ஏதோ கம்பன் பற்றி ஆராய்ச்சி செய்யப்போய், சிங்கப்பூர் அங்க மோ கியோ நூலகத்தில் பேரா.தோதாத்ரி எழுதிய ‘மார்க்சீயப் பார்வையில் வைணவம்’ கண்ணில் பட்டது. சரி என்னதான் சொல்கிறார் என்று பார்க்கப்போய் அவரிடமிருந்து பேரா.வானமாமலை என்னும் மார்க்சீய ஆராய்ச்சியாளர் கண்ணில் பட்டார். அவரை ஆராயப்போய் பேரா.சட்டோபாத்யாயா என்னும் வங்காள இடதுசாரி சிந்தனையாளர் அறிமுகமானார்.
இவர்களின் ஆழ்ந்த எழுத்துக்களால் முன்னமே சிறிது அறிந்த ஆழ்வார்களும் சில ஆச்சாரியார்களின் நூல்களும் படிக்க வேண்டியதாக ஆனது. அதன் மூலம் தற்காலத்தில் அறியவேபடாத தமிழ் ஆராய்ச்சியாளர்கள், இலங்கையைச் சேர்ந்த சில நூல்கள் என்று கண்ணில் படத் துவங்கின. இவர்கள் மூலம் அறிமுகமானவர் பேரா.மு.ராகவையங்கார், நீலகண்ட சாஸ்திரி முதலானோர்.
வைணவத்தில் இன்னும் சற்று ஆழ்ந்து பார்த்ததில் பிள்ளை லோகாச் சாரியார், தேசிகர், இராமானுசர், கருட வாகன பண்டிதர் முதலான பலரின் அறியப்படாத நூல்கள் கண்ணில் பட்டன.
இவற்றின் மூலம் வைணவத் தத்துவ ஆராய்ச்சி தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் ஆழப் பதிந்துள்ளது என்று அறிய முடிந்தது.
ஆனால் அவற்றை எல்லாம் விட ஒரு எண்ணம் மேலோங்குகிறது.
ஐரோப்பிய சமூகம் காட்டு மிராண்டிகளாய் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஜீவாத்மா, உடல், பரமாத்மா, உலோகாயதம், சாருவாகம், வைசேஷிகம், ஜைனம், பௌத்தம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று புறவயமான தேடல்கள் இல்லாமல் அக வயமான தேடல்களில் ஈடுபட்டிருந்த மிகவும் முன்னேறிய ஒரு சமுதாயம், இன்று இருக்கும் சோற்றுப் பிழைப்பு நிலையை எண்ணி ‘ஓ’ வென்று அழ வேண்டும் போல் உள்ளது.