வைணவம் குறித்து எழுத வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான் தென்கலை வடகலை வேறுபாடுகள் பற்றியும் அவை ஒன்றுமே இல்லாதவை என்பது பற்றியும் பதிவிட்டவுடன் ஒரு வாசகர் நிறைகளைப் பற்றியும் எழுதலாமே என்று கடிதம் இட்டிருந்தார்.
அதற்காகத் தென்கலை வடகலை என்ற பிரிவுகள் பற்றி மேலும் தோண்டிக்கொண்டிருந்த போது “வைணவம் – ஒரு மார்க்சீயப் பார்வை” என்ற நூல் கண்ணில் பட்டது. அதில் வைணவத்தைப்பற்றி ஒரு இடதுசாரி நோக்கில் தோத்தாத்திரி என்னும் பேராசிரியர் எழுதியிருந்தார். அவரது பார்வை தத்துவங்களின் அடிப்படையில் ஓரளவே இருந்தது ஆனால் வைணவத்தை அவர் ஒரு சமுதாய நோக்கில் அணுகியது சிலிர்ப்பூட்டியது.
உண்மையில் இடதுசாரி மனிதர் ஒருவர் செய்துள்ள ஆராய்ச்சி மற்றும் முயற்சி என்னை வெட்கப்படச் செய்தது. இத்தகைய ஒரு முயற்சி நம்மிடம் இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்டது உண்மை. அந்த நூல் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அதன் பின்னர் வைணவம் குறித்து மேலும் தோண்டிப் பார்க்கலாமே என்று ஒரு எண்ணம்.
மேலும் தோண்டியபோது பல அறிமுகங்களும் கருவூலங்களும் கிடைத்தன. இதுநாள் வரை சேகரித்த செவி வழிச் செய்திகள், பெரிய ஆராய்ச்சிகளின் பலனாகச் சில பெரியவர்கள் எழுதிய நூல்கள், சில அனுபவங்கள், சில தத்துவத் தேடல்கள், சில கருத்துப்பறிமாற்றங்களில் பார்வையாளனாக இருந்த நேரடி அனுபவம் — இவை என்னை “மார்க்சீய நோக்கில் மட்டும் பார்ப்பானேன்? மற்ற பல திசைகளிலிருந்தும் நோக்கலாமே”, என்று திசை திருப்பின.
இதனால் வைணவத்தை நான் கரைத்துக் குடித்துவிட்டேன் என்று யாரும் எண்ண வேண்டாம் என்று நான் கூறவேண்டிய அவசியமில்லை. இவை எல்லாமே நான் ஒரளவு அனுபவித்தது, சில கண்டது, சில கேட்டது, ஆனால் பெரும்பாலும் படித்தது. இப்படியாக அறிந்துகொண்டது தான்.
அவற்றின் பலன் : இனி வரவிருக்கும் வைணவம் பற்றிய ஒரு தொடர்.
வைணவம் ஒரு சமயம் என்பதால் இந்தத் தொடரில் வெறும் சமயம் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டுமே இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வைணவம் பற்றி ஒரு சில திசைகளிலிருந்து பார்த்து, அதில் எனக்குப் புரிந்தவற்றை எழுதலாம் என்று எண்ணம்.
ஒரு சமயத்தைப் பரப்புவதற்காகவோ, உயர்த்திப் பேசுவதற்காகவோ எழுதப் படுபவை அல்ல இவை. வைணவமும் தமிழும், தமிழ் நாடும், மக்கள் வாழ்வும், வாழும் முறைகளும், அவை தொடர்பான பல தத்துவங்களும் அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள நிலை குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால் ஒரு தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அது மற்றதிலிருந்து எப்படி வேறு பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே வைணவத்தின் சமகாலத்திலும் , அதற்கு முன்னரும் இருந்த தத்துவங்கள் பற்றியும் எழுதவேண்டியுள்ளது அவசியம்.
எனவே, சில பகுதிகள் சுலபமாக இருக்கும். சில சற்று தூக்கம் வரவழைக்கும். தத்துவங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி தேவை. இருந்தாலும், கடினம் போல் தோன்றுவதை எவ்வளவு எளிதாக்கமுடியுமோ செய்கிறேன்.( எனக்கே புரிகிறது என்றால் யாருக்கும் புரியும் ).
அக்கால சமுதாய நிலை, சமயங்களின் நிலைகள் , சில ஆச்சாரியர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆழ்வார்கள் மற்றும் அவர்களது தத்துவங்களைக் கடந்து சென்ற பின், ஆண்டாளின் பாசுரங்களின் விளக்கங்களுடன் முடிக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது மார்கழி மாதம் ( 15 – December – 14-January ) துவங்கியிருக்கும். இறையருளும் குருவருளும் வாசகர் ஊக்கமும் வேண்டித் துவங்குகிறேன்.
முதலில் ‘அந்தணர்’ என்னும் தலைப்பில் சில பதிவுகள் காண்போம். ஏனெனில் அவர்களின் நிலையையும், அவர்களைப்பற்றிய சில செய்திகளும் வைணவத்தை ஒரு குறிப்பிடும் அளவில் அறிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.
எப்போதும்போல் தொடரினூடே வாசகர் கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன. அவையே அடியேனை ஆற்றுப்படுத்தும் வழி காட்டிகள்.
(கம்பன் பற்றிய தொடரும் அவ்வப்போது இடம்பெறும். தப்பித்துவிட்டதாக நினைக்கவேண்டாம். பொழுதுபோகாமலும் தூக்கம் வராமலும் தவிப்பவர்கள் எனது ஆங்கல தளத்தைப் பார்வையிடலாம்.அது – https://amaruvi.wordpress.com)
ம்….. நல்ல ப்ரயாசைக்கு வாழ்த்துக்கள்.
சிறியேன் தெரிந்து கொள்ள விழைவது வடகலை மற்றும் தென் கலை சம்ப்ரதாயங்களில் உள்ள — சம்ப்ரதாயம் சம்பந்தமாக – வைஷ்ணவத்தைப் பற்றிய இவர்களது பார்வைகள்.
பொதுவாக காலக்ஷேபங்கள் கேட்டதில் – ஒரு கலையைச் சேர்ந்தவர்கள் – அவர்களது ஆசார்யர்களது அபிப்ராயங்களை சொல்வர் – ரசமானதே –
இரண்டு சம்ப்ரதாய அபிப்ராயங்களையும் – ஒரு சேர வாசிக்கையில் – அபிப்ராய பேதம் மட்டிலும் கிடைக்கும் என்று மட்டிலும் சொல்ல முடியுமா – சமன்வயத்துக்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவா – தெரியவில்லை.
இரண்டு சம்ப்ரதாயங்களையும் தெரிந்தவர் – தமிழ் சம்ஸ்க்ருதம் – இரண்டு பாஷைகளும் ஓரளவுக்கு நன் கு தெரிந்த உபய வேதாந்தி — அதீத சம்ப்ரதாய சார்பு இல்லாமை – இப்படி பன்முகம் கொண்டவர் – இப்படி அழகாக ஒரு சமன்வய சித்திரம் வரையலாம் என்பது என் ஹேஷ்யம்.
தேவரீர் — கம்யூனிஸம் போன்ற அவைதிக – சமூஹ கோட்பாடுகள் சார்ந்த – அணுகுமுறை மூலம் வைஷ்ணவத்தைப் பற்றி — தாங்கள் வாசித்த நூல் வழியே சொல்ல விழைவதும் தெரிகிறது.
மிக விரிவான தொகுப்பு என எண்ணுகிறேன். இயன்ற வரை ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய அடிப்படையிலிருந்து துவங்கி விஸ்தாரமாக அணுகினால் சம்ப்ரதாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.
நமோ நாராயணா
LikeLike