வெண்டி டோனிகர் என்னும் பெண்மணி இந்து மதம் பற்றிய ஒரு நூல் எழுதினார். அதில் இந்து மதம் பாலியல் தொடர்பான ஒரு மதம் என்று அதனை முன்னிலைப் படுத்தி எழுதியுள்ளார். உடனே அதற்கு ஏதோ ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. உடனே பெங்குயின் என்னும் அந்த நூலின் பதிப்பகத்தார் அதனை விற்பனையில் இருந்து எடுத்துவிட்டனர்.
இது ஒரு விரும்பத்தகாத விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
1000 ஆண்டுகள் முகலாய / ஆப்கானிய அரசுகள் இருந்தும் அழியாத ஒரு வாழ்க்கை வழிமுறையை , 250 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியினாலும் அழிக்க முடியாத ஒரு அமைப்பை ஒரு அம்மையாரின் நூல் அழித்துவிடும் என்று நம்புவது பகுத்தறிவா ?
தர்க்கமும், வாதமும் இந்த மதத்தின் இரு கண்கள். உப-நிஷதம் முழுவதும் கேள்வி பதில் தானே ? இந்து மதம் ‘மாறாத ஒன்று’ மட்டுமே உண்மை என்று கூறுவதில்லை. உண்மை ஒன்று. அதனை அடையப் பல வழிகள் உள்ளன என்றே கூறுகிறது. இந்த வழிகளில் இது உயர்ந்த வழி, இது தாழ்ந்த வழி என்று ஒன்றும் இல்லை. எனவே தான் கர்ம யோகம், இராஜ யோகம், பக்தி யோகம் என்று பல வகைகளிலும் இறைவனை அடையலாம். அவரவர் சக்திக்கு உட்பட்டு, அவரவர் ஆற்றல் வழியில் இறைவனை அடைய முடியும். இதுவே இந்து மதம். இவை எல்லாம் தவிர தாந்திரிகம் என்னும் முறைப்படியும் இறைவனை அடைய முடியும் என்றும் நம்புகிறது இந்த வழிமுறை.
இந்துமதம் என்பதே ஒன்று இல்லை என்பதே உண்மை. ஆதி காலத்தில் வேறு மதங்கள் இல்லாத போது ஒரே வழிமுறையாக இது இருந்ததால் இதற்கு ‘சனாதன தர்மம்’ என்றே பெயர் இருந்தது. ஒரு ஊரில் கோபால் என்ற பெயரில் பலர் இருந்தால் அவர்களை அடையாளம் காண ‘குண்டு கோபால்’,’நெட்டை கோபால்’, ‘குள்ள கோபால்’ என்று அழைப்பது வழக்கம் தானே? ஆனால் கோபால் என்று ஒருவன் மட்டுமே இருந்தால் ? வேறு அடையாளங்கள் தேவை இல்லையே. அது போல் வேறு வாழ்க்கை வழி முறைகள் / மதங்கள் இல்லாத போது இருந்த ஒரே வழிமுறை ‘சனாதன தர்மம்’ என்று அழைக்கப்பட்டது. இந்து மதம் என்பது ‘சிந்து’ நதியின் மறு பக்கம் இருந்த மக்களை குறிக்கப் பயன்பட்ட ‘இந்து’ என்ற தொடரே ஆகும். அது நாளடைவில் மற்ற மதங்கள் தோன்றியபின் ‘இந்துமதம்’ என்று அழைக்கப்பட்டது.
அது எப்படி – ஒரு கடவுள் என்று இல்லையே ? ஒரு தலைவர் என்று இல்லையே ? எனவே இதனை மதம் என்று எப்படி அழைப்பது ? என்று கேள்வி எழுவது இயற்கையே. இந்த ஜன நாயகக் கடவுள் கொள்கை தான் இந்த தர்மத்தின் ஆணிவேர். உனக்கு எது பிடிக்கிறதோ அதுவே உன் கடவுள் என்று கொண்டது இந்த சனாதன தர்மம்.
“அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் ”
என்று நம்மாழ்வார் “அவர்வர் அறிவுக்கு ஏற்பவும், அறியும் வகையிலும், கடவுள் அமைவார்” கடவுளையே மக்கள் விருப்பத்திற்கு விடுகிறார்.
இதற்கு மேல் சென்று ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் சார்வாகம் என்ற பிரிவும் இந்த தர்மத்தில் காணக்கிடைக்கிறது ( இது இராமசாமி நாயக்கரின் கண்டுபிடிப்பு அல்ல ).
இந்த தர்மமே இவ்வாறு இருக்கும் போது, இதன் ஒரு பிரிவு என்று ஒரு அம்மையார் கண்டுபிடித்துள்ள ஒன்றைப்பற்றி எழுதியுள்ளது என்ன தவறு? தவறு என்று தெரிந்தால் மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டுமே ஒழிய இப்படி அரேபியா, சீனா முதலிய நாடுகள் போல் ‘துக்கிணி பிச்சம்’ முறையில் நடந்துகொள்வது அறிவு முதிர்ச்சி இன்மையைக் காட்டுகிறது.
‘இஸ்லாம் பற்றியோ, கிறித்தவம் பற்றியோ எழுதுவார்களா?’ என்று கேட்பது நியாயமாகத் தோன்றினாலும் அந்த சம்பிரதாயங்களில் தர்க்கம், வாதம் முதலியன இல்லை என்ற அடிப்படையான அறிவு வேண்டாமா ? ஆதி சங்கரர் சொன்ன ‘அத்வைதம்’ தவறு என்று மத்வர் ‘த்வைதம்’ கொண்டுவந்தார். இராமானுசர் ‘விஷிட்டாத்வைதம்’ கொண்டுவந்தார். இராமனுசர் தன் அத்வைத குருவான யாதவப் பிரகாசர்டமே வாதம் செய்தார். அதன் பின்னரே விஷிட்டாத்வைதம் என்ற சித்தாந்தம் ஏற்பட்டது. இது ஒரு பரிணாம வளர்ச்சி.அவ்வளவே.
ஒரே ஒரு பெண்மணி எழுதியுள்ள ஒரு நூல் ஒரு சம்பிரதாயத்தையே அழிக்கும் வல்லமை பெற்றதா என்ன ? அல்லது அந்த அம்மையாரின் எழுத்து மக்கள் மன உணர்வுகளைப் பாதிக்கும் என்று சொன்னால் படிக்காமல் இருக்க வேண்டியது தானே ? அல்லது அதை மறுத்து வேறு ஒரு நூல் எழுத வேண்டியது தானே ?
இவை எதையும் செய்யாமல் புத்தகமே வராமல் செய்தல் ஆண்மை அற்ற செயல் என்பது என் தீர்மானமான கருத்து.