிய கதையில் இளைஞர்கள் காடுகளில் பீர் பாட்டில்களை உடைத்து வீசுவதால் யானைகள் எப்படி உயிர் இழக்கின்றன என்று எழுதி இருந்தார். அதிலிருந்து தொடங்குகிறார். ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் சட்டையைக் கழற்றி ஆடியபடி, குடித்தபடி, கத்தியபடி இருந்திருக்கிறார்கள். அதைப்பற்றிக் கூறுகிறார் :
“அந்த இளைஞர்களுக்கு அந்த இடத்தின் அழகும் முக்கியத்துவமும் உண்மையிலேயே தெரியவில்லை. அங்கே எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. அதைப்போன்ற விஷயங்கள் அவர்களுக்குப் பழக்கமே இல்லை. அது தான் பிரச்சினை. இவர்கள் அறிந்தது தமிழ் சினிமா.அதில் என்ன செய்கிறார்களோ அதைச் செய்கிறார்கள்.”ஜாலியாக” இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
நம்முடைய இளைஞர்கள் வளர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். ரசனை, அழகுணர்வு, குடிமைப்பண்பு, அறிவார்ந்த நோக்கு ஆகியவை குடும்பம், கல்வி நிலையம் என்னும் இரு அமைப்புகள் வழியாக வர வேண்டும்.
நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத் தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே.. நம் குடும்பங்கள் அதன் பிள்ளைகளுக்குப் பணம் சம்பாதிப்பதற்கான உந்துதலை மட்டுமே உருவாக்குகின்றன.கல்வி அப்படி பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே முன்வைக்கப்படுகிறது.
பல குடும்பங்களில் பண்பாடு என்று நாம் நம்பும் எதனுடைய அடையாளமும் இருக்காது.ஒரு சில சாமிப் படங்கள், பாட புத்தகங்கள், ஒரு டி.வி.-அவ்வளவுதான். அவர்களுக்கு எந்த ஒரு பண்பாட்டுப் பயிற்ச்சியும் இருப்பதில்லை.
நாம் மரபாகக் கொண்டிருந்த எல்லா பண்பாட்டுக்கூறுகளும் “வாழ்க்கை வளர்ச்சிக்கு” உதவாதவை எனத் தூக்கி வீசப்பட்டு விட்டன. யோசித்துப் பாருங்கள், நம்முடைய சராசரி இளைஞனுக்கு ஏதாவது ஒரு ஊடகத்திடமாவது தொடர்புள்ளதா என்று? அவனுக்கு இசை, ஓவியம் என்று எந்த ஒரு நுண் கலையிலும் அறிமுகமில்லை. அவனால் ஒரு நூலை வாசித்துப் புரி ந்துகொள்ள முடியாது. அவனுக்குச் சின்ன வயது முதலே தெரிந்த ஒரே ஊடகம் தமிழ் சினிமாவும் அந்தச் சினிமாவிலேயே மொண்டு சமைத்த டி.வி.யும்…”
ஒரு பொது இடத்தல் நாலைந்து “யூத்து” வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு குரங்குக் கூட்டம் வந்து விட்டது போலத்தான். இங்கே “யூத்து” என்றால் எதிலும் நிலையான ஆர்வமில்லாத, எந்த அடிப்படைப் பயிற்சியும் இல்லாத, மேலோட்டமான ஆசாமி என்று தான் அர்த்தம்.
என் தரிசனம் : பள்ளியோ கல்லூரியோ சென்று வந்த பிறகு என்ன செய்வதென்றே நம் இளைஞர்களுக்குப் புரிவதில்லை. கும்பலாகச் சேர்ந்து நக்கல் அடிப்பதும், சினிமாப் படங்களைப் பார்த்து அதன் வசனங்கள் பேசி மகிழ்வதுமே அவர்கள் பொழுதுபோக்கு. வீட்டிற்கு அருகில் நூலகங்கள் இருந்தால் அங்கே சென்று என்ன இருக்கிறதென்று பார்க்கவாவது பார்ப்பான். ஆனால் வீதிக்கொரு கள்ளுக் கடை இருந்தால்? அதையும் அரசே செய்தால்?
Facebook, Twitter முதலிய சில தளங்களில் தமிழ் மக்கள் உரையாடுவது அவர்களின் தரத்தை மேலும் பறைசாற்றுகிறது. எங்கும் ஒரு வரி விமரிசனங்கள். அதுவும் அரசியல் மற்றும் சினிமா பற்றி மட்டுமே. பல நேரங்களில் வசை மொழிகள். மிகப் பல நேரங்களில் சாதி சொல்லி வைவது. சாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் ஒரு சமூகத்தில் சாதியை இழுக்காமல் யாராலும் பேச முடியவில்லை. புத்தகங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. படித்தால்தானே பேசுவதற்கு?
சில மாதம் முன்பு பெரியார் தமிழ் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் சொல்லிருந்ததைப்பற்றி பற்றி எழுதி இருந்தேன். இணையத்தில் ஒரே வசை மொழி. வேறு ஒரு பதிவின் போது அவர்களுக்கு ஒரு பதில் அனுப்பினேன் – ” இவை என் கருத்துக்கள் அல்ல. அறிஞர் அண்ணா “சரிந்த சாம்ராஜ்யம்”, “மனதை வருத்திய சம்பவங்கள்” என்று இரண்டு நூல்களில் சொல்லியுள்ளவை”, என்று ஆதாரம் காண்பித்தேன். ஒரு பயலும் பேசவில்லை.
ஜெயமோகனின் வார்த்தைகள் நம் தமிழ் சமுதாயத்தின் மீது சொடுக்கப்பட்ட சாட்டை வீச்சுக்கள். இந்த வீச்சுக்களால் புண்பட்டு அதனால் நம் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுமானால் நல்லது தான்.
ஆனால் இந்த சாட்டை வீச்சும் நம்மை ஒன்றும் செய்யாமல் நமது தோல் அவ்வளவு தடிமனானதாக இருந்தால் இந்த தமிழ்ச் சமுதாயம் போகும் பாதை அதல பாதாளம் என்பது புரிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
பி.கு: – ஒரு ஆறுதல்: தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் குடியேறியுள்ள பல தமிழர்கள், தமிழ் நாட்டின் ஊடக ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கிறார்கள். சிங்கையில் தமிழ் நுண் கலைகள் அமைப்புகள் பல உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அவ்விடங்களுக்கு அனுப்புகிறார்கள். இலங்கைத் தமிழர் கோவில்களிலும் செட்டியார் சமூகத்தவர் நடத்தும் கோவில்களிலும் தமிழ்த் திருமுறை வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பிள்ளைகளுக்குத் திருமுறைகளில் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்குகிறார்கள்.