தமிழர்கள் நான்கு பேர் சேர்ந்தால் ஒன்றாகச் செயல் பட மாட்டார்கள் என்று பரவலான ஒரு எண்ணம் தில்லியில் உண்டு.அமெரிக்காவில் டெக்ஸாசில் இரண்டு தமிழர் அமைப்புகள் உள்ளன. ஒன்றில் இருந்தால் இன்னொன்றில் இருப்பது அவ்வளவு எளிது அல்ல. கொஞ்சம் பாராமுகமாக இருப்பார்கள். ஜப்பானில் தோக்கியொவில் நான் இருந்தவரை ஒரே ஒரு அமைப்பு தான் இருந்தது. தீபாவளி மட்டும் கொண்டாடுவார்கள். தற்போது பொங்கல் விழாவும் அதில் சேர்ந்துள்ளது என்று அறிகிறேன். ஆனால் இலக்கிய அமைப்பு என்று தமிழர் சார்பில் அங்கு 2008 வரை இல்லை.
ஆனால் சிங்கப்பூரில் பல அமைப்புகள் உள்ளன. இலக்கிய வட்டம், வாசகர் வட்டம், தங்க மீன் வாசகர் வட்டம், இலக்கிய மாலை, கவி மாலை என்று பல அமைப்புகள் இயங்குகின்றன. இன்னும் பலதும் இருக்கலாம்.
இதில் வாசகர் வட்டம் என்னும் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாதம் தோறும் இறுதி ஞாயிறு அங் மோ கியோ நூலகத்தில் கூடி தங்களது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். இந்தக் கூட்டம் 25 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்பது ஒரு வியப்பே.
அந்த வகையில் இந்த 25-ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகனை அழைத்துள்ளார்கள். அவர் முன்னிலையில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் திரு.ஷானவாஸ், திருமதி.சித்ரா ரமேஷ், திரு.குமார் ஆகியோரது நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல் ஆய்வு அதன் பின்னர் ஜெயமோகனது சொற்பொழிவு உள்ளது. (நாள் 01-03-2014 மாலை 5:00 மணி, உட் லேண்ட்ஸ் நூலகம்,, சிங்கப்பூர்).
இம்மாதிரி நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசு தனது நூலகத்துறையின் மூலம் ஊக்குவிக்கிறது. நல்லது நடக்கிறது.
அரசியல் கலப்பு ஏதும் இன்றி இப்படிப்பட்ட தனித்துவமான இலக்கிய நிகழ்வுகள் பல சிங்கையில் நடைபெறுகின்றன.
இவை பல்கிப் பெருக வேண்டும்.