‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற வழக்கு நாம் அறிந்ததே. அதுபோல் ஒரு வைணவனின் அக லட்சணங்கள் அவனது நடத்தையில், புறத்தில் தெரியும் என்று கொண்டால் அவை என்ன என்ன என்று நாம் அறிந்துகொள்ள இராமானுசர் வழி வந்த சில ஆச்சாரியார்களின் வியாக்கியானங்கள் நமக்கு வழி செய்யும். அவர்களின் உரைகளில் பல புதிய அருமையான உவமைகள் அடங்கி இருக்கும். படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இவ்விடத்தில் லட்சணங்கள் என்பது புற அடையாளங்கள் என்பது மட்டும் அல்ல; ஒரு வைணவன் நடந்துகொள்ள வேண்டிய முறை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.
இராமானுசர் வழி வந்த ஆச்சாரியார்கள் பலர் இராமானுசர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளனர். அவை ‘வியாக்கியானம்’ என்ற பிரிவில் அடங்கும். அவை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் கலந்த ‘மணிப்பிரவாள’ நடையில் அமைந்திருக்கும். இந்த மொழி நடை தற்போது வழக்கொழிந்து விட்டது. இதனை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே. வைணவ குரு பரம்பரை விளக்கமும் இந்த நடையிலேயே அமைந்துள்ளது.
சிலவற்றைப் பார்ப்போம்.
வைணவப் பண்பாடு என்பது என்ன? ஒருவரிடம் வைணவத்துவம் அமைந்துள்ளது என்று எப்படிக் கண்டுகொள்வது என்று நஞ்சீயர் என்ற ஒரு ஆச்சாரியாரிடம் கேட்கப்பட்டது. அவரது பதிலை மணிப்பிரவாள நடையில் அவரது வாக்கிலேயே தருகிறேன்:
“பிறர் அனர்த்தம் கண்டால் ஐயோ என்று இரங்குவான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும், இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு என்று இருந்தான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும்”
தமிழில் : “மற்றவனது துன்பம் கண்டவுடன் மனம் இரங்குபவன் இறைத் தொடர்புள்ள வைணவன்.அவர் நிலை கண்டு இரங்காதவன் வைணவன் அல்லன்”.
இதற்கு ஒரு சமீப கால உதாரணம் ஒன்றும் உண்டு. மகாத்மா காந்திக்குப் பிடித்தமான “வைஷ்ணவ ஜனதோ ..” என்ற பாடல் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் ஆரம்ப வரிகளின் பொருளைக் அமரர் கல்கி அவர்கள் தனது ‘தியாக பூமி’ நூலில் இப்படிக் கூறுகிறார்:
“எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.”
சற்று பின்னே சென்று வைஷ்ணவ குருபரம்பரை நிகழ்வு ஒன்றைக் காண்போம். இராமானுசரது சீடர் குழாமில் ‘பராசர பட்டர்’ என்றொரு அறிஞர் இருந்தார். அவரது சீடர் ஒருவர், அனந்தாழ்வான் என்னும் இன்னொரு ஆச்சாரியாரை அணுகி “வைஷ்ணவன் என்பவன் எப்படி இருப்பான்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் பதில் மிகவும் விளக்கமானது; அதே சமயம் எளிதானது.
அனந்தாழ்வான் கூறுகிறார்: “வைஷ்ணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழிபோல் இருப்பான்; உப்பைப்போல் இருப்பான்; உம்மைப்போல் இருப்பான்” என்று ஒரு சூத்திரம் போல் வரையறுக்கிறார்.
ஒரு கொக்கு தனக்குத் தேவையான நீருள்ள இடங்களின் அருகில் வசிக்கும்.அதுபோல் வைணவன் தனக்குத் தோதான பகவத் பாகவத சந்நிதிகளின் அருகில் வசிப்பான். கோவில்கள், மடங்கள் இவற்றின் அருகில் வாசிப்பான். ( ஸ்ரீரங்கம் நினைவில் கொள்ளத் தக்கது).
மேலும் கொக்கு தனக்கு விருப்பமான ஆறுகளைத் தேடிப்போக அதற்குத் தேவையாக இரண்டு சிறகுகள் பெற்றிருக்கும். அதுபோல் வைணவன் தனக்குத் தேவையான வீடுபேறு அடைய ஞானம், அனுஷ்டானம் என்ற இரண்டு சிறகுகளைப் பெற்றிருப்பான். ஞானம் மட்டும் இருந்து அது காட்டும் வழியில் செல்லும் அனுஷ்டானம் இல்லாவிட்டால் பயன் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘நிற்க அதற்குத் தக’ என்று கூறுவது இவ்விடம் நோக்கத்தக்கது.
கொக்கு வெண்மை ந
றம் உடையது. அதுபோல் வைணவன் உள்ளும் புறமும் சுத்த சுவாபவம் கொண்டவனாக இருக்க வேண்டும். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற வள்ளலாரின் வாக்கு நோக்கத் தக்கது.
கொக்கு தன் வாய்க்கு அடங்காததை விடுத்து , கொள்ளும் அளவே உண்ணும். அதுபோல் வைணவன் பல விஷயங்கள் கற்றாலும், அறிந்துகொண்டாலும் தனக்குத் தேவையானதை மட்டுமே கொள்வான். தனக்குத் தேவையான மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் தன்மை கொண்டவன் வைணவன் என்றும் கொள்ளலாம்.
அதுபோல் வைணவன் கோழி போல் இருப்பான் என்பதும் நோக்கத்தக்கது. கோழியானது குப்பையைச் சீய்த்துச் சீயத்துத் தனக்கு இரை இல்லாததைத் தள்ளிவிட்டு தனக்குச் சாரமான தானியங்களை மட்டுமே கொள்ளும். அது போல் வைணவன் பிறரிடம் உள்ள குற்றங்களைத் தள்ளிவிட்டு நல்லதையே கொள்வான்.
இதுவரை சரி. வைணவன் உப்பைப்போல் இருப்பான் என்பது எவ்வகையில் பொருந்தும்? அனந்தாழ்வான் கூறுகிறார்: உப்பு தான் உருமாறி அழிந்து உணவுகளுக்கு சுவை அளிக்கும்.வைணவன் தன்னை மறைத்துப் பிறருக்குப் பயன்படுபவனாக இருப்பான். அகம் அழிந்திருத்தல் என்று இதனைக் கொள்ளலாம்.
இவ்வாறு விளக்கம் பெற்ற அந்த வைணவரை அனந்தாழ்வான் உணவு உண்ணும் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்குள்ள பந்தியில் முன்னே அமரச் செய்தார். வைணவர் தயங்கினார். பின்னர் பந்தியின் நடுவில் வேறொருவரை எழுப்பி அமரச்செய்தார். மறுபடியும் அந்த வைணவ சீடர் தயங்கினார். பின்னர் அவரைப் பந்தியின் இறுதியில் அமரச் சொன்னார். வைணவரும் மனமுவந்து அமர்ந்தார்.
அப்போது அனந்தாழ்வான் ” ‘வைணவன் உம்மைப் போல் இருப்பான்’ என்று நாம் சொன்னது இதுதான். அடியார்க்கு அடியாராகவும், அகங்காரம் அற்ற நிலையிலும் நீர் உள்ளீர். எனவே நீரே ஒரு வைணவருக்கு உதாரணம். எனவே வைணவன் உம்மைப்போல் இருப்பான் என்பது சரியே” என்று உவப்புடன் அருளியுள்ளார்.
இந்த ‘அடியார்க்கும் அடியார்’, ‘தொண்டர் அடிப்பொடி’, ‘ அடியேன்’ , ‘ தாசன்’ முதலான வார்த்தைகள் வைஷ்ணவ பரிபாஷையில் அதிக அளவில் அமைந்துள்ளன. தற்கால திருமண ஆழைப்பிதழ்களில் கூட ‘அடியேன் தாசன்’, ‘ அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விக்யாபனம்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருப்பதைக் காணலாம்.