பகுத்தறிவு பற்றி எழுதக் கூடாது என்று எத்தனை நாள் தான் பொறுமையாக இருப்பது ? நாட்டில் நடப்பவை நம்மை எழுத வைத்து விடுகின்றன. ஒரு காமெடி என்றால் அது பற்றி எழுதாமல் எப்படி இருப்பது ?
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வந்தது இது. விஷயம் இவ்வளவு தான். நேற்று திருச்சியில் தி.மு.க. மாநாடு துவங்கியுள்ளது. சனிக்கிழமை காலை 9:00 – 10:30 ராகுகாலம் என்பதால் ‘தலைவர்’ அவர்கள் 10:40 மணிக்குக் கொடி ஏற்றியுள்ளார். ‘ராகு காலம்’ தவிர்க்க வேண்டி அப்படி செய்யப்போகிறோம் என்று மூத்த தலைவர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அதே போல் ஜனவரி 6-ம் தேதி கட்சி அலுவலகம் திறந்துள்ளார் ஸ்டாலின். அன்று திங்கள் என்பதால் 10:30- 12:00 ராகுகாலம். அதனைத் தவிர்த்து 12 மணிக்கு மேல் திறந்துள்ளார்.
ஏற்கெனவே 2ஜி வழக்கில் சனி பகவான் பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஜாபர் சேட், கனிமொழி உரையாடல்கள் வெளியாகியுள்ளன. அழகிரி வேறு ஆட்டம் போடுகிறார். தேர்தல் வேறு நெருங்குகிறது. கூட்டணி ஒன்றும் இதுவரை அமையவில்லை. இந்தக் களேபரத்தில் எதற்கு ராகுவைப் பகைத்துக்கொள்வானேன் என்று நினைத்திருக்கலாம். பெரியார் வழியில் நடப்பவர்கள் அல்லவா ?