வாழ்க்கையில் பயம் தேவை தான். ஆனால் பயமே வாழ்க்கையாக ஆகி விட்டால் ? இந்தியா வரும்போதே இந்த பயம் வந்து பிடித்துக்கொள்கிறது. ஒன்று கொசு பயம். இன்னொன்று மாமிகள் பயம்.
ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு வந்தவுடனேயே நம்மைப் பார்க்கவென்று சில மாமிகள் வந்துவிடுவார்கள். அவர்களைப்பற்றி ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களிடம் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான்.
அப்படிப்பட்டவர்களில் சில மாமிகள், சுமார் 60 – 65 வயது இருக்கும் இவர்களுக்கு. இவர்களது கணவன்மார்கள் பாவம் அப்பிராணிகளாக இருப்பார்கள். இவர்களின் மகன் (அ) மகள் அமெரிக்காவில் இருப்பார். அவர்களைப் பார்க்க இவர்கள் 2-3 முறை சென்று வந்திருப்பார்கள்.
அத்துடன் இவர்களுக்கு உலக விஷயங்களும் அத்துப்படியாக இருக்கும். முனிசிபல் அரசியல் முதல் ஆம் ஆத்மி பார்ட்டி வரை பல விஷயங்கள் வைத்திருப்பார்கள்.
அதனால் என்ன ? பாவம் நல்ல மனிதர்கள் தானே, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால் என்ன என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. தொடர்ந்து படியுங்கள். என் கஷ்டம் உங்களுக்குப் புரியும்.
ஏர்-இந்தியா தோஷங்கள் நிவர்த்தி ஆன பின், மறு நாள் காலை அம்மாவின் ( சொந்த அம்மா சார் ) காபி சாப்பிட்டு வீட்டை ஒரு நோட்டம் விட்டபடி இருக்கும் வேளையில் வந்து தொலைக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு.
‘ஏண்டா கோந்தே, வந்துட்டியா ? ஜர்னி எல்லாம் எப்படி ?’
அடி வயிற்றில் லேசாகப் புளி கரைக்கத் துவங்கும். ஏனெனில் அழைத்தது ‘கூகிள் மாமி’ (Google Maami) என்றுஅழைக்கப்படும் தூரத்து உறவினர். பெயர்க்காரணம் புரிய மேலும் படியுங்கள்.
‘என்ன பதிலே இல்லே ? ஜெட் லாக் ( Jet Lag ) இன்னும் தீரலையா ?’
பதில் சொல்வதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ( பதில் சொன்னால் வரும் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டாமா ?) மேலும் சில கேள்விகள் பிறக்கும் இல்லையா ?)
‘ஆக்சுவலி, ஜெட் லாக் தீரணும்னா உடனே கார்தாலெ எழுந்து வெயில்ல நிக்கணும். என் டாட்டர் டெக்ஸாஸ் ல இருக்காளோல்லியோ ? அவ அப்பிடித்தான் பண்ணுவா. இன் ஃபாக்ட் ( In fact ) நானே யூ,எஸ். போகும் போதெல்லாம் அப்பிடிதான் பண்ணுவேன்.
ஆனா ஒண்ணு பாரு, இந்த ஜ்ர்னிலெ ஒரு ட்ரான்ஸிட் ( Transit ) ரொம்பவும் தேவை. நான் யூஷுவலா ஃராங்க்ஃபர்ட் (Frankfurt )ல ட்ரான்ஸிட் பன்ணுவேன். லண்டன் ரூட் எனக்குத் தோதுப்படாது. டென் அவர்ஸ் எனக்கு ஒரெ பொசிஷன்லெ உக்காந்துக்க முடியாது. யூ ஸீ, கால்லே ப்ளட் ஃப்ளோ (Blood Flow ) இஷ்யூஸ் எல்லாம் இருக்கோல்லியோ ?
அதுலேயும் இந்த லுஃப்தான்ஸா ( Lufthansa) இருக்கே அதுலே ஒரு ஸ்டீவார்ட் வருவா பாரு, நம்ம கோடியாத்து மஞ்சு மாதிரியே இருப்பா. ஒரு மடிசார் மட்டும் கட்டிண்டா என் மாட்டுப்பெண் மாதிரியே இருப்பா.
மாட்டுப்பெண்னு சொன்னேனோல்லியோ ? அவ ந்யூ ஜெர்ஸீல ஹௌஸ் ஸர்ஜன் இல்லையா ? எப்போதும் ஆன்-கால் லேயே இருப்பா ? வீட்டு வேலைக்கு ஒரு பிலிப்பினோ பொண்ணை வேலைக்கு வெச்சுண்டிருக்கா.
ஆனா பாரு, இன்னிக்கும் அமாவாசைன்னா மடிசார் தான். அப்புறம் ஆஃபீஸ் போகும் போது ஜீன்ஸ் போட்டுப்பா.’
நான் என்ன பாவம் செய்தேன் ? வருட விடுமுறைக்காக இந்தியா வந்தது தவறா ? யார் மடிசார் கட்டிக்கொண்டால் என்ன ? என்று என் விதியை நொந்துகொண்டிருக்கும் போது காதில் மீண்டும் அதே டெலிபோன் அலறல்.
‘அதுல பாரு, உன்னோட படிச்சானே கிச்சா, அவன் சிடிசன் ஆயிட்டானாமே. படிக்கும்போது அவன் கொஞ்சம் மக்கு தான். ஆனா பாரு பகவான் யாருக்கு என்ன எழுதியிருக்காறோ அது தானே நடக்கும் ?
உன் பையன் என்ன படிக்கறான் ? நம்ம சுந்தர் பையன் இருக்கானே ஐ.ஐ.டி. கோச்சிங் போறான். இப்பிடி நாலு வருஷம் முன்னாடியே கோச்சிங் போனாத்தான் ஜெ.ஈ.ஈ. (JEE ) ல் நல்ல ராங்க் கிடைக்கும். மெட்றாஸ் ஐ.ஐ.டி.ல கம்பயூட்டர் சயின்ஸ் கிடைக்கும். இல்லேன்னா கரக்பூர் ல அப்ளைடு பிசிக்ஸ் தான் போகணும்.’
மாமியைப் பொறுத்தவரை ஐ.ஐ.டில் படிக்கவிலை என்றால் ஜென்ம சாபல்யம் கிடைக்காது. அதுவும் சென்னையில் ஐ.ஐ.டி.ல் கணிப்பொறி படிக்கவேண்டும். மாமி சொன்ன சுந்தர் பையன் இப்போது தான் 8-வது படிக்கிறான்.
‘ஆனா ஒண்ணு, சிங்கப்பூர்லெ என்.யூ.ஏஸ். ( NUS) கிடைச்சா உன் பிள்ளைக்கு ரொம்ப யோசிக்காதே. என்.யூ.எஸ் – ஏல் ஜாயிண்ட் வென்சர் இருக்கு( NUS – Yale Join Venture ). அதுலே கம்ப்யூட்டர் கிடைச்சா பாரு.
இப்போவெல்லாம் ‘பிக் டேட்டா அனலிடிக்ஸ்’ னு இருக்கு பாரு. ( Big Data Analytics ) அதப் பத்தி என் பொண்ணு சொல்றா சொல்றா அப்பிடி சொல்றா. அதுலே பையனுக்கு டாக்டரேட் பண்ண முடியுமான்னு பாரருப்பா. நல்ல ஃப்யூச்சர் இருக்கு அதுலே’
‘லெகொ’ (LEGO) வைத்து விளையாடிக்கொண்டிருந்த என் பையனைப் பார்த்தேன். இதற்குள் டாக்டரேட் வரை சென்று விட்டார் மாமி.
ஒன்றை கவனித்தீர்களா? இந்த்தனை சம்பாஷணைகளிலும் நான் ஒன்றுமே பேசவில்லை. ஏதாவது பேசினால் அதிலிருந்து தனது பேச்சைத் தொடர்வார் மாமி என்பதால் மௌனியாக இருப்பதே நல்லது என்றுஇருந்துவிடுவது வழக்கம. இப்போதும் அப்படியே.திருமணம் ஆன ஆண்கள் பலர் இப்படி இருப்பதால்தான் குடும்பம் அமைதியாக நடக்கிறது என்பது என் தியரி / கோட்பாடு.
‘இண்டியா வந்திருக்கே, ஏதாவது வேணும்னா ஃப்லிப்கார்ட்லெ (Flipkart) வாங்கிகோ, இன் ஃபாக்ட் அமேஜானே இண்டியாலே இருக்கு. அமேஜான் டாட் இன் னு அடிக்கணும்.
ஊருக்கு வந்திருக்கோமேன்னு கோல்ட் (Gold) எல்லாம் வாங்காதே. இங்கெ இம்பொர்ட் ட்யூட்டி எல்லாம் ரொம்ப அதிகம். சிதம்பரம் ஏன் தான் இப்பிடி பண்றானோ. இதெல்லாம் துபாய்லெ வாங்கணும். அங்கே தான் ட்யூட்டி ஃப்ரீ’.
தங்கம் என்பது வாங்க அல்ல, பார்க்க மட்டுமே என்று எனக்கு போதி மர ஞானம் பிறந்து பல வருடங்கள் ஆகி விட்டது மாமிக்குத் தெரியாது.
‘ஆனா இந்த ஆச்சார்யாள் கேஸ் இப்ப்டி பண்ணிட்டளே, எல்லாமே ஒரு ஆல் ரவுண்ட் டீக்ரடேஷன் ( Degradation ).
அது போகட்டும். இந்த பாம்பே ஜயஷ்ரீ இருக்காளே, அவ அல்ட்டர அலட்டல் இந்த ம்யூசிக் சீசன்ல தாங்கலே. ஒரு சுதா ரகுனாதனுக்கு ஈடாகுமா நூறு ஜயஷ்ரீ?
அது கூட பரவால்லே, சௌம்யாயவும் காதுலே கம்மல் போட்டுண்டு ஜொலிச்சா சுதா ரகுனாதானா ஆயிடலாம்னு நினைக்கறாளே, அதை எங்கே போய்ச் சொல்றது?
அது போகட்டும், இந்த ஒபாமா ஹெல்த் கேர்’ ஏன் இப்பிடி ஆச்சு ? அவுட் சோர்சிங்லெ இன்ஃபோஸிஸ் கிட்டே குடுத்திருந்தா அவா தூள் கிளப்பியிருப்பாளே. என்ன மேனேஜ்மெண்டோ போ..’
ஒபாமாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
எங்கள் பகுதி கௌன்சிலர் பணம் அடிக்கும் முறைகள், பாராளுமன்ற ஜனநாயகத்தின் குறைபாடுகள், சுப்ரீம் கோர்ட் நீதிபதி கங்குலியின் வழக்கு, ஆம் ஆத்மியின் வெற்றீ, அதனாலேல்லாம் நமது அரசமைப்பில் பாதிப்பு ஏற்படாத நிலை, சோனியா காந்தியின் உடல் நிலை, ராகுலின் கொலம்பிய நண்பி பற்றிய செய்தி, மங்கள்யாணின் தேவை இல்லாத ராக்கெட் ஏவும் முறை, முஷரஃப் செய்ய வேண்டியது, உலக எண்ணை விலை நிலவரம், ஜப்பானின் பிரதமர் ஷின்சொ அபே செய்யவேண்டியது, சீனாவின் ஷி ஜின்பின் செல்ல வேண்டிய பாதை என்று ஒரு வரலாறு, புவியியல், அரசியல், சட்டம், பொருளாதாரம், விண்வெளி, கணிப்பொறி என்று அனைத்தும் ஒருசேர கற்றேன்.
இவருக்கு ‘கூகிள் மாமி’ (Google Maami )என்று ஏன் பெயர் வந்தது என்று புரிகிறதா ?
Google mami kathai super..
LikeLike
Thank you sir
LikeLike