ஆண்டு 1953.
நராயண ஐயங்கார் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டிருந்த எனக்குத் தூக்கம் கெட்டது. மெல்லக் கண் விழித்துப் பார்த்தேன். தெருக்கோடியில் புகை போன்று இருந்தது. நாராயண மாமா பெரிய தோண்டியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒடினார்.
ஊரில் ஒரே களேபரம். சன்னிதித் தெருவே அல்லோலகல்லோலப் பட்டது. குடியானத் தெருவிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். முடிந்தவரை கிணறுகளிலிருந்து எல்லாம் தண்ணீர் கொண்டுவந்து இருந்தனர்.
அருகில் இருக்கும் குளங்களில் இருந்தெல்லாம் தண்ணீர் கொண்டுவர வண்டிகள் அனுப்பப்பட்டன.
சன்னிதித் தெருவாசிகள் எல்லாரும் அழுதபடி இருந்தனர். செய்வதறியாமல் ‘ஓ’வென்று கதறினர்.
ஒன்றும் புரியவில்லை. எதுவோ கலவரம் போல் தெரிந்தது. புதுமையாக இருந்தது.
அப்பா வேறு ஊரில் இல்லை. வழக்கம் போல் வேத பாராயணம் என்று மன்னார்குடி சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் விபரமாவது தெரியும். சின்னவன் என்று எனக்கு யாரும் ஒன்றும் சொல்லாமல் தெருக்கோடி நொக்கி ஓடியவண்ணம் இருந்தனர்.
நானும் வேஷ்டியைப் பிடித்துக்கொண்டு ஓடிச் சென்று பார்த்தேன்.
கூட்டம் தாண்டி நெருப்பு சுவாலை தெரிந்தது. ஆனால் நெருங்க முடியவில்லை. அனல் ஆக அதிகம்.
சற்று விலகி நின்று பார்த்தேன்.
அறுபது அடி தேர் எரிந்துகொண்டிருந்தது.
பெண்கள் வாய் விட்டு அழுதனர். மக்கள் ஆக்ரோஷமாக மண்ணையும் தண்ணீரையும் வாரி இரைத்தனர். அணைந்தபாடில்லை.
என் பங்குக்கு நானும் வேஷ்டியை அவிழ்த்து மண்ணை வாரி நிரப்பி தேர் மீது மீண்டும் மீண்டும் எறிந்தேன்.
யானைப் பசிக்கு சோளப் பொறி போல் இருந்தது. ஒரு நாள் முழுவதும் எரிந்து தணிந்தது.
தேர் அழுந்தியதால் தேர் அழுந்தூர் என்று பெயர் பெற்ற எங்கள் ஊரில் தேர் இல்லை. வெறும் கரிக் கட்டைகளே மிஞ்சின.
பேரிழப்பு. அதன் பின் பேரமைதி. ஊர் அழிவு தொடங்கியது. ஊரில் எல்லார் வீடுகளிலும் ஒருசேர இழவு விழுந்தது போல் இருந்தது.
ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்கும்போது இவ்வாறு ஒரு பேரழிவு எற்படும் என்று எங்கோ படித்த ஞாபகம் வந்தது.
ஆமருவியப்பன் களை இழந்து போனான். வருடங்கள் செல்லச் செல்ல ஆமருவியப்பனின் உற்சவங்களும் படிப்படியாக நின்று போயின.
ஐம்பது வருடம் தேர் இல்லாமலே காலம் கழிந்தது. ஊரில் மங்கலம் அழிந்து அமங்கலம் தலைவிரித்தாடியது. தன் சோகை அழிந்த ஊரில் இருந்து சன்னிதித் தெரு காலியானது. பிழைப்பு தேடி மக்கள் புலம் பெயர்ந்தனர்.
தேர் எரிந்த கதை மறக்கப்பட்டது. தேராத ஊரானது தேரழுந்தூர்.
வருடாவருடம் வானம் பொய்த்தது. கழனிகள் நிரம்பிய ஊர் என்று ஆழ்வார் பாடிய ஊர் கழிசடைகளால் கை விடப் பட்டது. வயிற்றுப் பிழைப்பு மேலோங்கியதால் படித்த மக்களும் வெளியேறினர்.
தேரும் ஊரும் மறக்கப்பட்டது என்பது என்னால் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும் போதும் தேர் முட்டியில் ஒரு பெருமூச்சு விட்டுச் செல்வதே முடிந்தது. வேஷ்டியை அவிழ்த்து மண்ணை அள்ளிப்போட்டது மீண்டும் மீண்டும் நினைவு வந்து வருத்தியது.
செய்தி கேட்டு அப்பா உடன் வந்து சேர்ந்தார். அப்பாவும் நாராயண ஐயங்காரும் துக்கம் தாங்காமல் அழுதனர். ஏதோ பெரிய அழிவு வருகிறது என்று அப்பா சொன்னார்.
தேர் எரிந்த ஒரு வருடத்தில் அப்பவும் மாரடைப்பால் காலமானார். குடும்ப பாரம் காரணமாக வெளியூரில் படிப்பும் வேலையும் என்று கழிந்தது.
ஆனால் தேர் எரிந்த காட்சி மட்டும் மனதை விட்டு மறையவில்லை.
ஐம்பது வருடத்தில் தேர் இருந்த இடத்தில் கோழி இறைச்சிக்கடை முதலியன தோன்றின. அரசு பட்டா வழங்கி அந்த இடத்தில் வீடும் கட்டப்பட்டது. ஊரும் மக்களும் மறந்த தேர்க்கட்டைகள் ஐம்பது வருட மழை வெயில் தாங்கி சிறிது சிறிதாக அழிந்தது. பண்டைய இரும்பும் சில பாழடைந்த கட்டைகளுமே அந்த இடத்தின் மறைந்த கதையைப் பேசின.
தேர் மூட்டி என்று அழைக்கப்பட்ட அந்த இடம் இன்னமும் அவ்வாறே அழைக்கப்பட்டது. ஆனால் தேர் தான் இல்லை.
கல்வி, குடும்பம், பொதுச் சேவை என்று காலம் சென்று கொண்டிருந்தது. பணி ஒய்வு பெற்று ஊர் திரும்பினேன்.
அதுவரை ஊர்க்காரர்களை சந்திக்கும் போதெல்லாம் ‘தேர்’ கட்டுவது பற்றி நகைச்சுவையாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் நாற்பதாண்டுகளும் அரசுகள் இந்த முயற்சிக்குக் கை கொடுக்காது என்ற பொதுவான நம்பிக்கையே. மக்களின் எண்ணம் போலவே அரசுகளும் இம்மாதிரியான முயற்சிகளுக்குக் கை கொடுக்காமலேயே இருந்தன. கோவில்களுக்கும் அவை சார்ந்த நிலங்கள் மற்றும்
அசையாச் சொத்துக்கள் முதலியன ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் அரசுகள் அவற்றை மீட்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது நிதர்சனகமாகவே இருந்ததும் தேர் பற்றிய அரசுகளின் எண்ண ஓட்டம் பற்றிய மதிப்பீடாக இருந்தது.
‘கோஸக பக்த சபா’ என்ற ஒரு அமைப்பை வேறு இருவருடன் சேர்ந்து தொடங்கினேன். அதன் மூலம் ஊர்ப் பெருமாளுக்கு உற்சவங்கள்
‘நடத்தப்பட்டன. வருடம் தோறும் வசூல் செய்து உற்சவங்கள் செய்தோம். அதற்கே போதும் போதும் என்று இருந்தது. ஆளைப் பார்த்தவுடன் கதவைச் சாத்தும் அளவிற்கு ஊர் ஊராகச் சென்று கோவில் விஷயமாக அலைந்துகொண்டிருந்தோம்.
சில வருடம் முன்பு அன்றைய அரசு ஒரு திட்டம் அறிவித்தது. பழம்பெரும் கோவில்களுக்குத் தேர்த் திருப்பணி செய்ய்ய ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை என்று அறிவித்தது. ஆனால் மேலும் பணம் தேவைப்பட்டால் பக்தர்கள் தாங்களே ‘நன்கொடையாளர்’ முறையில் உதவி செய்யலாம் என்று ஆணை பிறப்பித்தது.
இது ஒரு நல்ல ஆரம்பம் என்று நினைத்தேன். சபாவில் கூப்பிட்டுப் பேசினேன். ஆனால் ஐந்து லட்சம் கொண்டு என்ன செய்ய முடியும் என்று பின்வாங்கினோம். இன்னொரு அரசு பதவி ஏற்றது. பயன்படாமல் இருக்கும் அரசுப் பணம் மீட்டுக்கொள்ளப்படும் என்று அறிவிப்பு செய்தது.
வேறு வழி தெரியவில்லை. தேர் கட்டலாம் என்று முடிவெடுத்தோம்.
அரசு ஒப்புதல் தேவை என்றார்கள். பல முறை முயற்சி செய்து பெற்றோம். தேர் கட்டும் ஸ்தபதியைத் தேடினோம். மன்னார்குடித் தேர் எவ்வாறு கட்டினார்கள் என்று ஆராய்ந்தோம். பல ஸ்தபதிகளைப் பார்த்தோம். ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தோம்.
பின்னர் மரம் ஏலம் எடுக்கவேண்டும் என்று ஒப்பந்தக்கார்ரகளைத் தேடி அலைந்தோம். ஒப்பந்தம் செய்தவர் மரம் தரவில்லை.இழுத்தடித்தார். இதற்கிடையில் ஒவ்வொறு நிலையிலும் அரசியல், அதிகாரவர்க்கம், வேண்டாதவர்கள் மற்றும் கலகலக்காரர்கள் குறுக்கீடுகள் என்று ஒவ்வொறு நாளும் முன்னேறினோம்.
இதற்கிடையில் எரிந்த தேரின் மிச்சங்களைப் பார்வையிட ஒரு அரசுக் குழு வந்தது. பின்னர் சிதைந்த தேரின் மிச்சங்களை அப்புறப்படுத்தினோம். 1835-ல் யாரோ ஒருவர் தேரினை செப்பட்னிட்டுள்ளார் என்று ஒரு செப்புப் பட்டயம் கிடைத்தது. சுமார் 150
வருடங்கள் கழித்து அத்திருப்பணியைச் செய்ய ஆண்டவன் என்னையும் நண்பர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளான் என்று நினைத்து அன்று முழுவதும் பசியே எடுக்கவில்லை. ஒரு சகாப்தத்தின் நிறைவில் நிற்பது போன்ற உணர்வு. ஒரு சரிந்த
சாம்ராஜ்யத்தினை மீட்கும் பணியில் இருப்பது போன்று உணர்ந்தேன்.
அப்போது முதல் நான் என்ன செய்தேன், அவை எப்படி செய்யப்பட்டன என்று தெளிவாக நினைவில்லை. தற்போது நினைத்தால் கூட பிரமிப்பாக உள்ளது. இலுப்பை மரம் பெரிய அளவில் தேவை என்று ஸ்தபதி கூறினார். ஊர் ஊராக அலைச்சல். எங்கெங்கு இலுப்பை மரம் தென்படுகிறதோ உடனே அந்த இடத்தின் உரிமையாளரை சந்திப்பது, மரம் கேட்பது என்று இருந்தேன். ஆனால் என்ன அதிசயம் ? கோவில் தேருக்காக என்று தெரிந்தவுடன் மிகப் பலரும் இனாமாகவே தந்தனர். ஆட்களைக்கொண்டு வந்து மரம் அறுப்பது,வண்டிகளில் கொண்டு செல்வது என்று மிகக் கடும் பயணம் அது. எந்தெந்த ஊருக்கெல்லாம் சென்றேன் என்று என் நினைவில் இல்லை. அனேகமாகத் தஞ்சை மாவட்டம் முழுவதும் சென்றிருப்பேன்.
மரம் வெட்டக் காவல் துறை, வனத் துறை முதலிய துறைகளில் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் அது ஒரு போராட்டமே. அதைப்பற்றி எழுத இந்த ஒரு சகாப்தம் வேண்டும்.
பின்னர் தேருக்கான இரும்பு சேகரிப்பு. பல இரும்பு வியாபாரிகள் தந்தனர். இதில் பல சமயத்தவர்களும் அடக்கம்.
மூன்று ஆண்டுகள் குடும்பம், உடல் நிலை இவை பற்றிய நினைவே இல்லை. ‘தேர்’ மட்டுமே எண்ணத்தில் இருந்தது. தேர் எரிந்த காட்சி மனதில் அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எப்படியும் தேர் கட்டி ஒட்டி முடிக்க வேண்டும் என்று ஒரு வெறி என்று இப்போது நினைக்கிறேன்.
எரிந்த தேர் மீண்டு எழப் போகிறது என்று பெயர் தெரியாத பலர் கூட உதவினர்.
2005-ல் பல தியாகங்களுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் வெள்ளோட்டம். அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து வந்திருந்த கூட்டம் இருக்கிறதே, இதற்காக ஐம்பது வருடங்களாகக் காத்திருந்திருப்பார்கள் போல் தெரிந்தது. மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் நிகழ்வாக அது அமைந்தது.
‘தேர் இழந்தூர்’ என்று அறியப்பட்ட எங்கள் ஊர் ‘தேர் எழுந்தூர்’ என்று ஆனது என்று சபா தலைவர் ரங்கனாதன் கூறி ஆனந்தப்பட்டார். உடன் பணியாற்றிய ரங்கராஜன் பேச முடியாமல் கண் கலங்கி நின்றார். அன்று எழுபது வயது கடந்த இருவரும் செய்துள்ள தியாகங்கள் பற்றி ஒரு தொடர் எழுதலாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே போல் அனைவரும் கூடி தீ அணைக்க முற்பட்டனர். ஐம்பது ஆண்டுகள் கழித்து அதைவிடப் பல மடங்கு மக்கள் வந்திருந்து புதிய தேரை இழுத்தனர். வெள்ளோட்டத்தின் போது என் பள்ளி நண்பன் அஜீஸ் தண்ணீர்ப்பந்தல் அமைத்திருந்தார். மத நல்லிணக்கம் என்றால் என்னவென்று எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள்.
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உற்சவத்தின்போது ஆமருவியப்பன் தனது தேரில் எழுந்தருள்கிறார்.
1955-ல் என் மனதில் எரியத் தொடங்கிய தீ, 2005-ல் அணைந்தது. ஊரார் பலரின் நிலையும் அப்படியே என்று நினைக்கிறேன்.
நாராயண ஐயங்காரும் அப்பாவும் இன்று இருந்திருந்தால் சந்தோஷப்படுவார்கள்.
Raghavan
September 23, 2016 at 9:43 pm
Wonderful service in restoring heritage and more so to “uphold divinity”, started by Shri. Narayana Iyengar is well completed. Lord Narayana will bless all. I was soul satisfied when I had darshan of Lord Amaruviyappan about 8 years ago and Perumaal ‘tiru uruvam’ is still in my eyes.
LikeLike
Amaruvi Devanathan
September 24, 2016 at 5:07 pm
thank you.
LikeLike
Lakshmanan Rajagopalan
October 18, 2016 at 9:42 am
படித்தபின், நேரில் நம் கண் முன் நடந்தது மாதிரி அப்படி ஒரு பிரம்மை. அருமையான பதிவு.
LikeLike
Amaruvi Devanathan
October 18, 2016 at 10:48 pm
thank you. this is a true story. rest in ‘pazhaiya kanakku’ – my book.
LikeLike
Kumar
February 21, 2018 at 6:58 pm
நன்றி!
LikeLike
ஆரியத்தமிழன்
February 25, 2018 at 10:03 pm
உருக்கமான உண்மை கதை தேரழுந்தூருக்கு பணிநிமித்தம் பலமுறை செல்லுவேன் இனி தேரை பார்க்கும்போது உங்கள் நினைவு வரும்
LikeLike