என்ன சார் அக்கிரமம் இது ? தமிழ்லெ எழுதலாம். ஆனா இயற்கை, பறவை, பட்சி, இந்தியாவின் ஏழ்மை, சாதி அமைப்பின் அடக்குமுறை இது பத்தியெல்லாம் எழுதலாம்.
ஆனால் பகுத்தறிவு பற்றி கேலியாக எழுதினால் கோபம் வருகிறது.
பகுத்தறிவு பற்றியோ, மதச் சார்பின்மை பற்றியோ எழுதக்கூடாது. எழுதினால் கோபம் வருகிறது.
ஆக என்ன எழுதலாம் ?
இந்தியாவை வைது எழுதலாம். இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதி வீரம் பேசலாம். இலங்கைத் தமிழர் பற்றிப் பேசுகையில் இந்தியாவைத் திட்ட வேண்டும். இலங்கையின் வட மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு இருப்பதை மறந்து பேச வேண்டும். அவரைக் குறிப்பிட்டு எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஒருவர் இருப்பதையே மறந்துவிடவேண்டும். மறந்து எழுத வேண்டும்.
இலங்கையின் வட மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதை ஒப்புக்கொண்டால் அப்புரம் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அரசியல் நடத்த முடியாதே !
இந்தியாவை வைவது பகுத்தறிவு; மோதியை வைவது கடமை; பா.ஜ.க வை ஏசுவது பிறப்புரிமை. காங்கிரசைப் பற்றிப் போகிற போக்கில் கூட பேசாமல் இருப்பது ‘மதச் சார்பின்மை’. இடது சாரிகளைப் போற்றாமல் இருந்தால் மாபெரும் குற்றம்.
சிதம்பரம் நடராசர் கோவில் தொடர்பாக தீட்சிதர்களை வைது மட்டுமே எழுத வேண்டும். தீட்சிதர்கள் பக்கம் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிப் பேசினால் கூட வசவு துவங்குகிறது.( இது குறித்த ஒரு பதிவு விரைவில் வருகிறது ).
காஞ்சி வழக்கு பற்றி நீதிமன்றத்தை வைய வேண்டும். வைவது தெரியாமல் வைய வேண்டும். கூடவே ஒரு சாதியையும் திட்ட வேண்டும். இவ்வாறில்லாமல் வேறு மாதிரி ‘ஆராய்கிறேன் பேர்வழி’ என்று எழுதினால் தொலைந்தது. கோபம்; ருத்ர தாண்டவம் தான். ஒரு பொங்கல் வாழ்த்து கூட தெரிவிக்க மறுக்கிறார்கள்.
‘ஓரினச் சர்க்கை’ போற்றி வழிபடவேண்டிய ஒரு நடவடிக்கை என்றே பேச வேண்டும்; அதற்காக நீதி மன்றத்தை வைதாலும் தவறில்லை. உச்ச நீதி மன்றத்தை வைவது ‘வீரம்’ என்று போற்றப்படுகிறது. இந்திய நீதி மன்றம் தவிர வேறு ஏதாவது நீதி மன்றத்தைப் பேசுகிறார்களா என்றால் கிடையாது.
பெருவாரியான வாசகர்கள் இப்படி இல்லை தான். ஆனால் வாசகனின் சகிப்புத் தன்மையை இந்த அளவிற்கு மாற்றியுள்ள பெருமை ‘பகுத்தறிவையே’ சாரும்.
எனக்குப் ‘பகுத்தறிவு’ இல்லை என்பதாலும், பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் ‘விஷக்கிருமிகள்’ என்று கூறியவை இன்னமும் விஷக்கிருமிகளே என்று நான் நம்புவதாலும் தொடர்ந்து எப்போதும் போலவே எழுதுவேன்.
‘டூ’ விடுபவர்கள் விட்டுக்கொள்ளலாம்.