பண்டைய தமிழர் – ஒரு பார்வை

காஞ்சி வழக்கு குறித்த பதிவுத்தொடரில் பண்டைய தமிழர் எங்ஙனம் ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

தற்காலத்திய அத்வைத மடங்களில் ஒன்றான காஞ்சி மடம், அதன் துறவியரின் சமூக ஆன்மிகப் பணி, இவர்களின் தேவை முதலியன பற்றி அறிந்து கொள்ள இந்த அத்வைத சித்தாந்தமே தோன்றியிராத போது தமிழகம் எப்படி இருந்தது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுவும் ஆரியர் படை எடுப்பு என்ற ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்வும் கலையும் கலாச்சாரமும் வேறாகின என்று நமக்குப் போதிக்கப்பட்டுள்ள வேளையில் சங்க காலம் முதல் தமிழரின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது தேவைப்படுகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட கல்வி ஆரியர் படை எடுப்பின் முன் தமிழர் நிலை மிகவும் முன்னேறிய ஒரு சமூக நிலையாக இருந்தது என்றும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டது என்றும், மூட நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றும் மக்கள் அனைவரும் ஒரு நிகர் சமானமாக எவ்வித சாதிப் பிளவுகளும் இன்றி ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் கூறுகிறது. ஆனால் ஆரியர் படை எடுப்புக்குப்பின், வைதீக பிராம்மணர்களின் சூழ்ச்சியால் தமிழர் பிளவு பட்டனர் என்றும், பல கடவுளர் வழிபாடு புகுத்தினர் என்றும், உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைப் புகுத்தினர் என்றும், மூட நம்பிக்கைகள் பெருகின என்றும் பெண்ணடிமைத்தனம் தோன்றியது என்றும் இதற்குக் காரணம் வட நாட்டிலிருந்து வந்த மாடு மேய்த்த ஆரியர் என்றும் நமது தமிழ்ப் பாட நூல்களும் ‘அறிஞர்களும்’ தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை உண்மையா ? ஆதி சங்கரர் தொடங்கி வைதீக காலம் தொட்டுத்தான் மூட நம்பிக்கைகளும், பெண் அடிமைத்தனமும், சாதிப் பாகுபாடுகளும் தோன்றியனவா ? இவரும் இவர் சார்ந்த வைதீக மதமும் அவரைப் பின்பற்றிய வைதீக மதத்தின் மற்ற பரிணாமங்களும் தான் பாரத தேசத்தின் அத்தனை கேடுகளுக்கும் காரணமா?

இவற்றைப் பார்ப்பதற்கு நாம் சங்க காலத்தை ஒரு அளவு கோலாகக் கொள்வோம். சங்கத்திற்கு முன்னர் தோன்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் ‘தொல்காப்பியம்’, ‘அகநானூறு’, ‘புறநானூறு’, ‘நற்றிணை’ முதலிய தொல் நூல்களின் வழி நின்று அக்கால சமூகத்தை ஆராய்வோம்.

முற்போக்காளர்கள் கூறுவது : ‘பண்டைய தமிழர் ஒரே கடவுள் வழிபாட்டையே கொண்டிருந்தனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கையே இருந்து வந்தது. ஆரியர்கள் வந்த பின்னரே பல தெய்வ வழிபாடும் பூசை முறைகளும் உயிர்ப்பலி முறைகளும் தமிழகத்தில் தோன்றின’ என்கின்றனர். ஆனால் உண்மை என்ன?

பண்டைத் தமிழகத்தில் ஒரே கடவுளோ அல்லது கடவுளே இல்லை என்றா இருந்ததா?

இல்லை. சங்க நூலான தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின் பெயருக்கு அகராதி போன்று ஒரு பகுதி உள்ளதாகத் தெரிகிறது.

தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர் குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும் தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குப்பிடப்பட்டுள்ளார்.

ஆண் தெய்வங்கள் தவிர ‘கொற்றவை’ என்னும் பெண் தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று வழிபட்டனர் என்று தமிழ் அறிஞர் சாமி.சிதம்பரனார் கூறுகிறார்.

தொல்காப்பியம் ‘மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே ..” என்னும் இடத்தில் கொற்றவை பற்றிக் கூறுகிறது.

இவை தவிர கதிரவன், தீ, நிலவு முதலிய இயற்கைப் பொருட்களையும் தமிழர் கடவுளர்களாக வழிபட்டனர் என்பதை ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வந்தது என்று தொல்காப்பியம் பறைசாற்றுகிறது.

திருமாலை ‘ஆல் அமர் கடவுள்’ என்றும், முருகனை ‘சேயோன்’ என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.  முருகன் ‘சூரனைக் கொன்ற ஒளி பொருந்திய வேர்ப்படையை உடைய முருகன்’ என்று போற்றப்படுகிறான். (சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் )

இத்தெய்வங்கள் தவிர இறந்தோரையும் கடவுளர்களாக வழிபட்டுள்ளனர். அவர்கள் நினைவாக கற்களை நட்டு ( நடுகல் ) அவற்றுக்குப் பூசனைகள் செய்துள்ளனர். (‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல் ..’). இவற்றால் கூட பல தெய்வ வழிபாடுகள் தோன்றியிருக்கலாம்.

வைதீக மதங்கள் வருகையாலும் ஆதி சங்கரரது ‘அத்வைத’ சமயத்தின் தாக்கத்தாலுமே வேதங்களின் முறைப்படி உயிர்ப்பலிகள் தொடங்கின என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு வந்ததுள்ளது. அது உண்மையா ?

சங்க காலத்தில் முருகனுக்கு ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்து வழிபட்டனர் என்று  குறுந்தொகையில் உள்ளது. (சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி..)

‘வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு’ என்று நற்றிணையில் ( வெறி எடுத்தால்  உன் நோய் தீரும் என்று எண்ணி ஆட்டை அறுத்து உன் அன்னையால் வணங்கப்படும் முருகன்..) வருகிறது.

ஆக பலி இட்டு வணங்குவது வேத காலத்திற்குப் பின் தமிழகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் புனைவே.

மூட நம்பிக்கைகள் வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டது என்று கூறுவதும் அபத்தமே.

மழை வேண்டும் என்று புறநானூற்றில் ‘மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய் மாறி ஆன்று மழைமேக்கு உயர்க  .. ‘ என்று மழை பெய்ய வேண்டி பலி கொடுத்து வணங்குவர் என்றும் வருகிறது.

கோழி, ஆடு முதலியன பலவகையான பலிகளுக்குப் பயன்பட்டன என்று பல பாடல்கள் தெரிவிக்கின்றன.

பலன்கள் வேண்டிக் குரவைக் கூத்து, பாவை நோன்பு முதலியன சங்க காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாலும் அந்தப் புராதனமான நோன்பையே நோற்றாள் என்று வைணவம் குறித்த தொடர்களில் நாம் முன்னமேயே கண்டோம்.

இம்மை, மறுமை முதலியன பல முறை சங்கப் பாடல்களில் இடம் பெறுகிறது. சங்கம் மருவிய காலத்தவரான வள்ளுவரும் வானுலகம், இம்மை, மறுமை, ஊழ்வினை முதலியன குறித்துப் பேசியுள்ளார்.

சகுனம் பார்ப்பதும், நல்ல நாள் பார்ப்பதும் சங்க காலத்திலேயே இருந்த பழக்கங்கள்.

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை ‘ என்று தொல்காப்பியம் களவியல் சூத்திரம் ‘களவு மணம் புரியும் காலத்தில் கெட்ட நேரத்தில் காதலியுடன் சேராமல் இருக்கும் பழக்கம் தலைவனிடம் இல்லை..” என்று கற்பு மணம் புரிந்தோர் நாளும் கிழமையும் பார்ப்பார்கள் என்றும் களவு மணம் புரிந்தோர் அவ்வாறு இல்லை’ என்றும் கூறுகிறது.

பல்லி சொல்லுக்கும் பலன் பார்த்தார்கள் பண்டைத் தமிழர் என்பது கலித்தொகையில் காணக்கிடைக்கிறது.

எரி நட்சத்திரம் பற்றியும் புறநானூற்றில் செய்திகள் உள்ளன. அது தீங்கு நிகழப்போவதை உணர்த்துவதாகக் கொள்ளப்பட்டது. இரும்பொறை என்ற மன்னன் இறந்தபோது கூடலூர் கிழார் என்னும் புலவர் ‘கனை எரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ..” என்னும் புறப் பாடலில் குறிப்பிடுகிறார்.

பால் தயிராகாமல் பாலாகவே உள்ளது; ஆட்டுக்குட்டி துள்ளி விளையாடவில்லை; உறியில் இருந்து இறக்கிய வெண்ணையை உருக்கினால் உருகவில்லை; சகுனங்கள் சரியாக இல்லை என்று ஆய்ச்சியர் குரவையில் சிலப்பதிகாரம் கூறுகிறது. இவை சங்கம் மருவிய காலம்.

இவை தவிர பெண்கள் உடன் கட்டை ஏறுதல், கைம்மை நோன்பு நோற்றல் முதலியனவும் சங்கப் பாடல்களில் பெருமையாகவே பேசப்படுகிறது. எனவே இவை வைதீக மதத்தைப் பரப்பிய ஆதி சங்கரர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழர் மரபில் இருந்துள்ளன.

அவ்வையார், நச்செள்ளையார், காக்கைப்பாடினியார் முதலான பெண் புலவர்கள் இருந்தாலும் பெண்கள் பெரும்பாலும் கல்வியிலும் உரிமைகளிலும் பின்தங்கியே இருந்தனர் என்பதும் தெரிகிறது.

தொல்காப்பியர் ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’ என்று பயமும், வெட்கமும், அறியாமையும் முற்பட்டு நிற்பது எப்போதும் பெண்களுக்கு உரிய குணம் என்று கூறுகிறார்.

வள்ளுவரும் ‘மனைவியின் கீழ்ப்படிந்து நடக்கும் முறையற்ற செயல் எந்நாளும் பெரியோர் கூட்டத்தில் வெட்கம் தரும் செயலாகும் என்பதை ‘இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்’ என்று கூறுகிறார்.

இவை தீமை என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் இவை வைதீக மதத்தால் மட்டுமே புகுத்தப்பட்டன என்பதும் பண்டைய தமிழர் வாழ்வில் இவை ஒன்றுமே இருந்ததில்லை என்பதும் உண்மை கலப்பிலாத பொய் என்பதும் நாம் அறிய வேண்டியது ஆகும்.

சரி. இப்பண்டைய தமிழர் வாழ்விற்கும் ஆதி சங்கரர் வழி வந்த காஞ்சி மடத்திற்கும் தொடர்பென்ன ? விரைவில் பார்ப்போம்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

5 thoughts on “பண்டைய தமிழர் – ஒரு பார்வை”

  1. கட்டுரையாளர் மேற்கோள் காட்டிய நிகழ்வுகள். பழக்க வழக்கங்கள் புறநடை. தொல்காப்பியர் குறிக்கும் தெய்வம் என்ற சொல் முழுமுதல் கடவுளை குறிக்கவில்லை. பெரும்பாலும் முனிவர்களை குறித்தது. ஆல் அமர் கடவுள் பற்றி தொல்காப்பியம் குறிக்கவில்லை. புறநானூற்றில் தான் அந்த சொற்றொடர் காணப்படுகிறது. ‘கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்று கதிரவன், தீ, நிலவு இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப்போலவே எண்ணப்பட்டு வந்தது என்று தொல்காப்பியம் பறைசாற்றுகிறது என்ற முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை. கொடிநிலை, கந்தழி, வள்ளி எவற்றைக் குறித்தது என்பது தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கே தெரியவில்லை. கோயில், குளம், அர்ச்சனை. அபிசேகம், தேர், திருவிழா இவை ஆரிய வேதச் சடங்குகள். திருமூலர் உருவவழிபாட்டையும் அர்ச்சனை போன்றவற்றையும் ஆதரிக்கவில்லை. சங்க காலத்தில் குடிகள் இருந்தன ஆனால் சாதி இருக்கவில்லை. இது வைதீக மதம், குறிப்பாக மனுவினால் தமிழர்களிடம் புகுத்தப்பட்டது.

    Like

  2. Amaruvi I dont know who has written above article but I am suggesting to read ‘Velir varalaru by Mr. M.Ragavaiyangar’. Before writing any article the person should read/study history books with proofs.

    Like

  3. நக்கீரன் சார்.. ஆமருவி சார் சொன்ன விஷயங்களை பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் என்ற நூலில் சாமி.சிதம்பரனார் என்ற புகழ்பெற்ற திராவிட கருத்தியல்வாதி சொல்லியிருப்பதை காணலாம்.. சாமி.சிதம்பரனார் ஏராளமான சங்க இலக்கிய நூல்களை ஆய்வு செய்து எழுதியவர்தான்..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: