ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க

குலசேகர ஆழ்வார் அரங்கனைப் பற்றி ஒரு பாசுரம் பாடினார்.

“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே”

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்களால் ஸேவிக்கும் நாள் எந்த நாளோ ? என்று கேட்பது போல் பாடியுள்ளார் ஆழ்வார்.

இன்னொரு பாடல் உண்டு. அது திருமலைத் தெய்வத்தைப் பற்றியது :

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே ”

‘திருமலையில் உன் கோவில் வாசலில் ஒரு படியாக இருந்து உன் பவள வாய் அழகைக் காண வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

ஆழ்வார்களை அப்படியே கொஞ்ச நேரம் விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

என்னை வாழ வைத்தவர் பெரியார். ஆம். உண்மை தான். என் தற்போதைய வாழ்க்கைக்குக் காரணம் பெரியார்.

இங்கு நான் பெரியார் என்பது ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் என்னும் பெரியாரைத்தான் சொல்கிறேன். அவர் மட்டும் இல்லை எனில் நான் நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது. என் சுயமரியாதையை இழந்து நின்றிருப்பேன்.
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நான் மட்டும் அல்ல, இன்னும் பலர் இன்று நல்ல முறையில் வாழக் காரணம் பெரியார் தான். நாளை பலரும் நல்ல வாழ்க்கை அடையக் காரணமும் அவரே தான்.

நினைத்துப் பாருங்கள். 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிராமண சமூகம் எப்படி இருந்தது ? உட்பூசல்களும், வடிகட்டிய மூட நம்பிக்கைகளும், அரசு வேலை அல்லது அடுப்படி வேலை என்கிற வட்டத்துக்குள் மட்டுமே இருந்த சமூகமாக இருந்தது அது. கணவனை இழந்த அச்சமூகப் பெண்கள் இருந்த நிலை என்ன ? இன்று அந்த சமூகம் இருக்கும் நிலை என்ன ? பிராமணர்களை ஒன்றுபடுத்தியது பெரியார். உட்பூசல்களால் பிளவுபட்டிருந்த சமூகம் ஓரளவு ஒன்றானது.

தற்போது யானைக்கு எந்த ‘திருமண்’ போடுவது என்று எந்த வாசுதேவாச்சாரியாரும் கோர்ட்டுக்குப் போவதில்லை. இரண்டு காரணங்கள் : ஒன்று, யானைகள் இல்லை. இரண்டு, கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்கள் அமெரிக்கா போய்விட்டார்கள். இரண்டாவதற்கான காரணம் பெரியார்.

எண்ணிப் பார்க்க வேண்டும் பிராமணர்கள். இன்று பன்னாட்டு வங்கிகளிலும், ஆப்பிள், கூகிள், நாஸா முதலான நிறுவனங்களில் நல்ல நிலையில் இருக்கும் இவர்கள், பெரியார் இல்லாதிருந்தால் என்ன நிலையில் இருந்திருப்பார்கள் ? தமிழக அரசு நிறுவனம் அல்லது அலுவலகம் ஏதாவதில் எழுத்தர் பணி செய்துகொண்டிருப்பார்கள். அல்லது புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இந்த உலகளாவிய பரந்த நிலை கிடைத்திருக்குமா ?

பெரியார் இருந்ததால் கல்வியில் அவர்கள் 100க்கு 110 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்த உத்வேகம் யார் கொடுத்தது ? யாரால் அமைந்தது அந்த உந்து சக்தி ? பெரியாரை மறக்கலாமா ?

ஆங்கிலத்தில் ‘Complacency’ என்று சொல்வர்கள். ‘Comfort Zone’ என்னும் வளையத்திற்குள் இருந்துகொண்டு சுகமாக இருந்திருப்பார்கள் அல்லவா ? ஆனால் பிராமணர்களின் அந்த ‘Comfort Zone’ஐ உடைத்தெறிந்தவர் பெரியார்.

யாருமே வழிபடாத பிள்ளையாரை உடைத்து, அதனால் வீதிக்கு ஒரு பிள்ளையார் கோவில் ஏற்படுத்த உத்வேகம் அளித்தவரை மறக்கலாமா ? நன்றி மறக்கலாமா ? மறப்பீர்களா ? மறப்பீர்களா ? (‘அம்மா’ பணியில் வாசிக்கவும்)

பாம்பை அடிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி அதனால் பாம்புகளை வாழவைத்த அந்த மகானை மறக்கலாமா ? ஆனால், பாம்பை விட்டு உங்களை அடிக்கச் சொன்னதால் தானே நீங்கள் வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று வாழ்க்கையில் வேறூன்றினீர்கள் ? அந்த மகானின் உபகாரத்தை மறக்கலாமா ?

யார் கதையும் வேண்டாம். என் தந்தையார் தனது சாதியின் காரணமாக அலுவலகத்தில் மேலே செல்ல முடியாமல் ஒரே இடத்தில் சில பத்து ஆண்டுகள் ஸ்திரமாக இருந்ததால் தானே நானும் என் தம்பியும் ஒரே பள்ளீயில் ஸ்திரத்தன்மையுடன் படித்தோம். மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பலருக்கு நல்ல கல்லூரிகள் கிடைக்கக் கண்டு,
அதனால் மிகுந்த பொறுமையைக் கையாளும் மனவுறுதியை அளித்த மகானை மறக்க முடியுமா ?

அவர் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று இந்த கீழ் மத்தியதர வகுப்பைச் சார்ந்த நான் சென்று பணிபுரிந்திருக்க முடியுமா ?

ஒன்றும் வேண்டாம். வெறும் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்றிருக்க வேண்டிய எனக்கு, இன்று ஹிந்தி, ஓரளவு மராட்டி, ஜப்பானிய மொழி என்று பரிச்சயம் ஏற்பட்டு இருக்க முடியுமா ? குமாஸ்தா வேலை செய்திருக்க வேண்டிய நான் இன்று கணிப்பொறியில் எழுதுகிறேன். காரணம் யார் ? அந்த மகான் அல்லவா ?

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றே கற்றும் பழகியும் வந்த நான், பள்ளியிறுதியாண்டு முடிந்தபின் ‘சாதி என்பது என்ன?’ என்பதை உணர்த்திய அந்தப் பகலவனை மறக்க முடியுமா ? கண் திறந்தவரை தூஷிக்கலாமா என்ன ?

பிட்ஸ்பெர்க் ஸ்ரீநிவாசர் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் பெரியாரை நினைக்க வேண்டாமா ? டெக்ஸாசில் மீனாட்சியைத் தரிசிக்கும் போதெல்லாம் ராமசாமியாரை எண்ண வேண்டாமா ? அவர் இல்லை என்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீநிவாசரையும் மீனாட்சியையும் கண்டிருப்பார்களா ? அல்லது ஸ்ரீனிவாசப் பெருமாள் அமெரிக்கா பார்த்திருப்பாரா ?

இந்த ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் ( டல்லாஸ் ) போயிருந்தபோது அவ்வூர்ப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடந்து கொண்டிருந்தது. நான்கு பேர் பஞ்சகச்சம் உடுத்தி ஆழ்வார் பாசுரம் ஸேவித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் ஆழ்வார் பாசுரம் ஒலிக்கச்செய்வது சுலபமா ? சர்க்கரைப் பொங்கலுடன் புளியோதரையும் கிடைத்தது. அன்னமிட்டவரை நான் மறக்கலாமா ?

109-வது திவ்யதேசமாக அமெரிக்காவை ஆக்கியவரை மறக்கலாமா ?

வைக்கம் என்னும் ஊர் இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டிய உத்தமர் அல்லவா அவர் !

இதெல்லாம் போகட்டும். ‘காங்கிரஸ் ஒழியவேண்டும்’ என்று தீர்க்க தரிசனத்துடன் ஆசீர்வாதம் செய்த மகான் அல்லவா அவர் ! இப்போது அது நிறைவேறியுள்ளதே. அவரைப் பாராட்ட மனம் இல்லையே உங்களுக்கு !

அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு யாருக்கு உண்டு ? கடவுள் இல்லை என்று சொன்னார். ஆனால் அதே சமயம் அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் சொன்னார். சிரிக்காமல் சொன்னார். பூசாரிகளை ஏசினார். ஆனால் அனைவரும் பூசாரிகள் ஆக வேண்டும் என்றும் சொன்னார். இன்றும் அதே நிலை தான் அவரது வழி வந்தவர்களும் கையாள்கிறார்கள். ஒரே விஷயத்தில் இரண்டு நிலைகள் எடுப்பதில் குருவுக்கு சிஷ்யன் சளைத்தவன் இல்லை என்று உணர்த்துகிறார்கள். அந்தக் குருவை மறக்கலாமா ? மன்னிக்கவும். ‘குரு’ என்பது வடமொழி. ஆகவே ‘டீச்சர்’ என்று தமிழ்ப்
படுத்திப் படிக்கவும்.

‘பறைச்சி இரவிக்கை போடுவதால் தான் துணிப்பஞ்சம் வந்தது’ என்று அரிய உண்மையைக் கண்டுபிடித்தார். நோபல் பரிசுக்குரிய அந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட வேண்டாம், தூஷிக்காமல் இருக்கலாமே ஸார்,

ஆனால் ஒன்று. ‘தி.மு.க. வை ‘கண்ணீர்த்துளிகள்’, ‘கூத்தாடிகள் கழகம்’ என்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். அந்த நேர்மை எனக்குப் பிடிக்கும். இதையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

திருக்குறள் பற்றி அவர் செய்யாத அர்ச்சனை இல்லை. அப்படித் தமிழ் வளர்த்தார்.

அது போகட்டும். கண்ணகியை ‘தே**யாள்’ என்று வாழ்த்தினார். என்னே உயர்ந்த மரபு !

எது எப்படியோ, எனக்கும் இன்னும் பலருக்கும் நல்ல வாழ்க்கை அமைய உதவினார். அவர் தமிழைத் திட்டியதால் எனக்கு ஆழமாகத் தமிழ் படிக்க ஆர்வம் பிறந்தது. இராமனையும் கம்பனையும் வசை பாடியதால் நான் அவர்களில் ஆழ்ந்தேன்.
ஹிந்தியை எதிர்த்ததால் அதைப் பேசக்கற்றுக் கொண்டேன். ‘பூணூலை அறுப்பேன்’ என்று சொன்னதால் அது பற்றியும் ஆன்மீகம் பற்றியும் மேலும் படிக்கத் துவங்கினேன்.

அவர் ஒழிக்க நினைத்த அனைத்தும் தழைத்தோங்கியது – காங்கிரஸ் தவிர.

இத்தனை நையாண்டி செய்தாலும் அவரிடம் எனக்குப் பிடித்தது சில உண்டு.

நேர்மை. மனதில் இருந்ததை மறைக்கமல் அப்படியே பேசும் பாங்கு. இறுதி வரை தனது நம்பிக்கையில் உறுதி.

அவர் கடவுள், வேதம், புராணம் குறித்துச் சொன்னது எதுவும் புதிதல்ல. அனைத்தும் ‘ஸார்வாகம்’ என்னும் பிரிவில் உள்ள இந்திய ஞான மரபே. ஆகவே ‘ஸார்வாகர்’ களின் ஒரு அவதார முனிவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

விபீஷணனைக் கண்காணிக்க ரங்கநாதனாக தெற்கு பார்த்துப் பள்ளிகொண்டுள்ளார் பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று சொன்னவர் இன்று அதே கோவிலுக்கு முன்னர் பதிமூன்றாவது ஆழ்வாராக
நின்றுகொண்டிருக்கிறார். பூலோக வைகுண்டத்தில் பெருமாளை ஸேவித்தபடியே இருக்க எல்லாருக்கும் கொடுப்பினை இருக்காது. கோவிலுக்கு உள்ளே செல்ல அரசு காசு கேட்கிறது. செலவும் மிச்சம், புண்ணியமும் லாபம் என்று வாசலிலேயே நிற்கிறார்.

கட்டுரையின் துவக்கத்தில் படித்த குலசேகர ஆழ்வாரின் வேண்டுதல் என்ன ? கோவில் வாசலில் கல்லாய், படியாய் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவருக்குக் கிடைக்கவில்லை; இவருக்குக் கிடைத்துள்ளது அந்த பாக்கியம்.

எனவே ஆழ்வாரான பெரியார் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்குகிறேன்.

பி.கு: பிராமணர்கள் என்ற பிரிவினர் இந்திய சமூகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தார்கள். இப்போது அனைவரும் வைசியரே. அனைவரும் ஏதாவது தொழில் மட்டுமே செய்கிறார்கள் – ஒன்று பொருளை விற்கிறார்கள் அல்லது அறிவை விற்கிறார்கள். இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் சேர்கிறார்கள். எனவே இக்கட்டுரையில் ‘பிராமணர்கள்’ என்ற சொல்லை ‘மூதாதையர் பிராமணர்களாக இருந்தவர்கள்’ என்ற பொருளில் புரிந்துகொள்ளவும்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

9 thoughts on “ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க”

 1. உள்ளதை உள்ளவாறு நீங்களும் எழுத்தி பதிவு செய்துள்ளீர்கள். தமிழக முன்னாள் பிராமண இந்நாள் வைசிய சமுதாயம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது.

  Like

 2. நைச்சியானுசந்தானம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் தலைப்பு கொஞ்சம் உறுத்துகிறது.

  Like

 3. உங்கள் எழுத்து கூர்மையானது-ஆழமானது. நையாண்டி, நக்கலை குறைவின்றி மட்டுமல்ல, நிறைவாகவும் செய்யக் கூடியது. பாராட்டுகிறேன்.ஆனால் கருத்துக்கள் காலத்தை ஒட்டி அமைந்தால் தான், அதற்குரிய பலன் கிடைக்கும். பெரியாரின் ‘நாத்திகப் போர்’ தான் இறுதியில் பிராமண எதிர்ப்பு இயக்கமாக மாறியது. அல்லது அவரது பிராமண எதிப்பு, நாத்திகப் போராக மாறியது.அசல் ஆஸ்திகராகவும், செல்வந்தராகவும், தேசிய உணர்வாளராகவும்,நாயக்கர் என்ற ஜாதி லேபிளைக் கொண்டவராகவும் அறிமுகமான பெரியார் ஒருவர் தான், அன்று . காங்கிரஸ்சில் சீர்திருத்த நோக்குடன் உலாவிய தலைவர். அவறது கருத்துக்கள் ஏற்கப்படாத சூழ்நிலையில் தான் அங்கிருந்து வெடித்துக் கிளம்பினார். .அன்றைய உயர் ஜாதிக் கொள்கைகளும், போக்குகளும் தலை விரித்தாடியதை பெரியார் ஒருவரால் தான் கண்டிக்க முடிந்தது..வெள்ளையர் எதிர்ப்பு, அன்னியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமைப் போராட்டம் … என இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்ட இயக்க ரீதியான முறையைத்தான் பெரியார் தென்னிந்தியாவில் ஏற்றார். பெரியாரின் உந்துதல் தான், அம்பேத்கர் போன்ற அறிவாளிகளை அரசியல் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது. (முதல் இந்திய அரசை அமைத்த நேரு, காங்கிரஸ் அல்லாத அம்பேத்காரையும், கோபால்சாமி அய்யங்காரையும், ஆர்.கே.சண்முகம் செட்டியாரையும் அமைச்சர்களாக்கினார்.). நீங்கள் குறிப்பிட்டதுபோல், பிராமணர்கள் அல்லது உயர் ஜாதியினர் பிற்காலத்திலும் தாழ்ந்து போகவில்லை அப்போது தான்,மலையாளிகளுக்கு இணையாக , .வட இந்தியாவின் ஏர் இந்தியா,டாடா,பிர்லா,சிம்சன், டி.டி.கே நிறுவங்களில் நிலையான இடங்களைப் பிடித்தனர். கப்பல் ஏறுவது பாபம் என்றவர்கள், அயல் நாடுகளுக்கு விமானத்தில் செல்ல பாஸ்போர்ட் ஆபீசுகளில் க்யு பிடித்தனர். இன்றும் உலக முழுவதும் அறிவு வியாபாரம் செய்பவர்களில் முன்னணியில் இருக்கின்றனர். இந் நிலையில்,நடந்தவைகளை நிறைவோடு ஏற்பதுதான் விவேகம். அவ்வப்போதுள்ள தேவை-சூழ்நிலைக்கேற்ப ஏற்படும் மாற்றங்கள், வாழ்வில் அனைத்துத் தரப்பினருக்கும்
  மகிழ்வையே தந்து வருகின்றன. இதில் வருத்தப்பட இடம் இல்லை.
  .

  Like

 4. கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் இங்கள் இந்த பதிவையும் பொதிந்துள்ள நக்கலையும் மிகவும் ரசித்தேன்

  Like

 5. உங்களுடைய பதிவுகளை மிக்க ரஸித்துப் படிப்பவள்நான். எப்படி அடித்தளம் இருந்தால் இப்படி ரஸித்து எழுதமுடியும் என்று உங்களை அப்படியே மனக்கண் முன் கொண்டு வருபவள்நான். நான் உங்கள் எழுத்தின்ரஸிகை.
  இந்தத் தமிழ்ப் பிளாகிற்கு என்னையறியாமலேயே உங்களின் மூலஸ்தானமாகிய அவார்ட் எனக்குக் கிடைத்து,உங்களுக்கே பரிந்துரைப்பு.
  வயதான மூதாட்டியின் ஆசீர்வாதமெனக் கொள்ளுங்கள்.chollukireen.word press.com இல் பாருங்கள். அன்புடன் காமாட்சி.

  Like

 6. அருமையாக எழுதுகிறீர்கள். உங்கள் ‘சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்’ பதிவையும் பார்த்தபின் இதை எழுதுகிறேன். சில மாதங்களுக்கு முன் தெரிந்திருந்தால் அங்கு சென்றிருப்பேன்.

  நான் தமிழில் தட்டச்சு செய்வதை விட்டு பல்லாண்டு ஆனபின்னும், -அநேகமாய் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவு ஆரம்பித்து சில ஆண்டுகள் தொடர்ந்த முதல் பத்து பேர்களில் ஒருவராய் இருந்தும் இன்றுவரை எனது இந்தக் கணினியில் தமிழெழுதி இல்லை, உங்கள் பதிவுக்கு மறுமொழியிடுவதற்காய் கலப்பை இறக்கி எழுத உந்தப்பட்டேன், நன்றிகள்.

  பெரியாரின் சில கருத்துக்களில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஆனால் அவரின் இன்னொரு பக்கம் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடியது. சில உதாரணங்கள்.

  அவர் தீவிர இறைமறுப்பாளரா இல்லையா என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.

  * அவர் பத்திரிக்கை ஆரம்பித்தபோது முதல் இதழில் முதல் பக்கத்தில் வெளியிட்டது இராமலிங்க வள்ளலாரின் பாடல்தான், இது எத்தனை பேருக்குத் தெரியுமெனத் தெரியவில்லை.

  * பக்திப் பழமான சில சிவனடியார்கள் மீது அவர் மிகுந்த மரியாதையும், பணிவும் கொண்டிருந்தார். அவர்கள் பெரியாருக்கு நெற்றியில் திருநீறவிக்கும்போடும் பணிவுடன் ஏற்று அப்படியே தயக்கமின்றி, பல பத்திரிக்கை நிருபர்கள் முதல் பலர் முன்னிலையில் அதே நீறுள்ள நெற்றியுடன் காட்சியளித்ததுண்டு.

  * சில ஆதீன அதிபதிகள் அவருக்கு மிக நெருங்கிய நட்புக்கொண்டவர்கள்.

  * ஒரு முறை வடலூர் வள்ளலார் மடத்துக்குச் சகாக்களுடன் சென்றபோது, புலால் உண்பவர்கள் உள்ளே வரக்கூடாது என வள்ளலார் பொறிப்பித்திருப்பது கண்டு (சகாக்கள் வற்புறுத்தி அழைத்தும், அவர்கள் உள்ளே சென்ற பின்னரும் ) தான் உள்ளே செல்லாமல் வெளியில் நின்று திரும்பியவர்.

  * சில முறை ராஜாஜி அவர்கள் ஆற்றில் குளித்துமுடித்து வந்ததும் தன் கையாலேயே திருநீறு எடுத்துக்கொடுத்திருக்கிறார்.

  * மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் பற்றி சகாக்கள் விமர்சிக்க ஆரம்பித்தபோது, அது அறிவாளிகள் கூட்டம் அவர்களை விமர்சிக்காதீர்கள் எனக் கண்டித்தவர்.

  இதுபோல் இன்னும் பல உண்டு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: