நண்பர்கள் பலர் பல நேரங்களில் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எனது பதில்களும் அவற்றின் ஊடாக அமைந்துள்ள சில கருத்துப் பதிவுகளும் இவ்வகையான ‘கதைப்போம் வாருங்கள்’ தொடரில் இடம் பெரும்.
இப்பகுதியில் இம்முறை பகுத்தறிவு பற்றிப் பேசுவோம்.
பகுத்தறிவு என்பது என்ன ?
ஆங்கிலத்தில் ‘Discernment’ என்ற பொருளில் கூறலாம் என்று நினைக்கிறேன். படிப்பறிவாலும் அனுபவத்தாலும் உணர்ந்தவற்றை அறிவின் துணை கொண்டு எடை போட்டுப் பார்த்துத் தற்காலத்திற்குத் தகுந்ததாக உள்ளதைத் தேர்ந்தெடுப்பதே பகுத்தறிவு என்பது என் எண்ணம். பழமையானது என்பதாலேயே ஒன்றை ஏற்றுக்கொள்வது, புதுமை என்பதாலேயே ஒன்றை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது அல்லது பழமை என்பதாலேயே ஒப்புக்கொள்ளாமல் வீம்பு அடம் பிடிப்பது, புதுமை என்பதாலேயே ஒப்புக்கொள்வது – இவை என்னைப் பொறுத்தவரை பகுத்தறிவு அல்ல.
என் பாட்டி கூறினார் என்பதால் ஒன்றை நான் விரும்பிச் செய்யலாம். அதையே எனது பிள்ளைகளும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை. என் பிள்ளைகள் நான் கூறுவனவற்றைக் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும்; எனது பாட்டியைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; அவரது செயல் முறைகள், வாழ்க்கை முறைகள் அனைத்தையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்தக் கேள்வி அறிவு, உலக நடப்புகளைப் பார்த்து ஏற்படும் அனுபவ அறிவு முதலியனவற்றைக் கொண்டு அவற்றை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு தங்கள் காலத்திற்கேற்ப முடிவெடுப்பதே என் பிள்ளைகள் செய்ய வேண்டியது. அதுவே பகுத்தறிவு.
சுருக்கமாக , ஒரு செயலின் , எண்ணத்தின் நிகழ்கால உபயோகத்தின் அடிப்படையில் நடைமுறைத் தன்மையையும் சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகளே பகுத்தறிவு என்று நான் நினைக்கிறேன்.
தமிழகத்தில் பகுத்தறிவு தோன்றியது எப்போது ?
மனிதன் எப்பொழுது தீயைத் தொட்டால் மட்டுமே சுடும் என்று அறிந்து கொண்டு தொடாமல் இருந்தானோ அப்போதே அவன் பகுத்தறிவு படைத்தவனாகிவிட்டான். அது சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் நிகழ்ந்திருக்கலாம்.
மொழிகளும், மதங்களும் தோன்றிய நேரம் அவனது பகுத்தறிவு பரிணாம வளர்ச்சி அடையத் துவங்கியது என்று நினைக்கிறேன். தான் என்பதும் அடுத்தவன் என்பதும் உடல்களே; அது தவிர மற்றபடி தம் இருவருக்கும் இடையே ஒரு இணைப்பு சக்தி உள்ளது என்று எப்போது உணரத் துவங்கினானோ அப்போது பகுத்தறிவில் முழு மதிப்பெண் பெற்றுவிட்டான் என்று எண்ணுகிறேன்.
தவிர இராமாயணத்தில் ஜாபாலி என்று ஒரு முனிவர் வருகிறார். அவர் இராமனிடம்,”உன் தந்தை இறந்து விட்டார். இதற்காக நீ அவருக்குப் பிண்டம் முதலிய வைப்பது எதனால்? நீ இக்கானகத்தில் வைக்கும் உணவு உருண்டைகள் தசரதனிடம் சென்று சேரும் என்று என்ன நிச்சயம்?”, என்பது போன்ற கேள்விகள் கேட்கிறார். கவனிக்க வேண்டியது ஜாபாலி என்பவர் ஒரு முனிவர். இம்மாதிரி ‘உலோகாயதமான’ கேள்விகள் கேட்பது ‘சார்வாகம்’ என்ற பிரிவினரின் கொள்கை. அவர்கள் உலகத்தை ஒரு பொருள் ரீதியாகவே பார்ப்பார்கள். எனவே அவர்களும் அக்காலத்தில் இருந்துள்ளார்கள். பொருள் முதல் வாதத்துக்கும் கருத்துமுதல் வாதத்துக்கும் எப்போதும் ஒரு போட்டி இருந்துகொண்டே தான் இருந்துள்ளது.
கேள்விகள் கேட்பது என்பதும், அதற்கான பதில்கள் அளிப்பது என்பதும் அப்பதில்களில் திருப்தி ஏற்படவில்லை என்றால் மேலும் கேள்விகள் கேட்டுப் பெறுவதும் பண்டை இந்திய / தமிழ் மரபுகளில் ஒன்றே. ‘உப-நிஷதம்’ என்னும் வேதத்தின் பொருள் கூறும் நூல்கள் கேள்வி பதில் வடிவிலேயே உள்ளன. பல தர்ம சங்கடமான கேள்விகளும் இவற்றில் உள்ளன. எனவே ‘பகுத்தறிவு’ என்பது மக்கள் வாழ்வியலில் ஒரு பகுதியாகவேதான் இருந்துள்ளது.
உதாரணமாக ஆதி சங்கரருக்கும் மண்டல மிஸ்ரருக்கும் நடந்த வாதங்கள், ஜைனத்துக்கும் வைணவத்துக்கும் நடந்துள்ள வாதங்கள், அவற்றின் ஊடே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாம் கேள்வி பதில் அடிப்படையிலேயே அமைந்தள்ளன. ‘தர்க்கம்’ என்பதே கல்வியின் ஒரு பகுதி என்றே கொண்டிருந்தனர். ‘தர்க்கத்திலும்’ , ‘வியாகரணத்திலும்’ சிறந்த ஆசிரியர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அனுமனை ‘நவ வியாகரண பண்டிதன்’ என்று வால்மீகி அழைக்கிறார் – ஒன்பது வகையான கல்விகளில் சிறந்தவன் என்ற பொருளில் வருகிறது.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம் :
தற்போதுள்ள உப-நிஷதங்களில் ‘வஜ்ர-சூசிகா-உபநிஷதம்’ என்று ஒன்று உள்ளது. ‘வஜ்ரம்’ என்பது ‘வைரம்’ என்று பொருள் படும். ‘சூசி’ என்பது ‘ஊசி’ என்ற பொருளில் அமைகிறது. அதில் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது . ‘பிராம்மணன்’ என்பவன் யார்? அவன் எதனால் உயர்ந்தவன்? வைசியன், சத்ரியன், சூத்திரன் என்பவர்கள் யார்? அவர்கள் எந்த வகைகளில் உயரந்தவர்கள் ? இதுதான் கேள்வி.
கேள்வி ஒன்றும் பிரமாதம் இல்லை தான். ஆனால் பதில் ? அந்தப் பதிலை அளித்தவர் ஒரு முனிவர். இதோ பதில் :
“பிராம்மணன் என்பது என்ன ? உடலா ? உடல் என்று கொண்டால், ஒரு வயோதிக பிராம்மணன் இறந்தால் அவனது சந்ததிகள் அவனது உடலுக்குத் தீ வைக்கிறார்களே? எனவே அவர்கள் பிராம்மணனைக் கொன்ற ‘பிரும்ம ஹத்தி’ என்னும் தோஷத்தால் பீடிக்கப்படுகிறார்களா என்ன? அதனால் அவர்களது முகங்கள் விகாரம் அடைகின்றனவா என்ன? இல்லையே! எனவே உடல் ‘பிராம்மணன்’ இல்லை.
சரி, ஆன்மா ( உயிர் ) பிராம்மணன் என்று கொள்ள முடியுமா ? இப்பிறவியில் அவ்வுயிர் பிராம்மணன் என்று கொண்டாலும் கூட அது போன பிறவியில் ஒரு மாடாகவோ, அல்லது வேறு ஒரு வர்ணத்தவனாகவோ இருந்திருக்கலாமே. ஆகவே உயிர் பிராம்மணன் அல்ல.
சரி. அவனது செயல்களால் அவன் பிராம்மணன் என்று கொள்ளலாமோ? தானம் செய்வது, தானம் வாங்குவது, கல்வி கற்பது, கற்பிப்பது முதலிய எல்லா செயல்களையும் அனைவரும் செய்கின்றனரே? வசதியான வணிகர் தானம் செய்கின்றனரே! எனவே செயல் மூலமாக மட்டுமே ஒருவன் பிராம்மணன் இல்லை.
எனவே உடலாலும், உயிராலும், செயலாலும் மட்டுமே ஒருவன் பிராம்மணன் அல்லன்.
அது போல தந்தை வழியாகச் சொத்து கைவரப் பெற்ற ஒரு வணிகன் வைசியனா ? வணிகத்தைப் பெருக்காமல் தன் பிதுரார்ஜித சொத்துக்களை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு வணிகன் வைசியன் என்ற தகுதி அடைய முடியுமா?
தன் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் தனது மக்களைக் காக்காத மன்னன் அந்தக் குலத்தில் பிறந்ததால் மட்டுமே சத்ரியன் என்று கொள்ள முடியுமா?
வேளாண்மை, கைத்தொழில்கள் முதலிய எதனிலும் தேர்ச்சி அடையாத ஒருவன் சூத்திரன் என்று தன்னை அழைத்துக்கொள்ள முடியுமா ?
இவை அனைத்தும் ஒவ்வொரு நிலைகள். இவற்றை அடைய ஒருவன் முயல வேண்டும். அதற்காக ஒருவன் கடுமையாக உழைக்க வேண்டும்”
இவ்வாறு அவர் கூறுகிறார். அவர் வேறு யாரும் அல்ல, மீனவர் குலத்தில் பிறந்த ஆனால் அந்தணர்களின் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட வேத வியாசர். கேள்வி கேட்டவர் நாரதர்.
இவ்வாறு கேள்வி கேட்டு அது எத்துனை தர்ம சங்கடமானதாக இருப்பினும் அதற்குப் பதில் அளிப்பதே தர்க்கம். அதனை பாரதக் கல்விமுறை பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது.
சரி. இதனாலெல்லாம் பழையன எல்லாவற்றையுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியா ?
சரி இல்லை தான். ஆனால் சரியானவற்றையும் இக்காலத்திலும் ஆச்சரியப்பட வைப்பனவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமா ?
உதாரணம் பார்ப்போம் :
அணு ( Atom ) என்பது ஜான் டால்டன் (John Dalton ) என்பவர் கண்டு பிடித்தது என்று நாம் அறிவியலில் படிக்கிறோம். அதன் வைத்தே நீல் போஹ்ர் ( Neil Bohr ) 1913 ல் அவரது அணு சம்பந்தமான கொள்கைககளை வகுத்தார் என்றும் படித்துள்ளோம். ஆக நம்மைப் பொறுத்தவரை அணுவைக் கண்டு பிடித்தது ஜான் டால்டன், அதனை மேலே எடுத்துச் சென்றது நீல் போஹ்ர் என்றே நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின் செல்வோம்.
கம்பன் தனது ‘இராமாவதாரம்’ என்னும் கம்ப-ராமாயணத்தில் ‘இரணிய வதைப் படலத்தில்’ இவ்வாறு கூறுகிறான் :
“சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன் மாமேருக்
குன்றினும் உளன் இந் நின்ற தூணினும் உளன்
நீ சொன்ன சொல்லினும் உளன்”
அரி என்னும் கடவுள் ஒரு அணுவிலும் உள்ளான். அந்த அணுவினை நூறு தூளாக்கி அதனால் கிடைக்கும் ஒரு பகுதியான கோண் என்னும் பாகத்திலும் உள்ளான். மேரு மலையிலும், உன் சொல்லிலும் இந்தத் தூணிலும் உள்ளான் என்று பொருள் படும்படிப் பாடுகிறார்.
அது எப்படி ஜான் டால்டனால் தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அணு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்பனுக்குத் தெரிந்தது என்று கேள்வி கேட்டால் அது பகுத்தறிவு. அதை விடுத்துக் கம்பனும் இராமாயணமும் பழமையான மூட நம்பிக்கை தொடர்பானவை. எனவே அவற்றைப் புறக்கணிப்பதே பகுத்தறிவு என்பதில் எந்தப் பகுத்தறிவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்னொரு உதாரணம் பார்ப்போம்:
ஆண்டாள் கி.பி. 9 ம் நூற்றாண்டில் பாடுகிறாள். அது பின்வருமாறு :
“ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”
மேலே உள்ள பாசுரத்தில் மழை எப்படிப் பொழிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. கடலில் இருந்து ஆவியாகும் நீர் இறைவனின் கருமை நிறம் போன்ற மேகமாக மாறி, திருமாலின் கையில் ஒளிரும் சக்கரம் போல் மின்னல் வெளிச்சம் கொடுத்துப் பின்னர் அவனது பாஞ்சசன்னியம் என்னும் வெண்மையான சங்கின் முழக்கம் போல் இடியாய் இடித்து , அவனது கையில் உள்ள ‘சார்ங்கம்’ என்னும் வில்லிலிருந்து வெளிவரும் அம்பு போல் நமக்கெல்லாம் மழையைப் பொழிய வேண்டும் …”
நீர் ஆவியாவதும், மேகமாவதும், மின்னலும் இடியும் தோன்றுவதும் தற்கால நவீன அறிவியலின் கண்டு பிடிப்பு என்றும் பத்தாம் நூற்றாண்டு பேதைப்பெண் கோதையின் அழகு பாசுரம் புனைகதை, மூட நம்பிக்கை என்றும் கொள்வது என்ன பகுத்தறிவு ?
தாயின் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல இசை கேட்டால் அதற்குப் புரியும் என்று தற்கால அறிவியல் கூறுவதை நம்புகிறோம். ஆனால் பிரகலாதன் தன் தாயின் வயிற்றில் இருந்தவாறே திருமால் பற்றிய கதைகளைக் கேட்டான் என்று நம்புவதும் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் இருந்தவாறே போர்த் தந்திரங்களைக் கற்றான் என்று கேட்பதை மூட நம்பிக்கை என்று கொள்வது என்ன பகுத்தறிவு ?
இப்படிப் பல உதாரணங்களைக் கொள்ளலாம்.
சரி. தமிழர்கள் பகுத்தறிவால் கடவுள் மறுப்புக் கொள்கை பரப்பினரே ? ஆகவே பகுத்தறிவு என்பது இறை மறுப்பு தானே ?
அதுவும் இப்போது ஏற்பட்டது இல்லை. சார்வாகத் தத்துவம் பற்றிப் பார்த்தோம். நேரில் காண்பதே உண்மை என்று கூறிய பொருள் முதல்வாதக் கொள்கையே சார்வாகம் என்பது. இந்திய மரபு தவிர்த்துப் பார்த்தால், கி.பி. 1790 களில் தாமஸ் பெய்ன்(Thomas Paine ) என்னும் அறிஞர் விவிலியத்தை அக்கு வேறு ஆணி வேராக மேய்ந்து “பகுத்தறிவின் காலம்’ ( The Age of Reason ) என்று ஒரு அரிய நூல் எழுதினார். யாரையும் தாக்குவதாக இல்லை அது. விவிலியத்தை அதன் காலம் தொட்டு, அதன் மொழி நடை, இயற்றப்பட்ட மொழி, அதில் உள்ள கதைகள் என்று பலவாறாக ஆராய்ந்து தற்காலம் வரை கிறித்துவத்தையும் அதன் நூலையும் அக்கு வேறு ஆணி வேறாக அதே சமயம் மிக உயர்ந்த தத்துவ, கால, வரலாற்றுச் சான்றுகளோடு மறுத்தார். ஆகவே ‘பகுத்தறிவு’ என்பது இருபதாம் நூற்றாண்டின் ஒரு சில தமிழ் பேசும் மக்களின் கண்டு பிடிப்பு அல்ல. ( இந்நூல் இலவச தரவிறக்கம் -Download- இணையத்தில் உள்ளது).
அது போலவே நவீன உலகின் ஆகச் சிறந்த தத்துவ அறிஞரும், கணித மேதையும் நோபெல் பரிசு பெற்றவருமான பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் ( Bertrant Russel ) ‘நான் ஏன் கிறித்துவன் இல்லை’ ( Why I am not a Christian ) என்ற மிகத் தரம்வாய்ந்த பேச்சில் பல கேள்விகளை எழுப்புகிறார். அதே சமயம் மறுக்க முடியாத வாதங்களையும் வைக்கிறார். பகுத்தறிவு என்றால் அவையே பகுத்தறிவு. ஆபாசப் பேச்சும் வசை மொழிகளும் பகுத்தறிவுப் பட்டம் பெற்றன என்பதே தமிழ் நாட்டின் தரத்தாழ்வு என்று நான் கருதுகிறேன்.
இவ்வளவு தூரம் கடல் கடந்து போவானேன்? நமது சித்தர்கள் கேட்காத கேள்விகளா?
“சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாத பட்டரே வேர்த்து
இரைப்பு வந்துபோது வேதம் வந்து உதவுமோ?”
“பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே ”
“நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் ..”
என்பது போன்ற கேள்விகள் சித்தர் பாடல்களில் உள்ளன.
இவற்றில் காண வேண்டியது என்னவென்றால் கேள்வி கேட்ட சித்தர்கள் இறை மறுப்பு செய்யவில்லை. வேறு இடங்களை விடுத்து சரியான இடங்களில் தேடுங்கள் என்று கூறினார்கள்.
இவற்றில் எல்லாம் இல்லாத பகுத்தறிவு சார்ந்த தேடல்கள் இறை மறுப்பில் தான் உள்ளது எனவே அதுவே சிறந்தது என்று பேசுவது பகுத்தறிவாகத் தோன்றவில்லை.