சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன. அப்படி நடந்தது தான் ‘சிங்கபூர் எழுத்தாளர் விழா” விற்கு நான் அழைக்கப்பட்டதும். ‘அழைக்கப்பட்ட” என்று பார்த்தவுடன் என்னைப் பேச அழைத்தார்கள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வாசகர் வட்ட நண்பர் ஒரு நுழைவுச் சீட்டு அதிகப்படியாக உள்ளது உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டார். அப்படித் துவங்கியது இந்த வருட ‘எழுத்தாளர் விழா’ வில் என் அனுபவம். நண்பருக்கு என் நன்றிகள்.
சிங்கையில் ஆண்டு தோறும் ‘Singapore Writers Festival” என்று ஒரு உற்சவம் போல் கொண்டாடுகிறார்கள். அரசு ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் என்ற அதிகாரபூர்வ மொழிகளின் உலக எழுத்தாளர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் செய்ய வைத்து, அவர்கள் கையெழுத்திட்ட புத்தகங்கள் வாங்க உதவுகிறது. முக்கியமானது எழுத்தாளர்களை நேரில் சந்தித்துப் பேச முடியும். கேள்விகள் கேட்கவும் முடியும்.”என்னைய கேள்வி கேட்டே இல்லே, வெளில வா நைனா..” போன்ற வீர முழக்கங்கள் இல்லாமல் எழுத்தாளர்கள் சமரசமாக உரையாடுவது ஒரு புதுமை. இம்மாதிரி அமெரிக்காவில் நடப்பது உண்டு. சிங்கையில் ஆண்டுதோறும் அரசு செலவு செய்து நடக்கிறது.
இம்முறை சிங்கபூர் எழுத்தாளர்கள் திருமதி. கமலாதேவி அரவிந்தன், திருமதி.ஜெயந்தி சங்கர், மூத்த எழுத்தாளர் திரு.சாலி,திரு. இராம கண்ணபிரான், திரு.இராம வயிரவன், திரு.இந்திரஜித், திருமதி சூரிய ரெத்னா உட்பட தமிழ் நாட்டிலிருந்தும் எழுத்தாளர் திரு.இமயம், திருமதி.,சல்மா முதலானோர் கலந்துகொண்டு பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
பல நிகழ்வுகள் நடைபெற்றாலும் என்னை மிகவும் கவர்ந்த / பாதித்த சில விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசப்போகிறேன்.
திரு.இராம கண்ணபிரான் பேசியது “அட ஆமாம் இல்லே ..!” என்று நினைக்கும்படி இருந்தது. ‘ஐந்திணை’ யுடன் தொடர்பு படுத்தி, இலக்கிய வடிவங்களுக்கும் புவியியலுக்கும் இடையே உள்ள தொடர்பை அவர் வெளிப்படுத்திய விதம் ஆக அருமை. அவரது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் எழுத்து அனுபவம் தெரிந்தது. திரு.சாலி அவர்களது அனுபவங்கள் ஆச்சரியப்பட வைத்தன. ஜெயந்தி சங்கர் தெளிவாகப் பேசினார் – சிறுகதை கடலின் ஒரு துளி, நாவல் என்பது கடலில் இருந்து ஒரு பக்கெட் தண்ணீர் முகர்வது போன்றது என்றார்.
திரு.இமையம் அவர்கள் பேச்சு எதார்த்தமாக இருந்தது. கதை எழுதுவது ஒரு விபத்து என்றார். ஒரு கதை அதன் மொழியைத் தீர்மானிக்கிறது என்றார். சிறுகதை என்பது வீடு கட்டுவது போல் ‘வரைபடம்’ வரைந்துகொண்டு எழுத்தப்படுவது அல்ல என்று சொன்னது முழுக்கவும் உண்மை. அவரது அனுபவங்கள் பற்றி அவர் பேசினார்.
இராம.வயிரவன் வித்தயாசமான முறையில் பேசினார். ‘அடையாளங்கள் ‘ என்ற தலைபில் பேசிய அவர் அனுபவங்கள் நம் மீது போடும் பார் கோடுகளே (Bar Codes ) நமது அடையாளம் என்றது சிறப்பாக இருந்தது. எழுத்தாளர் இந்திரஜித் சரியாகச் சொன்னார் -“நான் எழுத்தாளரைப் பாராட்டும் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதில்லை” என்று சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
‘பொய் கலப்பில்லாமல் வாழ்வியல் உண்மைகளை வெளிப்படுத்துவதே சிறந்த இலக்கியம்’ என்று பொருள் படும் படி திருமதி கமலம் தேவி அரவிந்தன் மிக நெகிழ்ச்சியாகத் தனது களப் போராட்டங்கள் பற்றியும், அப்பொழுதும் தான் கற்றுக்கொன்டிருப்பது பற்றியும் பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது.
‘இலக்கியப் படிவமும் புத்தாக்கமும்’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் இமயம், சாலி, சல்மா முதலானோர் பங்கேற்றனர்.சல்மா தி.மு.க. வின் ஒரு அரசியல்வாதி என்ற அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அரசியல் தாக்கம் எதுவும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். நறுக்குத் தெரித்தாற்போல் இருந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும். அவரது பேச்சு அவரது கட்டுப்பாடான வளர்ப்பு முறையைப் பறை சாற்றியது. நன்றாகவே பேசினார்.
எழுத்தாளர் சல்மாவின் பேச்சில் ஒரு அமைதியான ஆணித்தரம் இருந்தது. ஆனால் பெண்ணீயம் என்றாலே பெண் உறுப்புக்களை முன்னிலைப்படுத்தி எழுதப் படுவது பற்றி அவர் அளித்த விளக்கம் நியாமானதாக இருந்தாலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெண்களின் அந்தரங்க பாகங்களைப் பற்றி ஆண்டாள், கம்பர் முதலானோர் கூறியிருந்தாலும் அவற்றில் ஆபாசம் இல்லை. ஆண்டாள் ‘ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று ஊனித் தெழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப் பதில் வாழ்கிலேன் மன்மதனே..” என்று கூறும் இடத்தில் என்ன ஆபாசம் வந்துவிட்டது என்ற தெரியவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது இயல்பான பெண்மை வழியாக ஒரு கருத்து தெரிவிக்கிறாள் என்பது ஆபாசம் அல்ல. ஆனால் பெண்ணீயம் பேசுவோர் பேச்சில் ஒரு ‘அதிர்ச்சி’ கொடுக்கும் விதமாகவே அவை உள்ளன என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை என்று நான் நினைக்கிறேன். “Shock and Awe” என்று முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் சொன்னது நினைவுக்கு வந்தது.
எழுத்தாளர் இமயம் பேச்சு அவரது கடினமான சிறு பிராயத்தை நினைவு படுத்தியது. அதன் தாக்கம் நன்றாகவே தெரிந்தது. ‘தலித்’ என்று முத்திரை குத்தப்பட்டதை கடுமையாச் சாடினார். ‘இலக்கியம் என்று அழைக்காமல் தலித் இலக்கியம் என்று அழைப்பது பிறிதொரு தீண்டாமை போன்றது’ என்ற அவரது வார்த்தையில் நியாயம் இருந்தது.
ஒரு சில பேச்சுக்களில் நியாயம் இருக்கும் அளவிற்கு பக்குவம் இருக்காது என்று என் தமிழாசிரியர் கூறுவார். அது போலவே திரு.இமயம் அவர்களது பேச்சில் இருந்த நியாயம் அவரது வார்த்தைத் தேர்வில் அடி பட்டுப் போனது என்று நான் நினைக்கிறேன். விழா முடிவில் அவருடனான தனியான ஒரு நேர்காணலில் பலமுறை சாதி பற்றி அவர் கூறியவையும், அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுத்த சொற்களும் சபை நாகரீகத்தை ஒத்ததாக இல்லை என்பதை அங்குவந்திருந்த பல வயதான பெண்மணிகளின் முக பாவனைகளிளிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.
பெரியார் கல்லூரியில் படித்த காரணத்தாலேயே ஒரு சாதியைச் சாடியது திராவிடர் கழக மேடைகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சிங்கப்பூர் போன்ற சாதி, மத சார்பில்லாத ஒரு சமூகத்தில் அது அவ்வளவு சரியாக உள்வாங்கப் படவில்லை என்று தோன்றியது.
சமய இலக்கியங்கள் வளர்ந்த காலமான சைவ – வைணவ காலமே தமிழகத்தின் இலக்கியப் பொற்காலம் என்பதை அவர் உணர வேண்டும். பக்தி இலக்கியங்கள் தமிழை வளர்க்காமல் போயிருந்தால் இன்று தமிழ் மொழி இருந்திருக்காது என்பது நிதர்சனம். அதை விடுத்து வெள்ளையர் ஆட்சிக் காலம் ஜனநாயகமான காலம் என்று அவர் குறிப்பிட்டது சரி இல்லை என்பது அடியேன் கருத்து. (இது குறித்து வாசகருக்கு வேறு கருத்து இருப்பின் விரிவான வேறொரு கட்டுரை எழுதுகிறேன்.)
அவரது வார்த்தைத் தேர்வில் இமையம் அவர்கள் தோற்றிருக்கலாம். ஆனால், அவரது கோபத்தின் காரணங்கள் நியாயமானவை என்பதில் சந்தேகமில்லை. ஞானத்தில் முன்னேறிய ஒரு சமூகமான இந்திய சமூகம், தாழ்த்தப்பட்ட மக்களின் மனங்களில் இருந்து பழங்கால அநியாய நிகழ்வுகளின் நிழலைத் துடைக்க வேண்டியது சட்டப்படி தேவையோ இல்லையோ தர்மத்தின்படி தேவையானது.
இவ்விடத்தில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ஒரு பாசுரம் நினைவு வருகிறது :
“அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப் பொழுதோர் ஆங்கே
அவர்கள் தான் புலையர் போலும் அரங்கமா நகருளானே”.
ந்டுநிலையில் கருத்துகளைப்பகிர்ந்து கொண்டீர்கள்.விருப்பு வெறுப்பற்ற ம்னம் என்பதை தாங்கள் ஆழ்வார் பாசுரம் பகர்கிறது உண்மையை. நியாயத்தை பக்குவமின்மை காயப்படுத்தியது உண்மையே.எனினும் இமையத்தின் கோபம் நியாயமானது.
LikeLike