பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலான நூல்களின் மேல் நம்பிக்கை இல்லையா ? அவற்றில் உள்ள வேள்விகள் பற்றிய ஞானம் தேவை இல்லையா ? அவை எதுவுமே வேண்டாமா ? அவை இல்லாமலேயே மோக்ஷம் கிட்டுமா ? என்றெல்லாம் கேட்டிருந்தார் ஸ்ரௌதிகள்.
மீமாம்ஸங்கள் எல்லாம் இருக்கட்டும். அவற்றில் என்ன இருக்கின்றன என்ற ஞானம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது ? அவற்றில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் பரப்பிய புரளிகள் எத்தனை ? அவற்றை சங்கரர் களைந்த விதம், ஆழ்வார்கள் செய்த தொண்டு , அவர்கள் வழி காட்டிய மோக்ஷப் பாதை, அதன் பின் வந்த நாதமுனிகள் ஆற்றிய பணி – இப்படி எவ்வளவோ தூரம் கடந்து விட்டோம். ஆனாலும் இவர்கள் மீமாம்ஸங்களிலேயே உள்ளனரே ? என்று எண்ணினேன்.
மீமாம்ஸங்களுக்குள் போவதற்குள் பாரத சிந்தனை வெளியில் எவ்வளவு ஆழம் உள்ளது என்று நம் மக்கள் அறிந்துள்ளனரா என்று எனக்கு சந்தேகம் உண்டு. வேதங்கள் மட்டுமே பிரமாணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று நம்மில் யாராவது கேட்டுள்ளனரா என்றும் எனக்குச் சந்தேகம் உண்டு. அவ்வாறு கேட்ட பௌத்தமும் ஜைனமும் ஸார்வாகமும் போன இடம் தெரியவில்லையே என்று கேள்வி எழுப்பியவர்கள் எத்தனை பேர் ?
ஏதோ ஒரு தீர்க்கதரிசி ஒரு பாதையைக் காண்பித்தால் அதனையே பின்பற்றிக்கொண்டு செல்வதும், சில நாட்கள் கழித்து அவரை விடுத்து இன்னொரு தீர்க்கதரிசியின் பின்னால் செல்வதும் தான் ஆன்மீக விழிப்புணர்வா என்றும் இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரியவில்லை.
கேள்விகள் ஒரு காலத்தில் எழுப்பப்பட்டன. அதன் மூலமே உபநிஷதங்கள் தோன்றின. அவற்றின் மூலம் வேதங்கள் சொல்லும் ஆழ்ந்த பிரபஞ்ச அறிவில் சில வெளிச்சங்கள் தென்பட, மேலும் ஆழ விசாரித்தால் பல உண்மைகள் புலப்பட்டன. மேலும் மேலும் தோண்டிப் பார்த்து அவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ஆதியினை உணர முற்படுவது விஞ்ஞானம். அந்த ஆதியே பிரும்மம் என்றோ, இந்தப் பிரபஞ்சம் என்ற பருப்பொருளின் உணர்வு வடிவே பிரும்மம் என்ற எண்ணமோ ஏற்படுமாயின் அதுவே தத்துவ விசார வெற்றி, ஆன்மீகம்.
ஸ்ரௌதிகள் கேட்ட இன்னொரு கேள்வி என்னைத் தைத்தது. ‘ஸார்வாகன் நாஸ்திகன் இல்லையா?’ என்பதே அது.
நாஸ்திகன் என்பவன் யார் ? பிரும்மம் இல்லை என்பவனா ? அல்லது பிரும்மம் என்பது ஸர்வ வல்லமை படைத்தது என்று நம்ப மறுப்பவனா ? பிரும்மம் இல்லை என்பது வேறு; அது தேவை இல்லை என்பது வேறு அல்லவா ? ஆக எது நாஸ்திகம் ?
நாஸ்திகம் என்பது இருக்கட்டும். முதலில் ஆஸ்திகம் என்பது என்ன ? பிரும்மத்தை நம்புவதா ?
ஆஸ்திகம் என்பதன் வேர்ச்சொல் அஸ்தி என்பது அல்லவா ? ‘அஸ்தி’ என்றால் ‘இருப்பது’ என்பது. ‘இருப்பதை’ நம்புவது ஆஸ்திகம். ‘இருப்பதை’ உணர்வது ஆன்மீகம்.
இருப்பதை நம்பாதது ஒருபுறம் நாஸ்திகம் என்றால் இருப்பதை அறிய முடியாதது என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? அறிய வேண்டிய தேவை இல்லை என்பது அல்ல அது. அறிய முடியாது என்று நம்புவது அது. இருக்கிறது என்பதை உணர்வதும் ஆனால் இருப்பதை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வதும் தேடலின் ஒரு வழி தானே.
ஆனால் ஸார்வாகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ‘இருப்பது என்பதே இல்லை’ என்ற கொள்கை உடையவர்கள். கண்களுக்குத் தெரியும் இருப்பே இருப்பு. தெரியாதது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? கண்களுக்குத் தெரிந்து, உணர முடிந்து இருக்கும் பூதங்களின் கலவையினால் ஏற்படும் மாற்றங்கள் இந்த உலகப் பொருட்கள். அவையே சாஸ்வதம். அவை அழிந்தபின் இருப்பது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே கண்களுக்குத் தெரியாதவை நமக்குத் தேவை இல்லாதவை என்பதை விட அவை இல்லை என்பதே உண்மை. இது அவர்கள் சார்பு நிலை.
ஸார்வாகர்களின் நிலை ரொம்பவும் எளிமையானது. ஆனால் அந்த நிலை பௌதீக வாதம் மட்டுமே. கண்களுக்குத் தெரியாததால் சில விஷயங்கள் இல்லை என்றாகிவிடுமா?
பசும்பால் இருக்கிறது. அதிலிருந்து மோர், தயிர் முதலியன கிடைக்கின்றன. எனவே பாலைப் பார்த்து இதில் மோர் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது மோரையோ, தயிரையோ பார்த்து இதில் பால் இல்லை என்று சொல்ல முடியுமா ? அல்லது அவற்றினுள் நெய் இல்லை என்று ஆகுமா ? நெய் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் தயிரில் வெண்னெய், நெய் முதலியன இல்லை என்று தான் கூற முடியுமா ?
பால் காரணம். மோர், தயிர் முதலியன காரியம். அதே போல் தயிர் காரணம். வெண்ணெய் அதன் காரியம். வெண்ணெய் காரணம், நெய் காரியம். அது போல் இந்த உலகில் மனிதன் மற்ற உயிர்கள் மற்றும் ஜடப் பொருட்கள் காரியம் என்றால், காரணம் என்ன ?
தயிர் கடைந்தபின் வெண்ணெய் கிடைக்கிறது என்பதால் தயிர் இல்லை என்று சொல்ல முடியாதது போல மனித, மிருக உயிர்களும், ஜடப்பொருட்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கான காரணமும் இருந்தாக வேண்டும் அல்லவா ?
ஆக, ஸார்வாகர்களின் தத்துவம் முழுமையானதல்ல. ஒரு அளவிற்கு மேல் நம் சிந்தனை செல்லவில்லை என்பதால் சிந்தனைக்கு அப்பால் அறிவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆகுமா ?
உலகம் என்ற பருப்பொருள் உண்மை என்பதால் அதை நாம் உணர்வதால் அதனைக் காரியம் என்று கொள்வோம். உலகம் என்பது நம் அனைவரையும் சேர்த்தே சொல்கிறேன். ஆக, உலகம் காரியம். அதன் காரணம் என்ன ? ஸார்வாகர்கள் தத்துவப்படிப் பார்த்தால் காரணம் நம் சிந்தனைக்கு அப்பால் உள்ளது எனவே காரணம் என்பது இல்லை என்று கொள்ளலாமா ? அப்படிக் கொள்வது தவறு இல்லையா ?
அப்படியென்றால் பிரபஞ்சம் என்பது இல்லையா ? பிரபஞ்சம் பற்றிய நமது சிந்தனை விரிவு அடையவில்லை என்பதால் பிரபஞ்சம் என்பது இல்லை என்று ஆகிவிடுமா ?
பிரபஞ்சம் பற்றி நம்மால் முழுமயாக அறியவும், அதன் குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நமது சிந்தனைச் சக்தி போதாமையால், பிரபஞ்சத்தின் உருவகமாக ‘பிரும்மம்’ என்று கொள்கிறோம். பிரபஞ்சம் என்பது இன்ன அளவு கொண்டது என்று நம்மால் அறிய முடியாததால் பிரும்மத்திற்கு ‘அதை அளவிட முடியாது’ என்று ஒரு குணத்தைக் கற்பிக்கிறோம்.
பிரபஞ்சம் நமது பூமியையும் மற்ற கிரகங்களையும், சூரியனையும், மற்ற சூரியர்களையும், அனைத்து நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதால் அதற்குப் பேராற்றல் இருக்க வேண்டும் என்று எண்ணி பிரபஞ்சத்தின் உருவகமான பிரும்மத்திற்கு அளப்பறிய ஆற்றல் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதை பிரும்மத்தின் ஒரு குணம் என்று பிரஸ்தாபிக்கிறோம்.
இந்த சிந்தனை மரபே நமது தத்துவ ஞானம். இந்த ஞானத்தை அடைவதையே நமது பிறப்பின் குறிக்கோளாகக் கொள்கிறோம். கொள்ள வேண்டும்.
ஞானத் தேடல் இப்படி இருக்கையில், ஸ்ரௌதிகள் ஸார்வாகரை ‘நாலாம் வர்ணத்தவன்’ என்று இளக்காரமாகக் கூறியது என்ன வகையில் ஞானத்தின் வெளிப்பாடு என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.
‘ஸ்வாமி, தேவரீர் சரீரம் அஸக்தமாக இருக்கிறதா ?* சற்று ஸ்ரம பரிகாரம்* செய்துகொள்ளத் திருவுள்ளமோ ?’, என்று என் சிந்தனையைக் கலைத்தார் கூரத்தாழ்வார்.
———————————————————————–
சரீரம் அஸக்தமாக – உடல் நிலை சரி இல்லாமல்
ஸ்ரம பரிகாரம் – ஓய்வு எடுத்துக்கொள்ளுதல்
‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’