களப்பிரர் என்னும் அரசர்கள் வேளாண்மை சாராத மன்னர்களாக இருந்தனர். அவர்களை வணிகர்களும் நகர மக்களும் தாங்கிப்பிடித்தனர். வேளாண்மை சாராத அம்மன்னர்கள் கிராம மக்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. சோழ மன்னர்கள் வேளாண்மை சார்நதவர்களாக இருந்ததால் வேளாண் பெருங்குடி மக்கள் அவர்கள் பக்கம் சார்ந்த்திருநதனர். சோழனும் சைவனாக இருந்ததால் அவனது வேளாண் மக்களும் சைவர்களாக இருந்தனர் என்னும் கருத்து ஒப்புக்கொள்ளும்படி உள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியன ஜைனம் பௌத்தம் சார்ந்தவை. பௌத்தமும் ஜைனமும் சங்கம் மருவிய கால மதங்களே. இவ்விரு நூல்களும் நகரம் சார்ந்தவையே ; வாணிபம் தொடர்பானவையே என்பதும் கவனிக்கத்தக்கது.
அதேசமயம் களப்பிரர் வணிகர் சார்ந்தே இருந்ததால் அவர்களது ஆதரவு பெற்ற மதங்களான ஜைனம், பௌத்தம் முதலியன களப்பிரர் காலத்தில் தழைத்தன. ஆயினும் வேளாண் மக்கள் ஆதரவு இல்லாமையால் களப்பிரர் சில காலங்களிலேயே அழிந்தனர். அவர்களுடன் ஜைனமும் பௌத்தமும் தமிழகத்தில் மறைந்தன.
இதனை வேறு ஒரு கோணத்திலும் காணலாம். கிராம மக்கள் வேறு தொழில், நகர மக்கள் வேறு தொழில். அத்துடன் கிராம மக்கள் வேறு மதம், நகர மக்கள் வேறு மதம். அத்துடன் இவ்விருவரின் பொருளியல் வேறுபாடுகளும் சேர்ந்துகொண்டு வேற்றுமைகளை அதிகரித்தன என்று எண்ண வாய்ப்புள்ளது. ஜைனமும் பௌத்தமும் சாமானிய மக்களுக்குப் புரியாத ‘சூன்ய வாதம்’, கடவுள் மறுப்புக் கொள்கை முதலிய போக்கைக் கடைபிடித்தான. அவற்றுடன் ஜைனம் “பள்ளிகள்” என்னும் முறையில் மிகக் கடுமையான துறவு வாழ்க்கையை வலியுறுத்தியது. தங்களையே மிகவும் துன்புறுத்திக்கொண்டு இவ்வுலக வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் அமைந்தது ஜைனர்களின் துறவு நெறி. இவை பற்றி பேரா.தொ.பரமசிவன் ‘அறியப்படாத தமிழகம்” நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார்.
அனைவரும் துறவியானால் உற்பத்தி பெருகுவது எப்படி? ஆக, பொருளியல் காரணங்களும் ஜைன பௌத்த மாதங்கள் தமிழகத்தில் மறைய வழி கோலின என்றும் நம்ப இடமுள்ளது.
இவ்விடத்தை சைவமும் வைணவமும் நிரப்பின. ஆனால் அவற்றிடையே சில சமூக வேறுபாடுகள் இருந்தன.
சைவமானது மன்னன், வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் அரசிடம் நெருக்கமான அந்தணர், இவர்களின் சமயமாக இருந்தது. விவசாயப் பெருக்கத்தினால் சமூக ஒழுங்கிற்காக உறுதியான சாதீய அமைப்புகள் தோன்றிய காலம் அது. உற்பத்திப் பெருக்கம் ஏற்பட சமூகக் கட்டுக்கோப்பு தேவை என்ற உணர்வு தோன்றியிருக்கலாம். சங்க காலத்தில் தேவைப்படாத சாதீய அமைப்புகள் நில உடைமை துவங்கிய காலம் அதன் பின்னர் தோன்றிய பக்தி இயக்கக் காலம் முதலிய காலங்களில் தோன்றி வலுப்பெற்றன என்று நம்ப இடம் இருக்கிறது என்று பேரா.வானமாமலை (Feudalism under later Cholas) கூறுகிறார்.
சைவம் வலுவடைந்தது தெரிகிறது. ஆனால் வைணவம் எப்படி வலுவடைந்தது?
நிலம், உற்பத்தி முதலியன தனக்கு சாதகமாகவும் அதனால் வரி வசூலும் நிரம்ப அடைய வேண்டி மன்னன் சாதிக் கட்டுக்கோப்புகளை ஆதரித்தான். இதைச் சோழன் தான் செய்தான் என்றில்லை. பாண்டியனும் அவ்வாறே. சேரனும் அப்படியே. இதனால் சைவ நெறி கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆனால் உற்பத்தி பெருக வேண்டும் என்றால் மக்களிடம் ஒரு ஒருமைப்பாடு வேண்டும்; ஒரே குல எண்ணம் வேண்டும் என்று ஒரு எண்ண ஓட்டம் இருந்துள்ளது. அதனை வைணவம் பயன்படுத்திக்கொண்டது. சங்கரரின் அத்வைத பிரசாரம் நடந்த நேரம் அது. அதன் பலத்தால் ஜைனமும் பௌத்தமும் தேயத் துவங்கிய நேரம். சங்கரின் அத்வைத வேதாந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய நேரம். ஆனால் சாதீயக் கட்டுக்க
் அவிழவில்லை.
இந்நேரத்தில் வைணவத்தின் நிலை ஒரு புதிய பார்வையாக வந்தது. பக்தி இயக்கக் காலத்தில் ஆழ்வார்கள் பாடல்கள் ஒரு சம தர்ம சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன. அவர்கள் பாசுரங்களின் வழியே ராமானுசரின் வழிகாட்டுதலும் இருந்தது. இதனால் ஈர்க்கப்பட்ட கை வினைஞர்கள், பாணர்,வேளாளர், சில வாணிபர்கள், சமூகத்தின் கடை சாதியான புலையர்கள் முதலியோர் வைணவத்தில் இணைந்தனர். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று நினைக்க வாய்ப்புள்ளது.
வைணவத்தில் இணைந்தபின் அவரவரது பழைய குலங்களை மறந்து விட்டு அனைவரும் வைணவரே என்ற ஒரே குடையின் கீழ் அமைய வேண்டும் என்னும் பொருள் படும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பாசுரம் ஒன்று பின்வருமாறு :
“அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டக் குளத்தை எடுத்துக்களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் ! அடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே”
அவரது இன்னொரு பாசுரம் :
“..இழிகுலத்தவர்களேனும் எம்மடியாராகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் …”
“என்னுடைய அடியார்கள் என்றால் இழிந்த குலத்தவர்களானாலும் அவர்களை வணங்குங்கள், அவர்களிடம் கொடுத்து வாங்குங்கள் என்று ஆணை இட்டாய் போலே அரங்க மாநகரில் உறையும் இறைவனே ..”
வைணவத்தில் உள்ள ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்களில் மூவர் அந்தணர். ஆழ்வார்களில் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள நம்மாழ்வார் வேளாளார். அதிகமான பாசுரங்கள் பாடி அனேகமாக எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று பாடியுள்ள திருமங்கையாழ்வார் கள்ளர் என்ற பிரிவினர். திருப்பாண் ஆழ்வார் மண் பாண்டம் செய்பவர். ஆண்டாளுக்கு சாதி தெரியவில்லை. துளசிச் செடியின்கீழ் கண்டெடுக்கப்பட்டாள்.
பாணர் குளத்தில் தோன்றிய திருப்பாணாழ்வாரை அரங்கன் கட்டளையின் பேரில் லோக சாரங்கர் என்னும் அந்தணர் தோளில் சுமந்து திருவரங்கனிடம் சேர்ப்பித்தது வைணவத்தினை அனைவருக்கும் ஏற்புடையதாக ஆக்கியது என்றும் கொள்ளலாம்.
திருமழிசை ஆழ்வார் என்னும் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஆழ்வாரும்,
“குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நாற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்..”
என்று பாடுவது நோக்கத்தக்கது. மேலான சாதிகள் நான்கிலும் பிறக்கவில்லை, கலைகளும் கல்வியும் இல்லை, இருந்தாலும் உன் பாதங்கள் தவிர வேறு ஒன்றும் அறியேன் என்ற பொருளில் வரும் பாசுரத்தில் திருமாலை அடைய குலமோ, கல்வியோ தேவை இல்லை என்று ஆழ்வார் கூறியுள்ளது மக்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.
நம்மாழ்வார் பாசுரம் ஒன்று பின்வருமாறு :
“குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார் அடியார் தம்மடி யாரெம் அடிகளே”
“சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை”, என்று கூறுகிறார்.
வைணவப் பெரியவர்கள் வரிசையில் திருமாலுக்கு அடுத்த நிலையில் இலக்குமியும் அவருக்கு அடுத்த நிலையில் வேளாளர் குலத்தில் தோன்றிய நம்மாழ்வார் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இவரை ‘சடகோபர்’ என்று திருமால் கோவில்களில் பக்தர்களின் தலையில் வைக்கும் பெருமாள் பாதங்கள் ( ஸ்ரீ சடாரி )ன் அவதாரம் என்றும் கருதுவர்.
பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் என்றொருவர். ஆனால் இவர் திருமாலைப் பற்றிப்
ாடவேயில்லை. ஆனாலும் ஆழ்வார்களுள் ஒருவராக வைக்கப்பட்டுள்ளார். அப்படி என்ன செய்தார் ? “கண்ணிநுண் சிறுத்தாம்பு..” என்று தொடங்கும் தமிழ் கொஞ்சும் பாசுரங்கள் பாடினார். ஆனால் பெருமாளைப் பற்றி அல்ல. நம்மாழ்வாரைப்பற்றி, அவரே என் கடவுள் என்று பொருள் படும்படிப் பாடினார். இதில் நோக்கத்தக்கது என்னவென்றால் நம்மாழ்வார் ஒரு வேளாளர்; மதுரகவி அந்தணர். இந்தப் பரந்த நோக்கே, இறைவனின் முன் அனைவரும் ஒன்று என்ற தத்துவமே வைணவம் வளரக் காரணமாக இருந்தது என்று கருதுகிறேன்.
ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய இராமானுசர் தான் வகுத்த விஸிஷ்டாத்வைதம் என்னும் வைணவத் தத்துவத்தில், வைணவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ளும்போது “இராமானுஜ தாசன்” என்றே அறிவித்துக்கொள்ள வேண்டும்; இதற்கு ‘தாஸ்ய நாமம்’ என்று பெயர்; இரு வைணவர்கள் சந்தித்துக்கொள்ள நேரும் போது இருவரும் ஒருவரை ஒருவர் வணங்க வேண்டும் என்றும் அதனை ‘தெண்டன் சமர்ப்பித்தல்’ என்று வகுத்தார். ‘தெண்டம்’ என்பது கழி அல்லது மரத்தாலான குச்சி. அதனின்று கையை எடுத்தால் அது எப்படி தரையில் விழுமோ அது போல் விழுந்து வணங்குதல் என்பதை ‘தெண்டன் சமர்ப்பித்தல்’ என்று நமது உடலும் ஒரு கழி போன்று விழவேண்டும் என்றும் தெரிவிக்கிறார். இன்றும் மிகவும் கற்றறிந்த வைணவர்கள், ஒருவரை ஒருவர் விழுந்து வணங்குவதை சில மடங்களில் காணலாம்.
இந்தத் ‘தெண்டன் சமர்ப்பித்தல்’ என்னும் தொடரில் இராமானுசரின் சித்தாந்தம் எவ்வாறு அடங்கியுள்ளது என்றும் இராமானுசர் செய்த மாற்றங்கள் என்ன என்றும் தொடரும் பதிவுகளில் காண்போம்.
தங்கள் தேடலும், சொல்ல வந்த கருத்தும் அருமையானது. என்ன செய்வது; நடைமுறையில் இவை பின்பற்றப்படாததுதான் வருத்தம். நமது திருத்தலங்கள் பலவற்றில், தீர்த்த கோஷ்டியின் போது, அந்தணர் ஆண்கள், அந்தணர் பெண்கள், பிற சமூக ஆண்கள், அதன்பின் பிற சமூக பெண்கள் என்றுதானே கோஷ்டியாகிறது. சம நோக்கு சிந்தனை கொண்ட, திருக்கோவில் பிரவேசத்திற்கு வித்திட்ட ராமானுஜரின் சன்னதியிலும் – திருவரங்கத்தில் – இந்த நடைமுறைதானே… என்ன செய்வது அதுதான் நடைமுறை…
LikeLike