ஆட்டோ ஓட்டுபவர்கள் விதிகளை மதிக்காதவர்கள் என்று நான் கூறினால் ‘இல்லை, எல்லாரும் அப்படி இல்லை, ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அனைவரையும் குற்றம் சொல்லக் கூடாது’ என்று குதிப்பவரா நீங்கள் ?
அப்படியேன்றால் தொடர்ந்து படியுங்கள்.
தாம்பரம் என்ற நாட்டிலிருந்து தாம்பரம்-சானடோரியம் என்ற மிக நீண்ட 5 கி,மீ தூரம் உள்ள நாட்டிற்குப் போக இன்று மாலை முயன்றேன். ஷண்முகம் சாலை- ஜி.எஸ்..டி. சாலை சந்திப்பில் உள்ள ஆட்டோ கழகத்தில் கேட்டுப் பார்த்தேன் ( ஆட்டோ கழகம்- Auto Stand ). சுமார் 25 ஆட்டோக்களைக் கேட்டேன்.
ஆட்டோ எண்களைக் குறித்துக்கொண்டேன். அவர்களிடம் சென்று ‘சானடோரியம் வருவீர்களா” ?
‘போகலாம் சார், 120 ரூபா ஆகும்’
‘மீட்டர் போடுவீங்களா ?’
‘மீட்டர் எல்லாம் வராது சார். ஒரே பேச்சு 100 ரூபாய். வரீங்களா?’
‘இல்லெ, வெறும் 4 கிலோ மீட்டர் கூட இருக்காது. 100 எல்லாம் ரொம்ப அதிகம். மீட்டர் போடுங்க’.
‘இன்னா சார், மீட்டர் எல்லாம் கிடையாது. 100 ரூபாய் தான்.’
பல ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் என்றவுடன் மேலும் கீழும் பார்த்துச் சென்றனர்.
ஆனால் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் மீட்டர் போட மறுத்துவிட்டனர்.
சரியென்று ஜி.எஸ்.டி. சாலை கடந்து தாம்பரம் ரயில் நிலையம் சென்றேன்.
அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர் இருவரிடம் பேசினேன்.
‘120 ரூபாய் ஆகும்’.
‘மீட்டர் போடுவீங்களா ?’
‘அது சரி. மீட்டர் போடறேன், ஆனால் பார்க்கிங்க் செலவு ( Parking Charge ) ரூ.30 தருவீங்களா ?’
பின்னர் வெறும் ரூ.15 செலவில் நாங்கள் மூவரும் தாம்பரத்திலிருந்து சானடோரியத்திற்கு ரயிலில் வந்து சேர்ந்தோம். ஆட்டோ ஓட்டுபவர்கள் நமக்காக ஒட்டுகிறார்களே தவிர நாம் அவர்களுக்காக இல்லை என்று மனைவியும் ஒத்துழைத்தாள்.
100 ரூபாய் கொடுக்கமுடியாமல் இல்லை. ஆனால் கொள்கை என்று ஒன்று இருக்கிறதே. ஆட்டோ அட்டூழியத்திற்கு இடம் கொடுக்க மனம் இல்லை.
இதில் நாம் பார்க்க வேண்டியது :
மீட்டர் போடுவது கட்டாயம் என்பதை ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு சதவீதம் கூட மதிப்பதில்லை.
மீட்டர் போட வேண்டும் என்று கூறுபவர்களை ஏதோ மன-நலமில்லாதவனைப் போல் பார்க்கிறார்கள்.
மக்களும் மீட்டர் போட வேண்டும் வற்புறுத்துவதில்லை என்று தெரிகிறது.
இந்த ஆட்டோ ஓட்டுனர்களைக் காவல் துறையும் கண்டுகொள்வதில்லை என்பதை நேரே பார்த்தேன்.
ஒருவேளை கொட நாட்டில் மீட்டர் போடுகிறார்களோ என்னவோ !
மனம் வெதும்பி அத்துணை எண்களையும் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டேன். வேறென்ன செய்ய ?