‘இலக்கியம்’ என்றால் என்ன என்ற ஒரு கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கம்பன் பற்றி எழுதுகிறாய், வள்ளுவர் வருகிறார், ராகுல் காந்தியும் வருகிறார், பின்னர் ஆழ்வார் வருகிறார், அவருடன் காஞ்சிபுரம் சார்ந்த வழக்கு விபரம் வருகிறது, அத்துடன் பகுத்தறிவு பற்றி எழுதுகிறாய், அடுத்த வாரமே ஆண்டாள் பாசுரம் வருகிறது பின்னர் மீண்டும் ராகுல் காந்தி பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை, அல்லது சிங்கப்பூர் டாக்ஸி குறித்த ஆங்கிலப் பதிவு. ஒரே குழப்பமாக உள்ளது. நீ எழுதுவது என்ன ? இலக்கியமா? இல்லை என்றால் இதை எப்படி அழைப்பது ?
கேள்வி நன்றாகத்தான் உள்ளது. பதில் தான் தெரியவில்லை.
இந்தக் கேள்வி ஏன் எழுந்தது ? நான் எழுதியது சிலருக்குச் சில கேள்விகளை எழுப்பின. நீ ஏன் இப்படி எழுதுகிறாய் ? ஏன் ஒரு தளத்தில் இருந்து எழுதுவதில்லை ? ( ஏன் குரங்கு போல் தாவுகிறாய் என்று பொருள் கொள்ள வேண்டும் ) என்றெல்லாம் கேட்கிறார்கள்.
கேள்வியின் உட்பொருள் இதுதான் என்று நினைக்கிறேன். அதாவது “நீ என்ன பெரிய மேதாவியா?” என்பதாக இருக்கலாம். ( மேதாவி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருளும் உண்டு என்பதைக் கவனிக்கவும் ! )
எது எப்படி இருந்தாலும் ‘இலக்கியம்’ என்றால் என்ன என்றொரு கேள்வி எழுந்தது உண்மை. சிறிது ஆராய்ச்சி செய்தேன். இலக்கு + இயம் = இலக்கியம் என்று புரிந்துகொள்ளலாம் என்று தெரிந்துகொண்டேன். ஒரு தெளிவான, உயர்வான இலக்கைத் தெரிவு செய்து கொண்டு அதனை மொழி வழி இயம்புதல் என்று பொருள் கொள்ளலாம் என்று அறிந்துகொண்டேன்.
இலக்கியத்தில் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் கலக்கலாமா ? என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. சில நண்பர்கள் இவை சார்பில்லாததே இலக்கியம் என்று கூறுகின்றனர்.
இலக்கியம் என்பதே ‘அழகியல்’ தொடர்பானதாகவும் புனைவுகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். எனவே அவற்றில் அரசியல், சித்தாந்தம் முதலியன கூடாது என்றும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஜெயகாந்தன் எழுதியது இலக்கியமா இல்லையா ?
புனைவும் அழகியலும் மட்டுமே இருக்கவேண்டும் என்றால் இப்படி இருக்குமோ ? காந்தியடிகளைப்பற்றிய ஒரு கவிதை எழுத வேண்டும் என்றால் அவரது அழகைப் பற்றிப் பாட வேண்டுமா? மன்மதனுக்கு ஒப்பிட்டுப் பாட வேண்டுமா?
இலக்கியம் என்றாலே நடைமுறை வாழ்வியல் சாராமலே இருக்க வேண்டும் என்று உள்ளதா?
‘கட்டுரைகள்’ இலக்கியம் இல்லையா? அல்லது சில தலைப்புக்கள் பற்றி மட்டுமே இருந்தாலொழிய கட்டுரைகள் இலக்கியம் என்று கொள்ளப்படாதா? அதில் சமயம், மொழி, அக்கால அரசு தொடர்பான செய்திகள் இருந்தால் அவை இலக்கியம் இல்லையா?
உதாரணமாக – தேவாரம் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது என்று கொண்டால் அக்கட்டுரையில் தேவாரம் பாடிய அப்பர் பற்றிய செய்திகள் இடம் பெறக் கூடாதா? அத்துடன் அவர் சார்ந்த சமயம் பற்றியன இடம் பெறக் கூடாதா? சிவபெருமான் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இடம் பெறக் கூடாதா ? அக்கட்டுரையை வைணவர்களும் படிப்பார்கள் என்பதால் சைவம் பற்றிய கருத்துக்களும் திருமால் பற்றி வந்துள்ள சில கருத்துக்களும் இடம்பெறக்கூடாதா?
‘தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று சைவர்கள் கூறுவதால் இந்து சமயம் சாராத வாசகர்கள் படித்தால் மனம் புண்படுவர் என்பதால் இந்த வாழ்த்து பற்றிப் பேசக்கூடாதா?
அல்லது வைணவ சமயம் சார்ந்துள்ளதால் அத்வைத சம்ப்ரதாயம் தொடர்பான காஞ்சி மட வழக்கு பற்றி ஆராயக் கூடாதா? அல்லது காஞ்சி மடம் வெகு விரைவில் தனது ஆளுமையையும் சமூகத்தில் தனது செல்வாக்கையும் இழக்க வேண்டும் என்று விரும்பும் சில சக்திகள் பற்றி சிந்திக்கவே கூடாதா ? அப்படி சிந்திக்க வேண்டி இருப்பதால் வெள்ளையர் ஆட்சி தொடங்கி தற்போது வரை பாரத சமூகத்தின் வீழ்ச்சியை விரும்பும் இயக்கங்கள் பற்றி சிந்திப்பது பாவமா ?
பாரதத்தின் ஞான மரபே தர்க்கம் என்னும் அடிப்படை அமைப்பைச் சார்ந்தது தானே ? கேள்விகள் கேட்கப்படுவது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வே. உபநிஷதம் வேறு என்ன ? சங்கரரும் திருநாவுக்கரசரும் இராமானுசரும் வாதம் செய்து வெற்றி கொண்ட வரலாறு தானே நமது ? ஆக ‘எல்லோருக்கும் ஏற்கப் பேசுவது’ என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை என்பது தானே உண்மை?
இவ்வாறு எல்லாம் எந்த எண்ணப் போக்கையும் நிந்தனை செய்யாமல் எழுதுவதே இலக்கியம் என்றால் பிறந்த குழந்தை சிரித்ததையும் ரோஜாப்பூ மலர்ந்ததையும் மட்டுமே எழுத வேண்டும். இவை தான் இலக்கியமா?
புரியவில்லை.
சில விஷயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. எந்த நிகழ்வையும் ஆராயும்போதும் சமயம், மொழி, சித்தாந்தம் முதலியன பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் எனக்கு உள்ள ஒரே வழிகாட்டி இது தான். முனைப்பாடியார் என்னும் புலவர் கூறும் சட்டமே நான் பின்பற்றும் வழி. அது இது தான் :
“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்கண்
ஆய்தல் அறிவு உடையார் கண்ணதே, காய்வதன்கண்
உற்ற குணம் தோன்றாதது ஆகும், உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”
விருப்பு வெறுப்பின்றி ஒரு பொருளை ஆராய்ந்து அறிய வேண்டும். விருப்போடு ஆராய்ந்தால் பொருளின் கண் உள்ள குறைகள் தென்படாது; வெறுப்போடு ஆராய்ந்தால் அதனின் கண் உள்ள நல்ல குணங்கள் தென்படாது; அறிவுடையார் அப்படிச் செய்வர்.
இதுவே என் வழிகாட்டி.
இலக்கிய ஆய்வு என்பது வயலில் நெல் அறுக்கும் கத்தி போன்றது; அது நல்ல கதிரை அறுவடை செய்யும். அதற்காக பதர்களையும் ஊடுறுவிகளையும் அறுத்தெறியும். என் பணி அது போன்றதே; அதை வெண்ணை வெட்டும் கத்தியாக்க விருப்பமில்லை.
நான் எழுதுவது இலக்கியமா இல்லையா என்பது பற்றிக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்கிறதா என்பதே முக்கியம் என்று கருதுகிறேன்.
பாரதியின் இந்த வரியுடன் முடிக்கிறேன். என் நிலை இது தான்.
“தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?”
வீழ மாட்டேன்.