வைணவம் மீது சாமானிய மக்கள் கவனம் திரும்பியதைச் சென்ற அத்யாயங்களில் கண்டோம். அந்தக் கவனத்தை ஒரு தேர்ந்த நவீன நிர்வாகத் திறன் உள்ள நிறுவனத்தின் தலைவர் போல் ஆற்றுப்படுத்தி வைணவம் ஒரு மாபெரும் எழுச்சியுடன் மேலோங்க வழி வகுத்தவர் இராமானுசர். இவரது காலம் கி.பி.1017-1137. நீண்ட ஆயுள் வாய்க்கப்பெற்ற அவர் முதலாம் இராசேந்திரன் துவங்கி இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை வாழ்ந்துள்ளார். இந்நீண்ட ஆயுளில் செயற்கரிய செயல்கள் செய்து வைணவம் தழைக்கச் செய்தார் இராமானுசர்.
இராமானுசரின் தத்துவம் விசித்டாத்வைதம். இது சங்கரரின் அத்வைதத்தில் இருந்து வேறுபட்டது. இந்தத் தத்துவத்துக்கும் ஜைன, பௌத்தத் தத்துவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் சுவாரசியமானவை. ஆனால் கொஞ்சம் ஆழமானவை. இவை பற்றித் தனியான ஒரு பதிவில் காண்போம். தற்போது இராமானுசர் மற்றும் அவரது வழிமுறைகள் பற்றி மட்டும் பார்ப்போம்.
இராமானுசரின் சம காலத்தவரான கருட வாகன பண்டிதர் என்பவர் எழுதியுள்ள ‘திவ்ய சூரி சரிதம்’ என்னும் நூல் அக்கால நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறது. அவற்றிலிருந்தும் இராமானுசரின் பிற்காலத்தில் தோன்றிய மற்ற வைணவ ஆச்சாரியர்களான பிள்ளை லோகாச் சாரியார், வேதாந்த தேசிகர் முதலியோர் உரைகளின் வாயிலாகப் பல விவரங்கள் அறிகிறோம்.
வேளாண்மை சாராத மற்ற தொழிலாளர்களைத் தன் வயம் ஈர்த்தது வைணவம் என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இவை ஆழ்வார்கள் காலமான கி.பி. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகள் வரை மட்டும் நிகழவில்லை. அதற்குப் பின் வந்த இராமானுசர் இந்த மாற்றங்களை முன் நகர்த்திச் சென்றார்.
வைதீக அத்வைத மரபில் தோன்றிய அவர் பிறப்பால் அத்வைதி. கல்வி கற்கும் போது அத்வைதத்தின் தத்துவம் சரியல்ல என்று உணர்ந்தார். அவரது ஞானத்தின் அடிப்படையில் அவரது அத்வைத குருவிடம் வாதிட்டார். அவரிடமிருந்து வெளியேறி ஞானத் தேடலில் ஈடுபட்டார். சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் உண்மை இல்லை என்று உணர்ந்தார்.
ஆழ்வார் பாசுரங்களின் அர்த்தங்களை உணர்ந்த அவர் சாதி வேறுபாடுகள் களைய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பொருளியல் நோக்கில் ஆராயும் மார்க்சீய எழுத்தாளர்கள், இந்த ஒருங்கிணைப்பு முயற்சி உற்பத்திப் பெருக்கத்திற்கான ஒரு ஆட்கொணர்வு என்று கூறுகிறார்கள். அவர்களைச் சொல்லிப் பயனில்லை. எதையுமே எதிர்மறையாகப் பார்த்தே பழகி விட்டவர்கள் அவர்கள்.
இராமானுசர் திருக்கச்சி நம்பி என்னும் வைசிய ( வாணிக ) குலத்தவரைக் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து வைணவத் தத்துவங்களைக் கற்க விழைந்தார். திருக்கச்சி நம்பி முதலில் தயங்கினார். இராமானுசர் அவருக்குத் தைரியம் ஊட்டி, வேதத்தின் உட்பொருளை அறியாது வெற்று ஆசாரங்களைப் பறை சாற்றும் மக்கள் குங்குமம் சுமக்கும் கழுதைகள் போன்றவர்கள் என்று எடுத்துரைத்து அவரிடம் வேதாந்தப் பாடங்கள் பயின்றார்.
பிறிதொரு முறை பெரிய நம்பி என்னும் மற்றோர் ஆச்சாரியாரிடம் மேலும் பாடம் கற்க விழைந்தார். ஆனால் பெரிய நம்பியை ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தார்கள். ஏனெனில் அவர் மாரநேரி நம்பி என்னும் நான்காம் வர்ணத்தவருக்கு ஈமக் கிரியைகள் செய்திருந்தார். இதுபற்றிய விவாதத்தில் சாதியைப் பற்றிய சுவையான விளக்கம் வருகிறது. பெரிய நம்பி கூறுவது போல் அமைந்துள்ள பகுதி இது :
“இராமாயணத்தில் ஜடாயு என்னும் கழுகிற்கு ஈமக் கிரியைகள் செய்த இராமனை வணங்கலாம் என்றால், பணிப்பெண்ணின் மகனான விதுரனுக்கு தனது சிறிய தந்தை என்ற அந்தஸ்து கொடுத்து தருமன் அந்திமச் சடங்குகள் செய்வது சரி என்றால் நான் செய்தது ஒன்றும் தவறு இல்லை”.
திருக்கோஷ்டியூர் என்னும் ஊரில் இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவரிடமிருந்து வைணவ தத்துவ ரகசியங்களைக் கற்று அவற்றை யாரிடமும் கூறக் கூடாது என்ற சத்தியத்தை மீறி அனைவருக்கும் உபதேசித்தார். அதிர்ந்து போன திருக்கோஷ்டியூர் நம்பி ,”ஆச்சாரிய அவமரியாதை உனக்கு நரகம் அளிக்கும்”, என்று கூறியபோது,” நான் ஒருவன் நரகம் அனுபவித்துவிட்டுப் போகிறேன். இதனால் பல ஆயிரம் பேர் இறைவனை அடைவர்”, என்று கூறி அக்காலத்தில் மாபெரும் புரட்சி செய்தார்.
இராமானுசர் தனது வாதத் திறமையால் பலரையும் வைணவத்தின் பால் ஈர்த்துக்கொண்டிருந்தார். சைவ அரசன் குலோத்துங்கன் அவரைக் கொல்ல சதி செய்து தனது அரசவைக்கு வரவழைத்தான். ஆனால் அவரது சீடரான கூரத்தாழ்வார் இராமானுசரின் காவி உடை தரித்துச் சென்று தனது கண்களை இழந்தார். இராமானுசர் திருவரங்கத்திலிருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஒரு ஏரி அமைத்தார் ( இன்றும் உள்ளது ). மேலே சென்று மேல்கோட்டை என்னும் இடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத சமயம் சார்ந்தவர்களை வாதத்தில் வென்று வைணவராக்கினார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குல மக்களை ‘திருக்குலத்தார்’ என்று அழைத்து அவர்களுக்கு உபநயனம் என்னும் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி செய்து அவர்களை வைணவராக்கினார். இவ்வாறு வைணவ சமயம் வளரக் காரணமானார். தனது அடியார் குழாத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சேர்த்துக்கொண்டார். வில்லி தாசன் என்ற மல் யுத்த செய்பவரே அவரது பிரதான சீடரானார். உறங்காவில்லி தாசர் என்று அவருக்குப் பெயரிட்டார்.
இஸ்லாமியப் படை எடுப்பு துவங்கிய காலம் அது. தில்லி இஸ்லாமிய மன்னனின் மகள் பிபிலகிமார் என்பவள் மேல்கோட்டை பெருமாளைத் தன் பிரியமான பொருளாகக் கருதி எடுத்துச் சென்றுவிட்டாள். அதனால் இராமானுசர் தில்லி சென்று மன்னனிடம் பேசி ‘செல்லப் பிள்ளை’ என்னும் பெயருடைய பெருமாள் விக்ரஹத்தைத் திருப்பிக் கொணர்ந்தார். மனம் உடைந்த முகமதிய இளவரசி தானும் கிளம்பி மேல் கோட்டை வந்து விட்டாள். பல வருடங்கள் வாழ்ந்து மேல்கோட்டையிலேயே இறந்தாள். அவள் பக்தியை மெச்சி இராமானுசர் ‘துலுக்க நாச்சியார்’ என்று ஏற்படுத்தி பெருமாள் கோவிலில் அவளுக்கு ஒரு சன்னிதியையும் அமைத்தார்.
பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திருவரங்கம் திரும்பிய இராமானுசர் திருவரங்கக் கோவிலில் அன்றாட ஒழுக்கங்கள், உற்சவங்களை நெறிப்படுத்தி ‘கோவில் ஒழுகு’ என்று ஒரு கோட்பாட்டைக் கொண்டுவந்தார். திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு ஒரு சந்நிதியும் அமைத்தார் ( இன்றும் உள்ளது ). வருடத்தில் ஒரு நாள் ரங்கநாதர் லுங்கி அணிந்து நாச்சியாருக்கு சேவை சாதிக்கிறார். அன்று அவருக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. இது முகமதிய மன்னர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பிற்காக என்று சில நோக்கர்கள் கூறுகிறார்கள். இப்படியும் அவர் வைணவத்தை வளர்த்தார் என்று கருத இடமுள்ளது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இஸ்லாமிய அரசைத் திருப்திப்படுத்த அவ்வாறு செய்தார் என்று கொண்டால் கூட, அதற்காக மாற்று மத இளவரசியைத் திருமாலின் மனைவியாக ஒப்புக்கொள்ள மிகப்பெரிய மனது இருந்திருக்க வேண்டும். இதற்கு அக்காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய எதிர்ப்புகளை நினைத்துப்பார்க்கவே வியப்பாக உள்ளது. சாதி சமரசம் தாண்டி, மிலேச்ச மதம் என்று கருத்தப்பட்ட ஒரு வெளி நாட்டு மதம் சார்ந்த பெண்ணைத் தெய்வமாகக் கருதுவது என்பது முன்னெப்போதும் நிகழாத ஒன்றே.
இராமானுசர் செய்துள்ள மிகப் பெரிய சாதனை வைணவக் கோவில்களை ‘வைகானஸம்’ என்னும், ஆகம முறையிலிருந்து ‘பாஞ்சராத்ரம்’ என்னும் முறைக்கு மாற்றியது எனலாம். ஆகமம் என்பது கோவில் கட்டும் முறை, பூஜை விதிகள், வேத பாராயண விதிமுறைகள் முதலியன அடங்கும். வைகானசம் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் பாஞ்சராத்ரம் என்னும் புதிய முறையில் கோவிலுக்குள் சாதீய முறைகள் தளர்த்தப்பட்டன. ஆழ்வார்கள், சமயப் பெரியவர்கள் முதலியோருக்குக் கோவிலுள் சந்நிதிகள் வைக்கலாம் என்பது போன்ற சமத்துவக் குறிப்புக்கள் பாஞ்சராத்ரத்தில் இடம் பெற்றன. இதன் மூலம் பல சாதிகளையும் சார்ந்த ஆழ்வார்கள் பின்னர் வந்த இராமானுசர், மணவாள மாமுனி, வேதாந்த தேசிகர் முதலியோருக்குக் கோவில்களுள் சந்நிதிகள் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது. ( பாஞ்சராத்ரம் என்பது மகா விஷ்ணு ஐந்து இரவுகளில் உபதேசித்த வழிமுறை என்றும் கூறுவர் ).
தனது காலம் முடிவதற்குள் விசிஷ்டாத்வைதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று 74 மடங்களை அமைத்தார். அவர்களுக்கு சிம்ஹாசநாதிபதிகள் என்று பெயர். அவர்களில் அந்தணரும் பிறரும் இருந்தனர். இவர்களை ‘சாத்திய முதலிகள்”, “சாத்தாத முதலிகள்” என்று மக்கள் அறிந்தனர். ( சாத்துதல் – பூணூல் அணிந்திருப்பது ). இவர்களுக்குள் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தாஸ்ய நாமம் அளித்தார்.
சாத்திய முதலிகள் சிலர்: கூரத்தாழ்வார், மாடபூசி ஆழ்வார், சேட்லூர் சிறியாழ்வார், நெய்யுண்டாழ்வார். சாத்தாத முதலிகள் சிலர் : பட்டர்பிரான்தாசர், பிள்ளை உறங்காவில்லி தாசர், வானமாமலை தாசர்.
ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் கோவிலுக்குக் கணக்கெழுத ஒரு வேளாளரை அமர்த்தி அவருக்கு சடகோப தாசன் என்று பெயரிட்டு கோவிலுக்குள் சமதர்மம் நிலை நாட்டினார்.
இராமானுசரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் சாதி வேறுபாட்டின் அடிப்படையை அசைப்பதாகவே உள்ளன.
இராமானுசர் காலத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு இல்லை.
இராமானுசர் வரலாறே ‘தர்க்க வாதம்’ என்னும் பகுத்தறிவு வாதங்களின் கலவை என்றே கூறலாம். இருபதாம் நூற்றாண்டில் தாங்கள் நிகழ்த்தியதாகக் கூறும் பல சம தர்ம சமூக மாற்ற நிகழ்வுகளை ஆயிரம் ஆண்டுகள் முன்பே தனது கோட்பாடுகளாக நிறுவியவர் இராமானுசர். அவரைப்பற்றியும் அவரது செயல்கள் பற்றியும் வெளியே தெரிந்தால் தங்களது ‘பகுத்தறிவுப் பறை சாற்றல்கள்” சந்தி சிரிக்கும் என்பதால் இவை நமது கண்ணில் படாமலே மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.
விசிட்டாத்வைத தத்துவம் பற்றியும் அது மற்ற தத்துவங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காணலாம்.