தற்போது பெரும்பாலும் தமிழ் மக்களால் மறக்கப்பட்டுவிட்ட ஒரு ஹாஸ்ய எழுத்தாளர் தேவன் என்னும் மஹாதேவன். 50 களில் கோலோச்சிக்கொண்டிருந்த அவர் பெரும்பாலும் உயர் மத்திய தர ப்ராம்மணக் குடும்பங்கள், அவர்கள் சார்ந்த கதைகள், அவர்களது தொழில் சார்ந்த நகைச்சுவை நிகழ்வுகள் முதலிய பல விஷயங்கள் பற்றிக் கதைகள் எழுதியுள்ளார்.
‘துப்பறியும் சாம்பு’ அவரது முக்கியத் தொகுப்பு.
;ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’, ‘மிஸ்.மாலதி’ ,’பார்வதியின் சங்கல்பம்’ முதலியன வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட கதைகள்.
‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’ அக்கால ஜுரி முறைப்படி வழக்கு நடக்கும் விதத்தை விவரித்திருக்கும். நீண்ட நாவல் அது. கடைசி வரை சுவாரசியம் குறையாமல் எழுத்தபட்டிருக்கும். அக்கால நீதி முறை நடைமுறையில் இருந்தபோது நாம் இல்லையே என்று நம்மை எண்ண வைக்கும்.
அமரர்.கல்கியுடன் இணைந்து பணியாற்றியவர் திரு.தேவன். ஆனந்த விகடனில் ஆசிரியராகவும் இருந்துள்ளர் அவர்.
சென்னை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் தேவன்.
வெறும் 43 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார் தேவன். அதற்குள் அவர் எழுதிக் குவித்த கதைகள் ஏராளம்.
அவரைப் பற்றி இப்போது ஏன் என்று கேட்கலாம். சில நாட்கள் முன்பு அவரது ஒரு சில புத்தகங்களை மீண்டும் படித்தேன். வாழ்வில் பல ஆண்டுகள் பின்னே சென்றேன்.
வாழ்வின் மிகச் சாதாரணமான விஷயங்களைக் கூட மிகவும் நகைச்சுவையுடன் கூறியிருப்பார் அவர்.
தேவன் கதைகளை ஒரு மீள் வாசிப்பு செய்து பாருங்கள். தமிழகத்தின் பி.ஜி.வோட்ஹவுஸ் ( P.G.WodeHouse ) என்று சாதாரணமாக அழைக்கலாம் இவரை.