கம்பன் தன் காவியத்தில் பல அறங்களையும் ஒழுக்கங்களையும் கூறியிருந்தாலும், ஒரு நாடும் அதன் அரசுகளும் இருக்க வேண்டிய முறை பற்றியும், மன்னன் ஆட்சி செய்ய வேண்டிய முறை, அமைச்சர்கள் தகுதி, அவர்கள் பணிகள் என்று பலவற்றையும் பற்றிக் கூறுவது நம்மை வியக்க வைக்கிறது.
இராமராஜ்யம் என்பது ஒன்று இருக்குமேயானால் நாடும் அரசும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துச் சென்றுள்ளான் கம்பன். 1200 ஆண்டுகளுக்கு முன் அவன் இயற்றிய இராமகாதையில் கூறப்படும் அரசு முறைமை, நாட்டின் பண்பு, மக்களின் பண்புகள் முதலியன, “அட, ஒரு நாடு இப்படியல்லவோ இருக்க வேண்டும்!” என்று நினைக்கத் தூண்டுகிறது. இவை பற்றி இம்முறை பார்ப்போம்.
கம்பன் காட்டும் நாடு பற்றிப் பார்த்துவிட்டு அதனை ஆள்பவர்களையும் அவனது அமைச்சர்களைப்பற்றியும் பார்ப்போம்.
கோசல நாட்டு மக்கள் எப்படி இருந்தார்கள் ? கம்பன் கூறுவது :
’வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மையில்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்’
(மக்களிடத்தில் பொறாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் வறுமை இல்லை.அனைவரிடமும் பொருட்செல்வம் இருந்தது. அறியாமை இல்லை; ஏனெனில் அவர்களிடம் கல்வி இருந்தது. அந்நாட்டில் உண்மை இல்லை; ஏனெனில் அவர்களிடம் பொய் இல்லை)
கவனிக்கவேண்டியது இது. அந்நாட்டில் உண்மை இல்லை என்கிறார். ஆக அனைவரும் பொய்யர்களா? இல்லை. உண்மை என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை. பொய் இருந்தால் தானே அதற்கு மாற்றாக உண்மை என்ற ஒன்று தேவை ? பொய்யே இல்லை என்றால் உண்மை என்பதும் இல்லை. அனைத்தும் ஒரே நிலை தானே !
சரி. மக்கள் இப்படி உத்தமர்களாக இருப்பதால் அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் இல்லை ?
“கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்;
ஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே”
(கோசல நாட்டு மக்களிடம் கூற்றுவன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனெனில் மக்களிடத்தில் குற்றங்கள் இல்லை. அவர்கள் தூய்மையான உள்ளம் கொண்டர்கள்; ஆதலால் அவர்களிடம் சினம் இல்லை. சினம் இல்லாததால் குற்றங்கள் இல்லை. அவர்கள் நல்ல அறங்களையே செய்ததால் தவறுகள் இல்லை; எனவே அவர்களுக்குப் புகழ் மட்டுமே உண்டு ).
முதல் பாடலில் கல்வி பெருகியுள்ளது தெரிகிறது. கல்வியினால் நல்ல பண்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் என்ற தீய பண்புகள் மக்களிடம் இல்லை. அதனால் சண்டை, சச்சரவுகள் இல்லை. அதனால் அவர்களுக்குப் புகழே தவிர வேறெதுவும் இல்லை.
ஒரு முன்மாதிரியான நாட்டையும் மக்களையும் காண்கிறோம்.
சரி. இம்மக்கள் யார் ? இவர்கள் இருப்பிடம் எப்படிப்பட்டது ?
“தங்குபேர் அருளும் தருமமும் துணையாத்
தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர்
யாவர்க்கும் புகல் இடம் ”
( என்றும் குன்றாமல் நிறைந்திருக்கும் கருணையுள்ளவர்கள்; அறத்தை மறவாதவர்கள்; இவைகளைத் துணையாகக் கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர்கள்; உயர்ந்த தவத்தையும் அறிவையும் உடையவர்கள்; உலகப்பற்றை விட்டவர்களான முனிவர்கள் யாவர்க்கும் புகலிடமாக விளங்குவது அயோத்தி மாநகரம் )
இப்படிப்பட்ட அயோத்தியில் வாழும் மக்கள் வாழ்க்கை முறை என்ன ? எத்தகைய தொழில்கள் நடைபெற்றன ?
கம்பன் கூறுவதைப் பாருங்கள் :
“அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,
நகரின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்”
(அகில்கட்டைகளிலிருந்து வரும் புகை, வீடுகளிலிருந்து உணவு தயாரிப்பால் எழும் சமையல் புகை, கரும்பாலைகளிலிருந்து வரும் புகை, நான்கு வேதங்களின் முறைப்படி செய்யப்படும் வேள்விகளிலிருந்து வரும் வேள்விப்புகை இவை அனைத்தும் சேர்ந்து மேகத்தைப்போன்று எங்கும் பரவியுள்ளன )
இதன்மூலம், கரும்பு முதலிய ஆலைகள் இருந்தன என்பதும், அந்தணர்கள் வேள்விகள் இடைவிடாது செய்துவந்தனர் , அவர்களுக்கு உதவும் கொடையாளர்கள் நிறைந்திருந்தனர் என்பதும் தெரிகிறது.
கம்பர் மட்டுமே இவ்வாறு கூறுகிறாரா என்றால் இல்லை. அவருக்குப் பல நூற்றாண்டுகள் முன் தோன்றிய வள்ளுவர் கூறுவது இது :
“தள்ளாவினையுளும் தக்காரும் தாழ் விலாச்
செல்வரும் சேர்வது நாடு ”
( நீங்காத விளைவும், அறவோர் திறவோர் ஆகிய சிறந்தவர்களும், குறைவற்ற செல்வம் உடையவர்களும் சேர்ந்திருப்பதே நாடு)
அந்தணர்கள் வேதத் தொழில் செய்யாவிட்டால் நாடு நன்றாக இல்லை என்று ஆகுமா ? அந்தணர் நான்மறை வழி வேள்விக்கும் நாட்டு நலத்திற்கும் என்ன தொடர்பு ? அதற்கு வள்ளுவனைத் தொடுவோம் :
“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் ”
( ஒரு அரசன் நல்லாட்சி செய்யவில்லை என்று அறிய ஒரு வழி உள்ளது. அந்நாட்டில் பசுமாடுகள் பா ல் வளம் குன்றும். ஆறு தொழில் செய்யவேண்டிய அந்தணர்கள் தங்கள் நூலை ( வேதம் ) மறந்திருப்பர் )
சரி.மக்களும் நாடும் இப்படி இருக்க வேண்டுமென்றால், அரசன் எப்படி இருக்க வேண்டும் ?
புறநானூற்றுக் காலங்களில் மன்னனை வைத்தே நாடு இயங்கியது. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று புறநானூற்றின் ஒரு பாடல் கூறுகிறது. குடிமக்களுக்கு அவ்வளவு பெருமை இல்லை. ஆனால் கம்பன் காலமான 12-ம் நூற்றாண்டில் மன்னராட்சியே இருந்துவந்தாலும் குடிமக்களுக்கே பெருமை என்பதுபோல் தெரிகிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் மன்னனால் சரியான அரசாட்சி செய்ய இயலாது என்பதாகக் காட்டுகிறார் கம்பர்.
“வய்யம் மன்னுயிராக, அம்மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு
அய்யம் இன்றி அறம்கடவாது அருள்
மெயின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ ”
(மன்னன் உலகத்தின் அனைத்து உயிர்களைய்ம் உயிராகக்கொண்டு தான் ஒரு உடலாக மட்டுமே செயலாற்ற வேண்டும். அவ்வாறு இயங்கும் மன்னனை விட்டு விலகாது அறம் உடன் இருக்கும். இவ்வாறு இரக்கத்துடனும், உண்மையுடனும் இருக்கும் அரசன் வேள்வி செய்யவும் வேண்டுமோ ?)
அரசனை வெறும் உடல் போல இருக்க வேண்டும் என்றும், அனைத்து உயிர்களும் அவனது உயிர் என்றும் கூறுகிறார் கம்பர். இப்படி ஒரு அரசன் இருந்தால் அவன் இறை வழிபாடு கூட செய்ய வேண்டியதில்லை என்றும் அறத்தின் தேவதை அவனுடன் இருப்பாள் என்றும் கூறுகிறார். மக்களே உயர்ந்தவர், அரசன் வெறும் கருவிதான் என்று அன்றே காட்டிவிட்டார் கம்பர்.
அரசனின் ஆட்சி எப்படியிருக்க வேண்டும் ? கம்பர் கூற்று :
“மண்ணிடை உயிர்தோறும் வளர்ந்து தேய்வின்றி
தண்ணிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தம் குடைமதி அமையும், ஆதலால்
விண்ணிடை மதியினை மிகை இது என்னவே”
(உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இனிய நிழலைத் தருவது தசரதனின் வெண்குடை நிழல். அறியாமை இருளை அகற்றவல்லது அதுவே. உலக உயிர்களுக்குப் போதுமானது அவன் ஆட்சியின் நிழல்.இது தவிர வானத்தில் சந்திரனின் நிழல் தேவை இல்லை)
அவன் ஆட்சி சரி. அவன் எப்படி நாட்டைக் காக்கிறான் ?
“வய்யகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய்எனக் காத்து இனிது அரசு செய்கிறான்”
( ஒரு சிறிய அளவிலான நிலத்தை உடைய உழவன் தன் நிலத்தை எப்படிப் பாதுகாப்பானோ அப்படி தசரதன் தன் நாட்டைப் பாதுகாத்தான் )
மன்னனின் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும்?
“இனிய சொல்லினான், ஈகையன், எண்ணினன்
வினையன்,தூயன்,விழுமியன்,வென்றியன்
நினையும் நீதி நெறிகடவான் எனின்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ”
(இனிய மொழி, ஈகைக்குணம், ஆழ்ந்த சிந்தனை, வினை செய்யும் வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், செயலிலே வெற்றி அடையும் திறன், நீதிநெறி வழுவாமை – இந்தக் குணங்களை அரசன் கொண்டிருந்தால் அவனுக்கு எக்காலத்திலும் யாராலும் அழிவில்லை )
அரசன் மட்டுமே எவ்வாறு நன்றாகச் செயல்பட முடியும்? எவ்வளவு வலிமை உடையவனாக இருப்பினும் மேலே சொன்ன குணங்கள் இருந்தாலும் தனித்துச் செயல்பட முடியாதே ?
இராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ள பாடல் இப்படி வருகிறது :
“வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும்,
தீமைதீர் ஒழுக்கின் வந்ததிறத்தொழில் மறவரோடும் ..”
( உண்மையை ஆராய்ந்து உணரும் அறிவுள்ள அமைச்சர்களோடும், குற்றமற்ற ஒழுக்கத்துடன் திறமையாக நிர்வாகத்தை நடத்தும் வீரர்களோடும் ஆலோசித்துப் பின்னர் செயல் ஆற்ற வேண்டும் ..)
ஆக அரசனுக்கு உரிய குணங்கள், அவன் நல்ல அறிவுள்ள அமைச்சர்களோடு சேர்ந்து செயலாற்ற வேண்டியது முதலியன கம்பனால் சுட்டிக் காட்டப்பட்டது.
அமைச்சன் அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் போதுமா? அவனது குணங்கள் என்ன?
“உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்,
மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்;
பிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும் கற்றவர் ;
மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் ”
(நடந்த நிகழ்ச்சியைக்கொண்டு இனி வருவது உரைக்கும் ஆற்றல் பெற்றவர்; முன் வினையால் நேர்ந்த தீமையாக இருந்தாலும் அதை மாற்றும் வல்லமை கொண்டவர்; ஒழுக்கமுள்ள குடியில் பிறந்தவர்கள்; சிறந்த நூல்களை எல்லாம் நன்கு கற்றறிந்தவர்கள்; தன் உடலின் ஒரு மயிர் இழப்பினும் உயிர் துறக்கும் கவரிமான்போல் மானத்தில் சிறந்தவர் – இவர்களே நாட்டின் அமைச்சர்கள் )
மேலே கண்டது அமைச்சர்களின் தேர்வுக்கான குணங்களாகக் கொண்டால், அவர்கள் எப்படிச் செயலாற்றவேண்டும் என்று கம்பன் கூறுகிறான் என்று பார்த்தால் மெய் சிலிர்க்கிறது :
“தம் உயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்டபோதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்
செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்”
(தனக்கு மட்டுமே நன்மை வேண்டும் என்று கருத மாட்டார்கள்; அரசன் சினம் கொண்டாலும் தாங்குவார்கள்; நீதியை விடாது பின்பற்றுவார்கள்; அரசனையும் நீதியை விட்டு விலகாதபடி அறிவுறுத்துவார்கள்; மூன்று காலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டு உண்மையே, தாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதுவதையே உரைக்கும் தன்மை உள்ளவர்கள்)
கம்பன் மட்டுமே இவ்வாறு அமைச்சர் பற்றிக் கூறினானா ? அதற்கு உரைகல் எது ? வழக்கம் போல் வள்ளுவன் தான் :
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையார்
சொல்லலும் வல்லது அமைச்சு”
(செய்தே ஆக வேண்டிய செயல்களை ஆய்ந்து அறிதல், செயல் செய்யவேண்டிய வழிகளை நன்கு ஆய்ந்து உறுதியாகத் தம் கருத்தை முன்வைத்தல் – இவற்றில் வல்லவனே நல்ல அமைச்சன் ).
ஆக, நாட்டு மக்கள் நன்றாக இருக்க அவர்களுக்குக் கல்வி வேண்டும், குற்றம் இல்லாமல் இருக்க நாட்டில் செல்வம் வேண்டும், அச்செல்வம் மக்களிடம் சரியான அளவில் இருக்க வேண்டும், பல வகையான மக்கள் வேறுபாடின்றி ஒருங்கே இருக்க வேண்டும், இவை அனைத்தையும் நடத்த நல்ல மன்னன் வேண்டும், அவன் ஆட்சி குளுமையாக இருக்க வேண்டும், அவன் மக்களைத் தன் உயிர் போல் கருத வேண்டும், அப்படி ஆட்சி செய்ய நல்ல அமைச்சர்கள் வேண்டும் மற்றும் அந்த அமைச்சரகள் இவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று நாடு இருக்க வேண்டிய நிலையையும், அதற்கு மன்னன் தரம், அவனது அமைச்சின் தரம் என்ற பல நோக்கில் கம்பன் காட்டும் நாடாளும் வழிமுறை நம்மை அவ்வாறான ஒரு நாட்டு நிலைமை ஏற்படாதா என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது.