ராகுல் காந்திக்கு சில சனி தோஷ பரிகாரங்கள்

captஏழரை சனி, அஷ்டமத்து சனி என்று சனி பல வகைப்படும். இதில் ஏதாவது ஒன்று வந்து நம்மை எட்டிப் பார்த்தாலே நம் கதி அதோகதி தான். முழுசாகக் கூட பார்க்க வேண்டாம். ஒன்றரைக் கண் பார்வையை போதுமானது. நாம் சைக்கிளில் போனாலே ஹெல்மட் போடாத வழக்கு வந்து சேரும். அவ்வளவு சக்தி அந்த சர்வ வல்லமை பொருந்திய சனி பகவானுக்கு உண்டு.

அப்படியாகப்பட்ட சனி பகவானின் பார்வையின் தீக்ஷண்யம் இவ்வாறு இருக்க, இந்த சனி பகவானின் பல உருவங்களும் ஒரு சேர நம்மைப் பார்த்தால் ? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அல்லவா ?

அப்படிப்பட்ட சூழலில் உள்ளவர் தான் திருவாளர் ராகுல் காந்தி. பல வகைப்பட்ட சனி கிரகங்கள் ஒரு சேர அவரைப் பார்க்கின்றன.

இவரைப் பார்க்கும் சனிக் கிரகங்கள் என்ன ? அதற்கான பரிகாரங்கள் என்ன ?

முதலாமவர் மணி சங்கர் ஐயர். இவரால் அனுகூலம் என்பது ஒரு கடுகளவு கூட என்றைக்கும் இருந்ததில்லை. இவரை நாம் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இவரது பார்வை ஒரு துளி கூட நம் மீது படாமல் இழுத்துப் போர்த்திக்கொண்டு இருக்க வேண்டும். இவரது பழைய தொகுதியான மயிலாடுதுறையை இவர் சிங்கப்பூராக மாற்றியமைத்த விந்தையை இன்னும் அந்த ஊர் மக்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சர்வ சக்திகளின் இருப்பிடமான இந்த சனி பகவான் திறந்த வாய் மூட மாட்டார்.  ஒவ்வொரு முறை இவர் வாய் திறந்தாலும் ஒரே களேபரம் தான். அவருக்கு அல்ல. அவரது கட்சிக்கு.  சமீபத்தில் ‘சாய் வாலா’ – ‘தேனீர் விற்பவர்’ என்று மோதியை இவர் போற்றிப் புகழ்ந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவிருந்த ஒரு சில தேனீர் கடைக்காரர்களும் இப்போது மோதி பக்கம் சென்றுவிட்டனர் – ‘ஓஹோ, மோதி நம்ம ஆளு போல’ என்று நினைத்துக்கொண்டு.

பரிகாரம் : மணி சங்கரரை ஆப்கானிஸ்தானுக்குத் தூதராக அனுப்பலாம். தாலிபான்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க ஒரே வழி இது தான். (ஒபாமா கவனிப்பாராக).

திக் விஜை சிங் : இந்த சனி பகவான் தற்போது சற்று வீரியம் குறைந்து காணப்படுகிறார். மணி சங்கர சனி பகவானின் தீக்ஷண்யம் சற்று அதிகமாக இருப்பதால் இவரது சக்தி கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது. இருந்தாலும் இவர் சாதரணமானவர் அல்லர். இவரது வீரியம் வாய் வழியாக அவ்வப்போது வெளிப்பட்டு,காங்கிரஸின் வாய்ப்பைப் பாதிக்கும். சமீபத்தில் உ.பி.யில் இந்த சனி பகவான் ராகுலின் கூடவே இருந்து பெரிய பள்ளம் தோண்டினார். பள்ளம் தோண்டும் கலையில் சாமர்த்தியர் இந்த சனி பகவான்.

பரிகாரம் : இலங்கைக்கு இந்திய தூதராக இவரை அனுப்பலாம். அல்லது இரண்டு வருடம் இலங்கை அரசிற்கு இவரைக் கடன் கொடுக்கலாம். இராஜபஷே இந்து மகா சமுத்திரத்தில் தானாகவே மூழ்கினார் என்று விரைவில் செய்தி வந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். திக் விஜையாரது பராக்கிரமம் அவ்வளவு பெரியது. ராகுல் கவனிப்பாராக.

ப.சிதம்பரம் : இந்த சனீஸ்வரர் எது சொன்னாலும் தீமையே பயக்கும். இவருக்கு அனுகூலப் பார்வை என்று ஒன்று இல்லவே இல்லை. உதாரணமாக ‘பங்குச் சந்தை நன்றாக உள்ளது’  என்று அவர் சொன்னால் அதே தினம் வரலாறு காணாத வீழ்ச்சி பங்குச்சந்தையில் ஏற்படும். ‘இந்தியப் பொருளாதாரம் மேலே உயர்கிறது’ என்று இவர் சொன்னால் அன்றே உலக வங்கி இந்தியாவைப் பற்றி அபாயகரமான ஒரு செய்தியை வெளியிடும். அவ்வளவு வாக்கு சக்தி இவருக்கு ( வாக்கு என்றதும் நினைவுக்கு வருகிறது – இவர் நிற்கும் தேர்தல்கள் இரண்டு முறை வாக்குகள் எண்ண வேண்டும்).

பரிகாரம் : சீனாவிற்கு ‘பொருளாதார’ அறிவுரை கூற இவரை அனுப்பலாம். சீனாவை அடக்க இதை விட்டால் வேறு வழி இல்லை. ஒரு மாததில் சீனா கடன் கேட்டு இந்தியாவிடம் கை ஏந்தும் நிலைக்குக் கொண்டு வந்து விடுவார் இந்த சனி பகவான்.

சஷி தரூர் – இந்த சனி பகவான் நல்லவர். சொந்த சோகங்கள் இவரை வாட்டுன்றன. ஆனால் இவரும் வாக்கு ஸ்தானத்தில் பலம் பொருந்தியவர். எனவே கொஞ்ச நாளைக்கு இவரால் கஷ்டம் இல்லை. அதே சமயம் பலனும் இல்லை.

பரிகாரம் : மீண்டும் ஐக்கிய நாடுகள் சபைக்கே அனுப்பி விடலாம். சத்தம் கொஞ்சம் குறையும்.

வீர்ப்ப மொய்லி : இந்த சனி பகவான் சொன்னால் தான் செய்வார். நல்லவர் தான். ஆனால் ரொம்பவும் அழுச்சாட்டியம் செய்து பின்னர் ஒத்துக்கொள்வார். இவரால் பயன் இல்லை. ஆனால் உபத்திரவங்கள் ரொம்பவும் அதிகம். ‘ரிலையன்ஸ்’ என்று எங்கே எழுதி இருந்தாலும் அங்கே அவரைப் பார்க்கலாம்.

பரிகாரம் : வட கொரியா அனுப்பலாம். வேலையும் இருக்காது; பேசுவதற்கும் வாய்பில்லை.

ரேணுகா சௌதிரி – இவர் பெண்பால் சனி பகவான். ரொம்ப பராக்கிரமம் பொருந்தியவர். பேசிப் பேசியே சாவடிப்பார். ஆனால் கடைசிவரை நம்மை ஆதரித்துப் பேசுகிறாரா, எதிர்க்கிறாரா என்றே தெரியாது. ஆனால் பேசிக்கொண்டே இருப்பார். அடிக்கடி சிரிப்பார். காரணம் தெரியாது ( அவருக்கும் )

பரிகாரம் : தமிழ் நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கலாம். காங்கிரசின் பல கோஷ்டிகள் வேஷ்டியைக் கிழித்துக்கொண்டு சண்டை போடும் போது இவர் இருப்பதால் குறைந்தபட்சம் வேஷ்டியாவது கிழியாமல் இருக்கும். மேலும் இவர் சென்னைக்கு வந்து ‘சத்திய மூர்த்தி பவனில்’ பேசத் துவங்கினால் வேறு யாரும் பேச முடியாது. வாசன் கோஷ்டி, தங்க பாலு கோஷ்டி,  சிதம்பரம் கோஷ்டி, கார்த்தி கோஷ்டி, கலைஞர் கோஷ்டி ( ஆம் இருப்பதிலேயே கலைஞர் கோஷ்டி தான் பெரியது) என்று பல கோஷ்டிகள் இருப்பதால் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சோனியாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடவேண்டிய ஒரு தேசியக் கடமை இருப்பதால் ரேணுகா சனி அம்மையார் தான் சரியான தேர்வாக இருப்பார்.

கபில் சிபல் – இந்த சனி பகவானாரும் வாக்கிற்கு ( பேச்சு ) அதிபதி. இவரால் பேசாமல் இருக்கவே முடியாது. பல் தேய்க்க வாய் திறந்தாலே பேசத் துவங்கிவிடுவார். ஆனால் எப்பொழுதும் ‘ஜீரோ’, ‘ஜீரோ’ என்று ஒரு மந்திரம் மாதிரி சொல்லிக்கொண்டிருப்பார். தற்போது கூட 62,000 கோடி என்பது வெறும் ‘ஜீரோ’ என்று கண்டுபிடித்தார். உலகமே வியந்தது.

பரிகாரம் : பல பஞ்சாங்கங்களையும் தேடிவிட்டேன். பரிகாரம் தெரியவில்லை.

இவ்வளவு சனி பகவாங்கள் இருந்தாலும் ராகுல் தினமும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதால் அந்த சனி தோஷமும் அவருக்கு தினமும் ஏற்படுகிறது. எனவே அவர் கண்ணாடி பார்க்காமல் இருப்பது நல்லது. ‘சொந்த சனி’க்குப் பரிகாரம் இல்லை என்று பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது.

இதன் பிறகு ‘தாய் சனி’, ‘மாப்பிள்ளை சனி’ என்று இரண்டு சனி பகவாங்கள் உள்ளனர். இவற்றின் செயல்பாடுகள் வெளியில் தெரியாது. ஆனால் சிறிது காலம் கழித்து பலன்கள் தெரிய வரும். இவற்றிற்கும் பரிகாரம் இல்லை. இவை அஷ்டமத்து சனிகள். காலைச் சுற்றிய பாம்புகள் மாதிரி கடிக்காமல் விடாது.

ஆனால் இவ்வளவு சனிதோஷங்கள் இருந்தாலும், அவரை ஒன்றும் செய்யாதபடி இருக்க ஒரு சர்வ சனி தோஷ நிவாரண மந்த்ரம் ஒன்று உள்ளது. இதனை தினமும் மூன்று முறை மனம் ஒன்றி ஜபித்தால் இரண்டு மாதத்தில் பலன் தெரியும்.

“சனீஸ்வராய வித்மஹே சகல கஷ்டாய தீமஹே

தன்னோ விஜய காந்தப் ப்ரசோ தயா ஆது”

இந்த மந்திரத்தைப் பராயணம் பண்ணும்போது நாக்கை மடித்துக் கொண்டு செய்ய வேண்டும். அதே சமயம், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், முஷ்டியை உயர்த்திக்கொண்டும் இருக்க வேண்டும்.அது ரொம்பவும் முக்கியம்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “ராகுல் காந்திக்கு சில சனி தோஷ பரிகாரங்கள்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: