உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ரூபாயின் வீழ்சசி பற்றிப் பேசும் காலத்தில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி பற்றிப் பேசுவதா? அதுவும் “பகுத்தறிவு” இல்லாத இந்த அம்மாஞ்சியா என்று நீங்கள் நினைக்கலாம்.
நேரில் நடப்பதைக் கண்டும் காணாமலும் போக நான் ஒன்றும் பகுத்தறிவுவாதி அல்லவே. மனதில் பட்டதைப் பேசும் ஒரு யதார்த்தவாதி என்ற பில்டப் இருக்கிறதே.. காப்பாற்ற வேண்டாமா ?
விஷயத்திற்கு வருவோம்.
பாராளுமன்றத்தில் “பிரதமர் திருடர்” என்ற கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. அதனால் களேபரம் ஏற்பட்டுள்ளது. எழுப்பியவர்கள் ப.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியினர்.
பிரதமர் என்பது ஒரு மனிதக் குறிப்பு அல்ல. இந்திய ஜனநாயகத்தின் ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டை இப்படி சாலையில் நின்று கத்தும் கோஷ்டியினர் போல் தாக்கிப் பேசுவது அநாகரீகம் மட்டும் அல்ல இந்தியா என்னும் மாபெரும் ஒரு மக்கள் சக்தியின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு அவச் சொல்.
மனமோகன் சிங் தவறான முடிவுகள் எடுத்தார் என்று சொல்வது சரி தான். ஆனால் பிரதமர் திருடர் என்று கூறுவது எந்த விதத்திலும் சரி இல்லை. பிரதமர் தனியாக முடிவு எடுப்பது இல்லை. கேபினட் என்ற அமைப்பு சேர்ந்து செய்யும் முடிவுக்குப் பிரதமர் தலை அசைத்தார் என்று சொல்லலாம். முடிவு தவறாக இருக்கலாம். ஆனால் தவறு என்பது கோர்ட்டுகளில் நிரூபணமாகாதவரை “திருடர்” என்ற பதம் அதுவும் பாராளுமன்றத்தில் சொல்லப்படுவது மன்ற அங்கத்தினர்களின் ஒழுக்க வீழ்ச்சி. ஆகவே நமது ஒழுக்க வீழ்ச்சியும் கூட.
இடது சாரி, சமாஜ்வாடி, லாலு கட்சி முதலான “முற்போக்கு” அங்கத்தினர்கள் கத்துவது அவர்கள் வாடிக்கை. அது அவர்களது “சமூக நீதி”. தமிழ் நாட்டில் சட்ட சபையில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுப்பது தி.மு.க.வின் “தமிழ்ப் பண்பாடு”. பெரியார் வழியில் நடந்து வந்தவர்கள் அவர்கள். ஆனால் பா.ஜ.க. அங்கத்தினர்கள் இந்தக் கத்தலில் ஈடுபடுவது ஏற்க முடியாதது. கட்சித் தலைமை உறுதியுடன் செயல்பட்டு அந்த அங்கத்தினர்களைக் கண்டிக்க வேண்டும்.
பிரதமர் தவறு செய்யவில்லையா, ஊழல் நடக்கவில்லையா, அவர் வாய் மூடி மௌனியாக இருக்கவில்லையா என்றெல்லாம் கேட்கப்படலாம்?
இதெல்லாம் சரி தான். ஆனால் அவர் என் பிரதமர். என் நாட்டின் இறையாண்மையின் பிரதிநிதி. அவரைக் கண்ணியக்குறைவாகப் பேசுவது என்னைப் பேசுவதாகும். என்னைப்போன்ற சாதாரண குடிமக்களைப் பேசுவதாகும். கண்ணியமான விமர்சனங்களும், வாதங்களும் செய்யுங்கள். மதுபானம் அருந்திய சமூக விரோதிகளைப்போல் கத்தவேண்டுமேன்றால், தில்லிக்குச் செல்வானென்? சென்னையில் அரசே கடை திறந்துள்ளது. அங்கு “உற்சாக பானம்” அருந்தி வீதிகளில் கத்துங்கள்.
நேருவும், சியாமா பிரசாத் முகர்ஜியும், சாஸ்திரியும், ராஜாஜியும், அண்ணாதுரையும், சமீபத்தில் வாஜ்பாயும், அருண் ஷோரியும் பேசியுள்ள அரங்கத்தை உங்கள் அழுச்சாட்டியங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
காங்கிரஸ் கத்தவில்லையா என்று கேட்கலாம். மணி ஷங்கர் ஐயர் கத்துவதில்லையா என்று கேட்கலாம். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.என்ற ஆளுமையின் வழி நடப்பவர்கள் அல்ல. பாக்கிஸ்தானியர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மாட்சிமை பற்றி என்ன கவலை? அவர்கள் அப்படித்தான். தங்கள் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியையே குறை கூறும் வல்லமை கொண்ட, நாகரீகம் அறிந்த, தமிழ் நாட்டின் “அறிவாளி” நிதியமைச்சர் அந்தக் கட்சியில் உள்ளார். அவர்களுக்கு ஜனாதிபதியின் மாட்சிமை குறித்து கூட அக்கறை இல்லை. முன்னாள் ஜனாதிபதியின் தேர்வே இதைப் புரியவைக்கவில்லையா? எனவே அவர்கள் அப்படித்தான் கத்துவார்கள்.
ஆனால் நீங்கள் வாஜ்பாயின் கட்சினர் அல்லவா? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணியத்தின், கருத்தின், கவித்துவத்தின் உருவாக விளங்கிய வாஜ்பாய் எங்கே, காட்டுக்கத்தல் கத்தும் நீங்கள் எங்கே? அறிவே உருவாக தர்க்கவாதம் புரிந்த அருண் ஷோரி எங்கே, மறை கழன்றவர்கள் போல் கத்தும் நீங்கள் எங்கே?
உங்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.
“தனித்துவமான” கட்சி என்று பறை சாற்றிய நீங்கள் இப்படியே போனால் இந்திய மக்களால் தனித்து விடப்படுவீர்கள். எச்சரிக்கை !