சென்ற இரு வாரங்களில் அந்தணர் என்ற பிரிவு மக்களது வாழ்வு பற்றிப் பார்த்தோம். இம்முறை, அவர்களையும் உள்ளடக்கிய பெரிய சமூக அமைப்பு எப்படி இருந்தது என்று சங்க காலம் தொட்டு பார்த்துவருவோம்.
சங்க காலம் குறித்துப் பல ஆராய்ச்சியாளர்கள் பலவாறு கூறியுள்ளனர். பேரா.ராகவையங்கார், பேரா.வையாபுரிப்பிள்ளை, பேரா.வானமாமலை முதலான ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்து சங்க காலம் என்பது கி.மு.வில் உள்ளது என்பதே. அவர்கள் வேறுபடுவது சங்க காலத்தின் கால அளவில் மட்டுமே. கி.மு.3000 தொடங்கி கி.பி.200 வரை என்பதில் அவர்களது கால அளவில் வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் சங்க காலம் என்பது இராமாயண, மகாபாரத புராண காலங்களில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இராமாயணக் காலங்களில் குரங்குகள் பேசுவது போன்ற அமைப்புக்கள் உள்ளன ( அனுமன், வாலி, சுக்ரீவன் ). ஆனால் மகாபாரதத்தில் அந்த அளவு மனிதனல்லாத உயிர்கள் பேசுவது போல் இல்லை. எனவே சார்லஸ் டார்வினின் கொள்கைப்படி மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதை ஒப்புக்கொள்ளும் வேளையில் , ராமாயணம் மனிதன் குரங்கிலிருந்து தோன்றிய காலத்துக்கு சற்று பிற்பட்டு நடந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது. (ராமாயணம் , மகாபாரதம் முதலியவை நடந்ததா என்று தமிழக “அறிவாளிகள்” பேசிக்கொண்டிருக்கட்டும். நாம் மேலே தொடர்வோம்).
சங்க கால இலக்கியங்களில் திருமால் பற்றிய குறிப்புகள் தென்படுகின்றன. “மாயோன்” என்ற ஒரு தொடர் தென்படுகிறது.
சங்க நூலான தொல்காப்பியம் கூறுவது:
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”
“மாயோன் என்னும் காடு சார்ந்த நிலத்தின் கடவுளும், குழந்தை வடிவில் உள்ள முருகன் உறையும் மேகக்கூட்டம் அடர்ந்த மலைப்பகுதிகளும் … ” என்று கூறும் இடத்தில் மாயோனைக் காட்டின் கடவுளாகக் கருதியுள்ளனர். மழைக் கடவுளாக முருகனைக் கருதியுள்ளது “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் ” என்ற தற்கால வழக்கிற்கு ஒத்து வந்துள்ளது நோக்கத்தக்கது. மேலும், முல்லை, குறிஞ்சி, முல்லை, முதலிய நிலப்பகுதிகளும் சங்க கால நிலப்ப்பாகுபாடுகளில் உள்ளதைக் காண முடிகிறது. அத்துடன், நிலம் சார்ந்த ஒரு கடவுளர்களை வழிபட்டுள்ளனர் என்றும் கருத இடம் உள்ளது.
திருமாலுக்கு “மாயன்”, “மாயோன்” என்ற பெயர் உள்ளதைப் பிற்கால பக்தி இயக்கக் காலமான கி.பி.7 – கி.பி. 9 ம் நூற்றாண்டுகளில் தோன்றிய ஆழ்வார் பாசுரங்களில் காணலாம்.
ஆண்டாள் “மாயனை மன்னு வட மதுரை மைந்தனை ..” என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
சங்கள் இலக்கியங்களில் இராமாயணக் குறிப்புக்கள் உள்ளன என்பதை நமது கம்ப ராமாயணத் தொடர்களில் கண்டோம்.
அகநானூறு ,
“வென்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கு இரும்பௌவம் இரங்கும் முன்துறை..” என்னும் பாடலில் ராமாயணக் கதை பற்றிக் குறிப்பிடுகிறது. ஆக சங்க காலத்தில் இராமன் கதை இருந்துள்ளது.
ஆனால் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் “மாயோனும்” பிற்காலப் பாசுரங்களில் வரும் “மாயனும்” வேறு; இருவரும் ஒரே விஷ்ணுவைக் குறிப்பிட வில்லை என்று மார்க்சீய ஆய்வாளர்களான பேரா.வானமாமலை மற்றும் பேரா.தோதாத்ரி குறிப்பிடுகின்றனர்.ஆனால் இந்த இரு திருமால்களும் ஒருவர் இல்லை என்பதற்கு இந்த ஆராய்ச்சியாளர்கள் சான்றுகள் காட்டவில்லை. அவர்களது இந்த முடிவில் ஒரு அவசரம் தெரிகிறது.
சங்க காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகவே ( Tribals ) இருந்துள்ளனர். இந்தக் குழுக்களுக்கு என்ற தனியாக சில குறிகள் இருந்துள்ளன. சில குழுக்களுக்கு மரம், சிலவற்றிற்குப் பறவைகள், சில குழுக்களுக்கு மலை முதலிய குறிகளாக, தெய்வங்களாக இருந்துள்ளன. அதியமான், பாரி, காரி, ஆய், பேகன் முதலிய சங்ககால மன்னர்களும் இனக்குழுத் தலைவர்களே; பாரியின் இனக்குறியீடு முல்லை எனவே அவன் அதற்குத் தேர் கொடுத்தான்; பேகனின் குலக்குறியீடு மயில் எனவே அதற்குக் கம்பளி அளித்தான் என்று நம்ப இடம் இருக்கிறது என்றும் மார்க்சீய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது கொஞ்சம் பகுத்தறிவுக்கு ஒத்துவருவதாக உள்ளது.
சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு முதலியன முறையே அக்கால மக்களின் அக வாழ்வு பற்றியும் வீரம், போர் பற்றியும் பேசுகின்றன. அகநானூறு போரினாலும் வாணிபத்தாலும் ஏற்படும் பிரிவு பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு பொருளை உற்பத்தி செய்து அதை இன்னொரு இனக்குழுவிற்கு விற்றது. இதனால் இருவகையான சமூக அமைப்பு ஏற்பட்டது. ஒன்று விவசாயம் சார்ந்தது. இன்னொன்று வாணிபம் சார்ந்தது.
இரு பெரும் சமூக அமைப்புகள் உருவான போது அவற்றை ஒழுங்கு படுத்தி பல இனக்குழுக்களையும் இணைக்கும் வேலையும் நடந்தது. இணைப்பை உறுதி செய்தது போரினால். இணையும் இனக்குழுக்களின் தலைமை சிற்றரசுகளாகவும் பின்னர் பல சிற்றரசுகள் ஒருங்கிணைந்து பேரரசுகளாகவும் உருமாற்றம் பெற்றன. அரசுகள் தோன்றியபோது விவசாயம் மற்றும் வாணிபத்தை ஒழுங்குபடுத்த முற்பட்டன. அதற்கான சட்டங்களையும் வரி வசூல் முறைகளையும் ஏற்படுத்தின.
இக்கால கட்டத்தில் விவசாயம் பெருகத் துவங்கியது. புதிய வாய்க்கால்களும் அணைகளும் கட்டப்பட்டன. கல்லணை, வீர நாராயணன் எரி முதலியன சில. இவை சங்கம் மருவியகாலம் மற்றும் பின்னர் துவங்கிய பக்தி இயக்கக் காலம்.
விவசாயம், வேளாண்மை பெருகியதால் பல புதிய தொழில்கள் உருவாயின. தச்சர், கல் தொழில் செய்பவர், மண் பாண்டம் செய்பவர், இரும்புக் கொல்லர் முதலிய பல தொழில் செய்யும் பிரிவினர் தோன்றினர். ஒரு மாதிரி குலம் சார்ந்த தொழில் முறைகள் துவங்கிய காலம் அது. இந்த அமைப்புகள் மற்றும் தொழில்கள் வேளாண்மை சார்ந்த அமைப்புக்களே. எனவே அவர்களுக்கும் வேளாண் தொழில் செய்பவர்களுக்கும் ஒரு தொடர்பும் ஒற்றுமையும் இருந்தது. இவர்கள் கிராமப்புறம் சார்ந்தே இருந்தார்கள்.
ஆனால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருட்களை வாணிபம் செய்யும் பிரிவினர் நகரங்களில் இருந்தனர். இவர்கள் சற்று செல்வச்செழிப்புடன் திகழ்ந்தனர்.
அரசன் தனக்கு வேண்டிய தனக்கு அடங்கிய சிறு குழு மக்களுக்கு என்று நிலங்களைத் தானமாக அளித்தான். இந்தக் காலகட்டத்தில் நில உடைமைச் சமுதாயம் உருவானது. பெருநிலக் கிழார்களும் சிறு நிலக் கிழார்களும் உருவாயினர். இந்நிலங்களுக்கு வரி வசூல் செய்து அரசு வருவாய் ஈட்டியது. சில நிலங்களை வரி இல்லா நிலங்களாக அந்தணர்களுக்கும் கோவில்களுக்கும் கொடுத்தான்.
விவசாயம் சார்ந்த மக்கள் குழு ஒரு அமைப்பாகவும் வணிகர் குழுக்கள் ஒரு அமைப்பாகவும் இருந்தனர். இவர்கள் இடங்கை, வலங்கைப் பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.
இந்த இரு வகைப் பிரிவினரில் வேளாண்மை சார்ந்த இடங்கைப் பிரிவினர் சைவ சமயம் சார்ந்திருந்தனர். சைவத்தில் இருந்த இறுக்கமான சாதிப் பிரிவுகள் மன்னர் தனது வேளாண் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த உதவியது என்று கூறுகிறார்கள் மார்க்சீய எழுத்தாளர்கள். ஆனால் சான்றுகள் தரவில்லை. ( வாசகர்களிடம் சான்றுகள் இருந்தால் எழுதவும் ).
ஆனால் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் சைவர்களாக இருக்கவில்லை. அவர்களிடம் சமணம், பௌத்தம் முதலிய ஆதிக்கம் செலுத்தி இருந்தன. மன்னரும் வேளாண் பெருமக்களும் சைவர்களாகவும் வணிகர்கள் சமண பௌத்த சமயத்தவர்களாகவும் இருந்தனர். பின்னர் சமணமும் பௌத்தமும் கி.பி. 3 ம் நூற்றாண்டில் தேயத்தொடங்கியபோது அவ்விடத்தை நிரப்பியது வைணவம்.
எப்படி நடந்தது இது ? அப்படி வைணவத்தில் என்ன இருந்தது ? வரும் தொடர்களில் காணலாம்.