உங்களுக்கு 70 – 80 வயதில் பாட்டி இருக்கிறார் என்றால் நீங்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். அவர்களிடம் கேட்டே நீங்கள் இப்பதிவின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ளலாம். இல்லை, அப்படித்தான் படிப்பேன் என்றால் தொடந்து படியுங்கள்.
உங்களில் சிலருக்கு இது மார்கழி மாதம் என்பது நினைவிருக்கலாம். ஒரு சில பழைய பஞ்சாங்கங்களுக்கு இந்த மாதத்தில் வீட்டு வாசிலில் கோலம் போடுவது வழக்கம் என்பதும் நினைவுக்கு வரலாம். ஒரு சில அசட்டு அம்மாஞ்சிகளுக்கு இந்த மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை முதலிய பாசுரங்கள் நினைவுக்கு வரலாம்.
நாம் கோலம் விஷயத்திற்கு வருவோம். வாசலில் கோலம் போடுவது தமிழர்களின் பண்பாடு என்று சொன்னால் அடிக்க வர மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கல் மாவையும், அரிசி மாவையும் ஒன்றாகக் கலந்து அதனைக் கோலமாவு என்று அழைப்பார்கள். இதனைக்கொண்டு வீட்டு வாசலில் பல வடிவங்களில் வரைவார்கள். புள்ளிக் கோலம், நேர்க்கோலம், நெளிவுக்கோலம் என்று பல வகைகள் இருந்ததுண்டு.
அட, மறந்துவிட்டேன். கோலம் போடுவதற்கு முன்பு ‘வாசல் தெளிப்பது ‘ என்ற ஒரு பழைய கற்காலப் வழக்கமும் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் வீட்டிற்கு முன் வாசல் என்று ஒன்று வேண்டும். அது அகலமாகவும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் வீடும் சின்னதாக உள்ளது. வீட்டு வாசற்கதவைத் திறந்தால் அடுத்த வீட்டு வாசற்கதவு இடிக்கும் ‘பிளாட்’ கலாச்சாரம் பரவி விட்டதால் வாசல் தெளிப்பதாவது ஒன்றாவது ?
பரந்து விரிந்த வீடும் வாசலும் இருந்தபோது மக்கள் மனதும் அப்படியே இருந்தது. புறாக்கூண்டு போன்ற அடுக்குகளில் அடங்கிக்கொண்ட மக்கள் தங்கள் மனதும் அவ்வாறே சுருங்கக் கண்டார்கள் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்கிறீர்களா ? . அத்துடன் மக்களைப் பிற்போக்குத் தனமான செயல்களைச் செய்யச் சொல்கிறேன் என்றும் சிலர் கூறலாம். ஆனால் ஒன்று, ‘ஓரினச் சேர்க்கை சரி ‘ என்று பிதற்றும் ‘முற்போக்கு’ கூட்டத்தில் நான் இல்லை என்பதால், மேலும் கோலம் பற்றித் தொடர்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே கருத்தப்பட்டு வந்தது வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது. கோலம் போடுவதில் வீட்டுக்கு வீடு போட்டி உண்டு. யார் முதலில் கோலம் போடுகிறார்கள், யார் வீட்டுக் கோலம் பெரியதாகவும் அழகாகவும் உள்ளது என்று பல வகைகளில் போட்டி போடுவார்கள். ‘அட, நீ எப்போது போட்டே, நான் பார்க்கவே இல்லையே !’ என்று மற்றவர் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்று விடியற்காலையிலேயே எழுந்து கோலம் போடுவது என்று ஒரு காலம் இருந்தது.
( 90 களில் பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம். ‘விடியற்காலை’ என்பது ஒரு நாளில் காலையில் நான்கு முதல் ஆறு மணி வரை உள்ள நேரம். நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்போதுதான் நீங்கள் வேலை முடித்தோ அல்லது இணையத்தில் நேரம் செலவிட்டோ தூங்கச் செல்லும் நேரம்.)
அரிசிமாவும் கல் மாவும் கலந்து உள்ள பொடியால் கோலம் போடும் முறை ஏன் ? அதனால் வாசலில் உள்ள அணில், காக்கை, குருவி முதலியன உணவுக்காக அலைய வேண்டியதில்லை. ஈ, எறும்பு முதலியன கூட அரிசிமாவை உணவாகக் கொண்டிருந்தன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவர் கூறுவது இங்கு எண்ணிப் பார்க்கலாம். ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்ற பாரதியும் நினைவுக்கு வரலாம்.
அதுவும் மார்கழி மாதத்தில் கோலத்தின் நடுவில் பூசணிப்பூ வைத்து அலங்கரிப்பார்கள். பல வண்ணக் கோலங்களும் உண்டு.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கோலம் போடுவது பெண்கள் மட்டுமே. அவர்கள் காலை வேளையில் குனிந்து நிமிர்ந்து வாசலில் கோலம் போடுவதால் இடுப்புக்கு வேண்டிய உடற்பயிற்சி கிடைத்துவந்தது. பெண்களுக்குப் பிரசவ நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும் இது என்று பெரியவர்கள் கூறினர். அக்காலத்தில் சுகப்பிரசவம் மட்டுமே நடந்தது என்பதையும் சேர்த்துப் பார்க்கவும். ‘சிசேரியன்’ என்னும் பணம் பறிக்கும் முறை அப்போது தோன்றியிருக்கவில்லை. மக்களும் வானத்துக் கோள்களை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான நேரத்தில் பிள்ளை பெற்றுக்கொண்ட காலம் அல்ல அது. அவர்களுக்கு அவ்வளவு ‘பகுத்தறிவு’ வளர்ந்திருக்கவில்லை.
சரி. இவ்வளவு பீடிகை ஏன் ? விஷயத்திற்கு வருகிறேன்.
இந்தப் படத்தைப் பாருங்கள்.

இது ஒரு கோலம். ராமானுசர், சங்கரர், மத்வர் என்று மூன்று ஆச்சாரியர்களின் உருவம். அவர்களுக்குக் கீழே தட்டில் வெற்றிலை, வாழைப்பழம் முதலியன. அத்துடன் சங்கும் சக்கரமும். எல்லாமும் கோலத்தில் தான்.
இது மார்கழி மாதத்தில் சென்னையில் எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு 85 வயதான சுசீலா மாமி என்று அழைக்கப்படும் மூதாட்டி அம்மையார் போட்ட கோலம். இவர் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டாள் பாசுரத்திற்கும் ஏற்றாற்போல் கோலம் போடுவார். பாடலுக்கு ஏற்றாற்போல் படம் இல்லையென்றால் இம்மாதிரி பொதுவானதாகவும், புதியனதாகவும் போடுவார். இதற்காக இரவு சுமார் பதினோரு மணி அளவில் தன் வீட்டு முன்னால் சுத்தம் செய்யத் துவங்குவார். பின்னர் ஒரு மூன்று மணி அளவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வாசல் தெளித்துக் கோலம் போடத் துவங்குவார். ஆறு மணி வரை போடுவார்.
அத்துடன் நில்லாமல் அந்தக் கோலத்தை மாடு, நாய் முதலியனவும், மனிதர்களும் அழிக்காமல் இருக்க கோலத்தைச் சுற்றிக் கம்புகளால் ஒரு அரண் அமைத்துவிடுவார். நாள் முழுவதும் வீட்டு வாசலில் இருந்து யாரும் கோலத்தை அழிக்காமல் காவல் காப்பார்.
இவர் போடாத தெய்வ வடிவங்கள் இல்லை. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள், வெறும் ஆண்டாள் மட்டும், தக்ஷிணாமூர்த்தி, நந்தி மீது சிவனும் பார்வதியும், அனுமன், இராம பட்டாபிஷேகம், காளிங்க நர்த்தனம் என்று பல விஷயங்கள் பற்றி இவர் கோலம் அமையும். சென்னையில் எங்கள் பகுதியில் அவரது கோலம் ரொம்பவும் பிரசித்தம்.
இது தவிர தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, பொங்கல் என்று விதம் விதமான நாட்களுக்கு விதம் விதமாகக் கோலம் போடுவார்.
இத்தனைக்கும் அவருக்கு உடல் நிலை சரியில்லை. மூன்று முறை ‘கீமோ-தெரபி’ செய்துகொண்டுள்ளார். ஆனால் மிகவும் மனவுறுதி படைத்தவர். பல ஆண்டுகள் முன்னரே கணவரை இழந்த அவர், மனம் தளராமல் இந்தி கற்று, தான் இந்தி ஆசிரியராக தனது 75 வது வயது வரை பணியாற்றினார். வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தின் இரு பிள்ளைகளை எடுத்துத் தன் பிள்ளைகளாகவே வளர்த்து இன்று ஒரு பிள்ளைக்குத் திருமணமும் செய்துள்ளார். இரு மகன்களும் இன்று நல்ல வேலையில் உள்ளனர். இரண்டு பிள்ளைகளைத் தான் ஒருவராகவே வளர்த்து அவர்களுக்குக் கல்வியும் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ள நிலையில் இந்த இரு பிள்ளைகளும் அவரிடம் உயிராகவே உள்ளனர்.
மாமி ஆண்டுக்கு ஒருமுறை தன் கணவர் நினைவு நாளில் காசிக்குச் சென்று கிரியைகள் செய்து வருகிறார்.
அத்துடன் இல்லாமல் தன் வீட்டின் ஒரு பகுதியில் ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும் தன் பேரனாகவே கருதி வருகிறார்.
இதெல்லாம் தமிழ் சினிமாவில் வருவதுபோல் தோன்றினாலும் இவை அவ்வளவும் உண்மை. இன்றும் இப்படிப்பட்ட மனித தெய்வங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடையே தன் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஒரு அர்த்தத்துடன் வாழும் சுசீலா மாமியை என்னவென்று சொல்வது ?
சென்னையில் ஏன் மழை பெய்கிறது என்று இப்போது தெரிகிறதா ?