காஞ்சி வழக்கு – ஒரு பார்வையின் தொடக்கம்

முதலில் ஒரு சமர்ப்பணம் – எனக்கும் ஆதி சங்கரர் வழி வந்துள்ள மடங்களுக்கும் அவர்களது சித்தாந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

சங்கர சித்தாந்தம் என்பது ‘அத்வைதம்’ என்று முன்பு கண்டிருந்தோம். சித்தாந்த ரீதியாக அத்வைதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு பிரம்மம் மட்டுமே உண்மை , மற்றது எல்லாமே மாயை, நாம் அனைவரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு, உலகம் என்பது மாயை, பொருள் என்பது இல்லை, ஜடப் பொருள்கள் ஒரு தோற்றப்பிழையே ( Mirage ) என்பது அத்வைத சித்தாந்தம்.

இந்த சித்தாந்தத்தை முன் வைப்பவர்கள் அத்வைத சம்பிரதாயம் சார்ந்துள்ள ஆதி சங்கரர் வழி வந்துள்ள ஐந்து மடங்களைச் சார்ந்த துறவியரும் அவர்களது வழி வந்துள்ளவர்களும். அத்வைத சித்தாந்தம் இக்காலத்தில் பொருள் ரீதியிலான உலகம் என்பதே உண்மை இல்லை என்று சொல்வது பெரும்பாலான மக்களால் ஒப்புக்கொள்ள முடியாதது என்பதே என எண்ணம். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ..” என்பதும் நோக்கத்தக்கது.

அப்படியென்றால் ஆதி சங்கரரும் அவர் வழி வந்த ஐந்து மடங்களும் இந்திய மரபிற்கும் கலாச்சார ஒற்றுமைக்கும் ஒன்றுமே செய்யவில்லையா ? என்ற கேள்வி எழலாம்.

ஆதி சங்கரர் இந்திய தத்துவ மரபிற்கு ஆற்றியுள்ள பணியைப் பற்றியும் அவர் இல்லை என்றால் இந்து மதம் என்று இன்று ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பாக உள்ள ஒரு நிலையும் இல்லாமலே போயிருக்கும் என்று முன்னமேயே இந்தப் பதிவில் பார்த்தோம். அத்வைத சித்தாந்தமே பாரதத்தின் சித்தாந்தம் என்னும் அளவிற்கு உயர்த்திய பெருமை ஆதி சங்கரரைச் சாரும். சுவாமி விவேகானந்தரும் அத்வைத சித்தாந்தத்தையே முன்வைத்துப் பேசினார். அந்த அளவிற்கு மிகச் சிறிய வயதிலேய மிகக் குறுகிய காலத்தில் ஆதி சங்கரர் ஒரு பூமி அதிர்ச்சிக்கு நிகரான கலாச்சாரப் புரட்சி செய்தார்.

சமுதாய அளவிலும் ஜைனமும் பௌத்தமும் தங்களது அழிவை நோக்கி விரைந்து செல்ல ஆதி சங்கரரது அத்வைத சிந்தனையும் ஒரு காரணி என்பதை மறுக்க முடியாது என்று மார்க்சீய சிந்தனையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

சித்தாந்தம் எல்லாம் சரி. அதற்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பென்ன ?

தொடர்பு இல்லை என்பதே என் எண்ணம். அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் பொருள் ரீதியில் இல்லாமலே இருந்தன. ஆத்தும ஞானம் பெற ஒருவன் செய்ய வேண்டியன, பிரும்மத்துடன் கலப்பது எப்படி என்பது போன்ற பல உலகியல் ரீதியில் எந்த நோக்கமும் இல்லாததே ‘அத்வைதம்’ என்று ஆதி சங்கரர் போதித்தார்.

ஒரு பாலைவனம் உள்ளது. மேலே சூரியன் பிழம்பாக ஒளிர்கிறது. எங்கு நோக்கினும் நீர் இல்லை. ஆனால் அங்கே சிறிது தூரத்தில் நீர் நிலை தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது இல்லை. இன்னமும் சிறிது தூரத்தில் தெரிகிறது. எனவே மீண்டும் அருகில் சென்று பார்த்தால் அங்கும் இல்லை.

ஆக, நீர் உள்ளது போல் நம் கண்ணுக்குத் தெரிந்தது உண்மையா இல்லையா ?

நம் கண்ணிற்குத் தெரிந்த காட்சி உண்மை. நாம் பார்த்ததும் உண்மை. ஆனால் நீர் இருப்பது உண்மை இல்லை. அது மாயை.

அது போலவே இந்த உலகம் என்பது மாயை. பஞ்ச பூதங்களினால் உண்டான இந்த உலகமும் அதனில் வாழும் உயிர்களும், பாலைவனத்தில் கானல் நீர் போல் மாயை. ஆனால் சுட்டெரிக்கும் சூரியன் உண்மை என்பது போல் பிரும்மம் என்பது மட்டும் உண்மை. சூரியன் ஒளியினால் ஏற்படும் மாயத் தோற்றங்களே உயிர்களும் உலகமும்.

கோனார் தமிழ் உரை அளவில் இருந்தாலும் இது தான் அத்வைத சித்தாந்தத்தின் அடி நாதம். ஆதி சங்கரர் ஏற்படுத்திய இந்த சித்தாந்தத்தை  முன்னிலைப்படுத்தியன ஐந்து பீடங்கள். அவற்றில் ஒன்று காஞ்சி காமகோடி பீடம்.

அவர் வழியிலேயே அவர் ஏற்படுத்திய மடங்கள் செயல்பட்டன என்று கொள்ள முடியுமா என்றால் முழுமையாக இல்லை என்பதே உண்மை.

சரி. அப்படியென்றால் அவரது வழியில் முழுவதும் செல்லாமல் அவர் ஸ்தாபித்த பீடங்கள், குறிப்பாகக் காஞ்சி பீடம் செய்தது என்ன ?

இவை பற்றிக் காணும் முன் அவரால் ஏற்பட்ட மடங்கள் பாரத சமூகத்திற்குச் செய்த பணிகள் என்ன ? அவற்றுக்கும் தற்போது காஞ்சி பீடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கும் காரணம் என்ன ? இந்த வழக்கிற்கும் சமூகத்தில் இந்திய எதிர்ப்பு வாதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ?

பாரத சமூகம் என்ற  அமைப்பு உடைந்து சிதற வேண்டும் என்று விரும்பும் சில அமைப்புகள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குக் காஞ்சி பீடமும் சமூகத்தின் மீது இருந்த அதனின் ஆளுமையும் எவ்வாறு ஊறு செய்தன ; எனவே அவற்றைக் களைய இந்த அமைப்புகள் செய்தவை என்ன ? இதற்கு ‘முற்போக்கு’ சக்திகள் துணை போன கதை என்ன ?

விரைவில் காண்போம்.

One thought on “காஞ்சி வழக்கு – ஒரு பார்வையின் தொடக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s