நீங்கள் தமிழ் நாட்டில் வசிப்பவரா ? சென்னை என்னும் க்ஷேத்திரத்தில் நங்கநல்லூர் என்றோரு உப-க்ஷேத்திரம் உள்ளதே அங்கே போயிருக்கிறீர்களா ? அங்கே ‘ஆட்டோ’ என்றொறு வாகனம் ஆண்டவனால் படைக்கப்பட்டுள்ளதே அதனில் பயணித்துள்ளீர்களா?
அப்போது ‘மீட்டர்’ என்று தவறிப்போய் கேட்டிருக்கிறீர்களா ? அப்போது உங்களுக்குக் கிடைப்பது என்னவோ அதற்குப் பெயர் தான் ‘அர்ச்சனை’ என்பது.
ஆக ‘அர்ச்சனை’ என்றதும் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஒரே ஒரு வித்தியாசம் தான். கோவிலுக்குச் சென்றால் அர்ச்சனை செய்வதைப் பார்க்க முடியும். ஆட்டோ பிடித்து மீட்டர் போடச் சொன்னால் உங்களுக்கு அர்ச்சனை நடக்கும்.
எப்படி வசதி ?
இதெல்லாம் போகட்டும் என்று அர்ச்சனை வாங்கிக்கொண்டு நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்றால் இரண்டு வருடங்களில் அனுமார் தவிர எல்லாம் மாறி உள்ளது.
வேறென்ன ? கோவில் ‘தமிழக இந்து அற நிலையத்துறை’ கீழ் வந்துள்ளது. அரசு நுழைகிறது என்றால் ‘விஷயம்’ இல்லாமல் இருக்குமா ? வேறென்ன – பணம் தான். அப்புறம் ‘ஆமை புகுந்த வீடு’ தான்.
ஆனால் ஒன்று. ஏதோ பண விஷயத்தில் குளறுபடி என்று சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் குரங்கு கை பூமாலை என்று தான் தோன்றுகிறது.
ஜனவர் 1 அன்று 3 லட்சம் பேர் வந்தார்களாம். அன்று அனுமத் ஜயந்தி என்பதால் ஆக அதிகக் கூட்டமாம். நல்ல வசூல் என்பது மட்டும் உண்மை. தீபாவளி, பொங்கல், அண்ணா ஜெயந்தி, தம்பி ஜெயந்தி என்று மிக்ஸியும், கிரைண்டரும் கொடுக்கலாம். அதைக் கார்களில் வந்து வெட்கம் கெட்டு வாங்கியும் செல்லலாம்.
நடப்பது நடக்கட்டும் என்று மௌனமாகப் பார்த்துகொண்டிருக்கிறார் ஆஞ்சனேயர்.
‘ஆதிவ்யாதிஹர ஆஞ்சனேயர்’ என்ற பெயரை மாற்றாமல் இருந்தால் சரி.