நல்ல ஆஜானுபாகுவான கரிய உருவம். பின்னாலிருந்து தான் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. எதிர் வீட்டுக்கு வாடகைக்கு வந்திருப்பார் போல என்று நினைத்துகொண்டிருந்தேன். கூட ஒரு சிறு பையனும் இருந்தான். எதிர் வீட்டில் வெளிப்புறச் சுவரை ஒட்டி ஒரு அறை வெறுமனே இருப்பதால் அதனை 1000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.
எதிர் வீட்டுப் பாட்டி பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் போல. ஆனால் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை. ஆனால் ஒன்று. அவர் சிரமப்பட்டுப் பேசுவது போல் இருந்தது. மெதுவாகப் பேசினார். நீண்ட நேரம் எடுத்துகொண்டு பதில் அளித்தார் போல் இருந்தது. பாட்டியின் உடல் பாஷை பொறுமையின்மையை உணர்த்தியது.
அரை மணி கழித்து அவர் மெதுவாக நடந்து போனார். ஏதோ ஒரு இயந்திரம் நடப்பது போல் தெரிந்தது. செதுக்கி வைத்த கட்டைகள் ஒரு வித ஒப்புக்கொள்ளப்பட்ட அசைவுகளுடன் நடந்தால் எப்படி இருக்கும் ? ரோபோட் போல் நடந்தார்.
பல நாட்கள் அவரைப் பார்க்கவில்லை. பின்னர் ஒரு நாள் மாலை ஒரு சின்ன வண்டியில் இருந்து இறங்கினார் அவர். மெதுவாக நடந்து சென்று எதிர் வீட்டுக் கதவைத் தட்டினார். ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. புரியவில்லை. ஆனால் ஒன்று. அவர் குடி வந்துவிட்டார் என்று தெரிந்தது. வயது ஒரு 40 இருக்கலாம் என்று ஊகித்தேன்.
அவரது மகன் அடுத்த நாள் மாலை என் வீட்டு வாசலில் வந்து நின்றான். என் மகனைப் பார்த்துச் சிரித்தான். இரு குழந்தைகளும் விளையாடத் துவங்கின.
அந்த வாரம் காலனியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அவரைப் பார்த்தேன். சுவாமி விக்ரஹத்தை நகர்த்திக்கொண்டிருந்தார். ‘ஓ இவர் தான் அர்ச்சகர் போல ‘ என்று எண்ணிக்கொண்டேன். புதியதாக அர்ச்சகர் நியமிப்பதாகப் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.
பிறகு பல முறை அவரைப் பார்த்தேன். ஆனால் ஒரு முறை கூட பேச முடியவில்லை. ஒரு நாள் சைக்கிளில் ஏற முயன்றுகொண்டிருந்தார் அவர். அப்போதுதான் கவனித்தேன் அவரது காலை மடக்க அவரால் முடியவில்லை. கையும் மடக்க முடியாத மாதிரியே இருந்தது. ஓடிச் சென்று உதவ எண்ணி அருகில் செல்ல எத்தனித்தேன். அதற்குள் அவரே சைக்கிள் மேல் ஏறி அமர்ந்துவிட்டார். என்னைத் தாண்டிச் செல்லும் முன் ஒரு புன்னகை மட்டும் புரிந்தார். ஏனோ அவர் ஒருவித வலியில் இருப்பதாகப் பட்டது. “ஏறும் போது கொஞ்சம் கஷ்டம்”, என்று சொன்னது போல் காதில் கேட்டது.
சில மாதங்களில் அவரைப்பற்றிய தகவல்கள் கிடைத்தன. செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமமாம். படிக்கவில்லையாம். கொஞ்சம் நிலம் இருந்துள்ளது. இப்போது அதுவும் கரைந்துவிட்டது. ஊரில் வேறு வேலை இல்லாததால் அருகில் இருந்த ஒரு பெருமாள் கோவிலில் ‘மடப்பளி’ வேலை என்று அழைக்கப்படும் ‘சமையல்’ வேலையில் எடுபிடியாக இருந்துள்ளார். பின்னர் ‘விஷ்ணு சஹஸ்ர நாமம்’ மட்டும் கற்றுக்கொண்டு சென்னையில் வாழ்க்கை தேடி வந்துள்ளார். எங்கள் காலனியில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அர்ச்சகர் கிடைக்காமல் திண்டாடியபோது இவரைப் போட்டுள்ளார்கள். சில மாதங்களில் ஒரு சில அர்ச்சனைகளையும் கற்றுக்கொண்டுள்ளார். சஹஸ்ரநாமம், சில அர்ச்சனைகள் தவிர வேறு ஒன்றும் தெரியாது.
காலம் ஓடியது. வேலை விஷயமாக நான் ஊர் சுற்றலில் இருந்தேன். இந்தியாவுக்கு எப்போதாவது வரும்போது இந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் இவரது நிலையில் சிறு வளர்ச்சி இருந்தது. தேர்ந்த அர்ச்சகருக்கு உண்டான கம்பீரம் முதலியன இவரிடம் இல்லாவிட்டாலும் அவரது வேலைகளில் ஒரு அக்கறையும் கரிசனமும் இருந்ததைக் கண்டிருக்கிறேன்.
இந்தமுறை சென்னை சென்றபோது இவரைப் பார்த்தேன். ‘வாங்கோ, எப்படி இருக்கேள் ? பையங்கள் எப்படி இருக்கா ? பெருமாள் தயவுல இங்கெ பக்கத்துல ஒரு வீடு வாங்கியிருக்கேன். அவசியம் ஆத்துக்கு வாங்கோ’, என்றார். பையனையும் அருகில் ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகக் கூறினார்.
உண்மையாகவே மன நிறைவாக இருந்தது. அவர் வந்து சேர்ந்தபோது எப்படி இருந்தார், அவர் குடும்ப நிலைமை என்ன ? என்பது நன்கு தெரிந்த எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. மேலும் நன்றாக வர வேண்டும் என்று பெருமாளைப் பிரார்த்தித்தேன்.
ஒரு நிமிடம் யோசித்தேன். இவர் இந்த நிலைமைக்கு வர சுமார் ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளது. பெரிய படிப்பெல்லாம் இல்லை; பணமும் இல்லை; கோவில் வேலையும் அவ்வளவாகத் தெரியாது; குடும்பம் வேறு; ஊரில் வறுமை; ஆனால் பிழைக்க வேண்டும். இன்னமும் கீழே செல்ல வழி இல்லை. மேலே எழும்பித்தான் ஆக வேண்டும். அதற்கான முயற்சி அவரிடம் இருந்தது.
இவர் தனது சொந்த முயற்சியாலேயே மேலே வந்துவிட்டாரா ? அல்லது இவர் வந்து சேர்ந்த சமூகம் அவரைப் பார்த்துக்கொண்டதா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
நிச்சயமாக சமூகம் தான் காரணம். அவரிடம் விஷயம் இல்லை என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவரைப் போஷித்தது அந்தச் சமூகம். அவரையும் அவரது குடும்பத்தையும் பட்டினி போடாமல் பார்த்துக்கொண்டது அது.
முன்னரெல்லாம் வேத பாட சாலை என்று உண்டு. வசதியற்ற பல எழைக்குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி விடுவார்கள். வேதம் படித்து வேதத்தை வாழ வைக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை. ஒரு வேளை கூட பிள்ளைகளுக்குச் சோறு போட முடியாத பிராம்மணக் குடும்பங்கள் பல உள்ளன. முன்னேறிய சமூகம் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் இந்த உலகில் பிழைக்க ஒரே வழி பாரம்பரிய மடங்கள் நடத்திய பாட சாலைகள்தான். ஏனெனில் அங்கே உணவும் உறைவிடமும் கல்வியும் இலவசம்.
ஒரு நியதி உண்டு. பிள்ளைக்குப் பூணூல் போட்டுக் கொண்டு விட வேண்டும் என்ற ஒரு நடைமுறை உண்டு. அதற்கும் வசதியில்லாத பல குடும்பங்கள் மடங்களின் ஆதரவில் ‘சமஷ்டி உபநயனம்’ என்று பல பிள்ளைகளுக்கு ஒரு சேரப் பூணூல் போட்டுப் பின்னர் வேத பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர். ( டாம்பீகமாக செலவு செய்து உப நயனம் செய்யும் வழக்க உள்ளவர்கள் ஒரு கணம் சிந்திக்கலாம்).
இன்னொரு வழக்கமும் உண்டு. பாட சாலைப் பிள்ளைகள் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வீட்டில் உணவு உண்ண வேண்டும் என்றும் ஒரு வழக்கம் இருந்துள்ளது. நாங்கள் நெய்வேலியில் இருந்த போது அப்படி எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை ஒரு பையன் வந்து உணவு உண்டு செல்வான். அடுத்த நாள் இன்னொருவர் வீட்டில். வசதி இல்லாதவர்களை சமூகம் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு நியதி இருந்தது.
அப்படி ஒரு பிள்ளையிடம் பேசிக்கொண்டிருந்தேன். லீவு விட்டு விட்டார்களே, ஊருக்குப் போகவில்லையா என்று கேட்டேன். லீவு விட்டாலும் ஊருக்கு வராதே என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றும் வந்தால் அவர்களது ஒரு வேளை உணவும் பகிர்ந்துகொள்ள வேண்டும்; எனவே வர வேண்டாம் என்றும் கூறிவிட்டார் என்று சொன்னான். அந்தப் பையனுக்கு 7 வயது இருக்கலாம். அவன் அருகில் இன்னொரு வாண்டு வேஷ்டி கட்டிக்கொண்டிருந்தது. 5 வயது அதற்கு. ‘எங்கே என்னடா பண்றே?” என்று கேட்டு வைத்தேன். “உம்மாச்சி சுலோகம் கத்துத் தறா. சாதம் போடறா. எப்பயானும் கன்னமுது ( பாயசம் ) குடுக்கறா. அதான் இங்கே இருக்கேன்”, என்று மழலை மாறாமல் சொன்னது அது.
மனது கேட்கவில்லை. ஒரு 50 ரூபாயை அதனிடம் அளித்தேன். ‘அம்மா வைவா. யார் காசு குடுத்தாலும் வாங்கிக்க கூடாதுன்னு சொல்லியிருக்கா”, என்று சொல்லி வேஷ்டியைப் பிடித்துக்கொண்டே ‘அடுத்தது நான் தான் பாட்டிங்’ என்று ஓடியது.
அந்தப்பிள்ளை எந்த விதத்தில் ‘முன்னேறிய’ வகுப்பு என்று அரசாங்கம் கூறுகிறது என்று தெரிந்தவர்கள் கூறலாம்.
பாடசாலைப் பிள்ளைகள் கதைகள் ரொம்பவும் சோகமானவை. அவ்வப்போது அவர்களுடன் நேரம் செலவிடுவது வழக்கம். வெளி நாடுகளில் கிடைக்கும் சில பேனாக்கள் , கலர் பென்சில்கள் முதலியன வாங்கி வந்து அவர்களிடம் தருவது வழக்கம். அப்போது சிலரது குடும்பங்கள் பற்றி விசாரிப்பேன். ‘தான்’ என்ற அகங்காரம் கொண்டுள்ள யவரும் இந்தக் கதைகளைக் கேட்டால் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை ஒரு நொடியில் உணர முடியும். அதுவும் சின்னப் பிள்ளைகள் சொல்லக்கேட்டால் அதைவிட சன்யாசம் என்று ஒன்று தனியாக வாங்கிக்கொள்ள வேண்டாம்.
அர்ச்சகர் விஷயத்திற்கு வருவோம். இவர் சிங்கப்பூர் போன்ற ‘Meritocracy’ மட்டுமே சார்ந்த சமூகத்தில் இருந்திருந்தால் இவரது நிலை என்ன என்று எண்ணிப் பார்த்தேன். தூக்கம் வர வில்லை.
ஒவ்வொருநாள் ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவதை வாரம் சாப்பிட்டுதான் முன்னுக்கு வந்தான் என்று சொல்வார்கள். அந்த முறை அன்ன தான விசேஷமாகவும் இருந்தது. இப்போது அதெல்லாம் காணோம். அந்த கால ஞாபகங்கள் வருகிறது. எங்கள் வீட்டில் அம்மாதிரி சாப்பிட்டவர்களைப் பார்த்திருக்கிரேன். நன்றி அன்புடன்
LikeLike