பட்டி மன்றம் என்று கேள்விப்பட்ட உடனே கையில் கிடைக்கும் ‘ரிமோட்’ கருவி மூலம் தொலைக்காட்சியை ( எப்போதாவது பார்க்கும் போது ) நிறுத்தி விட்டு வேறு ஏதாவது உப்பு , புளி வாங்கச் செல்வது என பழக்கம். உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டாமா? யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா என்ன ? அதனால் தான் புளி வாங்கச் சென்று “உள் துறை அமைச்சிடம்” நல்ல பெயர் வாங்குவது என்று வைத்துக்கொண்டுள்ளேன்.
இன்னொரு காரணமும் உண்டு. தற்போதைய தமிழ்த் திரை உலக நாயகிகளின் ஒப்பிலக்கணம் கற்க மனமில்லை. எனவே தொலைக்காட்சிப் பட்டி மன்ற நிகழ்ச்சிகளைக் காண்பது இல்லை.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு பட்டி மன்றங்கள் இப்படி இருந்ததில்லை. மக்கள் தலை தெறிக்க ஓடியதில்லை. மனிதனை சிந்தனை அளவில் உயர்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு புலவர் கூட்டம் பல பட்டிமன்றங்களை நடத்திக்கொண்டிருந்தது. நீதிபதி.மு.மு.இஸ்மாயில், ஔவை. நடராசன், பேரா.ஞானசுந்தரம், தேரழுநதூர் இராமபத்திராச்சாரியார், பேரா.இராசகோபாலன், அ.ச.ஞானசம்பந்தன் முதலானோர் ஊருக்கு ஊர் ஓடி ( காரைக்குடி, பாண்டிச்சேரி, தேரழுந்தூர் ) கம்பன் பற்றிப் பட்டி மன்றங்கள் நடத்திக்கொண்டிருந்தனர். உதாரணமாக அக்காலப் பட்டி மன்றத் தலைப்புகள் சில :
- இராமன் மறைந்து நின்றது மாண்பா ? கயமையா ?
- நட்பில் சிறந்தவன் குகனா ? வீடணனா ?
- இராம சேவையில் உயர்ந்து நிற்பது நட்பா ? சகோதரத்துவமா ?
- கற்பில் சிறந்தவள் மண்டோதரியா ? சீதையா ?
இவை தவிர சிலம்பு, மணிமேகலை என்று பட்டிமன்றங்கள் சாதாரண மக்களின் எண்ணங்களை சட சடவென்று பல நிலைகள் உயர்த்தும் வண்ணம் இருந்தன.
பட்டி மன்றங்கள் தவிர இலக்கியப் பேருரைகளும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. திருமுருக.கிருபானந்த வாரியார், புலவர்.கீரன், புலவர்.இராமபத்திரன் முதலானோர் சுழன்று சுழன்று பக்தியையும் தமிழையும் அள்ளி வழங்கிக்கொண்டிருநதனர். இராமாயணத் தலைப்பில் துவங்கும் ஒரு பேருரை இரண்டு மணி நேரத்தில் கம்பர், வில்லிபுத்தூரர், நாராயண பட்டத்ரி, ஆழ்வார்கள், துளசிதாசர், சில நாயன்மார்கள், வால்மீகி என்று பலரை எங்கள் கண் முன் கொண்டு நிறுத்தின.
உதாரணமாக பின்வரும் தலைப்புகளில் பலமுறை பேருரைகள் நிகழ்த்தப்பெற்றன :
- இராமன் மறைந்து நின்றதன் மாண்பு
- இலங்கையை எரித்த தீ எது ?
- சொல்லின் செல்வன் ( அனுமனைப் பற்றியது )
- கவிக்கு நாயகன் கம்பன்
- வில்லிபுத்தூரார் பாரதம்
- சிலம்பு சொல்லும் வாழ்க்கை வழிமுறை
இவை தவிர வட மொழி அடிப்படையில் சில பாரம்பரிய உபந்யாசகர்கள் நிகழ்த்திய இராமாயண , பாகவத, மகாபாரத உபன்யாசங்கள் எங்கள் இளமையை செழுமைப் படுத்தின.
இளமைப் பருவம் இந்தச் சூழலில் நிகழ்ந்த காரணத்தாலோ என்னவோ தற்காலத்திய ‘சுய புராண’ம்’ பற்றியோ நிழல் நாயகிகளின் புற ஒப்பிலக்கணம் பற்றியோ தொலைக்காட்சிகளில் மட்டுமே நிகழும் பட்டிமன்றங்கள் என்னை வெறுப்பின் விளிம்பிற்கே தள்ளியிருந்தன. சின்னத் திரைப் பட்டி மன்றங்கள் சின்னத் தனமாகவே இருப்பதால் அவற்றை ‘பட்டி’ என்பதன் மலையாளப் பொருளிலேயே கருதி வர வேண்டியவனாக இருந்திருக்கிறேன்.
ஆனால் இந்த வாரம் நான ஒரு மூன்று மணி நேரம் என் இளமைக் காலம் சென்று திரும்பினேன்.
சிங்கப்பூர் இலக்கிய வட்டம், முனைவர்.சுப.திண்ணப்பனார் தலைமையில் நடத்திய ஒரு பட்டிமன்றம் இதற்குக் காரணம். தலைப்பு ‘கம்பனைப் பெரிதும் பாடாய்ப் படுத்திய பாத்திரம் கைகேயியா வாலியா?” என்பது. இரு பிரிவிலும் கற்றறிந்த சான்றோர். மூவர் முனைவர்கள். கம்பன் பாடாய்ப் பட்டானோ என்னவோ ஆனால் இரு பிரிவினரின் வாதத்தினால் முடிவு சொல்ல நடுவர் அவர்கள் பெரும் பாடு பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. முனைவர். சரோஜினி செல்ல கிருஷ்ணன் மற்றும் திரு. ஆண்டியப்பன் கைகேயியின் அணியிலும் முனைவர்.செல்ல கிருஷ்ணன் மற்றும் முனைவர்.இரத்தின வெங்கடேசன் வாலியின் அணியிலும் பேசினர். பேசினர் என்பதைவிட ஒவ்வொருவரும் ஒவ்வொரு சொற்பொழிவு ஆற்றினர் என்பதே உண்மை.ஒவ்வொருவரும் பேசி முடித்தபின் சரி தீர்ப்பு இவர்கள் பக்கம் தான் என்று முடிவுக்கு நான் வந்தது உண்மை.
இரு அணியினரின் பேச்சுக்களுக்கும் பின்னர் நடுவர்.முனைவர்.திண்ணப்பனார் அவர்கள் பேச்சு ஒரு முத்தாய்ப்பு. கம்பனில் துவங்கி, வள்ளுவரைத் தொட்டு, சிலம்பில் ஊன்றி, பின்னர் மீண்டும் கம்பனில் இறங்கி இறுதியில் ‘கைகேயியே’ என்று தீர்ப்பளித்தமை வெகு சிறப்பாகத் திகழ்ந்தது. நடுவர் என்றால் நடுவு நிலைமை தவறாது இருத்தல் வேண்டும் என்றாலும் இன்னொரு பணியும் உண்டு. அது சீரிய கருத்துக்களைப் பார்வையாளர்கள் மனதில் நட வேண்டும் என்பதும் நடுவரின் பணி என்று கூறிப் பட்டிமன்றத்தின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தினார் நடுவர்.
பட்டிமன்றம் துவங்கும் முன் அமைப்பாளர் திரு.வரதராசன் அவர்கள் சிறு துவக்க உரை நிகழ்த்துவார் என்று எதிர் பார்த்தால் அவர் ஒரு கவி அரங்கமே நிகழ்த்தி ‘நாம் வந்திருப்பது பட்டிமன்றத்திற்கா அல்லது கவி அரங்கத்திற்கா?’ என்று எண்ண வைத்தார்.
பட்டி மன்ற நிகழ்வுகளில் குறிப்பெடுப்பது சிறிது கடினமான செயல் தான். பல பாடல் வரிகளைக் குறிப்பெடுத்துள்ளேன். அவற்றை எனது பின்வரும் பதிவுகளில் பயன் படுத்தலாம் என்று எண்ணம்.
கம்பன் பற்றிய ஒரு தலைப்பில் தகவல் தேடி நூலகத்திற்குச் சென்றால் ஒரு சில நூல்களே நம் கண்ணில் படும். நாம் தேடுவது எளிதில் கிடைக்காது. தலைப்பு சரியாக இருந்தாலும் நூல் அடக்கம் தெளிவாக இருக்காது. ஆனால் நூலகம் செல்லாமல் சிங்கபூர் இலக்கிய வட்டம் நடத்தும் பட்டி மன்றங்களுக்குச் சென்றால் கம்பனுடன் சேர்ந்து வள்ளுவரும், இளங்கோவும், சீத்தலைச் சாத்தனாரும், பாரதியும், ஆழ்வார்களும் ஒரு சேர இருந்து நமது ஐயங்களுக்கு விடை அளிப்பார்கள் என்று அறிந்துகொண்டேன் இந்த வாரம்.
அகவையில் சிறியவனாகிலும் இப்பட்டிமன்ற நடத்துனர்களையும், உரை நிகழ்த்துனர்களையும் , ஊக்கம் அளித்து ஆற்றுப்படுத்திய அறிஞர்களையும் வைணவ முறைப்படி வாழ்த்தவேண்டும் என்றால் “இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று இறையிடம் வேண்டுவேன்.