இந்த வாசல் கதவு பற்றி உனக்குத் தெரியுமா ? சொர்க்க வாசல் தான். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் ஒரு கதவு என்று நினைக்கிறாயா ? அத்துடன் அதன் பணி முடிந்தது என்று நினைக்கிறாயா ? மற்ற கோவில்களில் எப்படியோ, இங்கு அப்படி இல்லை.
முதலில் இதனை அமைத்தது கரிகாலன் தான். நீ தெரிந்துகொண்டது உண்மை தான். ஆனால் இது அந்தக் கதவு அல்ல. இதுவரை இரண்டு முறை மாற்றப்பட்டுவிட்டது. ஆமாம், 1200 வருஷத்தில் வெறும் இரண்டு முறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது இது.
ஆனால், இரண்டாம் முறை ஏன் மாற்றப்பட்டது தெரியுமா ?
வருடம் 1858. ஆமாம், ரொம்ப சமீபம் தான். என் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இந்தக் கோவில் சமாச்சாரங்களும் இப்படித்தான். என்னைப் பொருத்தவரை வரலாறு என்பது சமீபம் தான். ஒரு நிகழ்வும் இன்னொன்றும் 1000 வருஷம் இடைவெளி விட்டு இருக்கும். அவ்வளவே.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். கரிகால் சோழன் உறையூரிலிரிந்து காவிரிக் கரை வழியாக வந்தபோது இந்த இடத்தில் தான் கனவு கண்டு முன்னரே சின்னதாக இருந்த கோவிலைப் பெரிதாக்கினான். அவன் வைத்தது தான் இந்தக் கதவின் முன்னர் இருந்த கதவு.
அதன் பின்னர் மறுபடியும் கதவு மாற்றப்பட்டது 1858-ம் வருஷம்.
இதற்குச் சில வருஷங்கள் முன்னர் தான் நான் இருந்த தேர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்த வாசல் நன்றாகத்தானிருந்தது. நல்ல தேக்கு மரம். ஒரு முறை, 1655-ல் முகலாய தளபதி ஒருவன் இதை உடைக்க முனைந்தான். நல்ல பாம்பு கடித்து இறந்தான். கதவின் இடுக்கில் இருந்த வாழும் பாம்பு அது.
அதிலிருந்து வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இந்த வாசல் திறக்கப்பட்டது. அன்று மட்டும் பாம்பு புதருக்குள் சென்றுவிடும். மற்ற நாட்களில் கதவில் தான் வாசம்.
ஆக மிகவும் பழைய கதவு அது.
மிலேச்ச வீரர்கள் பல முறை இந்தக் கதவை உடைக்கப் பார்த்தனர். பீஜப்பூர் சுல்தானின் ஆட்கள், சில சேனத் தலைவர்கள் என்று பலர் முயன்று பார்த்தனர். ஏனெனில் கதவு பொருத்தப்பட்ட நிலையின் அடியில் கரிகாலன் கால பொகிஷம் இருக்கிறது என்று ஒரு பேச்சு இருந்தது.
ஆனால் வாழும்பாம்பு இருப்பதால் அதன் அருகில் யாரும் செல்வதில்லை. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கதவைத் திறந்து மூடி விடுவார்கள்.
அராபிய மிலேச்சன் தேவலாம். ஒரு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு கதவைத் திறக்க முற்பட்டுப் பின் அதன் அருகில் வரவில்லை.
ஆனால் இந்த வெள்ளைக்காரன் எதையும் கண்டுகொள்ள வில்லை. பாம்பாவது ஒன்றாவது என்றான். மேலத் தெருவில் இருந்த துபாஷியும் இதற்கு உடந்தை.
துபாஷி வெள்ளைத் துரைக்கு மேலும் தூபம் போட்டான். கோவிலுக்கு இடப்பக்கம் கம்பர் மேடு இருக்கிறதே, கம்பனுக்குக் சோழன் கொடுத்த வைரங்கள் இந்தக் கதவின் அடியில் தானிருக்கின்றன என்று வேறு சொல்லி விட்டான்.
ஆனால் அது தான் உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை.
அந்தப் பொக்கிஷம் எடுக்க கிளைவ் – அது தான் அவன் பெயர் – இங்கேயே தங்கிவிட்டான். மேலத் தெருவில் துபாஷின் வீட்டிற்கு அடுத்த் வீட்டிற்கு வந்துவிட்டான்.
ஊரில் சன்னிதித் தெருவில் யாருக்கும் கிளைவ் ஊரில், அதுவும் மேலத் தெருவில் தங்குவது பிடிக்கவில்லை. பெருமாள் உற்சவம் போது மேலத்தெருவில்தான் அரை மணி நாதஸ்வரக் கச்சேரி இருக்கும். ஊரே அன்று அங்கு கூடி இருக்கும். பெண்களும் கூட வெளியே வந்து கச்சேரி கேட்பார்கள்.
ஆனால் கிளைவ் வந்த பிறகு பெண்கள் வெளியே வருவதில்லை.
சன்னிதித் தெருவே அன்று கொதித்தெழுந்தது. உன் தாத்தாவின் அப்பா – சுதர்சனம் – வீடு வீடாகச் சென்று அந்தச் செய்தியைச் சொன்னார்.
பாதி வேதம் ஓதிக்கொண்டிருந்த சில அந்தண்ர்கள் அதை அப்படியே விட்டுவிட்டு துர் தேவதைகளை ஏவி விடும் மந்திரங்களை கோபம் கொப்பளிக்க உச்சரிக்கத் துவங்கினர்.
சதுர் வேதி அக்ரஹாரம் சார்ந்த ஸ்மார்த்த அத்வைத பண்டிதர்கள் கடும் கோபம் அடைந்து பிரத்யங்கரா தேவியை அழைக்க அவளது மந்திரங்களை உச்சரிக்த் துவங்கினர். மந்திர உச்சாடனங்களைத் தாங்க முடியாமல் அவர்கள் வீட்டு மாடுகள் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓட முற்பட்டன.
ஊரின் அயோக்கியத்தனங்களில் ஊறிய பெருந்தனக்காரர் கூட ஆவேசம் அடைந்தார்.
குடியானத் தெருத் தலைவன் உக்கிரபாண்டி ஆவேசத்துடன் வேல் கம்புகளை எடுத்துவர ஆட்களை அனுப்பினான்.
ஊரின் மந்திரவாதி என்று அறியப்பட்ட சாமினாத சாஸ்திரிகள் காவல் இட்சிணிகளை அழைக்கும் உச்சாடனங்களைச் செய்தார். அருகில் இருந்தவர்கள் முகங்களில் கவலை தென்பட்டது. அதற்கு முன்னர் அவர் அந்த இட்சிணிகளை அழைத்தபோது சில நாட்களில் பிடாரி அம்மன் கோவில் பூசாரி புளியமரத்தில் உயிர் விட்டான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் தெற்கு வீதி கணிகையின் நகையை அபகரித்தான் என்று அவள் முறையிட்டிருந்தாள். அது உண்மை என்று அறிந்ததும் சாமினாத சாஸ்திரி உக்கிரமானார். கணிகையோ யாரோ, சாமினாத சாஸ்திரியைப் பொருத்தவரை தொழிலில் தர்மம் வேண்டும்.
பெரும் மனக் கவலையுடன் சுதர்சனம் என் தேரின் அருகில் அமந்து தேம்பித் தேம்பி அழுதார். ‘இதுவரை இப்படி ஆனதில்லையே. இன்னும் இந்த ஊருக்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ..’ என்று அழுதார்.
அவர் புலம்பியது இது தான். கிளைவ் துரை , துபாஷியின் துணையுடன் சொர்க்கவாசல் கதவை இரவோடு இரவாக வெடி வைத்துத் தகர்த்துள்ளான். வாசலின் கீழே தோண்டிப் பார்த்துள்ளான். கீழே ஏதோ கிடைத்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக இருவரும் வெளியேறிவிட்டனர். சொர்க்கவாசல் கதவு உடைந்ததோடு அத்துடன் சேர்ந்து கரிகாலன் கட்டிய மதிள் சுவரின் ஒரு பகுதியும் விழுந்துவிட்டது.
ஊர்ச் சபை கூடியது. அவரவர் ஆக்ரோஷமாகப் பேசினர். மிலேச்ச கிறித்தவன், பசு மாடு உண்பவன் கோவிலின் உள்ளே நுழைந்தது ஒன்று, கோவிலின் சொர்க்கவாசல் விழுந்தது இன்னொன்று, துபாஷி என்றொரு உள்ளூர் ஆள் சோரம் போய் மிலேச்சனை உள்ளே நுழையவிட்ட துரோகம் என்று கடைசியில் இப்படி முடிவானது. ஊரில் அனைவரும் சேர்ந்து பரிகார யாகம் செய்வது என்றும், துபாஷிக்கு,உடல்கிடைக்காமல் போனால் செய்யப்படும் தர்ப்பப் பிரேத தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முடிவானது.
இந்த முடிவெல்லாம் ‘வழி காட்டிப் பிள்ளையார்’ கோவில் மண்டபத்தில் நடந்தது.
ஆனால் கிளைவும், துபாஷியும் ஊரை விட்டுப் போகவில்லை என்றும் ஒரு பேச்சு நிலவியது. அது வதந்தி என்று புறக்கணிக்கப்பட்டது.
பின்னர் நடந்தது தான் அக்கிரமம். சில நாட்களுக்குப் பின் மதறாஸப்பட்டிணத்திலிருந்து பெரிய பெரிய வண்டிகள் வந்தன. வெள்ளைக்கார போர் வீரர்கள் சுமார் ஆயிரம் பேர் வந்தனர். கம்பர் மேடு தோண்டப்பட்டது. பலகை பலகையாகப் பெயர்த்துக்கொண்டு போனார்கள். அவர்கள் நாட்டுக்குக் கொண்டுபோனார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.
இதற்கெல்லாம் காரணம் துபாஷியும் கிளைவும் என்று சுதர்சனர் கூறினார்.
இதெல்லாம் நடந்து இருபது வருடம் கழித்து ஒரு நாள் தெற்குத் தெரு கணிகை வீட்டில் துபாஷியும் கிளைவும் இருப்பதாக வதந்தி பரவியது.
ஊரே திரண்டு வேல் கம்புடன் அவள் வீட்டை முற்றுகை இட்டது.
கணிகை வெள்ளையம்மா வெளியே வந்தாள். பெரிய ஆவேசம் கொண்டிருந்தாள். தலைவிரி கோலம்.
‘எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கறேன். நானும் இந்த ஊர் தான்’, என்று ஆவேசம் கொண்டவள் போல் பேசினாள்.
‘உள்ளே துபாஷியும் கிளைவும் இருக்கிறார்களா?’ – ஊர் கேட்டது.
‘நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போகலாம்’, என்றாள் வெள்ளையம்மா.
ஊர் கேட்கவில்லை.
‘எல்லைப் பிடாரி மேல ஆணை. நான் பார்த்துக்கொள்கிறேன்’. இதையே வெள்ளையம்மா திரும்பத்திரும்ப கூறினாள்.
சாமினாத சாஸ்திரி மேற்கொண்டு பேசினார்.
‘பிடாரி மேல ஆணை. யாரும் பேச வேண்டம். வெள்ளையம்மா பார்த்துப்பா’.
திடீரென்று வெள்ளையம்மா உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள்.
சுதர்சனம் சொன்ன பிறகு ஊர் கலைந்தது.
சுதர்சனமும் சாமினாத சாஸ்திரியும் கூடிப் பேசிக்கொண்டனர்.
அன்று இரவு யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என்று சுதர்சனம் தண்டோரா போட ஆளை அனுப்பினார்.
அன்று இரவு யாரும் வெளியே வரவில்லை.
மறுநாள் காலை சொர்க்கவாசல் அருகிலிருந்த நந்தவனக் காவல்காரன் முத்தையன் ஓடி வந்தான்.
ஊரே சொர்க்கவாசலுக்கு வந்தது.
கையில் பிடாரி அம்மன் வாளுடன் வெள்ளையம்மா நின்றுகொண்டிருந்தாள்.
சொர்க்கவாசல் கதவின் நிலைப்படியின் அடியில் புதையலுக்காகத் தோண்டப்பட்ட குழியில் துபாஷியும் கிளைவும் கிடந்தனர், தலை இல்லாமல்.
‘சொர்க்கம் தேடி வந்தான்கள். சொர்க்கவாசலில் இணையலாம் என்று கூட்டி வந்து மேலே அனுப்பி விட்டேன். 20 வருஷம் மூடாத கதவு இனி மூடும்’ என்று ஆவேசத்துடன் கூறினாள். சில நிமிஷம் கழித்து கீழே அமர்ந்தாள்.
யாருக்கும் அருகே செல்லத் துணிவில்லை.
‘என்னிடம் வராதவர்கள் என்னைத் தூக்கி கதவின் அருகில் அமர வையுங்கள்’ என்று ஆணை இட்டாள். இன்னமும் ஆவேசம் அடங்கவில்லை.
சுதர்சனமும் சாமினாத சாஸ்திரியும் தூக்கி அமர்த்தினர்.
கையில் வாளுடன் அப்படியே நிலைப்படியில் அவளது மூச்சு அடங்கியது.
இது தான் அவளது சிலை. இரவு நேரத்தில் ஒரு பாம்பு வடிவத்தில் அவள் தான் இந்த வாசகலைக் காவல் காக்கிறாள் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
அன்று பொருத்தப்பட்ட கதவு தான் இது. இந்த வாசலுக்கு கடந்த 1200 வருஷத்தில் இரண்டாவது முறையாகக் கதவு வைத்த கதை இது தான்.
வைகுண்ட ஏகாதசி அன்று அவளுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் மட்டும் நைவேத்யம் செய்யப்படும். பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்படும். அது தான் இந்த ஊரின் வழக்கம்.
மற்ற நேரங்களில் துபாஷியும் கிளைவும் வெள்ளையம்மாவைப் பார்க்க வரும் போது ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டு வருவார்கள் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள்’
எவ்வளவு நேரம் அப்படியே அந்தப் பெண் சிலையைப் பார்த்தபடி நின்றிருப்பேன் என்று தெரியவில்லை. அனுமன் பேசினானா அல்லது என் பிரமையா என்று தீர்மானமாகத் தெரியவில்லை.
சிலையின் முன் ஒரு சீப்பு வாழைப்பழம் இருந்தது.
நேரில் பார்க்க சாந்தமாகத் தெரியும் இந்தச் சிலையின் பின் இவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பது வியப்பாக இருந்தது.