The side that is not spoken about, generally.

சிங்கப்பூர் எம்.ஆர்.டி. ( ரயில்)யில் பயணம் செய்வது, அதுவும் காலை வேளையில் முதுகில் கணினியுடன் செல்வது என்பது இமய மலையில் முதுகில் சுமையுடன் ஏறுவது போல். காலை வேளையில் கடுகு போட்டால் கடுகு விழாது.

அப்படி இருந்தாலும் மக்கள் குனிந்த தலை நிமிராமல் பயணம் செய்வர். தலையை எப்படி நிமிர்த்துவது ? கண்கள் தான் கைத் தொலைபேசியில் பதிந்துள்ளதே ! ஏதாவது வீடியோ ( காணொளி ) பார்த்துக்கொண்டிருப்பார்கள். அல்லது விளையாட்டு ஓடிக்கொண்டிருக்கும்.

சில ஆண்கள் பரபரப்புடன் அன்றைய பொருளியல் செய்திகள் படித்துக்கொண்டிருப்பர். ஆனால் மயான அமைதி இருக்கும். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளமாட்டார்கள். யாராவது பேசிக்கொண்டிருந்தால் அது கைப்பேசியில் என்று அறிந்துகொள்ளவும்.

எப்போதாவது ஒருவருக்கு மேற்பட்டவர் பேசுவது போலவும், சிரிப்பது போலவும் கேட்டால், அவர்கள் பள்ளி மாணவர்களாக இருப்பர். எந்தக் கவலையும் இல்லாமல் அன்றைய கால் பந்துப் போட்டி பற்றிப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பர். அவர்களைப்போலவே இருந்திருக்கலாம் என்று தோன்றும்.

இன்றும் அப்படித்தான். மூன்று சீனச் சிறுவர்களும் ஒரு மலாய்ச் சிறுவனும் ஒரு தமிழ்ச் சிறுவனும் ரொம்பவும் சந்தோஷமாகப் பேகிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். இனங்கள் கடந்த இந்தப் பேச்சு வார்த்தை மனதுக்கு இதமாக இருந்தது. சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் இந்தப் பல இனப் பேச்சு வார்த்தையும் ஒன்று.அதுவும் 10 வயதுப் பள்ளி மாணவர்களிடையே நடக்கும் பேச்சு வார்த்தை அன்றைய வீட்டுப்பாடம், அன்றைய விளையாட்டுப் போட்டி என்று நீண்டுகொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து அமர இடம் கிடைத்தது. அமரலாம் என்று யோசிக்கத் துவங்கிய நேரம் வயதான ஒரு சீன மாது கண்ணில் தெரிந்தார். அவருக்கு அமர இடம் கொடுத்து விலகி நின்றேன்.

ஜெயமோகனின் ‘அறம்’ தொகுதி படிப்பதில் எனக்கு ஒரு சுயநல எண்ணம் உண்டு. எப்போதாவது எனது மன நிலையை மாற்ற வேண்டும் என்றால், ஏதாவது உருக்கமாக எழுதவேண்டிய மன நிலை தேவைப்பட்டால் ‘அறம்’ படிப்பது வழக்கம். மனிதனை ஒரு மன நிலையில் இருந்து அதற்கு முற்றிலும் மாறான மன நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் ஜெயமோகனுக்கு உண்டு.

சில சமயம் கட்டுரைக்கு ஒரு கரு கிடைக்கும். ஆனால் அதை எழுத தேவையான மன நிலை அமையாது. அந்த மன நிலையைக் கொண்டு வருவதற்கு ஜெயமோகனின் ‘அறம்’ தொகுதி பயன்படும். இது எனது வழக்கம்.

அப்படித்தான் இன்று ரயிலில் ‘அறம்’ எடுத்தேன்.

கூட்டம் அதிகம். நிற்க இடம் இல்லை. ஒரு ஓரமாக நின்று ‘கெத்தேல் சாஹிப்’ வரும் ‘சோற்றுக் கணக்கு‘ எடுத்தேன்.

சிங்கப்பூரில் துவங்கி, திருவனந்தபுரம் சென்று, பஜார் தெருவில் நுழைந்து, சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டு, வீட்டு வேலைகள் செய்து, பழையது உண்டு, பின்னர் செட்டியார் கடையில் வேலைக்குச் சேர்ந்து, கெத்தேல் சாஹிப்பிடம் டீ குடித்து, அவர் கடையில் உணவு உண்டு, பணம் போடாமல் வெளியேறி, அதை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டு வியந்து, உருகி, கோபப்பட்டு, பின்னர் கனிந்து, வேலை கிடைத்து, சீட்டு எடுத்து, சாஹிப்பின் கடையில் அவரது சோற்றுக் கணக்கு அடைத்து, அவர் கையை என் தாயின் கையாகப் பார்த்து, ராம லெட்சுமியைத் திருமணம் செய்து முடித்து அழைத்து வந்து  எழுந்து பார்த்தால் நான் இறங்க வேண்டிய ‘தானா மேரா’ தாண்டி ‘சீமெய்’ நிலையத்தில் ரயில் நின்று நான் அவசரமாக ஓடி, ரயில் கதவில் கணினிப்பை மாட்டி, அடுத்த ரயில் பிடித்து அலுவலகம் செல்வதற்குள் நான் பங்கு பெற வேண்டிய ‘மீட்டிங்’ துவங்கி, அசடு வழிய நின்று, பொய்க் காரணம் சொல்லி …

இதற்கெல்லாம் காரணமான அந்த ஜெயமோகனைப் படிக்காதீர்கள்.

One response

  1. சசி குமார் Avatar
    சசி குமார்

    ஒவ்வொரு கதையின் முதல் சில பக்கங்களை தாண்ட சிரமப்பட்ட்டேன் பின்னர் வெளியே வர சிரமப்படுவதாக இருந்தது.

    Like

Leave a reply to சசி குமார் Cancel reply