இராமானுசரது வைணவ சித்தாந்தம் வழி இறைவனுக்கும் ( பரமாத்மாவுக்கும் ) உயிரினங்களுக்கும் (ஜீவான்மாக்களுக்கும்) இடையே உள்ள உறவு நிலை சிறப்பானது. பல மதங்களில் உள்ளது போல் இறைவனைக் காப்பவனாக மட்டுமே விசிட்டாத்வைதம் பார்ப்பதில்லை . இறைவனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று கூறுகிறது. இதனை ‘நவ வித சம்பந்தம்’ என்று சம்ஸ்க்ருதம் கூறுகிறது.
- காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )
- தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )
- ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )
- கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )
- அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )
- உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )
- உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )
- தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )
- அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)
இந்த உறவு நிலைகளை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆழ்வார்கள் இராமானுசருக்கு முந்நூறு ஆண்டுகள் முற்பட்டவர்கள். இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என்று ஒரு முறையை நெறிப்படுத்தும் முன்பே அத்தத்துவத்தின் கூறுகளை ஆழ்வார் பாசுரங்களில் காண்கிறோம். இது ஒரு வியப்பே.
காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )
“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளா காதலநோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே”
மருத்துவன் வாளால் அறுத்துச் சுடுவது நோயாளனுக்கு நன்மை செய்யத்தான். அதுபோல் இறைவன் நமக்குச் சில சமயங்களில் சோதனைகள் தருவதும் நம்மைத் திருத்திப் பணி கொள்வதற்காக மேற்கொள்ளும் ரட்சகக் காரியமே என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.
தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )
நம்மாழ்வார் பாசுரம் பின்வருமாறு :
“என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்…”
இந்தப் பாசுரத்தில் இறைவனை தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்.
ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )
இந்த ஆண்டான் அடிமை உறவு நிலை குறித்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்றாலும் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுவது அருமையானது. இறைவனை ‘ஆரா அமுதே’ என்று அழைப்பது தமிழின் அழகையும் உணர்த்துகிறது. ( வைணவர்களில் ‘ஆராவமுதன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது சில காலம் முன்பு வரை பிரபலம். அப்பெயர் மருவிப் பல சமயம், ‘ஆராமுது’ என்றும் ‘ஆமுடு’ என்றும் அழைக்கப்படுவது வேடிக்கை.)
பாசுரம் இங்கே:
“வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊரா உனக்காட் படும் அடியேன் இன்னம் உழல்வேனோ”
இப்பாசுரத்தில் ‘ஆண்டாய்’ என்பதால் ஆண்டான் தன்மையும் ‘உனக்காட்படும்’ ( உன்னுடைய ஆளுமைக்கு உட்படும் ) என்பதால் அடிமைத்தனத்தையும் ஆழ்வார் காட்டுகிறார்.
கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )
கணவன் மனைவி நிலையில் திருமாலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் விதமாக குலசேகராழ்வார் பாசுரம் :
“கண்டா ரிகழனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்
விண்டோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே”
குலமகள் கணவனைக் கை விடாமல் எந்நிலையிலும் அவனுடன் இருப்பாள் என்னும்போது ஆழ்வார் தன்னை மனைவியாகவும் திருமாலைக் கணவனாகவும் கொண்டு பாடுகிறார்.
அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )
“பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்
தருமனையே நோக்கும்மொண் தாமரையால் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு”
பொய்கையாழ்வார் பாசுரம் கூறுவது : ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே. அறிபவர்கள் நாம்.
உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )
“தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தொடித் தொடுகடலே
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே”
கடல் உடையது. ஆறுகள் கடலின் உடைமை. கடலைச் சேர்ந்து தான் ஆறுகள் சிறப்புப் பெறுகின்றன. அதுபோல் தலைவனாகிய திருமாலைச் சேர்ந்தே நாம் சிறப்படையே இயலும் என்று இறைவனை உடையவன் என்றும் நம்மை அவனது உடைமை என்றும் கூறுகிறார் குலசேகர ஆழ்வார்.
உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )
“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசைபடர்பொருள் முழுவது மாயவை யவைதொரும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்”
என்னும் நம்மாழ்வார் பாசுரத்தில் “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறைவது போல் இறைவன் மறைந்திருந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்” என்று உயிர் – உடல் உறவை விளக்குகிறார்.
தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )
குலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த உறவை விளக்குகிறது.
“எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே யல்லால்
எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே”
எங்கும் கடலாக உள்ளது. ஆகவே பறவை நான்கு திசைகளிலும் பறக்க முடியவில்லை. திரும்பவும் எப்படி கடலில் உள்ள மரக்கலத்தில் வந்து அப்பறவை சேருமோ அப்படி உன் பாதங்களில் என்னைத் தாங்குபவனாகிய உன்னிடம் நான் சரண் அடைந்து கிடக்கிறேன் என்று ஆழ்வார் இறைவனைத் தாங்குபவனாகவும் தன்னைத் தாங்கப்படுபவராகவும் கூறுகிறார்.
அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)
உயிர்களை உண்ணப்படும் பொருளாகவும் இறைவனை உண்பவனாகவும் கொள்வது இந்த உறவு நிலையின் விளக்கம். இந்த உறவு நிலையை விளக்கும் விதமாக நம்மாழ்வாரும் குலசேகரரும் பலவாறு பாடியுள்ளார்கள்.
நம்மாழ்வாரின் “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்..” என்று தொடங்கும் பாசுரமும் குலசேகரரின் “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் …” என்று தொடங்கும் பாசுரமும் விளக்குகின்றன.
உறவு நிலை சரி. ‘நாராயணா’ என்பதன் பொருள் என்ன ? வைணவர்கள் யார் ? அவர்களுக்கு மிக முக்கியமான ‘மூன்று’ என்ன ? அடுத்த பதிவில் பார்ப்போம்.
One thought on “வைணவம் காட்டும் உறவு நிலைகள்”