ஒரு படைப்பாளியின் எழுத்து அவனைப் பறை சாற்ற வேண்டுமே ஒழிய அந்த எழுத்தாளன் பேசக்கூடாது என்பார் தமிழ் எழுத்தாளர் இமயம். அதுபோலவே தன் எழுத்துக்கள் மூலம் பேசும் எழுத்தாளர் நண்பர் ஷாநவாஸ் நேரில் பேசும்போது அமைதியாகவும் சௌம்யமாகவும் பேசக்கூடியவர். அலட்டிக்கொள்ளாத பேச்சு அவருடையது. அதுபோலவே உள்ளது அவரது எழுத்தும். சமீபத்தில் அவரது ‘மூன்றாவது கை’ என்ற நூலை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது. நூலை வாசிப்பது அவரிடம் நேரில் பேசுவது போல் இருந்தது. அதே சௌம்யம்.
12 கதைகள் கொண்ட இந்தக் கதைத் தொகுதியில் பல கதைகள் மனதைத் தொட்டாலும், என்னை மிகவும் கவர்ந்த கதை ஒன்று உண்டென்றால் அது ‘வேர்ச்சொல்’ என்னும் தலைப்பில் உள்ள ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு பற்றிய கதையே. ஒரு ஆசிரியர் ஓய்வு பெறுகிறார். அவரது அந்த நாளின் குறிப்பாக உள்ளது கதை. கதையின் முடிவில் உள்ள திருப்பம் ஒரு சுகமான வியப்பு.
ஆசிரியப்பணி பல பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றத்தை நேரில் காணவும், அந்த முன்னேற்றத்திற்கு வழி செய்யவும், அந்த முயற்சியின் பயனாய் அம்மாணவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று பின்னாலிருந்து பார்க்கவும் வசதியுள்ள பணி. தொண்டு என்றும் சொல்லலாம். ஆசிரியரது வழி காட்டுதலில் மாணவனின் எதிர்காலம் எப்படி அமைகிறது என்பதை அவர் வாழும் காலத்திலேயே காணும் வாய்ப்பு உள்ள ஒரு பணி ஆசிரியப்பணி. ஆசிரியர் சொல்லும் சொல் மாணவர்களின் எண்ண ஓட்டங்களையும் செயல்பாடுகளையும் ஒரு நொடியில் மாற்றி அமைத்துவிடும் என்று தெளிவாக்குகிறது இந்தக்கதை.
சில காலம் முன்பு என் பெரியப்பா திரு.இராமபத்திராச்சாரியார் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்று இன்னொரு ஊரில் இராமாயண உபன்யாசம் செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிவில் ஒரு வயோதிகர் வந்து பெரியப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார். “என் பெண்ணின் உயிர் உங்களால் காப்பாற்றப்பட்டது” என்றார். மேலும் பேசியதில் புரிந்தது – பல ஆண்டுகள் முன்னர் ஒரு நாள் தமிழ் வகுப்பில் பெரியப்பா இராமாயணத்தில் சீதை அசோகவனத்தில் பட்ட துன்பங்களைப் பற்றி நீண்ட சொற்பொழிவு ஆற்றி இருந்தார். அம்மாணவர்களிடையே இந்தப் பெரியவரின் பெண்ணும் இருந்துள்ளாள். பின் நாளில் அவளது மண வாழ்க்கையில் பல முறை பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்த அவள் பல முறை தற்கொலை முயற்சிக்கு உந்தப்பட்டுள்ளாள். ஒவ்வொரு முறையும் பெரியப்பாவின் சீதை பட்ட துன்பம் பற்றிய பேச்சு நினைவுக்கு வந்து அவளைத் தடுத்துள்ளது.
ஒரு ஆசிரியரின் பேச்சுக்கு இருந்த சக்தியை அப்போது புரிந்துகொண்டேன்.
அது போலவே ஷானவாஸின் ‘வேர்ச்சொல்’ கதையில் அந்த ஆசிரியரின் ஒரு சொல் ஏற்படுத்திய விளைவை அறிகிறோம். என்னை அறியாமல் நினைவுகளில் பல ஆண்டுகள் முன்னே செல்ல வைத்த கதை இது.
‘அனுமானம்’ கதை வயது முதிர்ந்தோரின் நிகழ்கால நிதர்சன எண்ண ஓட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
‘கறிவேப்பிலை’ என்பது உணவில் சுவைக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் ஒரு பொருள். அதை வைத்து மனித உறவுகள் பற்றி ஒரு கதை அதுவும் ஆழமான கதை சொல்ல ஷானவாஸால் மட்டுமே முடியும்.
‘மூன்றாவது கை’ என்றே ஒரு கதை உள்ளது. நூலின் அட்டைப்படமும் அதையே சித்தரிக்கிறது. ஒரு பெண்ணின் கை மூன்றாவதாக அமைந்துள்ளது. அக்கதையில் உள்ள நுட்பம், அதிர்ந்து பேசாத வார்த்தைகள்,சிங்கப்பூரைச் சொல்லும் பல இனக் கலப்பு — அருமை.
‘தோடம் பழம்’ – தமிழ்ப் பண்பாட்டை நினைவூட்டும் விதமாக உள்ளது. ‘காமக் கிழத்தி’ என்று நமது தொல் நூல்கள் சொல்லும் ‘சின்ன வீட்டை’ அரநெல்லி மரத்துடன் ஒப்பிட்டுக் கதை பின்னி இருப்பது தனிச் சுவை.
‘நிஜங்கள்’ , ‘அனுமானம்’, ‘காகித சிற்பம்’ மூன்று கதைகளுக்கும் ஊடே ஒரு நூல் தொடர்பு உள்ளது. அது ‘அனுமானம்’ என்னும் மனிதப் பண்பு. மூன்று கதைகளிலுமே எவ்வாறு அனுமானம் தவறாக அமைகிறது என்று அறிகிறோம்.
கதையின் கரு ஒன்று இருந்தாலும் கதை சொல்லும் நேர்த்தி என்று ஒன்று உள்ளது. அது நண்பர் ஷானவாஸுக்கு இயல்பாகவே வருகிறது. கதை மாந்தர்கள் அந்நியராகத் தெரியவில்லை. கதையும் அன்னியம் இல்லை. உதாரணமாக ‘நீ சிரித்தால்’ கதையில் ‘ஸ்கைப்’ (Skype )பயன்பாட்டின் போது இந்தியாவில் ஏற்படும் மின் வெட்டும், இணையத் தொடர்பு துண்டிப்பும் நாம் அனைவரும் சந்திக்கும் தற்கால நிகழ்வுகள். அதைக் கதையின் ஊடே சொல்லி இருக்கும் பாங்கு வெகு அருமை.
கதை இருக்கட்டும். ஆசிரியரின் சில கூர் கவனிப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தின.
‘தேபான் கார்டனிலிருந்து டாக்சி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று’ என்று ‘அனுமானம்’ கதையில் கூறுகிறார். இன்றும் அதுவே உண்மை. அதே கதையில் இரவில் பாத்திரங்கள் இடை விடாது கழுவப்படும் ஓசை கேட்பது பதிவு செய்யப்படுகிறது. ஆக அருமை இது.
‘அழைப்பு’ சிறுகதையில் அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய டாக்சி ஓட்டுனர் அத்துணை அமளியிலும் மேலே விமானம் மேலெழும்பிச் செல்வதைக் கவனிக்கத் தவறவில்லை. அதன் மூலமாக ஒரு சித்தாந்தத்தையும் கூறுகிறார். “எதுவுமே மேலே செல்லச்செல்ல சிறியதாகி எளிமையாகக் கையாளக் கூடியதாகி விடுகிறது” என்று கூறும் இடத்தில் ‘Helicopter View‘ என்னும் மேலாண்மைத் தத்துவம் பற்றிக்கூறுவது போல் எனக்குத் தோன்றுகிறது.
‘மூன்றாவது கை’ – எழுத்தாளரைப் போலவே அமைதியாகவும், அழகாகவும் ஆனால் ஆழமாகவும் பேசுகிறது.
இன்று வெளியிடப்படும் இந்நூல் வெற்றியடைய இறையை இறைஞ்சுகிறேன்.
Superb one.
RLN
LikeLike