நியூ யார்க் அருங்காட்சியகப் பதிவை அடுத்துப் பல கடிதங்கள் வந்தன. பல பாராட்டி, சில வசவுகளுடன். ஒரு சில கேள்விகளுடன். சில கேள்விக்கான பதில்கள் காண்போம்.
கே: பெருமாள் சிலை ஒரு கலைப் பொருள் தானே. அமெரிக்காவில் இருந்தால் என்ன ? இறைவன் உருவங்களை விளையாட்டுப் பொருட்களாகப் பயன் படுத்துவதில்லையா ? இதில் என்ன தவறு ?
பெருமாளின் உருவங்களை வெறும் கலை வடிவங்கள் என்று சொல்வது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டுக்கொள்ள உதவும் ஒரு வழிமுறை.
பாரத நாட்டு திவ்ய தேசங்களின் இறைத் திருமேனிகள் கலையின் வடிவங்கள் மட்டும் அல்ல. அவை இறைவன் உறையும் பதுமைகள். பல ஆயிரம் முறை, பல நூறு ஆண்டுகள் புனித நீராட்டுகள் ( திருமஞ்சனம்), குடமுழுக்கு, திருமுறை, பிரபந்தப் பாராயணங்கள், மந்திர ஜப வேள்விகள் நடைபெற்றதற்குச் சான்றாய் நிற்கும் சரித்திரச் சின்னங்கள். அஷ்டபந்தனம் என்னும் எட்டு வகையான இயற்கைப் பொருட்கள் கலந்து செய்யப்படும் ஒரு கலவை. அது என்ன எட்டு ?
- கொம்பரக்கு
- சுக்கான் தூள்
- குங்கிலியம்
- கற்காவி
- செம்பஞ்சு
- சாதிலிங்கம்
- தேன்மெழுகு
- எருமை வெண்ணெய்
இவற்றை முறைப்படி இடித்து, கூழாக்கி, பின் ‘சிமென்ட்’ போன்று செய்து சிலைகள் பீடங்களுடன் இருக்கும் படி செய்வார்கள். இது தவிர ஏஜகபந்தனம் (வெள்ளி), ஸ்வர்ணபந்தனம் (தங்கம்) கொண்டும் செப்பு, வெண்கலத் திருமேனிகள் செய்யப்படுகின்றன. இதற்கென்று சிற்ப சாஸ்திரம் மற்றூம் ஆகம விதிகளின் படி தனியான பூஜை முறைகளும் உண்டு.
எனவே தெய்வத் திருமேனிகள் வெறும் கலைப் பொருட்கள் அல்ல.
கலையைத் தவிர வேறு என்ன இருக்கிறது ?
கோவில் விக்ரகங்கள் நமது ஒட்டுமொத்த மக்களின் கூட்டு ஆன்மாக்களின் ஒருங்கிணைந்த கலவை. நான் காணும் எங்கள் ஊர்ப் பெருமாள் என் முப்பாட்டனாராலும் அவரது முப்பாட்டனாராலும் வணங்கப்பட்டார். என் முப்பாட்டனார் எந்த இறை உருவத்திடன் அன்றாடம் தனது மனதின் ஆழங்களை வெளிப்படுத்தினாரோ அதே உருவத்திடம் நானும் வெளிப்படுத்துகிறேன். எனக்கும் என் மூதாதையர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக எம் இறைவன் விளங்குகிறான். இப்படி என் நாட்டின் அனைத்து மக்களின் உணர்விலும் கலந்தவனாக, ஒவ்வொருவரின் முன்னோருடனான தொடர்புக் கருவியாக நிற்கிறான் என் பெருமாள். என்னையும் என் பண்டைய வரலாற்றையும் எனது பல நூறு ஆண்டு காலப் பாரம்பரியத்தையும் இணைக்கும் ஒரு உயிருள்ள தொடர்பு அவன்.
நான் பார்த்தேயிராத என் தாத்தா 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப பெருமாளின் முன் நின்று வணங்கியிருக்கிறார். இவருக்கு உற்சவங்கள் செய்திருக்கிறார். இன்று என் தந்தையார் செய்கிறார். நாளை நான் அப்பணியைத் தொடர்வேன். 70 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டனாரின் எண்ணங்கள் என்னவாக இருந்தனவோ அதே உயர்ந்த எண்ணங்கள், சேவை மனப்பான்மை என் வரை வந்துள்ளது. இந்தத் தொடர்ச்சிக்குக் காரணம் கலை வடிவமாக சிலை நின்றுகொண்டிருக்கும் அப்பெருமாள் தான்.
ஆக தெய்வத் திருமேனிகள் வெறும் கலை வடிவங்கள் அல்ல. அவை உயிர் உள்ள ஒரு சக்திக் கலவை. அதை நானும் என் மக்களும் உணர்வுபூர்வமாக உணர்கிறோம். எனவே தான் நியூ யார்க் அருங்காட்சியகத்தில் இப்பெருமானைப் பார்த்தவுடன் என்னை அறியாமல் கை கூப்பி நின்றிருந்தேன். ஆனால் அடுத்த அறையில் இருந்த சீன உருவத்தை அப்படிப் பார்க்க முடியவில்லை.
நியூ யார்க் அருங்காட்சியகத்தில் தனியாக நின்றுகொண்டிருக்கும் பெருமாளைப் பார்க்கும் போது எனது சொந்தத்தைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தேன். வெளியே வரும் போது என் வீட்டுப்பெரியவர் ஒருவரைத் தனியாக விட்டு வருவது போல் தோன்றியது. இது உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு. அந்தச் சிலை வெற்றுக் கலை வடிவமாக இருந்தால் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமா ?
என்னைப்பொருத்த வரை என் பெருமாள் வாழும் ஒரு வரலாற்றுத் தொடர்பு. கலை வடிவம் கொண்டுள்ள ஒரு உயிர்ப் பிறவி. நியூ யார்க் அருங்காட்சியகப் பெருமாளும் அப்படிப்பட்டவரே. அவர் கொண்டு சேர்க்கவேண்டிய, கை மாற்றி விட வேண்டிய வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறைவில்லாதது. ஆனால் அவரிடம் சென்று பண்பாட்டுப் பரிமாற்றம் பெற வேண்டியவர் எங்கு இருக்கிறாரோ தெரியவில்லை. அவரது கிராமத்தில் அவர் இல்லாமல் இருக்கலாம். அல்லது பிழைப்பு தேடி வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கலாம்.
பண்பாட்டுப் பரிமாற்றம் செய்யத் தயாராகப் பெருமாள் நிற்கிறார். ஆனால் பெற்றுக்கொள்ளத் தான் யாரும் இல்லை.
————————————————————————————————–
இது தொடர்பான பிற பதிவுகள் :
மிகச் சிறப்பாக உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள், ஆமருவி. பாராட்டுக்கள்.
முதன்முதலில் மகாபலிபுர கடற்கரையில் தலசயனப் பெருமாளைப் பார்த்தபோது எனக்கும் இப்படித்தான் இருந்தது. எப்படித் தனியாக விட்டுச் செல்வது என்று யோசனையாக இருந்தது.
அருமையாக உங்கள் எண்ணங்களை பதிவு செய்துள்ளீர்கள்.
//நியூ யார்க் அருங்காட்சியகத்தில் தனியாக நின்றுகொண்டிருக்கும் பெருமாளைப் பார்க்கும் போது எனது சொந்தத்தைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தேன். வெளியே வரும் போது என் வீட்டுப்பெரியவர் ஒருவரைத் தனியாக விட்டு வருவது போல் தோன்றியது. இது உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு. அந்தச் சிலை வெற்றுக் கலை வடிவமாக இருந்தால் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமா ?//
அற்புதம்!
LikeLike
மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து ஆற்றுப்படுத்துங்கள்.
LikeLike