சிதம்பரம் தீக்ஷிதர்கள் வழக்கில் கருத்துக் கூறியுள்ள ‘பெரியவர்கள்’ வழக்கம் போல் பழைய பல்லவியையே பாடியுள்ளனர். அதான் சார் ‘பார்ப்பன ஏகாதிபத்தியம்’ இன்ன பிற. இது உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்புக்குப் பின்னும் அப்படியே பேசியுள்ளனர்.
சரி, என்னதான் இவர்கள் பிரச்சனை ? தீக்ஷிதர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியா அல்லது நடராஜர் கோவில் முன்னேற வேண்டுமே என்று தவறுதலாக ஏதாவது அக்கறை வந்து விட்டதா ? அல்லது தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களையும் செம்மையாக உயர்த்தி விட்டோமே அது போல் சிதம்பரம் கோவிலையும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இந்து சமய அற நிலையத்துறைக்கு அக்கறை வந்துவிட்டதா என்றெல்லாம் நீங்கள் குழம்ப வேண்டாம்.
அது எப்படி பார்ப்பான் ஒரு கோவிலுக்கு ஏகோபித்த உரிமை கொண்டாடுவது என்ற ‘செக்யூலர்’ செக்கு மாட்டுச் சிந்தனை. வேறொன்றுமில்லை.
இதில் விசேஷம் என்னவென்றால் தீக்ஷிதர்கள் பார்ப்பனர்கள் என்று கருதப்படுவதில்லை. இவர்கள் மற்ற ப்ராம்மணர்களுடன் திருமணம் முதலிய உறவுகள் வைத்துக்கொள்வதில்லை. 3000 குடும்பங்கள் என்று அக்காலத்தில் இருந்துள்ளனர். தற்போது 350 குடும்பங்களே உள்ளனர். இருந்தும் மற்ற அந்தணக் குடும்பங்களுடன் அவர்கள் உறவுகளில் இல்லை.
இன்னொன்றும் கவனிக்க வேண்டும். மற்ற ப்ராம்மணர்களும் சிதம்பரம் கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சிதம்பரம் மட்டும் அல்ல. வேறு எந்தப் பாரம்பரியக் கோவிலிலும் கூட தீக்ஷை பெற்றவர்களே பூசை செய்ய முடியும். அதற்காக ஆகம சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தீக்ஷிதர்களை விடுங்கள். ஒரு பெருமாள் கோவில் பட்டாச்சாரியாரை எடுத்துக்கொண்டால் கூட அவரும் தன் குடும்பத்தில் வேறொரு பட்டாச்சாரியார் குடும்பத்தில் தான் திருமண சம்பந்தம் செய்துகொள்வாரேயொழிய மற்ற அந்தணக் குடும்பங்களில் செய்துகொள்ள மாட்டார். இதுஅவர்களுக்குள் உள்ள கட்டுப்பாடு.
இன்னொரு விஷயம். கோவிலில் மிகப் பெரிய செலவில் கும்பாபிஷேகங்கள் நடத்தும் பெரிய தனவந்தர்கள் கூட, அந்தணர்களாக இருப்பினும், கோவிலில் கர்ப்பக்கிருகத்துள் செல்லத் தடை உள்ளது. ஏனெனில் அவர்கள் தீக்ஷை பெறவில்லை என்பதே அது. தீக்ஷை பெற சாதி முக்கியமில்லை. ஆசார அனுஷ்டானங்கள் அவசியம். இது பற்றிப் பேசினால் அதற்கு என்று ஒர் தனிப் பதிவு போட வேண்டும்.
சிதம்பரம் கோவிலுக்கு வருவோம்.
தீக்ஷிதர்களிடமிருந்து கோவிலைப் பிடுங்க வேண்டும் என்று அரசாங்கங்கள் பல முறை முயன்றுள்ளன. ஆங்கில அரசு காலம் தொட்டே இந்த முயற்சிகள் நடந்துள்ளன. அக்காலம் தொட்டே வழக்குகள் மூலம் அரசு கோவிலை எடுத்துக்கொள்ளப் பார்தது. முதல் வழக்கு 1885-ல் போடப்பட்டதாக அறிகிறேன். அந்தத் தீர்ப்பு தீக்ஷிதர்களுக்கு எதிராக அமைந்தது. பின்னர் 1925-ல் இந்து அறநிலையத் துறை அமைக்கப்பட்டது. அது கோவிலைத் தன் ஆளுமையில் கொண்டுவர முயற்சி செய்தது. சில அதிகாரங்கள் அரசிடம் இருக்கும் என்று அறிவித்தது. பின்னர் 1951-ல் அரசு தனியார் கோவில்களை அரசுடைமையாக்க முயற்சி செய்தது. தீக்ஷிதர்கள் எதிர்த்தனர். 1959-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அரசு எடுக்க முடியாது என்றும் தீக்ஷிதர்கள் தனியான அமைப்பினர் என்றும் அரசு எடுத்துக்கொள்வது மக்களின் வழிபாட்டுச் சுதந்திரத்தில் கை வைப்பது போன்றது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. கோவில் தப்பியது.
அரசு விடவில்லை. 1982-ல் மீண்டும் எடுக்க முயற்சி. 2009-ல் தி.மு.க. அரசு மீண்டும் எடுக்க முயற்சி. தீக்ஷிதர்கள் வழக்கு தொடர்ந்தனர். 2009-ல் சென்னை உயர்நீதி மன்றம் தீக்ஷிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. ஆனால் இது 1952-ல் தில்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இருந்தது. எங்காவது மாநில நீதிமன்றம் தில்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க முடியுமா ? தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும். ஆனால் 2014-ல் தில்லி உச்ச நீதி மன்றம் 2009 சென்னை நீதி மன்றத்தைக் கடுமையாகச் சாடி ஒரு தீர்ப்பளித்தது. ‘நீதிமன்ற ஒழுங்கீனம்’ (Judicial Indiscipline ) என்று கடிந்துகொண்டு கோவிலை அரசின் பிடியிலிருந்து விடுவித்தது.
இதில் பார்ப்பன சூழ்ச்சி எங்கே வந்தது ?
இது ஒரு நல்ல தீர்ப்பு. இதை ஒட்டி இன்னும் பல வழக்குகள் தொடரப்போவதாகத் தெரிவிதுள்ளார் திரு.சுப்பிரமணியம் சுவாமி. தெய்வம் நின்று தீர்ப்பு சொல்லும் என்று புரிகிறது.
இது ஏன் ஒரு நல்ல தீர்ப்பு ? ஒரு ஆழ்வார் மங்களாசாஸனம் செய்த கோவிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுடன் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.
அரசு கோவிலில் இருந்து வெளியேறினால் கோவிலுக்கு நல்லது. ஏன் ?
- கோவிலின் ‘ஈ.ஓ’ என்ற பெயரில் குப்பை கொட்டும் (உண்மையிலேயே குப்பை தான் ) ‘நல்லவர்’களுக்கு அவர்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் போட பணம் தர வேண்டியதில்லை.
- தேர்த் திருவிழா மற்றும் உற்சவங்களுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.க்களுக்கு ‘அழைப்பு’ தந்து அவர்களது பரிவாரங்களுக்கு ‘அழ’ வேண்டியதில்லை.
- கோவிலில் பாழ் பட்டுக் கிடக்கும் குளத்தைக் கண்டு கொள்ளாத ‘அற’ நிலையத் துறை, நல்லவர்கள் கூடி குளம் வெட்டி நீர் நிறைந்த பின் மீன் ஏலம் விட மட்டும் வரும் போது பொங்கி எழுந்து இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை.
- கோவிலில் ஒரு சின்ன மர வேலை செய்ய வேண்டும் என்றால் கூட கோவிலின் மரத்தை வெட்ட வனத்துறை முதல் உலக வங்கி வரை சென்று ‘அழ’ வேண்டியதில்லை.
- வருடாந்திர உற்சவ அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏ, ஈ.ஓ. முதலான பேர்வழிகளின் திரு நாமத்தைப் போட வேண்டியதில்லை.
- உற்சவ மூர்த்திக்கு இணையாக இவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை.
சரி. அப்படியென்றால் சிதம்பரம் கோவிலில் நிதி முறைகேடு முதலியன நடைபெறவில்லையா ? என்ற கேள்வி எழுவது இயற்கையே.
சான்றோர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அது கோவிலின் வரவு செலவுகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அதன் வரவு செலவுக் கணக்கை ஆண்டுதோறும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தால் போதாதா ? வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இருந்தால் போதுமே ? தணிக்கை செய்தால் போதாதா ?
இது போகட்டும். தீக்ஷிதர்களின் சாதி விஷயம் வருவோம். ‘தில்லை வாழ் அந்தணர்கள்’ என்று கொண்டாடப்பட்ட இவர்கள் ஸ்மார்த்த பிராம்மணர்களா என்றால் இல்லையாம். இவர்கள் ஆதி சைவர்களாம். இப்படி ஒரு புத்தகம் கூறுகிறது. ‘திராவிட இயக்கம்’ கவனத்திற்கு.
ஆனால் ஒன்று. தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலைக் காக்க பல தியாகங்கள் செய்துள்ளனராம். 13-ம் நூற்றாண்டில் கோவிலுக்குள்ளேயே வைத்து கொல்லப்பட்டனர். அவர்கள் பல சிலைகளைக் கோவிலுக்குள் மறைத்து வைத்துத் தங்கள் உயிரைக்கொடுத்துக் காப்பாற்றினர் என்று சமூக ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார். பின்னர் ஆங்கில அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்தச் சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர் என்று ஜாப் தாமஸ் என்பவர் எழுதிய ‘Thiruvenkaadu Bronzes; ( திருவெண்காடு வெண்கலங்கள் ) என்ற நூலில் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.
ஆக திராவிட இயக்கங்கள் தீக்ஷிதர்களை ஆதரித்தால் யாருடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று அறிந்துகொள்ள சிதம்பரம் நடராசர் அருள் புரிவாராக.
என்ன ? மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களா ? அவற்றையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமா ? என்ன சார், அது மதச்சார்பின்மை இல்லயே ?
விஷயங்களை எவ்வளவு அழகாக புரியும்படி எழுதியுள்ளீர்கள். திரும்பப் படிக்கும்படியான ஆழமான கட்டுரை. பாராட்டுவதுடன் விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி. அன்புடன்
LikeLike